உலகச் செய்திகள்

இம்ரானை கைது செய்யும் பொலிஸ் முயற்சி தோல்வி

ஐ.எஸ் தாக்குதலில் தலிபான் ஆளுநர் பலி

ஜெர்மனியின் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு: எழுவர் பலி

3ஆவது தவணைக்கு தெரிவானார் ஜின்பிங்

அமெரிக்காவின் நீர்மூழ்கிகளை வாங்குகிறது அவுஸ்திரேலியா

நேபாள ஜனாதிபதியாக ராம் சந்திர பவுடல் தெரிவு


இம்ரானை கைது செய்யும் பொலிஸ் முயற்சி தோல்வி

பல வழக்குகளுக்கு முகம்கொடுத்திருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்யும் பொலிஸாரின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

லாகூர் நகரில் இருக்கும் கானின் வீட்டுக்கு அவரை கைது செய்வதற்காக பொலிஸார் வந்தபோது, நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் ஒன்று திரண்டதால் அந்த முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை செயற்படுத்த பொலிஸ் குழு ஒன்று இம்ரான் கான் வீட்டுக்கு சென்றபோதும் அவர் சரணடையத் தயங்கினார் என்று இஸ்லாமாபாத் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டுப் பிரமுகர்களிடமிருந்து பெற்ற பரிசுகளை அவர் சட்டவிரோதமான முறையில் விற்ற குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஆஜராகாதது தொடர்பிலேயே அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  நன்றி தினகரன் 

ஐ.எஸ் தாக்குதலில் தலிபான் ஆளுநர் பலி

இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழு உரிமை கோரி இருக்கும் தற்கொலை தாக்குதலில் ஆப்கானில் வடக்கு பல்க் மாகாணத்தின் தலிபான் ஆளுநர் கொல்லப்பட்டுள்ளார்.

மாகாணத் தலைநகர் மசாரே ஷரீபில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து கடந்த வியாழனன்று (09) மொஹமட் தாவூத் முஸம்மில் கொல்லப்பட்டுள்ளார். 2021 இல் ஆப்கானில் ஆட்சிக்கு வந்த பின் கொல்லப்பட்ட தலிபான்களின் மூத்த அதிகாரியாக இவர் உள்ளார்.

ஆப்கானில் வன்முறைகள் வேகமாகக் குறைந்தபோதும் தலிபான்களை இலக்கு வைத்து இஸ்லாமிய அரசுக் குழு தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

'இஸ்லாமிய எதிரிகளால் நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் ஆளுநர் உயிர்த் தியாகம் செய்துள்ளார்' என்று தலிபான் பேச்சாளர் சபிபுல்லா முஜாஹித் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணமான நக்ரஹாரில் முன்னர் ஆளுநராக இருந்த முஸம்மில் அப்போது அங்கு ஐ.எஸ் குழுவுக்கு எதிரான போரில் தலைமை ஏற்றிருந்தார். அவர் கடந்த ஒக்டோபரிலேயே பல்க் மாகாணத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆளுநர் அலுவலகத்தில் இரண்டாவது மாடியில் வியாழக்கிழமை காலையில் வெடிப்பு நிகழ்ந்ததாக பல்க் மாகாண பொலிஸ் பேச்சாளர் முஹமது வசிரி தெரிவித்தார்.   நன்றி தினகரன் 

ஜெர்மனியின் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு: எழுவர் பலி

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் உள்ள கிறிஸ்தவ பிரிவினரான யெகோவாவின் சாட்சி தேவாலயம் ஒன்றின் மீது நடத்தப்பட்டுள்ள துப்பாக்கிச் சூட்டில் பலரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் துடுப்பாக்கிதாரியும் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தோர் எண்ணிக்கை பற்றி பொலிஸார் உறுதி செய்யாத நிலையில் இந்தத் தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டு மேலும் எட்டுப் பேர் மோசமான காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நகரின் வடக்குப் பகுதியில் இருக்கும் இந்தக் கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவது பற்றி கடந்த வியாழக்கிழமை இரவு பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உயிரிழந்த சடலங்கள் மற்றும் காயமடைந்தவர்களையே முதலில் கண்டுள்ளனர்.

எனினும் இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் பற்றி இன்னும் நம்பகமான தகவல் கிடைக்கவில்லை என்று பொலிஸார் பின்னர் தெரிவித்தனர்.

பொலிஸார் அந்தப் பகுதியில் தேடுதலில் ஈடுபட்டிருக்கும் நிலையில் அருகில் இருக்கும் கட்டடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தோற்றுவிக்கப்பட்ட யெகோவாவின் சாட்சி அமைப்பில் ஜெர்மனியில் சுமார் 175,000 மக்கள் இருப்பதாகவும் ஹம்பர்க் நகரில் அந்த அமைப்பைச் சேர்ந்த 3,800 உறுப்பினர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.   நன்றி தினகரன் 
3ஆவது தவணைக்கு தெரிவானார் ஜின்பிங்

ஷி ஜின்பிங் சீன ஜனாதிபதியாக 3ஆவது தவணைக் காலத்துக்கு அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர் சீனாவின் ஜனாதிபதியாகத் தொடர்வார்.

கடந்த வியாழனன்று (09) பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் அது முடிவானது. ஒருவர் இரு தவணைக் காலத்திற்கு மட்டுமே ஜனாதிபதியாக இருக்க முடியும் என்ற விதிமுறை 2018ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. சீனாவின் வரலாற்றில் 3ஆவது தவணைக் காலத்திற்கு ஜனாதிபதியாகத் தொடரும் முதல் தலைவர் ஷி ஆவார்.

சீனாவின் முன்னாள் தலைவர் மா சே துங்கை அடுத்து அந்நாட்டின் மிகச் சக்திவாய்ந்த தலைவராக 69 வயது ஷி கருதப்படுகிறார்.

ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக பதவி ஏற்பார் என்பது பெரியளவில் எதிர்பார்க்கப்பட்டதாகும். எனினும் தற்போது கூடியிருக்கும் பாராளுமன்றத்தினால் வரும் நாட்களில் புதிய பிரதமர் மற்றும் பல்வேறு அமைச்சர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.   நன்றி தினகரன் 
அமெரிக்காவின் நீர்மூழ்கிகளை வாங்குகிறது அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா அணுச்சக்தியில் இயங்கும் 5 நீர்மூழ்கிக் கப்பல்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கவுள்ளது.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கையின் கீழ் இது சாத்தியமாகியுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குப் பின், அந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். யு.எஸ். விர்ஜினியா ரகத்தைச் சேர்ந்த அந்த நீர்மூழ்கிக் கப்பல்கள், அமெரிக்கத் தொழில்நுட்பத்தோடு பிரிட்டனில் வடிவமைக்கப்பட்டவை. அமெரிக்கக் கப்பல்கள் சீனாவுக்குப் புதிய சவால்களை உருவாக்குமென கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.   நன்றி தினகரன் 
நேபாள ஜனாதிபதியாக ராம் சந்திர பவுடல் தெரிவு

நேபாள கொங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராம் சந்திர பவுடல் (78), அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் வாக்கெடுப்பு நேபாள பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்றது. அதில் பவுடலுக்கு 214 எம்.பிக்கள், 352 மாகாண சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. நாட்டின் முக்கியமான 8 கட்சிகள் அவரை ஆதரித்தன.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுபாஷ் சந்திர நெபாங்கை முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் கட்சி மட்டுமே ஆதரித்தது. புதிய ஜனாதிபதி ராம்சந்திர பவுடலுக்கு பிரதமர் பிரசந்தா, முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தூபா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பதவியில் உள்ள நேபாள ஜனாதிபதி பித்யாதேவி பண்டாரியின் பதவிக்காலம் நாளை (12) நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் No comments: