மெல்பேர்ண் வெதர் – குறுநாவல்

அதிகாரம் 11 - தீராவெறி

 

விடுமுறை முடித்து எல்லாரும் வேலைக்குத் திரும்பினார்கள்.

 அதன் பிறகு ஒருநாள் நட்டாஷா வேலையை றிசைன்


பண்ணிவிட்டுப் போய்விட்டாள். போகும்போது எல்லாரிடமும் வந்து கதைத்துவிட்டுப் போனாள்.

 “நான் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று நந்தனிடம் சொன்னாள்.

 அவள் அப்பாலே போனதும்,

“நட்டாஷாவின் வயிற்றைப் பார்த்தாயா நந்தன்? வீங்கி இருக்கின்றது. உள்ளே குட்டி எட்றியான் இருக்கின்றான்” என்றான் ரான்.

 நட்டஷா வேலையை விட்டுப் போனதற்கு சரியான விளக்கம் தெரியவில்லை என்பதால் ரான் சொன்னதை நம்பவேண்டி இருந்தது.

 புங் ஜோசுவாவுடனான தொடர்புகளைக் குறைத்து, மெதுவாக அவனை வெட்டிவிட வேண்டுமென நினைத்தாள். தனது பிள்ளைகளின் தோல் தொடர்பான ஒவ்வாமை முற்றுமுழுதாகக் குணமடைந்துவிட்டதாக ஒருவரும் கேட்காமலே புங் சொல்லித் திரிந்தாள்.

 ஜோசுவாவுடனான தொடர்பைத் துண்டிக்கும்போது, தனது ஆத்ம நண்பன் நந்தனுடன் தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என விரும்பினாள்.

 ஆனால் ஜோசுவாவை வெட்டுவதென்பது அவ்வளவு எளிதான விடயமாக இருக்கவில்லை. புங் ஒருபோதும் அவனைத் தேடிப் போனது கிடையாது. அவன் வழமை போல வந்து கதைத்துக் கொண்டிருந்தான். சக தொழிலாளி என்றால் வெட்டிவிடலாம். ஜோசுவா ஒரு குறூப்லீடர்.

 அவனுக்கு அவளை ஹோட்டலில் சந்தித்தது முதற்கொண்டு அவள் மீது பித்துப்பிடித்தது போலானான். அவளுக்கு விருப்பம் இருந்தாலும் கணவனிற்குத் தெரிந்துவிட்டதனால் தொடர்பை இனியும் நீடிக்க அவள் விரும்பவில்லை. தொடர்ந்தும் தன்னைப் பார்க்க வரவேண்டாம் என வலியுறுத்திச் சொன்னாள்.

அவன் வருவதைக் குறைத்துக் கொண்டான். ஆனால் பிரச்சினை வேறு உருவில் வந்தது. புங்கின் மொபைல் போனிற்கு குறுஞ்செய்திகள், செக்ஸ் வார்த்தைகளைத் தாங்கி பாய்ந்து வந்தன. சிறுசிறு செக்ஸ் வீடியோக்கிளிப்புகளையும் அனுப்பினான்.

 ’உன்னோடு நான் இருந்த நேரம் எல்லாம் சொர்க்கம்’ என்றான்.

 பிரச்சினை வலுத்துவருவதாக உணர்ந்தாள் புங். இதனை யூனியனுக்குச் சொன்னால் விபரீதமாகிவிடும் என நினைத்து,ஜோசுவாவுக்கும் மேலான அதிகாரி எட்றியனிடம் முறையிட்டாள். அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த எட்றியன் புன்முறுவல் பூத்தார். தான் பார்த்துக் கொள்கின்றேன் என்று சொல்லிவிட்டு அவளின் தோள்களை மெதுவாகத் தடவிச் சென்றார் எட்றியான்.

 குறுஞ்செய்திகள் மேலும் மேலும் வந்தன. அவளைப்பற்றி, அவள் அழகைப் பற்றி, அவளிடமிருக்கும் அவள் அறியாச் செய்திகள் என விரிந்து விரிந்து வந்தன அவை. அவள் கோபம் கொண்டாள். சிலபொழுதுகளில் அவள் வேலை செய்யும் இடம் வந்து அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டு நின்றான். தூரத்தில் வரும்போதே ஒருவித ஒலி எழுப்பிக் கொண்டு வருவான். அந்தச் சங்கேத ஒலி புங்கிற்கு மாத்திரம் உரித்தானது. புங் விழிப்படைந்த பின்னரும் தொடர்ந்தும் தன்னுடன் வருமாறு வற்புறுத்தியபடி இருந்தான். அவள் மறுப்புத் தெரிவிக்கத் தெரிவிக்க, அவன் உடல் அனலாய்க் கொதித்தது.

 ஒருநாள் அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே போய், எதிரே வந்து கொண்டிருந்த மனேஜருடன் மோதிவிட்டான.

 அவள் குறுஞ்செய்திகளை அழிக்கத் தொடங்கினாள். ரெலிபோனில் எந்தவொரு தடயங்களையும் அவள் விட்டுவைக்க விரும்பவில்லை. கணவனோ பிள்ளைகளோ அதைப் பார்க்க நேரிடலாம் எனப் பயந்தாள்.

 ஆனால் அவை ஒன்றும் பலனளிக்கவில்லை. அழிக்க அழிக்க குறுஞ்செய்திகள் பறந்து வந்தன. கடைசியில் ஒன்றும் செய்ய முடியாமல் போகவே தனது மொபைல் நம்பரை மாற்றினாள். அதற்கு முன் வந்த சில குறுஞ்செய்திகளை தடயத்திற்காக விட்டு வைத்தாள். சிலவேளைகளில் ஏதாவது பிரச்சினைகளில் மாட்டுப்படும்போது தேவை வரலாம் என நினைத்தாள்.

 ரெலிபோன் துண்டிக்கப்பட்டதால் கோபம் கொண்ட அவன், அதற்கடுத்து வந்த ஈஸ்டர் விடுமுறையுடன் மேலும் ஒருமாதம் லீவு எடுத்துக் கொண்டு பிலிப்பைன்ஸ் போய் விட்டான். மாற்றம் தான் காயங்களை ஆற்றும் மாமருந்து என்பதை அவன் புரிந்து கொண்டான்.

 அந்த நேரம் பார்த்து, அவள் நந்தனிடம் ‘கொரில்லா குளூ’ போல ஒட்டத் தொடங்கினாள். ’கொரில்லா குளூ’ தான் உலகத்திலேயே தரம் வாய்ந்த ஒட்டும் பிசின்.

 அவன் லீவு முடித்து வந்தபோது நிலைமை தலைகீழாகி இருந்தது.

 “ஒரு மாதம்தானே லீவில் போனாய். அதற்குள் ஆளை மாற்றிவிட்டாள்” என்று நண்பர்கள் ஜோசுவாவைச் சீண்டினார்கள்.

 “போ… போய் நீயே நேரில் பார்!”

 ஜோசுவா பதுங்கிப் பதுங்கி அவர்கள் வேலை செய்யுமிடம் சென்றான். அங்கே அவன் கண்ட காட்சி அவனைத் திகைப்படைய வைத்தது.

 ஜோசுவாவைக் கண்டதும் காரிற்கு மறுபுறம் வேலை செய்து கொண்டிருந்த புங், எதிர்ப்புறம் பாய்ந்து சென்று நந்தனின் காதிற்குள் கிசுகிசுத்தாள். அவனின் சட்டைப்பொக்கற்றினுள் இருந்த பேனாவை எடுத்து விளையாடினாள். பின்னர் மறுபுறம் பாய்ந்து, பாட்டொன்றை முணுமுணுத்தபடி வேலை செய்யத் தொடங்கினாள். ஜோசுவா அவள் அருகில் சென்று காதினுள் கிசுகிசுத்தான்.

 அவளின் முகம் பேயறைந்தது போலாயிற்று.

 ஜோசுவா இப்பொழுது நந்தன்மீது குரோதம் கொள்ளத் தொடங்கிவிட்டான். அவனால் தான் எல்லாமே இப்பொழுது தலைகீழாக மாறிவிட்டது என்பது அவன் எண்ணம்.

 ஜோசுவா அந்த இரகசியத்தைச் சொல்லி அடுத்த வாரமளவில், அவளுக்குச் சமீபமாக நின்று வேலை செய்தவர்கள் சிலர் தமது மொபைல்போனில் ஏதோ ஒன்றைப் பார்த்துக் காட்டிச் சிரித்தார்கள். புங்கைப் பார்ப்பதும் மொபைல்போனைப் பார்ப்பதுமாக இருந்தார்கள்.

 “இது போட்டோஷொப் விளையாட்டடா” என்று சிலர் சிரிக்க, இன்னொரு வியட்நாமியன் தனது பாஷையில் ஒன்றைச் சொல்லி மேலும் சிரித்தான். புங்கின் பெயருக்கு வியட்நாம் மொழியில் இருந்த இன்னொரு கெட்ட வார்த்தையைத்தான் அவன் சொன்னான்.

 “How much?” என்று ரான் விலை கேட்டான்.

 சந்தைக்கு ஒரு பொருள் போய்ச் சேர்ந்துவிட்டால் பலரும்தான் அதைப் பார்ப்பார்கள், விலை கேட்பார்கள். புங் மெளனமாக நின்றாள். மெளனம் என்பது பேசாமல் இருப்பது அல்ல, அது மனசோடு பேசுவது. அவள் மனம் இரும்புக் குண்டாய்க் கனக்கிறது. உடல் அவமானத்தால் சுருங்க, கண்களில் இருந்தும் பொலபொலவெனக் கண்ணீர் வந்தது. வேலை செய்வதை அப்படியே விட்டுவிட்டு அழுதபடி குறூப்லீடரிடம் சென்றாள்.

 முதல்தடவை ஹோட்டலில் சந்தித்துக் கொண்டபோது, அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததை ஜோசுவா படம் பிடித்துவிட்டான். அவன் கழற்றி வைத்த கோற்றின் சட்டைப் பொத்தானில் நுண் கமரா ஒன்றைப் பூட்டி அவன் இந்தக் காரியத்தைச் செய்திருந்தான். அவன் படத்தை யாருக்காவது காட்டினால் அவனுக்கும்தானே கூடாது என நினைத்தாள் புங். ஆனால் ஜோசுவாவோ வேறுவிதமாக நினைத்தான். தான் ஏதோ ஹீரோத்தனமான செயல் புரிந்துவிட்டதாக தன்னைத்தானே மெச்சிக் கொண்டான். படத்தை தனக்குத் தெரிந்த சிலருக்குக் காட்டி மகிழ்ந்தான். அதைக் காட்டிக் காட்டி மக்காறியோவைக் கோபமூட்டினான்.

 என்ன செய்வது என்று அவள் திணறிக் கொண்டு இருக்கும்போதுதான் அந்தச் சம்பவம் நடைபெற்றது.

 

தொடரும்….

No comments: