உலகச் செய்திகள்

உக்ரைன், ரஷ்யாவுக்கு சீனா சமரச அழைப்பு 

பாக்.– ஆப்கான் எல்லை ஆறாவது நாளாக பூட்டு

வட கொரியா நான்கு ஏவுகணை சோதனை

உக்ரைனில் ரஷ்ய படையெடுப்புக்கு ஐ.நா பொதுச் சபையில் கண்டனம்

நீர் வற்றியதால் மிதக்கும் வெனிஸ் நகர் ஸ்தம்பிதம்


உக்ரைன், ரஷ்யாவுக்கு சீனா சமரச அழைப்பு 

உக்ரைனையும் ரஷ்யாவையும் உடனடியாக சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமெனச் சீனா கேட்டுக்கொண்டுள்ளது.

ரஷ்ய–உக்ரைன் போரின் ஓராண்டு நிறைவு நேற்று (24 பெப்ரவரி) அனுசரிக்கப்படும் நிலையில் அது அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

“ரஷ்யாவும் உக்ரைனும் ஒரே இலக்கை நோக்கிச் செயல்படுவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும்” என்று அது குறிப்பிட்டது.

பூசலில் அணுவாயுதங்களைப் பயன்படுத்துவது பற்றி ரஷ்ய ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

“அணுவாயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது. அவற்றைப் பயன்படுத்தப் போவதாக மிரட்டுவதும் கூடாது” என்று சீனா தனது அறிக்கையில் கூறியது.

சர்வதேச மனிதாபிமானச் சட்டப்படி பொதுமக்களைத் தாக்காமல் தவிர்ப்பது முக்கியம் என்றும் சீனா குறிப்பிட்டது. ரஷ்ய–உக்ரைன் போரைப் பொறுத்தவரை சீனா நடுநிலை வகிப்பதாகக் கூறுகிறது.    நன்றி தினகரன்  






பாக்.– ஆப்கான் எல்லை ஆறாவது நாளாக பூட்டு

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் எல்லை கடக்கும் முக்கிய புள்ளிகளில் ஒன்றான டோர்காம் கடவையை திறக்க தலிபான்கள் இணங்கியபோதும் அந்த எல்லைக் கடவை தொடர்ந்து ஆறாவது நாளாக நேற்றைய (25) தினத்திலும் மூடப்பட்டிருந்தது.

இந்த எல்லை கடவையை திறப்பதாக செய்தி பரவியதை அடுத்து ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் பக்கத்தில் மக்கள் திரண்டதால் நீண்ட வரிசை ஏற்பட்டுள்ளது. இங்கு சரக்கு வாகனங்களும் சில நாட்களாக எல்லையை கடக்க நீண்ட வரிசையில் காத்துள்ளன.

பாகிஸ்தான் தன் பங்களிப்புகளை மீறியதன் விளைவாக இந்த எல்லை கடக்கும் புள்ளியை மூடியதாகக் குறிப்பிட்டுள்ள தலிபான்கள் அந்த பங்களிப்புக்களை குறிப்பிடவில்லை. இது தொடர்பில் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சும் எந்த கருத்தையும் கூறவில்லை.    நன்றி தினகரன் 





வட கொரியா நான்கு ஏவுகணை சோதனை

வட கொரியா தாழப் பறக்கும் நான்கு ஏவுகணைகளைப் பாய்ச்சி சோதனை நடத்தியுள்ளது.

எதிரிகளின் அணுசக்தித் தாக்குதல்களைத் திறம்பட முறியடிக்கும் ஆற்றல் தன்னிடம் உள்ளது என்பதைக் காட்டுவது அந்தச் சோதனையின் நோக்கம் எனக் கூறப்படுகிறது. அந்த விபரங்களை, வட கொரியா செய்தி நிறுவனம் வெளியிட்டது.

வடக்கு ஹாம் கியோங் மாநிலத்தில் அந்த 4 ஏவுகணைகள் சோதித்துப் பார்க்கப்பட்டன. அவை கொரியத் தீபகற்பத்திற்குக் கிழக்கே விழுந்தன.

அமெரிக்கா மற்றும் தென் கொரியா இடையே வொஷிங்டன் டி.சியில் இராணுவ ஒத்திகை ஒன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே இந்த ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளது. வட கொரியாவின் அணு அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கும் நோக்கிலேயே இந்த ஒத்திகை நடைபெறுகிறது.   நன்றி தினகரன் 





உக்ரைனில் ரஷ்ய படையெடுப்புக்கு ஐ.நா பொதுச் சபையில் கண்டனம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை கண்டிக்கும் ஐ.நா பொதுச் சபை தீர்மானம் அதிகப் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உக்ரைன் போர் ஆரம்பித்து ஓர் ஆண்டு பூர்த்தியாகும் நிலையில் கடந்த வியாழனன்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் உக்ரைனில் இருந்து ரஷ்ய துருப்புகள் வாபஸ் பெறப்பட வேண்டும் என்றும் மோதல் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 141 வாக்குகள் பதிவானதோடு ரஷ்யா உட்பட ஏழு நாடுகள் எதிராக வாக்களித்த நிலையில் 32 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்துக்கொண்டன.

உக்ரைன் போரினால் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மில்லியன் கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தப் போர் சர்வதேச அளவில் உணவு மற்றும் வலுசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியது.

கடைசியாக கடந்த ஆண்டு ஒக்டோபரில், உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யா தனது ஆட்புலத்திற்குள் இணைத்ததை கண்டித்து இடம்பெற்ற பொதுச் சபை வாக்கெடுப்பில் 143 நாடுகள் ஆதரவாக வாக்களித்திருந்தன. இதற்கு எதிராக ஐந்து நாடுகள் வாக்களித்திருந்த நிலையில் தற்போது எரிட்ரியா மற்றும் மாலி நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் கடந்த முறை வாக்களிப்பை தவிர்த்திருந்த ஹொன்டுராஸ், லெசதோ, தாய்லாந்து மற்றும் தென் சூடான் நாடுகள் இம்முறை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

ஐ.நா பாதுகாப்புச் சபையில் ரஷ்யா வீட்டோ அதிகாரத்தை பெற்றிருக்கு சூழலில் பொதுச் சபை தீர்மானம் உக்ரைன் போர் தொடர்பான உலகளாவிய நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளது.

எனினும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனையும் வளர்ந்து வரும் நாடுகளையும் பயன்படுத்தி, ரஷ்யாவைத் தோற்கடிக்க முற்படுவதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யத் தூதர் வசிலி நெபென்ஸியா சாடினார்.

இதில் ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரஸ் பேசும்போது, “ஐ.நா. விதிகள், சர்வதேச சட்ட விதிகளை மீறி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதன் காரணமாக பிராந்திய அமைதி சீர்குலைந்துள்ளது. சர்வதேச அளவில் பதற்றம் எழுந்துள்ளது.

போர் என்பது மிகப்பெரிய பிரச்சினை. எந்தவொரு பிரச்சினைக்கும் போர் மூலம் தீர்வு காண முடியாது. உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும்” என்று வலியுறுத்தினார். உக்ரைனில் ரஷ்ய படையெடுப்புக்கு ஐ.நா பொதுச் சபையில் கண்டனம்.   நன்றி தினகரன் 





நீர் வற்றியதால் மிதக்கும் வெனிஸ் நகர் ஸ்தம்பிதம்

மிதக்கும் நகரான வெனிஸில் சில வாரங்களாக மழை பெய்யாததால் கால்வாய்கள் வற்றியுள்ளன. மேலும் வழக்கத்திற்கு மாறாகப் பனிப்பொழிவும் குறைந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.

இத்தாலியில் மற்றொரு வறட்சி பற்றிய அச்சத்திற்கு மத்தியிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஆல்ப்ஸ் பகுதியில் வழக்கமான பனிப்பொழிவில் பாதிக்கும் குறைவான அளவே பதிவாகி உள்ளது.

வடக்கு இத்தாலியில் உள்ள கார்மா ஏரியின் நீர் மட்டம் சாதனை அளவுக்கு குறைந்துள்ளது. இதனால் அந்த ஏரியில் இருக்கு சிரிய தீவான சான் பியாகியொவுக்கு நடந்து செல்ல முடியுமாகியுள்ளது.

நிரந்தர வெள்ளம் இருக்கும் வெனிஸ் நகரில் நீர் வற்றியதால் நீரில் செல்லும் டெக்சி படகுகள் மற்றும் அம்புலன்ஸ்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 






No comments: