தரை மேல் பிறந்து, தண்ணீரில் பிழைத்து, கண்ணீரில் வாழவைக்கும் கடல் அரசியல் ! அவதானி


இலங்கையையும் இந்தியாவையும் சில மைல் தூரங்கள்தான் பிரிக்கின்றது.  இரண்டுக்கும் இடைப்பட்ட  இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடலை நம்பி வாழும் மக்களின் பிரச்சினைகள் தீர்வையே காணமுடியாதவாறு தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.

இந்திய மீனவர்கள்,  இலங்கை கடல்பிரதேசத்தில் அத்துமீறி மீன்பிடித்துசெல்வதனால்,  தங்கள் பொருளாதார வளம் சூறையாடப்படுவதாக இலங்கை மீனவர்கள் தொடர்ந்தும் குரல் எழுப்பிவருகின்றனர்.

ரோலர் படகுகளின் சட்டவிரோத பிரவேசத்தை தடுத்து


நிறுத்தவேண்டும் என்று இவர்கள் தரப்பில் சொல்லப்பட்டுவந்தாலும் அக்கரையில் வாழும் இந்திய மீனவர்கள் கேட்பதாயில்லை.

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதல் சம்பவங்களும் பல சந்தர்ப்பங்களில் நடந்துள்ளன.  அவர்கள் கைதுசெய்யப்படுவதும், பின்னர் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுமான காட்சிகளுக்கும் குறைவில்லை.

இரண்டு தரப்பிலும் எத்தனையோ சுற்றுப் பேச்சுவார்த்தைகள் கடந்த காலத்தில் நடந்திருந்தபோதிலும்,  அர்த்தமுள்ள தீர்வு  காணப்படவில்லை.

இந்திரா காந்தி, அன்றைய இலங்கைப் பிரதமர் ஶ்ரீமாவோவுடன்  செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் கச்சதீவு இலங்கையின் வசம் வந்தமைதான் தங்களது பிரச்சினைக்கு மூலகாரணம் என்று இந்திய மீனவர்களும் தமிழக அரசியல் தலைவர்களும் தங்கள் தரப்பு நியாயத்தை சொல்லி வருகின்றனர்.

 285 ஏக்கர் பரப்பளவுகொண்டிருக்கும் கச்சதீவு, 1974 ஆம் ஆண்டு நடந்த ஒப்பந்தத்திற்கு முன்னர், இந்திய ஆளுகைக்குட்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலம் முதல், கடந்த ஆறு தசாப்த காலமாக இந்திய – இலங்கை மீனவர்களின் விவகாரம் எரிந்துகொண்டேயிருக்கிறது.

அத்துமீறிவந்து இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் பாரிய ரோலர் படகுகள், அள்ளிக்கொண்டு செல்லும் கடல் வளம் குறித்த கரிசனையோடுதான் இலங்கை மீனவர்கள் போராடுகிறார்கள்.

இவர்களின் கோரிக்கை வடபுலத்தில் அரசியல் செய்யும் தமிழ் அரசியல்வாதிகளின் வாக்குகளின் எதிர்காலத்திலும் தங்கியிருக்கிறது.

இலங்கை அரசு, இந்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஏழாம்பொருத்தமாகவிருக்கும் ஒரு தமிழரையே மீன்பிடித்துறை அமைச்சராக்கியிருக்கிறது.

அவரும் தன்னாலியன்ற வழிமுறைகளை மேற்கொண்டாலும்,  வடபுலத்து மீனவர் சங்கங்கள் சில அவர்மீது கோபத்திலிருக்கின்றன.

தங்கள் பிரச்சினையை அமைச்சரிடமல்ல, நேரடியாக ஜனாதிபதியிடமே பேசவேண்டும் என்கின்றனர் மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள். 

இவர்களின்  குரலை  தங்களுக்கு சாதகமாக்குவதற்காக  ஒரே குரலில் ஒன்றிணைந்திருக்கிறார்கள் வடபகுதி  தமிழ் அரசியல் தலைவர்கள்.

அதனை வரவேற்கிறார்  மீன்பிடித்துறை அமைச்சர். 

இவ்வேளையில் எமக்கு ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான படகோட்டி திரைப்படத்தில்  இடம்பெற்ற தரைமேல் பிறக்கவைத்தான் என்ற கருத்தாழம் மிக்க பாடல்தான் நினைவுக்கு வருகிறது.   

தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்.

இந்த பாடலின் அனைத்து வரிகளும் கடலை நம்பி வாழும் மக்களின் ஆத்மக்குரலாக வெளிப்பட்டிருக்கும்.  கவிஞர் வாலி இந்த உழைக்கும் மக்களின் உணர்வுகளை யாதார்த்தம்  குன்றாமல் சித்திரித்திருந்தார்.

ஒன்றுபட்டிருக்கவேண்டிய இந்த உழைக்கும் பாட்டாளி வர்க்கம்,  இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பிளவுண்டிருக்கிறது.

இந்தக்கொந்தளிப்புக்கு மத்தியில்  இலங்கை – இந்திய எல்லைக்கிடையில்  சென்னை – பலாலி மார்க்கத்தில் விமானங்கள் பறந்துகொண்டிருக்கின்றன. இந்திய முன்னாள் – இந்நாள் இராஜதந்திரிகள் வந்து திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு தரப்பு மீனவர்களின் பிரச்சினைக்கும்  மத்தியில் கச்சதீவில்  அமைந்துள்ள  அந்தோனியார் தேவாலயத்தில் வருடாந்த உற்சவமும் குடிதண்ணீர் பற்றாக்குறையுடன் அண்மையில் நடந்தேறியிருக்கிறது.

முல்லைத்தீவு குருந்தூர்மலை வரையில்  சிலையாக வந்திருக்கும்  புத்தர் பெருமான், இந்த கச்சதீவுப்பக்கம் இன்னமும் தனது பார்வையை  செலுத்தவில்லை என்பது சற்று ஆறுதல்தான் !

ஒருகாலத்தில் கச்சதீவை தமது ஆளுகைக்குள் வைத்திருந்த  தென்னிந்திய மன்னர்களும் சரி,  இலங்கையை  ஆக்கிரமித்திருந்த பிரிட்டிஷாரும் சரி,   தமக்குப்பின்னர் இங்கு வாழும் மக்கள் எத்தகைய அரசியல் – மற்றும் கடல் சார்ந்த பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்குவார்கள் என்பது குறித்து எத்தகைய தீர்க்கதரிசனமும் இன்றியே விட்டுச்சென்றிருக்கிறார்கள்.

எமது இலங்கையும் அண்டை நாடான இந்தியாவும்  இந்த மீனவர் விவகாரத்தில் அரசியல் சதுரங்க விளையாட்டினை ஆடிக்கொண்டிருக்கையில்,  சீனாவும் அமெரிக்காவும், இதில் குளிர்காய்ந்துகொண்டிருப்பதையே அவதானிக்க முடிகிறது.

உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்பதுதான் மேதினத்தின் தாரக மந்திரம். அந்தத் தொழிலாளர் வர்க்கத்தில் ஒரு பிரிவினர்தான் இந்த கடற்றொழிலாளர்களும்.   இவர்கள் இலங்கையராயிருந்தாலென்ன, இந்தியர்களாயிருந்தாலென்ன ஒரே வர்க்கத்தினர்தான்.

இவர்கள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்தவேண்டியதுதான் இரண்டு நாட்டு அரசியல் தலைவர்களின் பிரதான வேலை.

1970 களில் இந்தியப் பிரதமராகவிருந்த இந்திரா காந்திக்கும் இலங்கைப் பிரதமராகவிருந்த  சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்குமிடையே  ஆரோக்கியமான நட்புறவு இருந்தது. " கச்சத்தீவு தொடர்பான பேச்சு வார்த்தை ஒரு கட்டத்தில் முறிந்துபோனது. அந்தத் தீவின் மீது இந்தியாவுக்கு இருக்கும் உரிமையை விட்டுத்தர வேண்டாம் என்று இந்திய அதிகாரிகளின் குழு பிரதமர் இந்திரா காந்தியிடம் வலியுறுத்தியது. உடனே சிறிமாவோ இந்திரா காந்தியைத் தொடர்புகொண்டு, தனக்கு உதவும்படி கோரினார். இல்லாவிட்டால் தனக்கு அரசியல் எதிர்காலமே இல்லாமல் போய்விடும் என்றும்  சொன்னார். சிறிமாவின் சிக்கலான சூழ்நிலையைப் புரிந்துகொண்ட இந்திரா காந்தி, இந்திய அதிகாரிகள் ஏதும் சொல்வதற்கு முன்பாகவே ஒப்பந்தத்தை முடிவுசெய்யும் வகையில் அதில் தலையிட்டார். " என்று  இந்த ஒப்பந்தத்தின் பின்னணி பற்றி  Ethnicity Versus Nationalism: The Devolution Discourse in Sri Lanka  என்ற நூலில் பார்த்தா கோஷ்  என்ற அரசியல் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளதாக ஒரு செய்தி சொல்கிறது.

சமகாலத்தில் கச்சதீவு விவகாரம் இரண்டு தரப்பிலும் அடக்கி வாசிக்கப்பட்டாலும்,  இந்திய – வட இலங்கை மீனவர்களின் பிரச்சினை  அணையாத தீபமாக எரிந்துகொண்டிருக்கிறது.

இந்து மகா சமுத்திரத்தாயின் புதல்வர்கள் புரிந்துணர்வுடன் தொழில் மேற்கொள்ளாதவரையில் இந்தப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு இல்லை !

---0---

  

 

No comments: