நூல் விமர்சனம் - ஸ்ரீரஞ்சனியின் "ஒன்றே வேறே " சௌந்தரி கணேசன்



 அவுஸ்திரேலியாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆதரவில் சிட்னியில் ஐந்து நூல்களின் அறிமுக விழா நவம்பர் 5 அன்று இடம்பெற்றது. மெல்பேர்ண் எழுத்தாளரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஸ்தாபகருமான திரு முருகபூபதி அவர்களின் முயற்சியால் இந்நிகழ்வு இடம்பெற்றது. அந்த நிகழ்வில் Sriranjani ன் ஒன்றே வேறே என்ற சிறுகதைத் தொகுதியை ஆய்வு செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 16 சிறுகதைகள் அடங்கிய இந்த நூல் வாசிக்கும்போது மிகவும் சுவாரசியமாக இருந்தது. கற்பனையும் யதார்த்தமும் கலந்து எழுதியிருப்பதால் கதைகளை தொடாந்து வாசிக்க வேண்டும் என்ற ஓர் தூண்டுதல் இருந்துகொண்டிருந்தது. 

 இந்தச் சிறுகதைக்கு ஏன் இந்தப் பெயரை வைத்தார் என்ற காரணத்தைத் தேடிப்பார்த்தபோது ஒன்றே வேறே என்று தொல்காப்பியரின் ஓர் பாடல்தான் கண்ணில் பட்டது. எனக்கு தொல்காப்பியர் மற்றும் அவரின் தத்துவங்கள் குறித்த பரிச்சயம் அதிகம் இல்லை. அந்தப் பக்கத்தை ஓய்வு பெற்றபின் திறக்கலாம் என்று யோசித்திருக்கிறேன். ஆனாலும் தேவை கருதி ஒரு கையேடாக அதை வாசித்துப்பார்த்தேன். 

 ஒன்றே வேறே என்றிரு பால்வயின் 
ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் 
 ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப 
 மிக்கோ னாயினும் கடிவரை யின்றே 

 இதுதான் அந்தப் பாடல். இந்த சிக்கலான பாடலின் முழுமைக்குள் நான் செல்லவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் புரிந்தது. ஒன்றுபடுவதற்கும் வேறுபடுவதற்கும் விதியை நொந்து கொள்ளச் சொல்லியிருக்கிறார் தொல்காப்பியர். ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப அதாவது ஒத்த சிந்தனையுள்ள ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்துக் கொள்வதில் அல்லது காதல் கொள்வதில் ஊழின் பங்கு அல்லது விதியின் பங்கு எவ்வளவு முக்கியம் என்கிறது. இங்கே பால் என்பது ஊழ் அதாவது விதி. ஊழது ஆணையின் என்று அங்கு அழுத்திச் சொல்லப்படுகிறது. ஆனால் சிவரஞ்சினி சொல்லியிருக்கிற ஒன்றே வேறே என்பதற்கு வேறு பல காரணங்கள் இருக்கிறது என்பதை அவரது கதைகளை வாசித்தபோது அறிந்து கொண்டேன். 


 சிவரஞ்சனியின் கதைகளுக்குள் பெண்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகளின் வடிவங்கள் பேசப்பட்டிருக்கின்றன. அந்த கதைகளில் வாழுகின்ற முகங்களின் மூலம், அந்த முகங்கள் பிரதிபலிக்கும் உணர்வுகள் மூலம், அந்த முகங்கள் பிரதிபலிக்கும் வாழ்க்கையின் பதிவுகள் மூலம் பெண்களின் மனநிலையை வெளிப்படுத்த முயன்றிருக்கின்றார். அவரது கதைக்குள் நிறைய கதைமாந்தர்கள் இல்லை, ஆக கதை நாயகி மற்றும் கதை நிகழும் காலத்தில் அவளைச்சுற்றி உள்ளவர்கள் அவ்வளவுதான். அந்தளவுக்கு எளிமையான, அதிக கற்பனை வீச்சு இல்லாத யதார்த்தைச் சித்தரிப்பதாக இருக்கின்றது ஒவ்வொரு கதைகளும். கதைகளின் மொழிநடையும், கதைகளைக் கூறும் விதமும் மிக வித்தியாசமாக இருக்கிறது. உதாரணத்திற்க ஒரு பெண்ணின் வாழ்க்கையைப்பற்றிக் கூறும்போது அப்பெண்ணின் வாழ்க்கையை முழுமையாகச் சித்தரிக்காமல் அவளது அன்றாட வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு தருணத்தின் உள்ளடுக்குகளை எடுத்து அவைபற்றிப் பேசுகிறார். 

 ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பதிவுகள் என்றுகூட இந்த நூலுக்குப் பெயர் வைத்திருக்கலாம். அவ்வளவு பொருத்தமாக இருந்திருக்கும். சில கதைகளில் கூறப்பட்ட விடயம் முன்னரே வேறு சிலரால் எழுதப்பட்டிருக்கலாம் ஆனாலும் சிறீரஞ்சனியின் எழுத்து அவற்றை வேறு கோணத்தில் சிந்திக்க வைக்கிறது. ஏற்கனவே சொல்லப்பட்ட ஒரு விடயத்தை வேறு கோணத்தில் காட்டியிருக்கிறார் அல்லவா அதாவது ஒன்றே ஆனால் வேறே, இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் இவர் இந்த நூலுக்கு ஒன்றே வேறே என்று பெயர் வைத்தமைக்கு. 

 சரி நான் இப்போது இந்த நூலில் உள்ள சில கதைகளைப்பற்றிய எனது விமர்சனத்தை முன்வைக்கிறேன். நான் இப்போ விமர்சிக்கப்போகும் கதைகள்தான் சிறந்தவை என்றில்லை ஏனென்றால் நான் இவற்றை ஏதேச்சையாகத்தான் தேர்ந்தெடுத்துள்ளேன். 

 சேணமற்ற அவசரம்: 

குதிரைக்குச் சேணம் இல்லையென்றால் என்னாகும்? நாலாபுறமும், குதிரை தன் பார்வையைத் திருப்பி, சவாரி செய்பவரை, சாக்கடையில் தள்ளிவிடும். அதேபோலத்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படுகின்ற உறவை அவசர அவசரமாக நாங்கள் தீர்மானித்து விடுகிறோம். அது நட்பாக மாற வாய்ப்பிருக்கிறது, காதலாக மாற வாய்ப்பிருக்கிறது இல்லை இரகசியத் தொடர்பாக நிலைக்கவும் வாய்ப்பிருக்கிறது. இந்தக் கதையிலும் நீண்ட பழக்கத்தின்பின் ஆண் தனது உறவு நட்பென்கிறான் ஆனால் பெண் அதைக் காதல் என்று எண்ணிவிடுகிறாள். அதுமட்டுமல்ல அவள் அந்த உறவுக்குள் சிறைப்பட்டுக் கிடக்கிறாள். அதே சமயம் நட்பு என்று சொல்லுகின்ற அந்த ஆணோ அவளது நேசத்தை புரிந்து கொள்ளத் தெரியாமல் அதற்குரிய மதிப்பையும் மரியாதையையும் சரிவரக் கொடுக்கத் தெரியாமல் தன்நலம் கருதி செயல்படுகின்றான். 

 மேலான உறவுகளை சமநிலையான கொடுக்கல் வாங்கலால் மட்டுமே உருவாக்கிக் கொள்ள முடியும். வெறும் கற்பனைகள், நெகிழ்வுகள் மூலம் உண்மையான உறவுகளை ஒருபோதும் உருவாக்கிக்கொள்ள முடியாது என்பதை இந்த கதை அடித்துக் கூறுகிறது. உறவு என்பது முன்னகர்ந்து செல்லக்கூடிய வாய்ப்புக்களைத் தரவேண்டுமே தவிர உணர்வு சார்ந்து எங்களை கீழே இழுக்கின்ற அல்லது விழுத்துகின்ற உறவாக இருக்கக் கூடாது. 

 இந்தக் கதை பேசுகின்ற உறவு அந்தப் பெண்ணுக்க ஒரு பாரமான பொருளை தூக்கிக்கொண்டு நடப்பதுபோல் கடினமாக இருக்கிறது. அப்படிப்பட்ட உறவுகளில் இருந்து விலகிவிட வேண்டும். வாழ்க்கை என்பது எப்போதும் எங்களுக்கு முன்பக்கம்தான் இருக்கிறது. ஆகவே வாழ்க்கையின் எச்சங்களை பின்னோக்கித் தள்ளிவிட்டு முன்னோக்கிச் செல்லவேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது இந்தக் கதை. 

 வெளிப்படைத் தன்மையற்ற உறவுக்குள் சிக்கி ஏன் அந்தப் பெண் தன் துயரங்களை மிகைப்படுத்த வேண்டும். ஒரு உறவினால் ஏற்படும் இழப்பை தெளிவாக உணர்ந்து கொண்டும் அதற்குள் கிடந்து வருந்திக் கொண்டிருப்பது எவ்வளவு மடைமை என்பதை இந்தக் கதை கூறுகிறது.அது நட்பாக இருந்தாலும் சரி, திருமணமாக இருந்தாலும் சரி. 

 இன்றைய தொழில் நுட்ப யுகத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை இந்தக் கதையை வாசிக்க வேண்டும். மனைவிக்குத் தெரியாமல் ஒளித்தொழித்து எங்கோ தெரியாத நாட்டில் யாரென்றே தெரியாத பெண்ணுடன் இராப்பகலாகப் பேசுவதும், உருப்படியாக எதுவுமே செய்யத் தெரியாமல் சும்மா good morning, good night message போடுபவர்களுக்கும், அவர்களின் அர்த்தமற்ற messages ற்காகவும் பொருளற்ற உரையாடலுக்காகவும் தவம் கிடக்கும் பெண்களுக்கும் இந்தக் கதை ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தும், ஏற்படுத்த வேண்டும். 

 நிழல் ஒன்று - கதையின் நாயகி சாதாரண ஆசைகள் நிரம்பிய ஓர் பெண். அவளின் குடும்பத்தில் ஏற்படுகின்ற நெருக்கடிகள் அவளது அன்றாட நிகழ்வுகளை வெகுவாகப் பாதிக்கிறது. அப்போது அவளது நண்பன் ஒருவன் அவளைப் புரிந்து கொண்டு அவளுக்கு உதவிசெய்கிறான். 

 இந்தக் கதையில் பெண்களின் மீது கட்டவிழ்த்து விடப்படும் கண்ணுக்கு தெரியாத வன்முறைகள் வெளிச்சமிட்டு காட்டப்படுகிறது. இதில் கூறப்பட்ட கருத்து உண்மையில் வியக்க வைக்கிறது. குடும்பங்களுக்குள் ஏற்படுகின்ற வன்முறை என்பது ஒருவகை இயலாமையில் இருந்தே வருகிறதென உணரவைக்கிறது. 

 பலமானவர்கள் ஒருபோதும் வன்முறையில் ஈடுவதில்லை, பல்வேறுவகையான அழுத்திவைக்கப்பட்ட உணர்வுகள்தான் வசைகளாகவும் வன்முறையாகவும் வெளிவருகின்றன என்பதை இக்கதை வெளிப்படுத்துகிறது. அப்படிப்பட்ட சூழலில் வசிக்கின்ற ஒரு பெண்ணினால் எப்படி ஓர் சமநிலையான வாழ்க்கையை வாழமுடியும். ஒர் ஆரோக்கியமான விவாதமோ, மறுப்போ அங்கே நிகழமுடியாது அதையும்மீறி அப்படி ஏதாவது இடம் பெற்றால் அவை சமூக மீறல்களாகவே பார்க்கப்படுகின்றன. 

 அவளுடைய சொந்தம் அவளை துன்பறுத்தும் போது யாரோ ஒருவன் நிழல் கொடுக்கின்றான் அல்லவா. அவளுடைய கஷ்டத்தில் பங்கெடுத்து அவளுக்கு கை கொடுத்து உதவுகின்றான் அல்லவா. அவன்தான் அவளைப் புரிந்து வைத்துள்ள நண்பன். யாராக இருந்தாலும் ஒரு மனிதன் செய்யும் செயல்களால்தான் அவனது சிறப்புகள் வேறுபடுகின்றன என்பதை இந்தக் கதை கூறுகிறது. 

 சங்கர்; இந்தக் கதையின் கருப்பொருள், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, மது போதையில் மனைவியை அடிப்பது அவ்வளவுதான். ஆனால் அதை நான் கூறுவதுபோல் வெறும் கூற்றாகக் கூறாமல் இலக்கியமும் புனைவும் கலந்து கூறியிருக்கிறார். 

 தன் கணவன் தன்னை நடத்தும் விதத்தினால் ஒவ்வொரு நிலையிலும் சிறுமைப்பட்டுப் போகும் பெண், ஒரு கட்டத்தில் தன் உள்ளுணர்வால் உந்தப்பட்டு எதிர்வினையாற்றத் துணிகிறாள். அதற்கான செயற்பாடுகளில் இறங்கும்போது அவளால் சில மாற்றங்களையும் அங்கே சாதிக்க முடிகிறது என்பதை வெளிப்படுத்துகிறது இந்தக் கதை. 

 பொதுவாகவே ஒரு பெண் தனது கணவனுக்கு எதிராகச் சட்ட ரீதியாக செல்லும்போது அவற்றைத் திரும்பப் பெறும்படி பலவிதத்திலும் பலரும் அழுத்தம் கொடுப்பார்கள். அந்த வழக்கை திரும்பப் பெறாவிட்டால் தான் தற்கொலை செய்து கொண்டுவிடுவேன் என்று கணவனும் கூறுவான், பெண்ணும் இவற்றை எல்லாம் கேட்டு உடைந்துபோய், வேறு வழியில்லாமல் வழக்கையும் திருப்ப பெற்றுக் கொள்வாள். இதுதான் யதார்த்தம். சமூகச் சீர்கேடுகளை எதிர்த்துப் போராடும் எந்த ஓர் பெண்ணும் இறுதியில் அந்த சீர்கேடுகளிற்கே அடி பணிந்து போவதுதான் எழுதாத விதி. 

 ஆனால் இந்தக் கதை அப்படியான ஓர் பெண்ணைக் காட்டவில்லை. வெறும் உணர்வுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காத ஓர் துணிவுள்ள பெண்ணாகவும் தான் வாழும் சூழலில் தனக்கு ஏற்படும் சிறுமைகளின்போது ஒரு பெண் எவ்வாறு செயல்பட வேண்டும், எவ்வாறு மாற்றங்களை உருவாக்கவேண்டும் என்பதையும் அழகாக ஆழமாக இக்கதையினூடாக வெளிப்படுத்தியிருக்கிறார். 

 ஒன்றே வேறே: இத்தொகுப்பில் உள்ள ஏறத்தாழ அத்தனை கதைகளுமே எனக்குப் பிடித்திருத்தாலும் இந்தக் கதை என்னை நிறையவே சிந்திக்க வைத்தது. கதையில் உச்சமாக பெண்ணின் மார்பை மட்டுமே எடுத்து விரிந்து செல்கிறது கதைக்களம். எத்துணை மகிமைகளை வெளிப்படுத்திய ஓர் பெண்ணின் மார்பு நோயினால் பீடிக்கப்பட்டபின்பு அந்தப் பெண் ஓர் இருட்டுள்குள் மூழ்கி அந்த இருட்டுக்குள்ளிருந்து வெளியேவரத் துடிக்கின்ற ஓர் யுத்தம்தான் இந்தக் கதை. ஒரு 90 வயதுப் பாட்டியின் வார்த்தைகள் அந்தப் பெண்ணுக்குள் ஒரு வித பேரமைதியும், நிதானத்தையும் ஏற்படுத்துகிறது. இதை வாசித்தபோது எங்கள் அம்மா அப்பா தாத்தா பாட்டி இவர்களின் அருகாமையை இழந்த நாங்கள் எவ்வளவு துர்ரதிர்சடசாலிகள் என்பதையும் உணரச்செய்தது. 

 ஒன்றே வேறே என்ற பெயரைச் சூட்டியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அதாவது பெண்ணின் மார்பு என்பது ஒன்றே ஆனால் அவற்றிற்குள் எத்தனை வேறு வேறான மகிமைகள் உள்ளன. உடலில் உள்ள மாற்றத்தை உணர வைக்கிறது, உயிர் வாழ உணவை ஊட்டுகிறது, உடல் இன்பத்தை ஊக்குவிக்கிறது, இறுதியில் அந்த மார்பை வெட்டி எடுத்துவிட்டால் கூட அந்த உயிர் வாழமுடிகிறது. ஆக அந்த ஒன்றே வேறு வேறு விதமாக வேறாக நிகழ்கிறது. ஒன்றே ஆனால் வேறே. 

 உடல் என்பது ஓர் ஊடகம் மட்டுமே. உடலில் எதுவுமே தங்குவதில்லை. பழிகள், தீமைகள், நன்மைகள் எதுவுமே உடலில் தங்குவதில்லை ஆன்மாதான் காவுகின்றது என்று கூறுகிறார்கள். சிலரைப் பார்த்திருக்கிறேன். உணவுக் கட்டுப்பாடு, மருந்து, இப்படிச் செய் அப்படிச் செய் என்று ஆரம்பித்து நான்கு மணிநேரம் அதைப்பற்றியே தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். இவையெல்லாம் வெறும் உடலுக்கான போராட்டமாகத்தான் எனக்குப் படுகிறது. உடலைச் சீரழிக்கக் கூடாது என்பதில் உள்ள அக்கறையை சிவரஞ்சனி இந்தக் கதையில் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். உடலைப் சரியாகத்தானே பேணினேன் அதில் எந்த ஓர் குற்றவுணர்வும் எனக்கு இல்லையே ஆனால் ஏன் இந்த நோய் எனக்கு ஏற்பட்டது என்ற கேள்வியையும் அவர் கேட்கிறார். 

 என்னை மீறி ஒரு நோய் வந்துவிட்டது அதற்காக அந்த நோயை ஒரு பாரமாகச் சுமந்து கொண்டிருப்பதாலோ, அதைப்பற்றிச் சிந்தித்து சிந்தித்து எங்களது சக்தியை விரயமாக்குவதாலோ ஒன்றுமே நிகழப்போவதில்லை. நாம் வாழப்போகும் காலங்கள் வரையறுக்கப்படவில்லை ஆனால் வாழும் காலங்கள், பலவற்றை அறிவதற்கும், அறிந்தவற்றை உணர்வதற்கும், உணர்ந்தவற்றைப் பகிர்ந்து அதனடிப்படையில் முழுமை நோக்கிச் செல்வதற்குமே கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒர் மாபெரும் ஆற்றலை கவலையில் செலவழிப்பது பாரிய வீணடிப்பு அல்லவா. இதுவரை அப்படி அசட்டுத்தனமாக வீணடித்தால் வீணடித்த அந்த நாட்களுக்காக நாம் குற்றவுணர்ச்சி கொள்ளவேண்டும் அல்லவா. பொதுவாகவே நாட்களை இழந்தால் நாம் திரும்ப பெற முடியாது. அதிலும் இளமையின் நாட்கள் பல மடங்கு ஆற்றல்கொண்டவை, பலமடங்கு பெறுமதியானவை. அவற்றை சரியாகப் பயன்படுத்துவோம் என்பதைத்தான் இக்கதை கூறுகிறது. இப்படியாக இவரது நூலில் உள்ள அனைத்துக் கதைகளும் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைப் பேசுகின்றன. முற்றிலும் சம்பந்தமில்லாத விடயங்களை வெறும் வார்த்தைகளாகப் பேசி சலிப்பூட்டவில்லை. கதை முழுக்க உணர்ச்சி உயரங்கள் கையாளப்பட்டு நுண்ணிய சித்தரிப்புகளால் எழுதப்பட்டிருக்கிறது. கதையின் ஓட்டத்திற்காகவும், இயற்கை அழகை காட்சிப்படுத்துவதற்காகவும் இந்த நூல் முழுக்க உவமைகள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த நூலின் அட்டைப்படம் மிக அழகானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது. எப்படி அந்த ஓவியத்தை தேர்வு செய்தார் என்று தெரியவில்லை. வாழ்த்துக்கள். 

 பெண்கள் திரும்பத்திரும்ப குடும்பப் பிரச்சனைகளைத்தான் எழுதுகிறார்கள் அவர்கள் ஒரு சின்ன வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று சிலர் கூறுவார்கள், அவர்கள் அந்த வட்டத்தைவிட்டு வெளியே வந்து கனகாலமாகி விட்டது, அவர்கள் எந்த உலகை அழித்து எந்த உலகத்தை உருவாக்க முயல்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். 

 எம்மைச் சுற்றியுள்ள மனிதனை எழுதாத, எமது மண்ணை எழுதாத, எமது வாழ்வை எழுதாத எழுத்து எதற்கென்று எனக்கு அடிக்கடி தோன்றும். அதனாலோ என்னவோ, சக மனிதர்களை அவர்களது மனங்களை எழுத்தில் கொண்டு வரும் எழுத்தாளர்களின்மீது எனக்கு அதீத ஈர்ப்பு ஏற்படுவதுண்டு. பொதுவாகவே படைப்பாளிக்கு எந்த ஓர் ஆழமான அனுபவமும் ஒரு பேசுபொருள்தான். அந்த வகையில் நூலாசிரியரும் மனிதர்களைப்பற்றி இன்னும் நிறையப் பேசவேண்டும். 

 பெண்களே உங்களுக்கு, சலுகையோ, அனுதாபமோ, கரிசனமோ எதுவுமே தேவையில்லை ஆனால் பெரிதாகக் கனவுகாணுங்கள், அந்தக் கனவுகளுக்காக தீவிரமாக முயற்சி செய்யுங்கள் என்பதைத்தான் இந்தக் கதைகள் கூறுகின்றன. முட்டைக்குள் இருக்கும் குஞ்சுக்கு அந்த முட்டையின் கூட்டை உடைக்க ஒரேயொரு வழிதான் இருக்கிறது. தானாக வளர்ந்து தன் சிறகை வளர்ப்பது அதைச் செய்யுங்கள் என்று பெண்களுக்கு கூறியுள்ளார். 

 இந்த நூல் என்னை நன்றாகப் பேச வைத்திருக்கிறது, அதற்கான வாய்ப்புக்களை அள்ளித் தந்திருக்கிறது. நன்றி சிறீரஞ்சனி, உங்களை அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. இச்சந்தர்ப்பத்தை அளித்த முருகபூபதி அவர்களுக்கும் மிக்க நன்றி.

No comments: