வாழ்த்துப்பா - இயற்றியவர் ‘சிவஞானச் சுடர்’ பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார் (சமாதான நீதவான் - அவுஸ்திரேலியா)

 கயிலைமணி’ ‘சிவஞானச் சுடர்பஞ்சாட்சரம் பரமசாமி அவர்கள்

எண்பதாவது அகவையை அடைந்ததையிட்டுக் கொண்டாடப்பெற்ற

அமுத விழாவிலே

கம்பலாந்து தமிழர் கழகம்

அன்புடன் அளித்த

வாழ்த்துப்பா

 

மணிலங்கை நாடதனில் பிறந்து நல்ல

                மாண்புடனே நற்கல்வி கற்று யர்ந்து

பணிவுமிகு பொறியியலா ளராகப் பணி

                            பலர்போற்ற இயற்றிப்பின் புலம்பெ யர்ந்து

                தணியாத விருப்புடனே அவுஸ்திரே லியாவில்

                            தடம்பதித்துப் புகழீட்டி இன்றுநல் லன்பர்

அணிசெய்ய எண்பதாம் அகவை கண்ட

                            அமுதவிழா நனிசிறக்க வாழ்த்து கின்றோம்!

 

 

வஞ்சனையோ சூதுவாதோ தெரியா மனசு!

                                                                                                      வாஞ்சையுடன் நண்பர்களை ஈர்க்கும் சிரிப்பு!

 சஞ்சலங்கள் வந்தென்றும் தாக்கா திருக்கச்

                     சந்ததமுந் தியானஞ்செயும் சாந்த சுவாபம்!

                                                                                         தஞ்சமெனச் சிவதலமாம் கைலை யோடு

          தவறாது காசியையும் தரிசித்த மாட்சி!

                                                                                          பஞ்சாட்சரா இவையுன்றன் தேசு பாடும்!

    பஞ்சமுகன் அருளருள வாழி! வாழி!!

 

 

              அகவையெண் பதையடைந்தாய்! ஆயிரம் பிறைதனை

               அன்பநீயும் கண்டபெரும் பேறும் பெற்றாய்!

                   தகைமையெலாம் தக்கவைத்தாய்! செந்தண் மைவிஞ்சும்

                           தலைமகனாய் விளங்குகிறாய் கயிலை மணியே!

                                                                                      சுகதுக்க மிரண்டினையும் சமமாய்க் கண்டு

         தூயஞானம் பெற்றுப்பே ரின்பங் காணப்

                                                                                        பகலிரவாய்த் தியானமொடு பரசிவ தொண்டும்

                    பஞ்சாட்சரா தினமியற்றிப் பல்லாண் டுவாழி!

 

 

                                                எண்ணரிய சோதிடக்கலை வளர்க்கச் சங்கம்

                    ஏற்படுத்தித் தலைவராகிச் செயற்படு கின்றாய்!

                                                 பண்பதனில் உயர்ந்திட்டோய் மூத்தோர் சங்கம்

                 பலனடையத் தலைவராகி உன்றன் பங்காய்

                        உண்மையிலே செய்தசேவை உரைக்கப் போமோ?

                       உடற்பயிற்சி பயிற்றுவிக்கும் பாங்கும் என்னே!

                                                   கண்ணனைய  மனைவியுடன் காலம் எல்லாம்

                                        காதலன்பில் திழைத்துநீயும் வாழி வாழி!!

 

                                                    கற்றுயர்ந்து பொறியியலா ளரான நீயும்

                                 கடமையுணர் வோடிங்கும் பணிசெய் துயர்ந்தாய்!

                                                     பெற்றதுணை கலைவாணி யோடி ணைந்து

                               பெறற்கரிய பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தாய்!

                                                      வற்றிடாத அன்புநீரைச் சொரிந்தே குடும்பம்

                              வளஞ்சிறக்க வாழ்வாங்கு வாழு கின்றாய்!

                                                       உற்றதுணை யெனவுடனாய் ஒன்றாய் வேறாய்

                               உனக்குள்உறை உமைபங்கன் அருள வாழி!

 

                                                    கம்பலாந்து தமிழர்கள் கழக மதனைக்

                        காதலொடு வளர்த்தெடுக்க ஒற்றுமை காத்துச்

                                                      செம்மனத்து அந்தணனே! செயற்க ரியவுன்

                             சேவைகளின் மேன்மைசெப்ப வார்த்தை உண்டோ?

                        எம்மாதவஞ் செய்தாயோ? எழிற்கலை வாணி

                        இணையில்லா அன்பினிலே திழைத்து வாழி!

                   அம்பலத்தில் திருநடனஞ் செயும்;அந் திவண்ணன்

                 அனைத்துநவ நிதியருள வாழி! வாழி!!

 

 

 

வாழ்க வளமுடன்

 

என்றும் மாறா அன்புடன்

 

கம்பலாந்து தமிழர் கழக

அன்பர்கள்

 

இயற்றியவர்

சிவஞானச் சுடர்

பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்

(சமாதான நீதவான் - அவுஸ்திரேலியா)

No comments: