அறிஞர் அவ்வை நடராசன்


நம் வாழ்விலே நாம் எத்தனையோ பேர்களைப் பார்க்கின்றோம்.  பழகுகின்றோம்.  ஆனால் ஒரு சிலரே நம் உள்ளத்தில் அழுத்தமாகப் படிந்து விடுகின்றார்கள்.  என் உள்ளத்திலே அப்படி அழுத்தமாகப் படிந்து விட்டவர் அறிஞர் அவ்வை நடராசன் அவர்கள்.

அவரை முதன் முதலிலே சந்திக்கும் வாய்ப்பு நாம் நியுசிலாந்தின் ஓக்லண்ட் நகரத்திலே வசித்த போது கிட்டியது.  அறிஞர் ஐயா அவர்கள் அங்கு வசித்துக் கொண்டிருந்த தனது மகனைப் பார்க்க வந்திருந்தார்.  தமிழிலே இருந்த பேரார்வம் என்னை அவர்பால் ஈர்த்தது.  அவருடைய தமிழறிவு என்னைப் பிரமிக்க வைத்தது.

அதன் பின் நாம் சிட்னி, அவுத்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்து வந்து விட்டோம். அதனால் அவரது தொடர்பு விட்டுப் போயிற்று. 

சிட்னியிலே தமிழ் இலக்கியக் கலை மன்றம் உலகத் தமிழ் இலக்கிய மாநாடு நடத்திய


போது அதிலே முக்கிய பங்கேற்று அவர் சிட்னி வந்திருந்தார்.  அவரை மீண்டும் அங்கே பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.

அவருடைய அறிவின் வீச்சையும், தமிழின் ஆழத்தையும் அவர் பேசிய பல பேச்சுகளில் இருந்து அறிந்து கொண்டேன்.  இத்தகைய அறிஞர் ஒருவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்கின்றோமே, அவரது அறிமுகம் எமக்குக் கிடைத்ததே என்றெல்லாம் எண்ணி மன நிறைவுற்றேன்.

அறிஞர் அவ்வை நடராசன், அவரது மனைவியுடன் நாம் ------------>

அந்த மாநாட்டில் மதிய உணவுக்குப் பின் நிகழ்ந்த ஒரு நிகழ்வில் அவர் பேசி முடித்துவிட்டு அந்த நிகழ்வின் நிறைவில் மேடையில் இருந்து இறங்கினார்.  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அடுத்த நிகழ்விலும் அவர் பேச இருக்கின்ற தகவலைச் சொன்னார்.  அதற்கு அவர் “அப்படியா!” என்று சற்று வியப்போடு கேட்டு விட்டு மீண்டும் மேடையில் ஏறினார்.  எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல், எந்த விதக் குறிப்புகளும் இல்லாமல் ஆற்றொழுக்காக அவர் அன்று மீண்டும் பேசிய பேச்சு இன்னமும் எமது நினைவில் நிற்கின்றது. 

அந்த மாநாட்டின் நிறைவிலே தமிழே வாழி! என்னுந் தலைப்பிலே நான் எழுதிய நீண்டதோர் ஆசிரியப்பாவைப் படித்தேன்.  அவர் அதனை முழுமையாக இரசித்துக் கேட்டார்.  மேடையில் இருந்து இறங்கிய போது மனதாரப் பாராட்டினார். 

இவையெல்லாம் எனக்கு அவர் மீது இருந்த ஈர்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்தன.

எனது கவிதைகளைத் தொகுப்பாக ‘எழில் பூக்கள்’ என்ற தலைப்பிலே வெளியிட்ட போது அறிஞர் ஐயா அவர்கள் அதற்கு ஓர் அணிந்துரை தர வேண்டும் என்று விரும்பினேன். அந்தச் சமயத்தில் அவர் தாளாத முதுகு வலியினால் துன்பப்பட்டுக் கொண்டிருந்தார்.  இருந்தாலும் அவர் கவிதைத் தொகுப்பை முழுதாகப் படித்து ஓர் அரிய அணிந்துரையைக் கவிதைத் தொகுப்புக்கு அளித்தார்.  அது மட்டுமல்லாமல் எனது ஆக்கத்தைப் பாராட்டி ஒரு வெண்பாவையும் இயற்றி அந்த அணிந்துரையை நிறைவு செய்தார். 

பின்னர் அந்த நூலைச் சென்னையிலே அறிமுகஞ் செய்து வைத்த போது அந்த விழாவுக்கும் தலைமை தாங்கிச் சிறப்பித்தார்.

நாம் சென்னை சென்ற போதெல்லாம் அவரைச் சந்திக்கத் தவறியதே இல்லை. அவரோ ஒரு பேரறிஞர்.  எம்மால் அவருக்கு ஆகப் போவது ஒன்றும் இல்லை.  இருந்தாலும் அன்போடு வரவேற்றுப் பல செய்திகளைப் பகிர்ந்து கொள்வார்.  அவரது இல்ல நூலகத்தில் இருக்கும் நூல்களைப் பார்த்து நான் வியந்திருக்கின்றேன்.

அடுத்து என்ன எழுத இருப்பதாகக் கேட்டு எம்மை மேலும் ஊக்கப்படுத்துவார்.  “இலக்கியம் தொடர்பாக எழுத இருக்கின்றேன்” என்னும் என் பதிலைக் கேட்டு “அதற்குத் தான் ஆயிரம் பேர் இருக்கின்றார்களே, நீங்கள் அவுத்திரேலியாவில் வசிக்கின்றீர்கள், எனவே அதோடு தொடர்பாக எழுதுங்கள்” என்று அன்பின் உரிமையில் வழியுங் காட்டுவார்.  தமிழ் என்னும் வட்டத்திலேயே நின்று விடக்கூடாது என்பது அவரது உயரிய எண்ணம். 

ஒரு முறை அவரைச் சந்தித்து விட்டுச் சேர (கேரளம்) நாட்டில் இருக்கும் திருவஞ்சைக்களத்தைத் தரிசிக்கச் சென்றோம்.  இத்தலத்தில் இருந்து தான் சுந்தரமூர்த்தி நாயனார் இறைவன் அனுப்பி வைத்த வெள்ளை யானையில் ஏறிக் கயிலாயஞ் சென்றார்.  எனவே இத்தலத்தைத் தரிசிக்க வேண்டும் என்பது எமது நீண்ட நாள் அவாவாக இருந்தது.  எமது பயணத் திட்டம் பற்றி அவருக்குச் சொன்ன போது அந்தப் பயண அனுபவத்தை விபரமாக எழுதி அனுப்பச் சொன்னார்.  அவர் கேட்டது போலவே எழுதி அனுப்பிய போது அதனைப் படித்துத் தன் கருத்தைச் சொன்ன பெருந்தன்மையை எண்ணி நெகிழ்ந்தேன்.

கோவிட் தொற்று நோய்க் காலத்தில் அவரது அன்பு மனைவியார் மறைந்து போனார்.  அது அவருக்குப் பேரிழப்பாயிற்று.  அதிலிருந்து அவர் மீளவில்லை.

அவரும் அவரது தந்தை அவ்வை துரைசாமியும் தமிழுக்குச் செய்த பணிகளைப் பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம்.  அவையெல்லாம் தமிழன்னைக்குச் சேர்ந்த அணிகள்.  அந்த வரிசையிலே எவர் இனி வருவார்? இத்தகைய அணிகளை எவர் இனிச் சேர்ப்பார்?

இவற்றை எல்லாம் எண்ணும் போது நெஞ்சம் கனக்கின்றது! கண்களை நீர்த்திரை மூடுகின்றது!!

த நந்திவர்மன்

சிட்னி, அவுத்திரேலியா

கார்த்திகை 2022

No comments: