எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 54 ஒரே ஆண்டில் ( 2004 ) மறைந்த இரண்டு ஆளுமைகள் ! தலைக்கு அணியும் தொப்பியின் மகாத்மியமும் எழுதவேண்டும் ! முருகபூபதி


ஒரேசமயத்தில் இரண்டு அல்லது மூன்று வேலைகளை செய்வதற்கு என்னை பழக்கியது, புலம்பெயர் வாழ்க்கைதான். இனிமேல் இதனை புகலிட வாழ்க்கை என்றுதான் கூறவேண்டும். 

நேரத்தோடு போராடிக்கொண்டிருப்பவர்கள் இந்த உத்தியை கையாண்டால்தான் பிழைத்துக்கொள்ள முடியும். வேகமும் விவேகமும் இல்லையென்றால், இந்த அவசர யுகத்தில் நாம் சந்திக்கும் பிரச்சினைகளை சமாளிக்க முடியாது.

எழுத்தும் வாழ்க்கையும் தொடரின் கடந்த 53 ஆவது அங்கத்தில் நான்


குறிப்பிட்ட இலக்கிய ஆளுமை ராஜஶ்ரீகாந்தனின் நினைவாக எழுதிய நூலை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் வெளியிட்டுவைத்த பின்னரே அவுஸ்திரேலியாவுக்கு புறப்படவேண்டும் என தீர்மானித்திருந்தேன்.

2005 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி சிட்னியில் ஐந்தாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் ராஜஶ்ரீகாந்தன் நினைவுகள் நூலையும், விமர்சன அரங்கில் இணைத்துவிட்டு, அந்த நிகழ்ச்சி முடிந்து மெல்பன் திரும்பியதையடுத்து,  கொழும்புக்குச் செல்லத் தயாரானேன் என்று கடந்த அங்கத்தில் சொல்லியிருந்தேன் அல்லவா..?

அவ்வாறு சென்று 2004 இறுதியில் சுநாமி கடற்கோள் அநர்த்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மக்களுக்கான நிவாரண உதவிகளை பகிர்ந்தளித்துவிட்டு, கொழும்புக்கு வந்தபோது,  ராஜஶ்ரீகாந்தன் நினைவுகள் நூலின் இதர பிரதிகளை வந்து எடுத்துச்செல்லுங்கள் என்று நண்பர் கிறிப்ஸ் கிறிஸ்ணமூர்த்தியிடமிருந்து தகவல் வந்தது.

கொழும்பு கொட்டாஞ்சேனையில் அப்போது வசித்துக்கொண்டிருந்த ராஜஶ்ரீகாந்தனின் துணைவியார் லீலா, மற்றும் அவர்களது பிள்ளைகள் அபர்ணா, அனோஜா, ஆகியோரிடமும் மல்லிகை ஜீவா, மேமன்கவி, வதிரி சி. ரவீந்திரன் ஆகியோரிடத்திலும், அவுஸ்திரேலியா புறப்படுவதற்கு முன்னர் அந்த நூலின் வெளியீட்டு அரங்கினை அந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி               ( 26-02-2005 ) நடத்தப்போகின்றேன் எனச்சொன்னேன்.

கிழக்கிலங்கை சென்று திரும்பி வந்த களைப்பு தீருவதற்குள் மற்றும் ஒரு நிகழ்ச்சியை எவ்வாறு நடத்தப்போகிறீர்…? என மல்லிகை ஜீவா கேட்டார். 

 “ எல்லாம் நடக்கும்.  நீங்கள்தான் தலைமை தாங்குகிறீர்கள். மேமன் கவி வரவேற்புரை, சோமகாந்தன், வன்னியகுலம், திக்குவல்லை கமால்,  வதிரி. சி. ரவீந்திரன், அன்னலட்சுமி இராஜதுரை, சிவா. சுப்பிரமணியம் ( தினகரன் ஆசிரியர் )  ஆகியோர் உரையாற்றுவார்கள்.   புரவலர் காசிம் உமரும் வருகிறார்.  “ என்று எனது மனக்கணக்கினை அவரிடம் ஒப்புவித்தேன்.

 “ எல்லோரிடமும் சொல்லிவிட்டீரா..?  “ என்று அடுத்தகேள்வியை ஜீவா  கேட்டார் .  அவர்கள் எல்லோரும் நிச்சயம் வருவார்கள். பேசுவார்கள். எனக்காக இல்லாது விட்டாலும்,  ராஜஶ்ரீகாந்தனுக்காக வருவார்கள். தெணியானையும் அழைக்க விரும்புகின்றேன். அவருக்கும் வருவதற்கு விருப்பம் இருந்தாலும்,  சமகால சூழ்நிலையினால் பொலிகண்டியிலிருந்து அவரால் வரமுடியாது . எனினும் இந்த நூலின் அறிமுகம் வடமராட்சியிலும் நடக்கும். ஆனால், நான்தான் அப்போது இங்கே இருக்கமாட்டேன்    என்றேன்.

ஜீவா என்னை வியப்போடு பார்த்தார்.

 “ எல்லாம் அவுஸ்திரேலியா உமக்குத் தந்த ட்ரெயினிங்  “ என்று மாத்திரம் சொன்னார்.


நான் திட்டமிட்டவாறு அந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவனித்துக்கொண்டிருந்தபோது, எனது இரண்டாவது மகள் பிரியாதேவி, தன்னுடன் மெல்பனில் படித்த மாணவி ஒருவரின் சகோதரனின் திருமண நிகழ்வுக்காக துபாய்  சென்று, அங்கிருந்து இந்தியா வந்துகொண்டிருந்தாள்.

அவள் பல்கலைக்கழகத்தில் அப்போது படித்துக்கொண்டிருந்தாள். அவளது  அந்தச்  சிநேகிதியின் தந்தையார் துபாயில்  அமைச்சராகவிருப்பவர். அதனால் மகள்  தனித்துச்சென்ற அந்தப்பயணம் குறித்து நான் கவலைப்படவில்லை. ஆனால், தன்னந்தனியாக அவள் சென்னை வரப்போகிறாள். உரியநேரத்தில் வேலூர் காட்பாடியிலிருக்கும் எனது தம்பி ஶ்ரீதரனால் சென்னை விமான நிலையத்திற்கு அவளை வரவேற்க சென்றுவிடமுடியுமா..? என்ற கவலை மனதை அரித்தது.

சென்னையில் வதியும் குடும்ப சிநேகிதியான படைப்பிலக்கியவாதி சுமதி தமிழச்சி தங்கபாண்டியனுக்கு மகள் வரும் நாளை தெரியப்படுத்தினேன்.

அவரும் எதற்கும் கவலைப்படவேண்டாம் என்று உறுதியளித்தார்.

எமது மகளை சென்னை விமானநிலையத்திற்கு வரவேற்பதற்கு எனது தம்பி ஶ்ரீதரனும், தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் அங்கே அனுப்பிவைத்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஆளையாள் எதிர்பார்க்காமல் சந்தித்துக்கொண்டனர்.

நான் இப்படி ஒரு ஏற்பாட்டினை செய்திருப்பேன் என்று எனது


மகளுக்கோ, தம்பிக்கோ தெரியாது.  எதிலும் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று எனது மனம் சொல்லிக்கொண்டிருந்தது. அதிலும் பிள்ளைகள் மட்டுமல்ல, மனைவி மற்றும் உறவினர்கள் நெருங்கிய நண்பர்கள் பலருக்கும், அவர்களின் வெளிநாட்டு பயணங்களின்போது இந்த முன்னெச்சரிக்கை ஆலோசனைகளை சொல்வது எனது வழக்கம். அந்த வழக்கம், இற்றைவரையில் பழக்கமாகவே தொடருகிறது.

இவ்வாறு மற்றவர்களுக்கு ஆலோசனைகள் சொல்லும் நான் எனது விடயங்கள் பலவற்றில் கோட்டை விட்டுவிடுவதும் உண்டு! அதாவது வழிகாட்டிக்கு தன்வழி தெரியாது என்பதுபோலத்தான் !

தமிழகப்பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் மகளுக்கு ஊரில் பதிவுத்திருமணத்திற்கும் அப்போது ஏற்பாடுகளை செய்திருந்தேன்.

முற்கூட்டியே திட்டமிட்டவாறு அனைத்தும் நடந்தது.  அந்த பதிவுத்திருமணத்திற்காக வருகை தந்த மூத்த மகள் பாரதியையும் இரண்டாவது மகள் பிரியாவையும் மெல்பனுக்கு மீண்டும் வழியனுப்பிவிட்டு,  ராஜஶ்ரீகாந்தன் நினைவுகள் நூல் வெளியீட்டு நிகழ்வை கவனித்தேன்.

ஊரில் இருந்த குடும்ப உறவுகள், நான் காலில் சக்கரம் பூட்டிக்கொண்டு ஓடுவதாகச்  சொன்னார்கள்.


எனது வேகத்திற்கு அவர்களால் ஓடமுடியவில்லை என்ற ஆதங்கத்தில் அவர்கள் அவ்வாறுதான் சொல்வார்கள்.  எனினும் நான் ஓடியாகவேண்டும். புலம்பெயர்ந்து சென்றபின்னர் எமது தாயகம் இரவல் தாய்நாடாகிவிட்டது.  இலக்கிய நண்பர் செ. யோகநாதன்  “ இரவல் தாய்நாடு  என்ற சிறந்த நாவலையும் எழுதியிருக்கிறார்.

எனக்கோ இலங்கையில் நிற்பதற்கு ஒரு மாத காலம்தான் விசா அனுமதி. அதற்குள் வந்த வேலைகளை முடித்துக்கொண்டு திரும்பவேண்டும்.  அதனால்,  பயணத்தின் நிகழ்ச்சி நிரலை முற்கூட்டியே தயாரித்துவிடுவேன். அதனால் விரைந்து ஓடத்தானே வேண்டும்!?

எனது நட்பு வட்டத்தில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பற்றியும் இங்கே  பெயர் குறிப்பிடாமல் சொல்லத்தான் வேண்டும்.

இலங்கை சென்று,  அங்கிருந்துகொண்டு  இலங்கையிலிருப்பவர்களின் தொலைபேசி இலக்கம் கேட்பார்கள்.  சிட்னியில் நீண்ட காலம் வசித்துக்கொண்டு, சிட்னியிலிருப்பவர்களின் தொடர்பு இலக்கம் கேட்பார்கள்.  அத்தகைய தொலைபேசி அழைப்புகள் எந்தநேரத்திலும் வரலாம்.

2000 ஆம் ஆண்டுகளில் இந்த வாட்ஸ் அப் தொல்லைகள் இருந்ததில்லை. எனினும் அப்போதும் தொடர்பிலக்கம் கேட்டு அவஸ்தைப்படுத்தும் காலம்தான் இருந்தது.

ராஜஶ்ரீகாந்தன் நினைவுகள் நூல் வெளியீட்டு அரங்கு சிறப்பாக நடந்தது.  சமகாலத்தில்  தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துவரும் கவிஞர்  வ. ஐ. ச.  ஜெயபாலனும் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார்.

யாழ். கனகரத்தினம் மத்திய கல்லூரியில் நான் படித்தபோது, மேல்வகுப்பில் பயின்ற சுதேசநாதனும்  கலந்துகொண்டார். அச்சமயம் இவர் கொழும்பில் பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றிக்கொண்டிருந்தார்.

அத்தருணம் நூல் விற்பனையில் கிடைத்த பணம் யாவற்றையும்


எண்ணியும் பார்க்காமலே, திருமதி லீலா ராஜஶ்ரீகாந்தனை மேடைக்கு அழைத்து,  மல்லிகை ஜீவாவின் கரத்தினால் அவருக்கே  வழங்கினேன். இதனை எவரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

சகோதரி லீலா கதறி அழத்தொடங்கிவிட்டார். நான் அதனை எதிர்பார்க்கவில்லை.  சபையிலிருந்த எனது தங்கை மகள் ஜனனியை மேடைக்கு அழைத்து, சகோதரியை ஆசுவசப்படுத்தி மேடையிலிருந்து இறக்கினேன்.

கண்ணீரைக்கடந்து வாழ்பவர்களை அறிவோம். கண்ணீரே வாழ்க்கையாகிவிடும் பலர் பற்றியும் அறிந்திருக்கின்றேன். அத்தகைய ஒருவர்தான் சகோதரி லீலா ராஜஶ்ரீகாந்தன்.   சில வருடங்களில் அவரது மூத்த புதல்வி அபர்ணா , திருமணமாகி ஒரு சில வருடங்களிலேயே ஒரு பெண்குழந்தையை பெற்றுக்கொடுத்துவிட்டு, அடுத்த சில நாட்களில் மறைந்துவிட்டாள். எம் அனைவருக்கும் அவளது மரணம் பேரதிர்ச்சியை தந்தது.

அடுத்தடுத்து அன்புக் கணவரையும் அருமைப் புதல்வியையும் இழந்து தவிக்கும் சகோதரி லீலாவுக்கு தற்போதுள்ள ஒரே ஆறுதல், இரண்டாவது மகள் அனோஜாவும் மூத்த மகளின் பெண்குழந்தையான பேத்தியும்தான்.

ஒவ்வொருவர் வாழ்விலும் விளையாடும் விதியை எண்ணி நான் வியப்பதும் உண்டு, ஆத்திரப்படுவதும் உண்டு. ஏன் எமது மக்களுக்கு இவ்வாறெல்லாம் சோதனைகள்  வருகின்றன…? !

விதியின் மீது பழியை போட்டுக்கொண்டிருக்கின்றோம்.

2005 ஆம்  ஆண்டு அந்த இலங்கைப் பயணத்தில் எனது நிகழ்ச்சிகளை நிறைவுசெய்துகொண்டு அவுஸ்திரேலியாவுக்கு புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தபோது மற்றும் விடயம் எனது நினைவுப்பொறியில் தட்டியது.

குறிப்பிட்ட ராஜஶ்ரீகாந்தன் நினைவுகள் நூலை எம்மில் பல இலக்கியவாதிகளுக்கு ஞானத்தந்தையாக விளங்கிய ( அமரர் ) தலாத்து ஓயா கே. கணேஷ் அவர்களுக்கே சமர்ப்பணம் செய்திருந்தேன்.

இவர் முன்னாள் தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சர் பி. தேவராஜின் சகோதரியைத்தான் மணம்முடித்தார்.  கே.  கணேஷ் என்மீதும் ராஜஶ்ரீகாந்தன்  மீதும் அளவுகடந்த பாசம் வைத்திருந்தவர்.  தமிழ் இலக்கிய உலகிற்கு வியட்நாம் மற்றும் மேற்கு ஐரோப்பிய இலக்கியங்கள் பலவற்றை மொழிபெயர்த்து வரவாக்கித்தந்தவர்.

மூத்த எழுத்தாளர் கே. இராமநாதனுடன் இணைந்து பாரதி என்ற இதழையும் நடத்தியவர். சுவாமி விபுலானந்தர், சிங்கள இலக்கிய அறிஞர்கள்  சரச்சந்திரா, மார்டின் விக்கிரமசிங்கா   ஆகியோருடன் சேர்ந்து இலங்கை எழுத்தாளர் சங்கத்தை 1950 களில் ஆரம்பித்தவர்.

1987 இல் நான் அவுஸ்திரேலியாவுக்கு புறப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர்  1986 இறுதியில் கண்டியில் எழுத்தாளர் அந்தனிஜீவா ஒழுங்கு செய்திருந்த மாநாட்டுக்கு நானும் ராஜஶ்ரீகாந்தனும் சென்றிருந்தபோது, இருவரும் அருகில் தலாத்து ஓயாவுக்கும் சென்று கே. கணேஷ்  அவர்களைப்  பார்த்தோம்.

அவரது தோட்டத்தில் விளைந்த மிளகு எமக்கு பொட்டலங்களாக தரப்பட்டது.  உப்பிட்டவரை உள்ளளவும் நினைப்பதுபோன்று மிளகு தந்தவரையும் நாம் நினைக்கவேண்டும் என்று எனது பாட்டி அடிக்கடி சொல்வார்.

பாட்டி தனது வைத்தியத்தில் இவை இரண்டையும் பயன்படுத்துபவர்.  உள்நாக்கு வளர்ந்து உபாதைக்குள்ளாகிய பலரை பாட்டி, உப்பும், மிளகும் , வாழை மடலும் பயன்படுத்தியே குணப்படுத்தியிருக்கிறார்.

கே. கணேஷ் அவர்களை இலங்கை செல்லும்போதெல்லாம்  கண்டி தலாத்து ஓயாவுக்கும் சென்று பார்ப்பேன்.  அவர், 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05 ஆம் திகதி மறைந்தார். அவருக்கு முன்பே ராஜஶ்ரீகாந்தன் அதே ஆண்டு ஏப்ரில் மாதம் 20 ஆம் திகதி மறைந்தார்.

அந்த ஓராண்டுக்குள்  அடுத்தடுத்து மறைந்துவிட்ட இவர்கள் இருவரும் அதே  ஆண்டு இறுதியில் அச்சிட்டு, வெளியிடப்பட்ட ராஜஶ்ரீகாந்தன் நினைவுகள் நூலில் இடம்பெற்றனர்.

திருமதி கணேஷ் அவர்களிடம்  அந்த நூலை வழங்குவதற்காக, நண்பர் உடுவை தில்லை நடராஜா என்னை அழைத்துச்சென்றார்.  அச்சமயம்  நண்பர் உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராக பணியாற்றிக்கொண்டிருந்தார். இந்த அமைச்சு அப்போது ஜனாதிபதி சந்திரிக்கா வசம் இருந்தது. ஶ்ரீஜயவர்தன புரத்தில் அமைந்துள்ள பாராளுமன்றத்திற்கு சமீபமாக இருந்த அந்த அமைச்சின் கட்டிடத்தையும் அந்த உயர் பாதுகாப்பு வலயத்தையும் அந்தப்பயணத்தில்தான் முதல் தடவையாகப் பார்த்தேன்.

நான்  தொப்பி அணிவது வழக்கம்.  அப்போதும்  தொப்பி அணிந்திருந்தேன்.  உடுவை தில்லை நடராஜாவின் அமைச்சு வாகனத்தில் நான் அவருடன் பயணிக்கும்போது, அந்த உயர் பாதுகாப்பு வலயத்தில், எனது தொப்பியை கழற்றுமாறு அவர் சொன்னார்.

ஏன் என்று புரியவில்லை. நானும் கேட்கவில்லை.  இவ்வாறு ஒரு சம்பவம் 1986 ஆம் ஆண்டு இறுதியிலும் எனக்கு நேர்ந்தது.  அந்தவேளையில் வடமராட்சியில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான செய்தி வேட்டைக்குச்  சென்றபோது, யாழ்ப்பாணத்தில் ஒரு மாலை வேளையில் மல்லிகை ஜீவாவுடன் ஒரு வீதியில் நடந்தேன். ஒரு ஆயுதம் ஏந்திய விடுதலை இயக்கத்தின் முகாமை கடக்கும்போது, ஜீவா , நான் தலையில் அணிந்திருந்த தொப்பியை கழற்றுமாறு  மெதுவாகச்சொன்னார்.

அப்போதும் அதற்கான காரணத்தை நான் ஜீவாவிடம் கேட்கவில்லை.

எங்கள் ஊரில் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் பயிலும் சில மாணவர்களுக்கு எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம் உதவி வருகிறது. அம்மாணவர்களை பார்க்கச்சென்றபோதும் வாயிலில் நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் நான் அணிந்திருந்த தொப்பியை கழற்றச்சொன்னார்.

உச்சிவெய்யில் கொளுத்திக்கொண்டிருந்தது. எனினும் கழற்றநேர்ந்தது.

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போதுதானே நாம் தொப்பியை கழற்றவேண்டும்.? !

ஆனால், உயிரோடு நடமாடுபவர்கள் முன்னிலையிலும் இவ்வாறு நான் பல தடவைகள்  எனது தொப்பியை கழற்றியிருக்கின்றேன்.

இந்தத் தொப்பியின் மகத்துவம் பற்றி தனியாக ஒரு மகாத்மியத்தை யாராவது எழுதினால் நன்று.

( தொடரும் )

---0---

letchumananm@gmail.com

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments: