அழகான ஆடைக்குள் வெற்றுப்பை ! Clean suit empty pocket! அவதானி

ஆங்கிலத்தில்  ஒரு வாசகம் இப்படிச் சொல்கிறது:


Clean suit empty pocket. 
இதன் அர்த்தம் புரிந்துகொள்ளத்தக்கது.  தமிழ்த் திரைப்படங்களில் வரும் காதல் காட்சிகளில் தோன்றி ஆடிப்பாடும் கதாநாயகன், அணிந்திருக்கும் மிகவும் பெறுமதியான ஆடையிலிருக்கும் பையில்   ( Pocket )   பணம் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. அது காட்சிக்குத் தேவையும் இல்லை !

அத்தகைய ஒரு நிலையில்தான் இன்றைய இலங்கை அரசாங்கம் இருக்கிறது. அதாவது பேச்சுப் பல்லக்கு. பயணமோ கால்நடை.

ஜனநாயக நாட்டில் தேர்தல்தான்  ஒரு அரசை அமைப்பதற்கான தீர்ப்பை வழங்கும் என்பது பொதுவான விதி. தேர்தல் நடத்துவதற்கு பணம் தேவை. வாக்குச்சீட்டுக்கள் அச்சிடவேண்டும்.  அதற்கே பெருந்தொகைப்பணம் அவசியம். அந்த நிதியை தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கவேண்டிய நிதியமைச்சு கையை விரித்தால் என்ன நடக்குமோ..? அதுதான் தற்போது இலங்கையில் நேர்ந்திருக்கிறது.

நிதியமைச்சின் இந்த கைவிரிப்பினை அரசின் திட்டமிட்ட சதி என கருதுகின்றன எதிரணிக்கட்சிகள்.  ஆளும்  ரணில் விக்கிரமசிங்காவின் அரசு,  ராஜபக்‌ஷக்களின் பொதுஜனபெரமுனவின் ஆசிர்வாதத்துடன் இயங்குகிறது என்பதே பொதுவான அபிப்பிராயம்.

 தங்களிடம் ஆட்சியைத் தந்தால், இலங்கையிலிருக்கும் பொருளாதார நெருக்கடி உட்பட அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடுவோம் என்றுதான் சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் அநுரகுமார திஸாநாயக்காவின் தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியும் சொல்லிக்கொண்டிருக்கின்றன.

ஆனால், அவ்வாறெல்லாம் சொல்ல முடியாத தமிழ்தேசியக்கட்சிகள்,  தங்கள் செல்வாக்கு எத்தகையது என்பதை காண்பிப்பதற்காகவே ஒவ்வொரு பாராளுமன்றத்தேர்தல்களிலும் களம் இறங்கிவருகிறது.

எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடக்கமாட்டாது என்பது பெரும்பாலும் உறுதியாகிவிட்டது.

ரணில்விக்கிரமசிங்காவின் ஐக்கிய தேசியக்கட்சியும், மகிந்த ராஜபக்‌ஷவின் பொதுஜன பெரமுனவும் இந்த செய்தியை எதிர்பார்த்திருந்தமையால் இவர்களுக்கு எந்தவொரு ஏமாற்றமும் இல்லை. திட்டமிட்டவாறு தேர்தல் நடந்திருந்தால், இவர்களின்   “ பொட்டுக்கேடு     வெளிச்சத்திற்கு வந்திருக்கும்.

எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் தீர்ப்பு எவ்வாறு அமையும் என்பதை  முற்கூட்டியே  தீர்க்கதரிசனமாக சொல்லத்தக்கவகையில்தான் இந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தல் இடம்பெறவிருந்தது.

நீண்டகாலமாக மாகாண சபைகளுக்கான தேர்தலும் நடக்கவில்லை. அதனை நடத்தவேண்டும் என்ற குரலும் முன்னர் எழுந்து,  பின்னர் அடங்கிவிட்டது.   அதனை நடத்துவதாயின் மாகாணங்களுக்கான அதிகாரப்பகிர்வு குறித்தும், 13 ஆவது திருத்தச்சட்டம் பற்றியும் அரசியல் கட்சிகள் பேசவேண்டும்.

ஆனால், மார்ச் மாதம் நடக்கவிருந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் அந்த சில்லெடுப்புகள் இல்லை.  அதனால்தான் இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் தங்களை வேட்பாளர்களாக பதிவுசெய்து களத்தில் இறங்கத் தயாராகியிருந்தனர்.

ரணிலின் அரசு கைவிரித்துவிட்டது.  திறைசேரியிடம் பணம் இல்லை என்பதே பிரதான காரணம் எனச்சொல்லப்படுகிறது.

இது இவ்விதமிருக்க, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், மக்களின் கருத்துக்கணிப்பை கண்டு தெளிந்தவர் போன்று இவ்வாறு சொல்லியிருக்கிறார்:     நாட்டின் மொத்த சனத்தொகையில் 90 சதவீதமானோர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் தலைமையில் இயங்கும் அரசில் நம்பிக்கை இழந்துவிட்டனர்.  மக்கள் ஆணை இல்லாத இந்த அரசுக்கு சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு வழங்காது.   அதனால் தேர்தல் நடத்தி புதிய அரசுக்கு வழிவிடவேண்டும் . “

அவ்வாறாயின் எந்தக்கட்சி புதிதாக அரசமைக்கும்..? ஒரு கட்சியா அல்லது பல கட்சிகள் இணைந்த கூட்டரசாங்கமா..?

இலங்கை சுதந்திரம்பெற்ற காலம் முதல் அமைந்த பல அரசுகள் பல கட்சிகளின் கூட்டாகத்தான் உருவாகியிருக்கின்றன.

ஒரு சில தடவைகள்தான் அறுதிப்பெரும்பான்மையுடன் அரசு அமைந்துள்ளது.  அதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று 1977 இல் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்தனாவின் தலைமையில் தோன்றிய அரசு. அந்த அறுதிப்பெரும்பான்மை பலத்தினால்தான் அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தன்னை பிரகடனப்படுத்தினார்.

அத்துடன் திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தி,  உள்நாட்டு பொருளாதார முன்னேற்றத்திற்கு வேட்டும் வைத்தார். அவரது பதவிக்காலத்தில்தான் மூன்று தடவைகள் இலங்கையில் இனக்கலவரமும் வந்தது. தேசிய இனப்பிரச்சினையும் கூர்மையடைந்து, தமிழ் இன விடுதலைப்போராட்டம் வெடித்தது. அதனை அடக்குவதற்காக மாறி மாறி பதவிக்கு வந்த அனைத்து அரசுகளும் பாதுகாப்புச் செலவீனங்களுக்காக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாவை செலவிட்டு, நாட்டையே அதல பாதாளத்துக்குள் தள்ளியது.

எனவே, இலங்கையின் இன்றைய நிலைவரத்தின் ரிஷி மூலம் ஜே. ஆரிலிருந்தே தொடங்குகிறது.  நீடித்த போரினால் பெரிதும் பாதிப்புற்ற  ஜப்பான், வியட்நாம் முதலான நாடுகள் பொருளாதார முன்னேற்றத்தில் எங்கோ சென்றுவிட்டன.

இந்த இரண்டு நாடுகளும் அந்நிய நாடுகளின் படையெடுப்பினால் பெரும் தாக்கத்தை சந்தித்தவை.  ஆனால், எமது இலங்கையில் என்றைக்கோ புரிந்துணர்வுடன் தீர்த்துவைக்கப்பட்டிருக்கவேண்டிய இனப்பிரச்சினையானது நீண்ட கொடிய யுத்தத்தினால் பேரவலத்துடன் முடிவுக்கு வந்தது.

 அதனை சில சர்வதேச நாடுகளின் உதவியுடன்   முடித்த ராஜபக்‌ஷவினர்,  எமது நாட்டை  பாரிய பொருளாதார  நெருக்கடி தோன்றியபோது அதே சர்வதேச நாடுகளிடம் விட்டுவிட்டு,   தங்களுக்கு விசுவாசமான ஒரு பினாமியிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கியிருக்கின்றர்.

அவர்கள் முற்றாக ஒதுங்கவில்லை.   இளவரசர் ஒருவர் வாரிசாக வருவதற்கு எதிர்பார்த்து காத்திருக்கிறார். அதனால் ஒதுங்க மாட்டார்கள்.

இந்தப் பின்னணியில்,  ஊசலாடும்  இந்த அரசினை தோற்கடித்து மக்களுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தக்கூடிய ஒரு பலம் மிக்க அரசு தோன்றவேண்டுமானால், எதிரணியிலிருக்கும் கட்சிகள் தமக்குள் ஒரு புரிந்துணர்வு மிக்க தீர்மானத்திற்கு வரவேண்டும்.

அந்தத்தீர்மானத்தை எடுக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகவே நடக்கவிருந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அமையவிருந்தது.

ஆனால், போட்டியிட முன்வந்த எதிர்தரப்பு கட்சிகளினதும் அவற்றின் வேட்பாளர்களின் எண்ணிக்கையையும் பார்த்தபோது,  அத்தகையதோர் தீர்மானம் வெறும் கானல் நீர்தான்.

அப்பாவிப் பொதுமக்கள் தற்போது மட்டுமல்ல எப்போதுமே கானல் நீரைக்கண்டு ஓடும் மான்களாகவே இருக்கின்றனர்.

---0---

 

No comments: