உலகச் செய்திகள்

 இந்தோனேசியாவில் பயங்கர பூகம்பம்; பலர் உயிரிழப்பு

இந்தோனேசிய பூகம்பம்: உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

மலேசிய பொதுத் தேர்தலில் 53 வருடங்களின் பின் மஹதீர் மொஹமட் தோல்வி

பல தசாப்த காத்திருப்புக்கு பின் மலேசிய பிரதமரானார் அன்வர்

அமெரிக்க – இந்திய போர் ஒத்திகை ஆரம்பம்


இந்தோனேசியாவில் பயங்கர பூகம்பம்; பலர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் பிரதான தீவான ஜாவாவில் நேற்று (21) ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தில் பல டஜன் கட்டடங்கள் சோதமடைந்திருப்பதோடு 40 பேர் வரை உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சியான்ஜூர் பிராந்தியத்தில் 10 கி.மீ ஆழத்தில் 5.6 ரிக்டர் அளவில் இந்த பூகம்பர் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட அதிர்வால் தலைநகர் ஜகார்த்தாவிலும் மக்கள் உயிரைக் காக்க வீதிகளை நோக்கி ஓட்டம் பிடித்துள்ளனர்.

இந்த அதிர்வினால் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்ட நிலையில் பலரும் காயமடைந்திருப்பதாக தேசிய அனர்த்த தணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய விடுதிப் பாடசாலை, மருத்துவமனை மற்றும் ஏனைய பொது நிறுவனங்கள் உட்பட பல கட்டடங்கள் சோதமடைந்துள்ளன.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “மருத்துவமனையில் மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டது. அதேபோன்று 300 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பெரும்பாலோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி எலும்பு முறிவு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அதிகமானோர் இருளில் தவித்து வருகின்றனர். கடந்த பெப்ரவரி மாதம், மேற்கு சுமத்ரா மாகாணத்தில் பதிவான 6.2 ரிக்டர் அளவிலான பூகம்பத்தில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 460 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

270 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்தோனேசியாவில், பசுபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் போல்ட் லைன் வளைவு காரணமாக பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் சுனாமி அலைகள் அடிக்கடி நிகழ்கின்றன.   நன்றி தினகரன் 





இந்தோனேசிய பூகம்பம்: உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

உயிர் தப்பியோரை மீட்கும் பணிகள் தீவிரம்

மேற்கு ஜாவாவை தாக்கிய சக்திவாய்ந்த பூகம்பத்தின் இடிபாடுகளில் சிக்கி இருப்போரை காப்பற்றுவதற்கு மீட்பாளர்கள் போராடி வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு பல டஜன் பேர் காயமடைந்துள்ளனர்.

5.6 ரிக்டர் அளவில் பதிவான இந்த பூகம்பம் மையம் கொண்ட இடத்திற்கு அருகில் உள்ள சியான்ஜுன் நகரில் மீட்புப் பணிக்காக நூற்றுக்கான பொலிஸ் அதிகாரிகளும் இணைந்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் டெடி பிரசெட்யோ தெரிவித்துள்ளார். 175,000 மக்கள் வசிக்கும் இந்த நகர் இந்தோனேசியாவில் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட மாகாணமான மேற்கு ஜாவாவின் மலை சார்ந்த பகுதியில் அமைந்துள்ளது.

பிரதானமாக பாதிக்கப்பட்டவர்களை அப்புறப்படுத்துவதற்கு அதிக அவதானம் செலுத்துவதாக பிரசெட்யோ தெரிவித்தார். இந்த பூகம்பத்தில் குறைந்தது 162 பேர் உயிரிழந்திருப்பதாக மேற்கு ஜாவா ஆளுநர் ரித்வான் காமில் தெரிவித்தார். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் என்பதோடு மேலும் 300க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இதனை இந்தோனேசிய தேசிய அனர்த்த நிறுவனமும் உறுதி செய்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் குடியிருப்பாளர்கள் பலர் சிக்கி இருக்கும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று ஆளுநர் எச்சரித்தார். உயிரிழந்தவர்களில் இஸ்லாமிய விடுதிப் பாடசாலையின் மாணவர்களும் உள்ளனர். பெரும்பாலானவர்கள் தமது சொந்த வீடுகளில் கூரைகள், சுவர்கள் இடிந்து விழுந்து அதில் சிக்குண்டே உயிரிழந்துள்ளனர்.

“அறை இடிந்து எனது கால் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டது. அனைத்தும் வேகமாக நடந்தது” என்று 14 வயது மாணவனான அப்ரிசால் முல்யாதி ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். அந்த மாணவன் தனது நண்பர் சுல்பிகாரால் இடுபாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டபோது அந்த நண்பன் பின்னர் இடிபாட்டில் சிக்கி உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சியான்ஜுரில் இருக்கும் மருத்துவமனை ஒன்றின் வானத் தரிப்பிடத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதோடு சிலர் தற்காலிக முகாம்கள் மற்றும் வீதி ஓரங்களிலும் மருத்துவ உதவியாளர்களால் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த அதிர்வு சுமார் 100 கிலோமீற்றருக்கு அப்பால் இருக்கும் தலைநகர் ஜகார்தாவிலும் உணரப்பட்ட நிலையில் உயர்ந்த கட்டடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.   நன்றி தினகரன் 





மலேசிய பொதுத் தேர்தலில் 53 வருடங்களின் பின் மஹதீர் மொஹமட் தோல்வி

மலேசிய பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமர் மஹதீர் மொஹமட் 53 வருடங்களின் பின்னர் தோல்வியை சந்தித்துள்ளார்.

கடந்த ஏழு தசாப்த கால அரசியல் வாழ்க்கையில் அவர் பெற்ற படுதோல்வி இதுவென அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், லங்காவி தீவுகள் தொகுதியில் போட்டியிட்டபோது மிக அதிகமான பெரும்பான்மை வாக்குகளை பெற்று அவர் பிரதமராக தெரிவாகியிருந்தார்.

ஆனால், நேற்றுமுன்தினம் நடைபெற்ற தேர்தலில் அவர் தோல்வியடைந்தமை மலேசியாவை மட்டுமல்லாமல் சர்வதேசத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அளிக்கப்பட்ட வாக்குகளில் எட்டில் ஒரு பங்கு வாக்குகளைக் கூட பெறமுடியாத நிலையில், கட்டுப்பணத்தை இழந்ததுடன், அவரின் கட்சியினால் ஒரு ஆசனத்தை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 





பல தசாப்த காத்திருப்புக்கு பின் மலேசிய பிரதமரானார் அன்வர்

மலேசியாவில் புதிய அரசை அமைப்பதில் பல நாட்கள் நீடித்த இழுபறிக்குப் பின், மூத்த எதிர்க்கட்சித் தலைவரான அன்வர் இப்ராஹிம் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வார இறுதியில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், மன்னர் சுல்தான் அப்துல்லா நாட்டின் புதிய பிரதமரை நேற்று நியமித்தார்.

அன்வர் அல்லது முன்னாள் பிரதமர் முஹ்யத்தீன் யாசின் ஆட்சி அமைப்பதற்கு அறுதிப் பெரும்பான்மை தேவையாக உள்ளது. இந்நிலையில் இப்ராஹிம் மன்னர் முன் நேற்று பதவி ஏற்றார்.

“மலேசிய ஆட்சியாளர்களின் உயர் மன்றத்தின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு மலேசியாவின் 10ஆவது பிரதமராக அன்வர் இப்ராஹிமை நியமிப்பதற்கு மன்னர் தீர்மானித்தார்” என்று மன்னர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை (19) நடந்த தேர்தலில் அன்வரின் பகதான் ஹரபான் கட்சியே அதிக இடங்களை வென்றிருந்தது. எனினும் அது சொந்தமாக ஆட்சி அமைக்க போதுமாக அமையவில்லை. இந்நிலையில் புதிய அரசின் கூட்டணியில் அமையப்போகும் கட்சிகள் பற்றிய விபரம் உடன் வெளியாகவில்லை. 75 வயதான இப்ராஹிம் பிரதமர் பதவியை ஏற்றதன் மூலம் அந்தப் பதவிக்கு வருவதற்கான அவரது பல தசாப்த கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

1990களில் நாட்டின் பிரதிப் பிரதமராக பதவி வகித்த அன்வர் இப்ராஹிம், மஹதிர் மொஹமட்டுக்கு அடுத்து நாட்டின் அடுத்த பிரதமராக வருவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் மஹதீர் ஆட்சியில் அவர் ஒருபாலின உறவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு சிறை அனுபவித்தார். இது அரசியல் நோக்கம் கொண்டது என்று அன்வர் இப்ராஹிம் தொடர்ந்து கூறி வந்தார். அவர் பத்து ஆண்டுகள் சிறை அனுபவித்த நிலையில் 2018 ஆம் ஆண்டே விடுலையானார்.

தொடர்ந்து அந்த ஆண்டு மஹதீருடன் கூட்டணி சேர்ந்த அன்வர் இப்ராஹிமுக்கு 2020இல் பிரதமர் பதவியை பகிர்ந்தளிக்க ஒப்பந்தமானபோதும் அந்தக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.   நன்றி தினகரன் 





அமெரிக்க – இந்திய போர் ஒத்திகை ஆரம்பம்

18ஆவது இந்தியா மற்றும் அமெரிக்க கூட்டு இராணுவ ஒத்திகையான 'யுத் அப்யஸ் 22' உத்தர்காண்டில் ஆரம்பமாகியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த வருடாந்த இராணுவ ஒத்திகையில் இரு இராணுவங்களினதும் சிறந்த பயிற்சிகள், மூலோபாயங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள் பகிரப்படவுள்ளன.

இந்த இராணுவ ஒத்திகை வரும் டிசம்பர் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் 11ஆவது வான்வழிப் பிரிவின் 2ஆவது படையணியைச் சேர்ந்த வீரர்களும் இந்திய இராணுவத்தின் அசாம் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்களும் இந்த இராணுவ ஒத்திகையில் பங்கேற்றுள்ளனர்.   நன்றி தினகரன் 





No comments: