கொஞ்சும் குமரி - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 

தமிழ் திரையுலகில் மறக்க முடியாத நடிகையாக போற்றப்படுபவர்

மனோரமா. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய தனிப்பட்ட நடிப்பால் ரசிகர்கர்களை கவர்ந்தவர். பொம்பளை சிவாஜி என்று பலராலும் அங்கீகரிக்கப் பட்ட இவர் ஆயிரம் படங்களுக்கும் மேல் நடித்து கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றவர். பெருபாலான படங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்த மனோரமா இளம் நடிகையாக கொஞ்சும் குமரியாகத் திகழ்ந்த காலத்தில் ஒரே ஒரு படத்தில் மட்டும் கதாநாயகியாக நடித்தார். அப்படி அவர் நடித்த படம்தான் கொஞ்சும் குமரி.

இந்திய சினிமாவில் சாதனை மன்னனாகத் திகழ்ந்த மாடர்ன்

தியேட்டர்ஸ் அதிபர் டி ஆர் சுந்தரம் தான் தயாரித்த 97வது படமான கொஞ்சும் குமரியில் மனோரமாவை கதாநாயகியாக நடிக்க வைத்தார். இளமையும், அழகும் , துடிப்பும் மிளிரும் வண்ணம் திகழ்ந்த மனோரமா கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிடவில்லை. அவருக்கு ஜோடியாக கதாநாயகனாக பிரபல வில்லன் நடிகர் ஆர் எஸ் மனோகர் நடித்தார். இப்படியொரு ஜோடிப் பொருத்தத்தை சுந்தரத்தினால்தான் உருவாக்க முடிந்தது.

காட்டில் துணிச்சலுடனும், துடுக்குத்தனத்துடனும் வாழும் அல்லி எதிர்பாராத விதமாக ராஜாங்கத்தை சந்திக்கிறாள். அவனின் கம்பீரமும், வீரமும் அவளை கவரவே அவன் மேல் காதல் வசப்படுகிறாள். ஆனால் ராஜாவோ தன் குடும்பத்தை சீரழித்த ஜமீன்தார் ஜம்புலிங்கத்தை பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறான். அல்லியின் காதலை நிராகரிக்கிறான். ஆனால் சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அவனை அல்லியின் கிராமத்திலேயே தங்கச் செய்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் அல்லியின் சாமர்த்தியத்தால் அவளை திருமணம் செய்கிறான் ராஜா.

இப்படி அமைத்த படத்தின் கதை ஆடல், பாடல், மோதல், என்று பல காட்சிகளுடன் நகர்கிறது. மனோரமா குறும்பு, துடிப்பு என்று நடிக்க, வீரம், கோபம், முரட்டுத்தனம் என்று தன் பாத்திரத்துக்கு ஏற்ப நடித்தார் மனோகர். எப்போதாவது கிடைக்கும் ஹீரோ வாய்ப்பை அவர் தவறவிடவில்லை.

இவர்களுடன் ஏ கருணாநிதி , சி எஸ் பாண்டியன், ஆழ்வார் குப்புசாமி,புஷ்பமாலா, கே கே சௌந்தர் என்று ஒரு நகைச்சுவை கோஷ்டியே நடித்தது. படத்தின் நகர்வுக்கு இவர்களின் பங்களிப்பும் இருந்தது. குமாரி ருக்மணி, கே ஆர் இந்திராதேவி, மோகன், வி பி எஸ் மணி ஆகியோரும் நடித்தனர். படத்தில் வில்லனாக நடித்தவர் எஸ் வி ராமதாஸ். ஜமீன்தாரின் மிடுக்கு, கொடியவனின் கொடூரம் இரண்டும் கலந்து காட்சியளித்தார்.


படத்துக்கு வசனம் எழுதியவர் மாணா. இவர் வேறு எவருமல்லர் முரசொலிமாறன் தான். குடும்பக் கதைகளுக்கும், சரித்திரக் கதைகளுக்கும் வசனம் எழுதிய அவர் அடிதடி படத்துக்கு தன் சொந்தப் பெயரில் எழுதத் தயங்கி புனை பெயர் சூடி எழுதியிருந்தார். நகைச்சுவை கட்சிக்கான வசனங்களை கே தேவராஜன் எழுதினார். படத் தொகுப்பை எல் பாலு கையாண்டார். மல்லி கே இரானி ஒளிப்பதிவை கவனித்தார். படத்தில் பல சண்டை காட்சிகள். அவற்றை அமைத்தவர் சிவய்யா. அவரின் உதவியாளராக பணியாற்றி சில காட்சிகளில் நடித்து மனோகருக்கு டுப்பாக சண்டை போட்டிருந்தார் அண்மையில் மறைந்த ஜூடோ ரத்தினம் . படத்தை ஜி விஸ்வநாதன் டைரக்ட் செய்த்தார்.

மாடர்ன் தியேட்டர்சின் பல படங்களுக்கு இசையமைத்தவர் வேதா.

இந்த படத்தின் மூலமே அவர் அங்கு அடி எடுத்து வைத்தார். வைத்தவர் , அறிமுகப் பாடகராகத் திகழ்ந்த கே ஜே ஜேசுதாசுக்கு படத்தில் பாடும் சந்தர்ப்பத்தை வழங்கினார். அவரும் புதுப் பாடகியான பி வசந்தாவும் இணைந்து பாடிய ஆசை வந்த பின்னே அருகில் வந்த பெண்ணே பாடல் பிரபலமடைந்தது. இந்தப் பாடலே ஜேசுதாஸ் தமிழில் பாடி திரைக்கு வந்த முதல் பாடலாகும்.

இந்தப் படம் தயாரிப்பில் இருக்கும் போது மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம் காலமானார். அவருக்கு காணிக்கையாக இப் படம் சமர்ப்பிக்கப் பட்டது. மனோரமாவின் திரை வாழ்வில் மறக்க முடியாத படம் கொஞ்சும் குமரி.

No comments: