எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 56 “ பனியும் பனையும் “ தொகுப்பின் முன்கதைச் சுருக்கம் ! “ படைப்பாளிகள் சோர்ந்துவிடாமல் உயிர்ப்புடன் திகழவேண்டும் “ முருகபூபதி


எழுத்தாளர்  எஸ். பொ. வுக்கு  அன்று நான் தயாரித்து அனுப்பிய ஈழத்து மூத்த – இளம் தலைமுறை எழுத்தாளர்களின் பெயர்ப் பட்டியலுடன் இனி அடுத்த அங்கத்தில் சந்திக்கின்றேன் என முன்னைய 55 ஆவது அங்கத்தில் சொல்லியிருந்தேன் அல்லவா…?

அங்கிருந்து இந்த அங்கத்தை தொடருகின்றேன்.

நான் அவருக்கு அனுப்பிய பெயர் பட்டியல் பின்வருமாறு:

( 1941 – 1950 )

நவாலியூர் சோ. நடராசன்

1936 ஆம் ஆண்டிலேயே எழுதத் தொடங்கியவர்.  கற்சிலை என்ற சிறுகதையை இவர் எழுதியுள்ளார்.  நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் மகன்.  பல மொழிபெயர்ப்புகளும் இவரது கைவண்ணம்.  இவர் பெளத்த பிக்குவாக துறவறம் பூண்டிருப்பதாக அறியப்படுகிறது.

சி. வைத்திலிங்கம். 


இவர் எழுதியிருக்கும் உள்ளப்பெருக்கு, மூன்றாம் பிறை, கங்கா கீதம், பாற்கஞ்சி, நெடுவழி – ஆகிய சிறுகதைகளில் ஒன்றை தெரிவு செய்யலாம்.

இலங்கையர்கோன் ( இயற்பெயர் : ந. சிவஞானசுந்தரம் )

இவரது கடற்கரைக்கிளிஞ்சல், வஞ்சம், வெள்ளிப்பாதசரம் ஆகியனவற்றில் ஒன்றை தெரிவுசெய்யலாம்.

சோ. சிவபாதசுந்தரம்:

காஞ்சனை, தோட்டத்து மீனாட்சி, அழைப்பு இவற்றில் ஏதேனும் ஒன்று.  ( தமிழில் சிறுகதை – வரலாறும் வளர்ச்சியும் நூலின் இணை ஆசிரியர்.

க. தி. சம்பந்தன்:

விதி, புத்தரின் கண், மனிதன் முதலான இவரது சிறுகதைகளில் ஒன்றை தெரிவுசெய்யலாம்.

கே. கணேஷ்: ( தலாத்து ஓயா, கண்டி )

இவரது ஆகஸ்ட் தியாகி ஆறுமுகம் என்ற சிறுகதை சிறந்த சிறுகதை என அறியப்படுகிறது.

குல. சபாநாதன்:

ஈழத்து இலக்கிய முன்னோடிகளில் இவரும் ஒருவர் என்று இரசிகமாணி கனகசெந்திநாதன் குறிப்பிடுகிறார். இவரது கதைகள் ஏதும் கிடைத்தால் தொகுப்பில் சேர்த்துக்கொள்ளலாம்.

இராஜ . அரியரத்தினம்:

இவரது வெள்ளம் என்ற சிறுகதை.

அ.செ. முருகானந்தன்:

மறுமலர்ச்சி இலக்கிய இயக்க காலத்தைச் சேர்ந்தவர்.  மனித மாடுகள் என்ற கதைத்தொகுதி வெளியாகியிருக்கிறது.  இவரது  கதைகள் எச்சிலிலை வாழ்க்கை, வண்டிச்சவாரி இவற்றில் ஒன்றை சேர்க்கலாம்.

சு. வேலுப்பிள்ளை:

மண்வாசனை என்ற கதைத் தொகுதியை வரவாக்கியவர்.  இவரது


பாற்காவடி, மணற்கோவில், வெறுங்கோவில், முதலானவை சிறந்த கதைகள் என்ற கருத்தும் இருக்கிறது.

அ. ந. கந்தசாமி:

வெற்றியின் இரகசியங்கள், ( கட்டுரை ) மதமாற்றம் ( நாடகம் ) நூலுருவில் வெளியானவை.  இவரது இரத்த உறவு என்ற சிறுகதை, அல்லது நாயினும் கடையர் என்ற சிறுகதையை தெரிவுசெய்யலாம்.

தி. ச. வரதராசன் ( வரதர் )

 கயமை மயக்கம் என்ற கதைத் தொகுதியை வரவாக்கியிருப்பவர் அதிலிருந்து ஒரு கதையை தேர்வு செய்யலாம்.

சொக்கன்: 

கடல் என்ற இவரது கதைத் தொகுதியிலிருந்து ஒன்றை தேர்வுசெய்யலாம்.

சு. இராஜநாயகன்:

நனவோடை உத்தியில் எழுதியவர் என்ற தகவலுண்டு.  அவன் என்ற இவரது கதையை தேர்வுசெய்யலாம்.

தாழையடி சபாரத்தினம் : 

குருவின் சதி முதலான கதைகளை  எழுதியிருப்பவர். இவரது கதையொன்றை தேர்வு செய்யலாம்.

எஸ். பொன்னுத்துரை: 


சிறந்த சிறுகதை எழுத்தாளர் எனப் புகழப்படுபவர். இவரிடமிருந்தே ஒரு கதையை கேட்டுப்பெறலாம்.

கனக. செந்திநாதன்:

ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்ற நூலை வரவாக்கியவர்.  இவரது வெண்சங்கு கதைத் தொகுதியிலிருந்து ஒரு கதையை தெரிவுசெய்யலாம்.

இ. நாகராஜன்:

கவிஞராக அறியப்படும் இவர் காலமாகிவிட்டார். இவரது சிறுகதையை தேடிப்பெறல் வேண்டும்.

வ. அ. இராசரத்தினம் :  தோணி என்ற கதைத் தொகுதியை வரவாக்கியவர்.  இவரிடமிருந்தும் ஒரு கதையை கேட்டுப்பெறலாம்.

பித்தன் :

இயற்பெயர் கே. எம். ஷா. இவரிடமிருந்தும் கதையை கேட்டுப்பெறலாம்.

மு. தளைய சிங்கம்: புதுயுகம் பிறக்கிறது என்ற கதைத் தொகுதி வெளியானது.  இவரது கோட்டை, தொழுகை, கோயில்கள், பிறத்தியாள், வீழ்ச்சி, தேடல், வெளி  இவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவுசெய்யலாம்.

1951 – 1960 இற்குப்பின்னர்….

அருள். செல்வநாயகம், செ. கணேசலிங்கன், என்.கே. ரகுநாதன், கே. டானியல், டொமினிக்ஜீவா, காவலூர் ராஜதுரை, நவம், அம்பி, உதயணன், நீர்வை பொன்னையன், கே. வி. நடராஜன், மருதூர்க்கொத்தன், நீலாவணன், குறமகள்,  அன்புமணி, த. ரஃபேல், எஸ். அகஸ்தியர், இவர்களின் கதைகளை தெரிவு செய்யவேண்டும்.

அ. முத்துலிங்கம் ( வெளிநாடொன்றில் வசிக்கிறார் ) அக்கா என்ற கதைத் தொகுதியை வரவாக்கியவர். இவரது பக்குவம், அனுலா ஆகிய கதைகளில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

பவாணி ஆழ்வாப்பிள்ளை:  கடவுளும் மனிதர்களும் தொகுதியை வெளியிட்டவர். வெளிநாடொன்றில் வசிக்கிறார்.

             செம்பியன் செல்வன், செங்கை ஆழியான், செ. யோகநாதன்,


செ. கதிர்காமநாதன்,  தெணியான், மு. கனகராஜன், துருவன்( பரராஜசிங்கம் ) , தெளிவத்தை ஜோசப், என். எஸ். எம். இராமையா, ஜோர்ஜ் சந்திரசேகரன், அங்கையன் கைலாசநாதன், எம். ஏ. ரகுமான், யோ. பெனடிக்ற் பாலன், யாழ்ப்பாணம் தேவன், ஈழத்துசோமு ( நா. சோமகாந்தன் ) நந்தி சிவஞானசுந்தரம், பத்மா சோமகாந்தன், நுஃமான்,  நீர்கொழும்பூர் முத்துலிங்கம், தி. ஞானசேகரன், ஐ. சாந்தன்,              க. சட்டநாதன், நெல்லை க. பேரன், குப்பிழான் ஐ. சண்முகன், அ. யேசுராசா, திக்குவல்லை கமால், மாத்தளை சோமு,  மலரன்பன், மாத்தளை வடிவேலன், புலோலியூர் க. தம்பையா, சுதாராஜ், உமா வரதராஜன், கவிதா,  அல். அசூமத், கோகிலா மகேந்திரன், தாமரைச்செல்வி, புலோலியூர் இரத்தினவேலோன், மன்சூர்,  ஶ்ரீதரன், கமலினி செல்வராசன்,  ஜனகமகள் சிவஞானம்,  யமுனா பொன்னம்பலம், ஜெயமோகன் ஜெயசிங்கம்,  சாரதா சண்முகநாதன், ஆப்தீன், ரத்தினசபாபதி ஐயர்,

இவை தவிர புலம்பெயர்ந்து சென்று சிறுகதைகள் எழுதிக்கொண்டிருப்பவர்கள்:

அவுஸ்திரேலியா:


எஸ். பொன்னுத்துரை, மாத்தளை சோமு,  அ. சந்திரகாசன், லெ. முருகபூபதி, அருண். விஜயராணி, ரேணுகா தனஸ்கந்தா,  மாவை நித்தியானந்தன், வசந்தன் ( பூமா மைந்தன் ) உஷா சிவநாதன்,  யோகானந்தன்.

கனடா :

வள்ளிநாயகி இராமலிங்கம் ( குறமகள் ) க. நவம். வ. ந. கிரிதரன்.

இங்கிலாந்து:

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.

பிரான்ஸ்:

எஸ்.அகஸ்தியர்,  கலா. மோகன், ரஜனி குகநாதன் சுகன்,

நோர்வே:

தேவகி ராமநாதன்

ஜேர்மனி:

இந்து மகேஷ், பொ. கருணாகரமூர்த்தி, ந. சுசீந்திரன், அன்ரன் யூட், தேவா .

நெதர்லாந்து:

லோகா, சார்ள்ஸ்.

 

இந்தப் பட்டியலைப்பார்க்கும் எவரேனும், நான் அவரைச்சொல்லவில்லை, இவரைச்சொல்லவில்லை என்று என்னுடன் இப்போது சண்டைக்கும் வரலாம்.  இந்தப்பட்டியலை எனது அறிவுக்கு எட்டியவாறு 1990 ஆம் ஆண்டு காலத்தில் தயாரித்தேன்.  சிலர் தவறவிடப்பட்டிருக்கலாம். இது உத்தேச பட்டியல்தான்.

1990 இற்குப்பின்னர், கடந்திருக்கும் முப்பத்தி மூன்று வருடகாலத்தில் பல ஈழத்து எழுத்தாளர்களும் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்ற எழுத்தாளர்களும் சிறுகதைகளை எழுதி வருகின்றனர்.

அன்று பல நாட்கள் தேடி எடுத்த பெயர்களின் பட்டியலையும்  சேகரித்த சில கதைகளின் பிரதிகளையும் சென்னையிலிருந்த  எஸ்.பொ.வுக்கு தபாலில் அனுப்பினேன்.   அவுஸ்திரேலியாவில் என்னிடம் குறிப்பிட்ட சிறுகதைக் களஞ்சியம் தொகுப்பது தொடர்பாக உரையாடியவாறு வெளிநாடுகளில் அவர் யார் யாரிடம் இதுபற்றி பேசினார் என்பதும் யார் யாருடன் தொடர்புகொண்டார் என்பதும் எனக்குத் தெரியாது.

1994 ஆம் ஆண்டு, எனதும் மாத்தளை சோமுவினதும் பார்வைக்கு  எஸ். பொ. விடமிருந்து கிடைத்த நூல் : பனியும் பனையும்.

தொகுப்பு:  இந்திரா பார்த்தசாரதி -  எஸ்.பொ.

எஸ்.பொ. வின் புதல்வர் பொன். அநுரா பதிப்புரையும்,  இந்திரா பார்த்தசாரதி நுழைவாயில்  01 – நுழைவாயில் 02 என்ற தலைப்புகளில்  குறிப்புகளும், சுஜாதா கோபுர வாயில் என்ற தலைப்பில் முன்னுரையும் எழுதியிருந்தனர்.

முதல் பதிப்பு:  நவம்பர் 1994.

இந்நூலின் இறுதியில் எஸ். பொ. பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:  வேரும் வாழ்வும் என்ற மகுடத்தில் புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கிய அடுத்த தொகுதியின் பணிகள் துவங்கியுள்ளதை அறியத்தருவதில் மகிழ்கின்றேன். என் முகவரி Mithra Publications, 1/23, Munro Street, Eastwood 2122, Australia.

அவர் குறிப்பிட்டிருந்த வேரும் வாழ்வும் என்ற தலைப்பினை மலேசியா எழுத்தாளர் சை. பீர்முகம்மது இரவல் வாங்கி 50 ஆண்டு மலேசிய சிறுகதைகள் என்ற தொகுப்பினை மூன்று பாகங்களில் வெளியிட்டார். அதனையும் எஸ்.பொ.வின் சென்னை மித்ர பதிப்பகமே 2000 ஆம் ஆண்டின் பின்னர் வெளியிட்டது.

1990 களில் எஸ்.பொ.வும், மாத்தளைசோமுவும் நானும் நீண்டபொழுதுகள் பேசித்  தீர்மானித்த ஈழத்து – புகலிட ( 1940 – 1990 )  எழுத்தாளர்களின் கதைக்களஞ்சியம் தொகுப்பு வெளியாகவில்லை.

பனியும் பனையும் தொகுப்பின் மூலத்திற்கான  முன்கதைச் சுருக்கத்தை சொல்ல வேண்டியதும் எனது கடமை. 

அத்திவாரங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. 

அவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தமிழ் எழுத்தாளர் விழா இயக்கம் ஆரம்பமாகி, மெல்பனில் அந்த ஆண்டு ஜனவரியிலும், அடுத்த 2002 ஆம் ஆண்டு சிட்னியிலும், 2003 இல் மீண்டும் மெல்பனிலும், 2004 இல் கன்பராவிலும்,  2005 மீண்டும் சிட்னியிலும் தமிழ் எழுத்தாளர் விழாக்கள் தங்கு தடையின்றி தொடர்ச்சியாக நடைபெற்றன.

இந்த இயக்கத்தினை ஒரு அமைப்பாக பதிவுசெய்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்று சில நண்பர்கள் சொன்னார்கள்.

முக்கியமாக பல்தேசிய கலாசார ஆணைக்குழுவிடமிருந்து விழாச்செலவுகளுக்கு மானியம் பெறமுடியும் என்ற ஆலோசனையும் சொல்லப்பட்டது.

பதிவுசெய்வதாயின்  அமைப்பிற்கு பெயரும் அமைப்பு விதிகளும் வேண்டும்.  எனக்குக்  கிடைத்த ஆலோசனைகளை மெல்பனில் வதியும் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் அண்ணருக்குச் சொன்னேன்.

அவர்தான் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்கான  அமைப்பு விதிகளையும் தயாரித்துத் தந்து விக்ரோரியா மாநிலத்தில் பதிவுசெய்து தந்தவர்.

அவர் கலை, இலக்கிய செயற்பாடுகளுக்காக ஒரு அமைப்பினை பதிவுசெய்வதில் ஆர்வம் காண்பிக்காமல்,  தொடர்ந்தும்.  எழுத்தாளர் விழாக்களை  கடந்த நான்கு  வருடகாலமாக நடத்தி வருவதுபோன்றே நடத்தச்சொன்னார்.

ஒரு அமைப்பு என உருவாகிவிட்டால்,  சந்திக்கவேண்டிய சவால்கள்,  பிரச்சினைகள் பற்றிய தீர்க்கதரிசனம் அவரிடம் இருந்திருக்கவேண்டும். எனினும்,  எமது தமிழ் எழுத்தாளர் விழாக்களில் கலந்துகொண்ட எழுத்தாளர் நல்லைக்குமரன் குமாரசாமி ஒரு கலை, இலக்கிய அமைப்பினை பதிவுசெய்யவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

என்னிடமிருந்து எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அமைப்புவிதிகளை கேட்டுப்பெற்று, அதன் சாரத்தில்  கலை, இலக்கிய தேவைகளின் நிமித்தம் ஒரு புதிய அமைப்பு விதிகளை தயாரித்து தந்தார்.

நாமிருவருமே மெல்பன் நகர் சென்று அதனைக்கொடுத்து பதிவுசெய்தோம். நல்லைக்குமரன்தான் Australian Tamil Literary and Arts Society (ATLAS) என்ற பெயரை பரிந்துரைத்தார். மெல்பன் பிரஸ்டன் நகரத்தில் அமைந்த நகர மண்டபத்தில்தான் எமது தமிழ் எழுத்தாளர் விழாக்களை நடத்தி வந்தமையால், அந்தப்பிரதேசத்திலேயே  ஒரு தபால் கந்தோரில் எமது அமைப்புக்கென ஒரு தபால் பெட்டியையும் தெரிவு செய்தோம்.  அதுவரையில்   கலை, இலக்கிய சங்கத்திற்காக எனது வீட்டு முகவரியே பயன்படுத்தப்பட்டது.

சிறுகதைகளை தேர்வுசெய்து தொகுக்கும் எண்ணத்தை நான் கைவிடவில்லை.  எமக்கென ஒரு அமைப்பு உருவாகியிருப்பதனால்,  இதன் மூலம் அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்களின் கதைகளை சேகரிக்கத் தொடங்கினேன்.

இருபது கதைகள் கிடைத்தன. எனது சிறுகதையை தவிர்த்துக்கொண்டு,  ஏனைய இருபது பேரின் சிறுகதைகளை தொகுத்து அதற்கு உயிர்ப்பு எனப்பெயரிட்டு, எமது சங்கத்தின்  உறுப்பினரும் ஓவியருமான சிட்னியில் வதியும் ஓவியர் ஞானம் அவர்களிடம் சொல்லி முகப்பு ஓவியம் வரைந்து பெற்றேன். கொழும்பில் கிறிப்ஸ் கிருஷ்ணமூர்த்தி அச்சிட்டுத்தந்தார்.

உயிர்ப்பு தொகுதியில் சாந்தா ஜெயராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி, கல்லோடைக்கரன், உஷா ஜவகார், களுவாஞ்சிக்குடி யோகன், தெ. நித்தியகீர்த்தி, ரதி, புவனா இராஜரட்ணம், ரவி, அ. சந்திரகாசன், மாத்தளை சோமு, நல்லைக்குமரன், அருண். விஜயராணி, த. கலாமணி, தி. ஞானசேகரன், நடேசன், யோகன், ஆசி. கந்தராஜா, கே. எஸ். சுதாகர், ஆவூரான் ஆகியோரின் சிறுகதைகள் இடம்பெற்றன.

எனது முன்னுரையின் இறுதியில்,   அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை  தொகுக்கும் முயற்சியில் இடையறாது ஈடுபட்டிருந்தேன். இக்கனவை நனவாக்க நீண்ட நாட்கள் காத்திருக்கவேண்டியதாயிற்று.

காத்திருப்பும் ஒருவகையில் அவலம்தான். அந்த அவலத்திலிருந்து மீள்வதற்கு கடினமாக உழைக்கவேண்டியிருந்தது.

அந்த உழைப்பே – இன்று உங்கள் கைகளில் இருக்கும்                                   ‘ உயிர்ப்பு ‘ இத்தொகுப்புக்கு முன்னோடியாக 2003 இல் எம்மவர் என்ற நூலை வெளியிட்டேன்.  இந்நூல் அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய விபர நூல்.

படைப்பாளிகள் சோர்ந்துவிடாமல் எப்பொழுதும் உயிர்ப்புடன் திகழவேண்டும். இத்தலைப்பில் ஒரு கதையும் இல்லை. ஆனால், ஒவ்வொரு கதைகளிலும் உயிர்ப்பின் தேவை , வாழ்வின் நிகழ்வுகளில் எப்பொழுதும் தங்கியிருக்கிறது என்பதை உணர்வீர்கள்.  “ என எழுதியிருந்தேன்.

உயிர்ப்பு தொகுப்பின் வெளியீட்டு அரங்கு 2006  ஆம் ஆண்டு ஜனவரி 07 ஆம் திகதி சனிக்கிழமை பிரஸ்டன் நகர மண்டபத்தில் , முன்னர் மெல்பனிலிருந்து மரபு கலை, இலக்கிய இதழை வெளியிட்ட அதன் ஆசிரியர் திரு.  விமல். அரவிந்தன் தலைமையில் நடந்தது.

ஜேர்மனியிலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் திருமதி. சந்திரவதனா செல்வகுமாரன் , இலக்கிய ஆர்வலர் திரு. கந்தையா குமாரதாசன் ஆகியோர் நூலின் ஆய்வுரையை நிகழ்த்தினர்.

இந்நூல் பற்றிய விமர்சனம் இலங்கை பத்திரிகை ஒன்றில் வெளியானதையடுத்து, அந்த பதிவின் நறுக்கில் 20 பிரதிகள்  எனது முகவரிக்கு ஒரு பொதியில்  தபாலில் வந்து சேர்ந்தது.

இந்த எதிர்பாராத அதிசயம் பற்றி அடுத்த அங்கத்தில் சொல்கின்றேன்.

( தொடரும் )

letchumananm@gmail.com

 

 

 

 

 

 

 

 

 

 

No comments: