ஆனந்த ஜோதி - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 திரைப் படங்களில் பயங்கர வில்லனாகவும், நிஜ வாழ்வில் மிகவும்


நல்லவனாகவும் வாழ்ந்து வந்த வில்லன் பி எஸ் வீரப்பா 60 பது வருடங்களுக்கு முன் திரைப்பட தயாரிப்பாளராக மாறினார்.எஸ் எஸ் ஆர் நடிப்பில் பிள்ளைக் கனியமுது ,ஜெமினி நடிப்பில் வீரக்கனல் ,சிவாஜி நடிப்பில் ஆலயமணி ஆகிய படங்களை தயாரித்தவர் எம் ஜி ஆரின் நடிப்பிலும் ஒரு படம் தயாரித்தார். படத்தில் கதாநாயகன் பேர் ஆனந்தன்,கதாநாயகி பேர் ஜோதி இரண்டும் சேர்ந்தால் ஆனந்த ஜோதி.இதுதான் எம் ஜி ஆர் நடிப்பில் அவர் தயாரித்த படம்.


படத்தின் நாயகன் ஆனந்தன் பாடசாலையில் உடற்பயிற்சி ஆசிரியர்

. மாணவர்களை உடற்பயிற்சி செய்ய ஊக்குவிப்பவன்.அவனின் மாணவர்களில் ஒருவன் பாலு .அவனின் அக்கா ஜோதி, ஆனந்தன் ஒரு கவிஞன் என்பது தெரியாமலே அவனை காதலிக்கிறாள்.அவளில் தந்தை முத்தையா பிள்ளை ஒரு தனவந்தர். பிள்ளைகள் மேல் அன்பு கொண்டவர். எல்லாம் சுமுகமாக போகும் சந்தர்ப்பத்தில் அவர்களின் வாழ்வில் குறுக்கிடுகிறான் ஜம்பு. அவன் வருகைக்கு பிறகு முத்தையா பிள்ளை பெட்டிப் பாம்பாக அவனுக்கு அடங்குகிறார். ஆனந்தன்,ஜோதி காதலுக்கும் தடை ஏற்படுகிறது. ஜம்புவின் கை ஓங்கி நிற்க காரணம் என்ன என்று அறியாமல் திகைக்கிறான் பாலு. ஆனந்தனும்,ஜோதியும் இணைந்து ஆனந்த ஜோதி ஆனார்களா என்பது மீதிக் கதை.

படத்தின் கதை வசனத்தை எழுதியவர் ஜாவார் சீதாரமன் .பட்டதாரியும் ,சட்டத்தரணியுமான அவர் வித்தியாசமான கதைகளை எழுத கூடியவர். ஆனாலும் எம் ஜி ஆர் படம் என்பதால் அவருக்கு பொருந்தும்படி ஒரு கதையை எழுதி வசனத்தில் தன் திறமையை வெளிப்படுத்தி இருந்தார் . இன்றைய நவீன கைக் கடிகாரங்களை நாம் உரையாடுவதற்கும் பயன்படுத்துக்கிறோம், ஆனால் அறு பதாண்டுகளுக்கு முன்னரே வில்லன் வீரப்பா தன்னுடைய கைக் கடிகாரத்தில் பேசி சதி வேலைகளை செய்கிறார்.ஜாவரின் ஐடியா அபாரம்!

படத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் அதே அளவுக்கு சோகமாகவும் இருக்கிறார் எம் ஜி ஆர . தான் தான் கவிஞர் மணியரசன் என்று அறிந்த தேவிகாவிடம் மாட்டுப்பட்டு விழிப்பதும்,போலீசுக்கு பயந்து ஓடுவதும்,தேவிகாவுடன் கை விலங்கை பூட்டிக்கொண்டு டூயட் பாடுவதும்,வீரப்பவுடன் மோதுவதுமாக படம் முழுதும் சுறுசுறுப்பாக இருக்கிறார் எம் ஜி ஆர்.


படத்தின் கதாநாயகி தேவிகா.எம் ஜி ஆருடன் அவர் ஜோடி சேர்ந்து நடித்த ஒரே படம் இதுதான்.மகிழ்ச்சி.சோகம் என்று மாறி மாறி தன் நடிப்புத் திறனை காட்டியிருந்தார்.அன்றைய கால கட்டத்தில் சரோஜாதேவியின் கால்ஷீட் கிடைக்காதவர்கள் அடுத்ததாக தேவிகாவின் கதவைத் தான் தட்டுவார்கள்.அந்த அடிப்படையில் இதில் அவர் எம் ஜி ஆருடன் ஜோடி சேர்ந்திருக்க கூடும். ஆனாலும் இந்த ஜோடிப் பொருத்தத்தை எம் ஜி ஆர் ரசிகர்கள் பெரிதாக ஏற்றுக் கொள்ளவில்லை.

இன்று உலக நாயகனாக அறியப்படும் கமல்ஹாசன் சிறுவனாக எம் ஜி ஆருடன் சேர்ந்து நடித்த ஒரே படமும் இதுதான்.மிகவும் துருதுப்பாக , குறும்பாக நடித்திருந்தார்.தந்தையாக வரும் எஸ் வி சகஸ்ரநாமம் மிகையில்லாத நடிப்பை வழங்கினார்.

எல்லா படங்களிலும் வில்லனாக வந்து எம் ஜி ஆருக்கு தொல்லை

கொடுக்கும் எம் ஆர் ராதாவுக்கு இதில் எம் ஜி ஆருக்கு உதவும் நல்லவன் வேடம். படத்தில் காமெடியன் அவர்தான். அவருக்கு இணை மனோரமா.ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் உண்மை பேசுவேன் என்று ராதா எடுக்கும் தீர்மானத்தால் அவருக்கு ஏற்படும் சங்கடம் நல்ல ஜோக்.இவர்களுடன் எஸ் ஏ அசோகன், எஸ் வி ராமதாஸ்,கரிக்கோல் ராஜு,ஆகியோரும் நடித்திருந்தனர்.

தன்னுடைய சொந்தப் படம் என்பதற்காக வீரப்பா ஒன்றும் தன்னை நல்லவனாக காட்டிக்கொள்ளவில்லை.கொடூர வில்லனாகவே வருகிறார்.அவருடைய வசன உச்சரிப்புக்கே ஒரு சபாஷ் போடலாம்.மிஸ்டர் முத்தையா பிள்ளை என்று அவர் அழைப்பதே போதும்!


கவிஞர் கண்ணதாசன்,விஸ்வநாதன் ராமமூர்த்தி டீ எம் எஸ்,சுசிலா கூட்டணி இதிலும் வெற்றிகரமாக தொடர்ந்தது. சூழலுக்கு ஒரு பாட்டு என்ற விதத்தில் ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஒவ்வொரு பாட்டாக கவிஞர் எழுதி இருந்தார்.பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே,பனி இல்லாத மார்கழியா என்று காதல் டூயட், நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா,என்று காதல் பிரிவுக்கு,காலமகள் கண் திறப்பாள் சின்னையா என்று மன ஆறுதலுக்கு,கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரியல்லைய்யா,பல பல ரகமா இருக்குது பூட்டு என்று தத்துவ ரீதியாகவும் பாடல்களை தந்தவர் சமரசத்துக்கு எடுத்துக் காட்டாக ஒரு தாய் மக்கள் நாம் என்போம் என்ற பாடலை பிரகடனப் படுத்தியிருந்தார்.

படத்தின் ஒளிப்பதிவை பழம் பெரும் ஒளிப்பதிவாளர் ஜே ஜீ விஜயம் கையாண்டார்.படத்தொகுப்பை கவனித்தவர் ஜம்புலிங்கம்.இரண்டும் தரமாகவே இருந்தது. படத்தை ஏ எஸ் ஏ சாமி இயக்கி, பின்னர் வி என் ரெட்டி இயக்கி இருந்தார்.எந்த காட்சியை எவர் இயக்கினார்களோ எவருக்கு தெரியும்!

இந்த படத்துக்கு பிறகு வீரப்பா , எம் ஜி ஆர் நடிப்பில் எந்தப் படத்தையும் தயாரிக்கவில்லை.ஆனாலும் பத்தாண்டுகள் கழித்து தன்னுடைய படங்கள் சிலவற்றில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை வீரப்பாவுக்கு எம் ஜி ஆர் வழங்கி பொருளாதார நெருக்கடியில் இருந்த அவர் வாழ்வில் ஆனந்த ஜோதியை ஏற்றி வைத்தார்!

No comments: