மெல்பேர்ண் வெதர் – குறுநாவல்

அதிகாரம் 9 : கண் மண் தெரியா நட்பு

 கணவன், பிள்ளைகள் தொடர்பாக பெரும்பாலானவற்றை


நந்தனுடன் பகிர்ந்து கொள்ளும் அவள், ஜோசுவா தொடர்பாக எந்த ஒன்றையுமே கதைப்பதில்லை. நட்பில்தான் எத்தனை விதம்! குடும்பம் நடத்த கணவன்; செக்ஸ் இற்கு ஒரு நண்பன்; வேலையில் கதைத்துப் பேச இன்னொரு நண்பன்.

 “என்னுடைய பிள்ளைகள் இரண்டு பேருக்கும் பிறைவேற் ஸ்கூலில் படிக்க வருஷத்திற்கு நாற்பதாயிரம் செலவாகின்றது.”

 “நேற்று டொக்லண்டில் சாப்பிடப் போனோம். ஓல் யு கான் ஈற். ஹெட்டிற்கு எண்பது டொலர்கள். நான்கு பேரும் சாப்பிட முன்னூற்றி இருபது டொலர்கள்.”

 அவள் தொடர்ந்தும் நந்தனின் நண்பியாக, தன்னுடைய பெருமைகளைப் பேசிக் கொண்டிருப்பாள்.

 இந்த நாட்களில் ஒரு ஆண் துணையை மாத்திரம் நம்பி ஒன்றும் செய்ய முடியாதுஎன்றாள் புங். நந்தனுக்கு அவள் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது.

 “என்ன... என்ன சொல்கின்றாய்?” என்று புங்கிடம் கேட்டபோது,

 “இல்லை… என்னுடைய நலனிலை யார் அக்கறை காட்டினமோ அவர்களை நான் என்றும் மறக்கமாட்டேன்” என்றாள்.

 பின்னர் அடிக்கடி இந்த வார்த்தையைச் சொல்லிக் கொண்டாள் புங்.

 “என்னுடைய நலனிலை யார் அக்கறை காட்டினமோ அவர்களை நான் என்றும் மறக்கமாட்டேன்.”

 ஒரு நண்பனோ நண்பியோ தவறான பாதையில் செல்லும்போது, அதைத் தடுத்து நிறுத்துவது இன்னொரு நண்பனின் கடமையல்லவா? அதைச் செய்யமுடியாத கையாலாகத்தனத்தை நந்தன் அப்போது கொண்டிருந்தான்.

 புங் ஒரு கதையைச் சொல்வாள். கேட்பதற்கு உண்மைபோல இருக்கும். அவளின் முகபாவனைகள் அப்படி இருக்கும். பின்னர் சிலகாலம் கழித்து அதே கதையை மாற்றிச் சொல்லுவாள். அப்பொழுதும் அது உண்மை மாதிரியே இருக்கும். இதில் எது உண்மை என்று எல்லோருக்கும் குழப்பம் வந்துவிடும். ஆனால் அவளுக்கு தான் மாற்றிச் சொல்கின்றேன் என்று ஒருபோதும் சிந்திக்கத் தோன்றாது. ஆனால் கடைசியாகச் சொன்னதுதான் அனேகம் உண்மையாக இருக்கும் என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள்.

 அன்றைய சம்பவத்தின் பின்னர் ஏறத்தாழ இரண்டு வருடங்கள் ஜோசுவாவும் புங்கும் இன்பத்தில் சுகித்திருந்தார்கள்.

 புங்கிற்கு என்ன தேவையோ உடனே ரெலிபோன் செய்தால், செய்யும் வேலையையும் விட்டுவிட்டு உடனே வந்து காலடியில் நிற்பான் ஜோசுவா. தொழிற்சாலையில் என்ன என்ன நடக்கின்றது என்பது எல்லாம் அவளுக்கே முதலில் தெரியவரும். ஏதாவது சலுகை விலையில் வாகனங்கள் வாங்குவதற்கு செய்தி வந்தால், அவனே விண்ணப்பப்படிவங்களைப் பூர்த்தி செய்து கொண்டுவந்து அவளிடம் கொடுத்துவிட்டுப் போவான்.

 அவனை தனது குடும்பநண்பன் என்றும், கணவனின் ஆத்ம நண்பன் என்றும் சொல்லிக் கொண்டாள் புங்.

 ஒருமுறை தனது ஆறாம்வகுப்புப் படிக்கும் மகனின் ‘சிலற்றிவ் எக்‌ஷாமிற்கான’ குறிப்புகளை யாரிடமோ வாங்கி வந்திருந்தாள். தூக்க முடியாமல் அவற்றைச் சுமந்து வந்து ஜோசுவாவிடம் போட்டோக்கொப்பி எடுத்துத் தரும்படி கேட்டாள். அந்த முட்டாளும் அதைச் சுமந்து கொண்டு ஒஃபிசிற்குள் போய் போட்டோக்கொப்பி எடுத்துக் கொடுத்தான்.

 “ஜோசுவாவின் பிள்ளைகள் என்ன படிக்கின்றார்கள்?”

 அவனுடைய பிள்ளைகளுக்கே 12ஆம் வகுப்பு VCE றிசல்ற் நூறுக்கு நாற்பது நாற்பத்தைஞ்சு தான் வந்தது. அந்த இலட்சணத்திலை இவளுடைய பிள்ளைகள் படிப்பதற்கு அவன் உதவி செய்கின்றான். போட்டோக் கொப்பி எடுத்துக் குடுக்கின்றான். சோழியன் குடும்பி சும்மா ஆடாதல்லவா? இவனது குடும்பிக்குள் என்னவெல்லாம் இருக்கின்றதோ!

 “அவனின் மூன்று பிள்ளைகளுக்கும் வீ சி யில் 45 மாற்கிற்கும் குறைவாகவே கிடைத்தன” என்றாள் சிரித்தபடி புங்.

 தன்னுடைய பிள்ளைகளையே படிப்பிக்க எத்தனிக்கவில்லை அவன். இன்னொரு பெண்ணின் பிள்ளைகளுக்கு படிப்பதற்கு உதவி செய்கின்றான். காமத்தின் கூத்துகளில் இதுவும் ஒன்று.

 வினாவிடைபோட்டிகள், குறுக்கெழுத்துப்போட்டிகள், புதிர்ப்போட்டிகள் எல்லாவற்றிலும் பெரும்பாலும் அவளுக்கே பரிசு. ஒருதடவை அவளைக் கொண்டு பதில் எழுதுவித்துப் போட்டுப் பார்த்தான் நந்தன். இருப்பினும் அவளுக்கே பரிசு. தொழிற்சாலையில் நடைபெறும் விருந்தோம்பல் விருந்துபசாரங்கள் எல்லாவற்றிலும் அவளே முன் நிற்பாள். ஒரு கேக்கை வெட்டுவதென்றாலும் மற்றைய பெண்களிற்கு கை நடுங்கும்.

 ஒருமுறை இரண்டுமாதங்கள் லீவில் அவள் வியட்நாம் போய்விட்டாள். ஆனால் அந்த இடைவெளியில் வந்த ‘க்குவிஸ்’ போட்டியிலும் அவளே வெற்றி பெற்றாள். பழக்க தோஷத்தில் அவளின் பெயரைத்தான் ஜோசுவாவின் கை தேர்ந்து எடுக்கின்றது.

 இந்த இரண்டு வருடங்களில் அவர்கள் தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள ஹோட்டல்களில் சில தடவைகள் சந்தித்துக் கொண்டார்கள். கணவனுக்கு இது தெரிந்திருந்தும் பட்டும்படாதவாறு தக்கதொரு தருணம் வரும்வரைக்கும் காத்திருந்தான்.

 ஒவ்வொரு வருடமும் வருடக்கடைசியில் கோடைவிடுமுறையாக மூன்றுகிழமைகள் விடுப்பு விடுவார்கள். அந்த நேரத்தில் தொழிற்சாலையில் திருத்த வேலைகள் செய்வார்கள்.

 மார்கழிமாத விடுமுறை வருவதற்கு ஒரு மாதம் இருக்கலாம். புதிதாக கதையொன்றை அவிழ்த்துவிட்டாள் புங்.

 “எனது வீட்டு நாயினால், எனது பிள்ளைகள் இருவருக்கும் தோல் வியாதி வந்துவிட்டது. நாயின் மயிரினால் இந்த ஒவ்வாமை வந்திருக்க வேண்டும். எனக்கு ஒருமாதம் விடுப்பு வேண்டும். நான் அவர்களைப் பராமரிக்க வேண்டும்.”

 முதலில் அவள் சொன்ன ஆங்கிலத்தை இப்பிடித்தான் நந்தன் விளங்கிக் கொண்டான். தன்னுடைய பிள்ளைகளின் தோல் ஒவ்வாமைத் தன்மையினால் நாயிற்கு தோல் வியாதி வந்துவிட்டது. அவளின் ஆங்கிலத் திறமை அப்படியிருந்தது.

 நிர்வாகம் அவளின் விண்ணப்பத்தைப் புறம் தள்ளியது.

 “உனது பிளைகளே மருந்தை மாறி மாறிப் பூசிக் கொள்ளலாம். நீர் அதற்குத் தேவை இல்லை.” நிர்வாகம் அவளிற்கு லீவு கொடுப்பதில் கடும்போக்கைக் கடைப்பிடித்தார்கள்.

 பின்பு ஒருநாள், விடுமுறை விடுவதற்கு இருவாரங்களுக்கு முன்பதாக வேலைக்கு வராமல் நின்றுவிட்டாள்.

 அவள் டொக்ரரிடம் சேர்ட்டிபிக்கேற் வாங்கி நிர்வாகத்திடம் கொடுத்து விடுப்பு பெற்றுக் கொண்டாள். ஆனால் பாடசாலைக்கு தினமும் இரண்டு பிள்ளைகளும் போய் வருவதாகச் சிலர் சொன்னார்கள்.

 “அப்படியானால் மெடிக்கல் லீவு யாருக்கு?” சக தொழிலாளி மாய் கேட்கின்றான். அவனுக்கு ‘சிக் மான்’ (sick man) என்றொரு பெயர். ’சிக் மான்’ இங்கே இன்னொரு வேடிக்கைப் பேர்வழி.

 ‘சிக் லீவு யாருக்கு?” என்கின்றான் சிக் மான்.

மாய் சிறுவனாக இருக்கும்போது அவனது தாயயார் கான்சர் நோயினால் இறந்துவிட்டார். அதனால் அவன் எதைப்பற்றிப் பேசுவது என்றாலும் அபத்தமாகவே பேசுவான். ஒருமுறை அவர்களுடன் வேலை செய்த சுவாதாவிற்கு மார்பில் கான்சர் ஏற்பட்டது. ’சுவாதா இன்னும் 3 வருடங்கள் உயிருடன் இருந்தாளில்லை’ உடனே மாய் சொன்னான். அவனது தாயாரின் மரணம் அவனுக்கொரு மாறாத கவலையை ஏற்படுத்திவிட்டது. எதை எடுத்தாலும் ஒரு சந்தேகம், கவலை, எதிர்காலம் என்று ஒன்று இல்லாதது போன்ற ஏக்கம் அவனிடம் இருக்கும். ஒருமுறை “நீயும் நானும் குதிரைக்கு காசு கட்டியதால், வீட்டு லோன் கட்ட முடியவில்லை” என்று பலரும் நிற்கும்போது நந்தனிடம் சொன்னான். எல்லோரும் மனிதர்களுக்காக உழைப்பார்கள். ‘சிக் மான்’ மிருகங்களுக்காக உழைக்கின்றான். குதிரைகள் மீது பணத்தைக் கட்டிவிடுவான் அவன். எல்லோரினதும் வீட்டுக்கணக்கு (mortgage) நாளாக நாளாகக் குறைந்து செல்லும். சிக் மானின் கணக்கோ நாளாக நாளாக ஏறிக் கொண்டு செல்லும்.

 ”புங்கிற்கும் கணவனுக்கும் இடையே கடும் சண்டை. அதனால் கணவன் அவளை வேலைக்குப் போவதில் இருந்தும் தடுத்துவிட்டான்” என்று ஒரு கதை தொழிற்சாலையில் உலாவியது. இவற்றைவிட இன்னொரு கதை தொழிற்சாலையிடையே பரவி வலுப்பெற்று வந்தது. அது மாய் சொன்ன கதை.

 “புங் கருக்கலைப்புச் செய்து கொண்டு வீட்டில் நிற்கின்றாள்.”

 

தொடரும்….

No comments: