சுருதி தயாசீலனின் நாட்டிய அரங்கேற்றம் - சௌந்தரி கணேசன்பத்தோடு பதினொன்றாக இருக்கும் என்று நினைத்துச் சென்றவர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தைக்

கொடுத்த ஓர் அரங்கேற்ற நிகழ்வைப்பற்றிய பதிவு இது.

02/04/23 அன்று சிட்னியில் நைடா கலையரங்கில் செல்வி சுருதி தயாசீலன் அவர்களது அரங்கேற்ற

நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக திருமதி சுகந்தி

தயாசீலனின் குரு கலாகீர்த்தி திருமதி சாந்தினி சிவநேசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக

கௌரவிக்கப்பட்டிருந்தார். அனைத்து முயற்சிகளையும் செய்தபோதும், இலங்கையிலிருந்து குறித்த

தினத்தில் திருமதி சாந்தினி சிவநேசன் அவர்களால் வரமுடியாமல் போனதற்காக மிகவும் மனவருந்தி

தனது குருவின் ஆசியை ஒலி வடிவில் தந்து, தனது குருவை தனது தாய் ஸ்தானத்தில் வைத்து

அவருக்காக சுகந்தி தயாசீலன் எழுதிய ஓர் கவிதையும் அரங்கத்தில் வாசிக்கப்பட்ட போது மிகவும்

நெகிழ்ச்சியான தருணம் ஒன்று அரங்கத்தில் அரங்கேறியது.


ஒரு தரமான நாட்டிய நிகழ்ச்சியை இரசிக்கும்போது ஏற்படுகின்ற மனநிலை எப்படி இருக்கும்

என்பதை அன்று என்னால் உணரமுடிந்தது. நேரம் போவதே தெரியாமல் இரசித்துக்

கொண்டிருந்தேன். என்னைப்போல் பலரும் ஓர் சிறந்த அனுபத்தைப் பெற்றுக் கொண்டதாக

நிழ்ச்சியின் நிறைவில் கூறினார்கள்.

2001 ம் ஆண்டிலிருந்தே சிட்னியில் “சிட்னி கலாபவனம்” என்னும் ஆடற் கலையகத்தை நிர்மானித்து

நாட்டியப் பயிற்சிகள், நாட்டிய நிகழ்வுகள், அரங்கேற்றங்கள் போன்றவற்றை மேடையேற்றி பெரும்

கலைத்தொண்டினை ஆற்றிப் பல போற்றத்தக்க விருதுகளைப் பெற்ற திருமதி சுகந்தி தயாசீலன்

அவர்களது மாணவியும் மகளும்தான் செல்வி சுருதி தயாசீலன். இந்த நாட்டியத் தாரகை தனது நடன

நிகழ்வுகளின் மூலம் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களை கட்டிப்போட்டிருந்தார் என்றால்மிகையாகாது. நிகழ்ச்சி முடிந்த பின்பும் அரங்கேற்ற அதிர்வுகள் பலரது மனதிலும் அலை

வீசிக்கொண்டிருந்திருக்கும்.

அவரது நடனங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருந்தன. பரதநாட்டியத்தின் முக்கிய

அம்சங்களான புஷ்பாஞ்சலி, கௌத்தம், ஜதீஸ்வரம், சப்தம், வர்ணம், கீர்த்தனம், பதம், தில்லானா

ஆகிய அனைத்து உருப்படிகளுக்கும் மிக அழகாக அபிநயித்து, தனது முகத்தில் அத்தனை

உணர்ச்சிகளையும் கொண்டுவந்து மிக நளினமாக ஆடியிருந்தார். சிக்கலான லயங்களைக்கூட

அழகாகவும் அற்புதமாகவும் பிரதிபலித்தன அவரது கைகளும், கால்களும், கண்களும். கடினமான


நடன அசைவுகளைக்கூட மிகவும் லாவகமாக ஆடி அனைத்து


நடனங்களிலும் உணர்வின்

மெய்ப்பாடுகளை வெளிக்கொணர்ந்த விதம் மிகவும் நேர்த்தி.


பக்கவாத்தியங்களின் இசையும், அகிலன் சிவாநந்தனின் குரலில் ஒலித்த பாடல்களும் சுருதியின்

அரங்கேற்றத்திற்கு மேலும் மெருகூட்டியது. அணு அளவேனும் அச்சுப் பிசகில்லாமல் நிகழ்ந்த

ஒவ்வொரு நடனத்துடனும் ஒன்றிப்போன அவையோரின் பலத்த கைதட்டல்கள் அதற்குச் சான்று

பகர்ந்தன.நடனக் கலைஞரின் ஆளுமை வெளிப்படாத எந்தவொரு அரங்கேற்றநிகழ்வும் வெறும் அலங்காரக்

கலையாகவே தோன்றும். சுருதியின் நளினமான அசைவுகளும், தாளக் கட்டுடன் அசராமல்

அனாயசமாக துள்ளி ஆடிய விதமும், ஒவ்வொரு பாடலிற்கும் அவர் காண்பித்த முகபாவங்களும்,

அவரது உடலும் உள்ளமும் உணர்வும் ஒன்றாகக் கலந்த ஒப்பற்ற நிகழ்வாகவே வெளிப்பட்டது.
நாட்டியக் கலையை சாதாரணமாக எல்லோராலும் கற்றுவிட முடியாது. சிலருக்கு மட்டுமே இந்தக்

கலையில் தேர்ச்சி கிடைக்கப்பெறும். இது ஒரு தவம், மனதை ஒருமைப்படுத்தி, கால் தாளத்திலும்,

உடல், கரங்கள், விரல்கள் முத்திரையைப் பொருளுணரும் வகையிலும் காட்டி, முகத்தில் பாவங்களை,


நவரசங்களை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்த அரிய கலையின்
சிறப்பு வெளிப்படும். அந்த

வகையில் சுருதியின் அரங்கேற்ற நிகழ்வு சிறப்பாக அமைந்தது


என்பதற்கும் பல சான்றுகளைக்

கூறமுடியும். அவர் தனது பாத அடிகளை எடுத்து வைத்த பாங்கு, அவரது அங்க அசைவுகளின்

நேர்த்தி, நடனத்திற்கும் இசைக்கும் அவர் காட்டிய முகபாவம், அவரது தோற்றத்தை மேலும்

மெருகூட்டிய ஒப்பனை, அவரது அழகை மேம்படுத்திய உடைகள், தாளம் பிசகாது ஒலித்த குருவின்

நட்டுவாங்கம், பக்கவாத்தியங்களின் இசைப்பிரவாகம் என அத்தனை அம்சங்களும் இந்த அரங்கேற்ற

நிகழ்வில் சிறப்பாக அமைந்தன.அறிவியலின்படி ஒரு குழந்தை அன்னையின் கருவில் இருக்கும் போதே தாயின் உணர்வுகளைப்

பகிர்ந்து கொள்ளும். தாய், திருமதி சுகந்தி தயாசீலன் அவர்கள், ஆடல் கலையுடனேயே பயணித்துக்

கொண்டிருப்பவர். மகள் சுருதியை அக்கலை சார்ந்த உணர்வுகள் வசீகரித்திருப்பதில் பெரிய

ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனாலும் குரு தனது மாணவிக்கு சிறந்த பயிற்சி அளித்திருக்கிறார்

என்பதையும் மாணவியும் மகளுமான சுருதி தனது குருவுக்கும், பெற்றோருக்கும் பெருமை தேடிக்

கொடுத்திருக்கிறார் என்பதையும் இங்கே கூறியே ஆகவேண்டும். தாயே குருவாக இருந்து தனது

முயற்சியினாலும் திறமையினாலும் சுருதியைப் புடம் போட்ட தங்கமாக மெருகூட்டி, மேடையேற்றி

சபையோரின் பாராட்டையும் பெற்றிருக்கின்றார். பரத நாட்டிய அரங்கேற்றத்தின் முழு வெற்றிக்கும்

காரணமானவர் குரு என்றே பலர் கூறிச் சென்றதைப்போல நானும் கூறுவேன்.ஆடல் நங்கைக்கு இசைத் தமிழிலும் இயல் தமிழிலும் ஓரளவாவது அறிவு இருத்தல் வேண்டும்

என்பார்கள். மொழித் தேர்ச்சி இல்லாவிட்டால் நவரசங்களை சரிவர வெளிக்காட்ட முடியாமல்

போய்விடும். சுருதியிடம் தமிழ் மொழித் திறமையும், இசைத் திறனும் நன்றாக இருப்பதால்

பாடல்களில் பொதிந்திருக்கும் பண்பாடு பாரம்பரியம் போன்றவற்றை இலகுவாகப் புரிந்து

பாடல்களுக்கேற்ற பாவங்களையும், நளினத்தையும் சிறப்பாக அவரால் வெளிப்படுத்த முடிந்தது.

நடனத்தின் அடைவுகளை மட்டும் அறிந்து வைத்துக்கொண்டு அதற்குள் இருக்கும் நளினம் என்ற

அற்புதத்தை வெளிப்படுத்தத் தவறினால் அந்த நடனத்தினால் என்ன பலன்.

இந்த வகையான விமர்சனங்களை நடன ஆசிரியர்கள்தான் எழுதவேண்டும் ஆனால் அப்படிப்பட்ட

ஆய்வுகளை அதிகமாகக் காணக்கிடைப்பதில்லை. என் சாதாரண கண்களைக் கவர்ந்த விடயங்களை

மட்டுமே நான் இதில் பதிவு செய்திருக்கிறேன். நான் நடனத்தில் பாண்டித்தியம் பெற்றவள் இல்லை

ஆனால் தாளத்தையும் சுருதியையும் உணரக்கூடிய அளவுக்கு என்னிடம் ஞானமும் அறிவும் உள்ளது.

நிகழ்ச்சி நிறைவுபெற்ற பின்பும், அந்த நிகழ்வு ஒரு நடனமாகவே எனக்குள் தொடர்ந்தும் நிகழ்ந்து

கொண்டிருந்தமை இந்த நிகழ்வுக்குள் ஏதோ ஓர் புதுமை உள்ளது என்பதை மீண்டும் மீண்டும் எனக்கு

உணர்த்தியது. அதன் வெளிப்பாடுதான் இந்தப் பதிவு.

மனதையும் உடலையும் செம்மைப்படுத்தக்கூடிய கலைகளில் முக்கியமாகக் கருதப்படக்கூடிய

நடனக்கலைக்கு மேலும் புகழும் பெருமையும் தேடிக் கொடுத்த செல்வி சுருதி தயாசீலனுக்கு

வாழ்த்துகள் தெரிவித்து, இவர் தனது வாழ்க்கைப் பயணம் முழுவதும் தான் கற்றுக்கொண்ட நாட்டியக்

கலையோடு தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நிகழ்ச்சியை சிறப்பாக

தமிழிலும் ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்கிய விதமும் சிறப்பு.
No comments: