ஓமானில் ஓலமிடும் பெண்களின் குரல் கேட்டிலையோ…? அவதானி

 “ ஒவ்வொரு பெண்ணின் கடின உழைப்புக்குப் பின்னாலும்


பொறுப்பற்ற ஓர் ஆண் இருக்கிறான்  “ எனச்சொல்லப்படுவதுண்டு.

தற்போது ஓமானில் எமது இலங்கைப் பெண்களுக்கு நேர்ந்துள்ள கொடுமைக்குப் பின்னாலும், பொறுப்பற்ற ஆண்கள் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

வெளிநாடுகளுக்கு – குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக வேலைக்குச் செல்லும் பெண்கள் தொடர்பாக காலத்துக்கு காலம் அதிர்ச்சியான செய்திகள் வந்தவாறே இருக்கிறது.

ஆனால், இந்த அதிர்ச்சிகளுக்கு இதுவரையில் முற்றுப்புள்ளி


இடப்படவில்லை.  நாட்டில் பொருளாதார நெருக்கடி தோன்றுவதனாலும்,  விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க முடியாத துன்பத்திற்கு ஏழைக்குடும்பங்கள் ஆளாவதனாலும்தான் பெண்கள் வேலை தேடிச்செல்கின்றனர்.

வெளிநாட்டு வேலை வாயப்பு பணியகங்கள் பல சட்டபூர்வமாகவும் சட்டத்திற்குப் புறம்பாகவும் இலங்கையில் இயங்கிவருகின்றன.

அண்மையில் ஓமான் நாட்டுக்கு பணிப்பெண்களாகச் சென்ற பல பெண்கள் ஏலத்தில் யார் யாருக்கோ விற்கப்பட்டுள்ள அதிர்ச்சியான செய்தி வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக பாரபட்சமற்றமுறையில் நீதிவிசாரணைகள் நடைபெறும் எனவும், உண்மைகளை கண்டறிவதற்கு ஒரு குழு அந்த நாட்டிற்கு சென்றுள்ளதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தனா தெரிவித்துள்ளார்.

சுமார் ஒன்பதரை  இலட்சம்  இலங்கைப் பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊடாக பதிவுபெற்றவர்கள்  மத்திய கிழக்கு நாடுகளில் வேலைசெய்வதாகவும்,  ஆனால் 16 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் குறிப்பிட்ட பணியகத்தில்  பதிவுசெய்யாமல்,  முறையற்றவிதத்தில் சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த எண்ணிக்கை அதிர்ச்சியைத்  தருகிறது.  இவர்களுக்கு ஏதும் நடந்தால், இவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் யார் பதில் சொல்வது? என்ற கேள்விதான் மேலெழும்.

இவ்வாறு சட்ட விரோதமாக முறையற்றவகையில் பெண்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யும் சூத்திரதாரிகள் இதன் மூலம் கோடிகோடியாக சம்பாதிக்கிறார்கள்.

தமக்கு அங்கே எத்தகைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்ற உத்தரவாதம் எதுவுமின்றி, தங்கள் குடும்பத்தின் கஷ்டத்தை தங்களது உடல் உழைப்பின் மூலம் போக்கிவிடலாம் என்ற நம்பிக்கையுடன்தான் இந்தப்பெண்கள் விமானம் ஏறுகின்றனர்.

மத்தியகிழக்கு நாடுகளில் கிடைக்கவிருக்கும் பணிப்பெண் வேலைகளுக்காக புறப்பட்டுச்செல்லும் பெண்களை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் பார்த்திருப்பீர்கள்.

அவர்களின் கண்ணீர் மல்கும் கண்கள் பல செய்திகளை எமக்குச்சொல்லும்.  அவர்களிடமிருந்து நல்ல செய்திகள் வருமென்றுதான் அவர்களின் பிள்ளைகள் –  கணவர்மார் மற்றும் குடும்பத்தினர் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

இவர்கள் ஏன் தங்கள் பிள்ளைகள், உறவுகளை விட்டு வெளிநாடுகளுக்கு  முகவர்கள் ஊடாக  ஓடுகிறார்கள் என்பது இலங்கை அரசுக்கு  நன்கு தெரியும்.

இச்சந்தர்ப்பத்தில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் 2013 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் ஒரு  சிறையில்  கழுத்து  துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்கு இலக்கான  கிழக்கிலங்கை மூதூரைச்சேர்ந்த  ஒரு ஏழைக்குடும்பத்தைச்சேர்ந்த பெண் ரிசானா எமக்கு நினைவுக்கு வருகிறார்.

ரிசானா 1988 இல் கிழக்கிலங்கையில் மூதூர் கிராமத்தில் ஒரு  ஏழைக்  குடும்பத்தில் பிறந்தார். குடும்பச் சூழ்நிலை காரணமாக தனது ஆரம்பப் படிப்பையும் நிறுத்திக் கொண்டவர்.

தனது 17  ஆவது வயதில்  2005  ஆம் ஆண்டு  பணிப்பெண்ணாக தொழில் வாய்ப்புப் பெற்று  சவூதி அரேபியா சென்றார்.

சிறுவர்கள் தொழில் தேடி வெளிநாடு செல்வது    இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது.  எனினும் ஒரு தொழில் முகவர் இவரது வயதை  ஆறுவயதால்  கூட்டி  மாற்றிப் பெற்றுக்கொடுத்த  கடவுச்சீட்டின் மூலம் சென்று  ரியாதில் ஒரு செல்வந்தரின் வீட்டுப் பணிப்பெண்ணாக தனது தொழிலைத் தொடங்கினார். வீட்டில் குழந்தை பராமரிப்பு உட்பட   அனைத்து வேலைகளையும் செய்தார்.  

அந்த செல்வந்தர் வீட்டுக் குழந்தைக்கு  இவர் புட்டிப்பால் பருக்கியபோது, குழந்தை மூச்சுத் திணறி இறந்து விட்டது.

இதுபோன்ற செய்திகளை இலங்கையிலும் பார்த்திருப்பீர்கள். 

ஆனால், அந்த மத்திய கிழக்கு நாட்டில் அந்தக் குழந்தைக்கு பாலூட்டிய அந்த ரிசானா  கொலைக் குற்றவாளியானர். 

தான் அந்தக் குழந்தையைக் கொலை செய்யவில்லை எனவும், பாலூட்டும் போது மூச்சுத் திணறி இறந்ததாகவும் ரிசானா எத்தனை தடவை முறையிட்டிருந்தாலும், அதுவே உண்மையானது எனத் தெரிந்திருந்தும் , குழந்தையின் பெற்றோரும், காவல்துறையினரும் ரிசானா  கொலையே  செய்திருப்பதாக வாதிட்டனர்.

இறுதியில் அங்கிருந்த நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை தீர்ப்பை எழுதியது.

அந்தப்பெண்ணுக்கு மன்னிப்பு வழங்குமாறு இலங்கை அரசு சவூதி மன்னருக்கு பல தடவைகள் முறையிட்டும் பலனில்லாமல் , இறுதியில் அந்தப்பெண்ணின் கழுத்து துண்டிக்கப்பட்டது.

ஆசிய மனித உரிமைகள் ஆணையமும் ,  இங்கிலாந்து எலிசபெத் மகாராணியும்  மற்றும் சர்வதேச  மனித உரிமை மற்றும் பெண்கள் அமைப்பும்  முன்வைத்த   கருணை வேண்டுகோளை  சவூதி அரசு கண்டுகொள்ளவேயில்லை.

ரிசானாவுக்கு நேர்ந்த துன்பியலை இலங்கை இன்னமும் கடந்து செல்லவில்லை.

இப்போது, ஓமானில் சிக்குண்டுள்ள எங்கள் தேசத்துப்பெண்களின் ஓலம் கேட்கத் தொடங்கியிருக்கிறது.

பெண்கள் இலங்கையிலிருந்து ஏன் இவ்வாறு பணிப்பெண் வேலைகளுக்காக செல்கிறார்கள்?  என்பதற்கு இங்குள்ள பொருளாதார நெருக்கடிகள்தான் அடிப்படைக்காரணம்.

இதனை தங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் முகவர்கள் பெண்களை வைத்து ஈனத்தனமான வர்த்தகத்தை தொடர்ந்து புரிந்துவருகிறார்கள்.

அத்தகையோர் சட்டத்தின் கரங்களில் சிக்கினாலும், அதிலிருக்கும் துவாரங்களின் ஊடாக தப்பித்து வந்துவிடுவார்கள்.

கிழக்கிலங்கை ரிசானாவுக்கு நடந்த கொடுமைக்குப் பின்னராவது  இலங்கை அரசு இதுவிடயத்தில் விழிப்போடிருந்திருக்கவேண்டும்.

தொழில்வாய்ப்புத் தேடி மக்கள் வெளியேறினால், இதன் மூலம் நாட்டுக்கு அந்நிய வருமானம் கிடைக்கிறது என அரசு எதிர்பார்க்கிறது.

ஆனால், தற்போது  ஓமானிலிருந்து கிடைத்திருப்பது அபகீர்த்தி. 

இந்தப்பதிவின் தொடக்கத்தில் நாம் குறிப்பிட்ட  “ ஒவ்வொரு பெண்ணின் கடின உழைப்புக்குப் பின்னாலும் பொறுப்பற்ற ஓர் ஆண் இருக்கிறான்  “ என்பதனை மாற்றி,  அரசுகளின் பொறுப்பற்ற செயலும் இருக்கிறது எனத்தான் சொல்லவேண்டியிருக்கிறது.

ஏலத்தில் இலங்கைப் பெண்கள் வெளிநாடொன்றில் விற்கப்பட்டிருக்கிறார்கள் என்னும் செய்தியால் எங்கள் தேசம் வெட்கித் தலைகுனியவேண்டும்.

அந்த நிலைக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் தாயகம் திரும்பினால், எத்தகைய அவமானத்தை எதிர்நோக்குவார்கள் என்பதை புரிந்துகொண்டு, அதற்கான சீர்மியப் பணிகளை இலங்கை அரசு உரிய முறையில் மேற்கொள்ளவேண்டும்.

---0---

No comments: