எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 41 “ கருத்து முரண்பாடுகள் ஒரு மனிதனின் மேன்மையை இனம் காண்பதில் தவறிழைத்துவிடல் தகாது “ முருகபூபதி


மல்லிகை ஜீவா, தனது மகன் திலீபனின் ஸ்ரூடியோவுக்கு என்னை அழைத்துச்சென்று சில கோணங்களில் படங்கள் எடுத்தார் என்று கடந்த அங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

ஏன் அவ்வாறு எடுக்கிறார்..? என்பதை அவர் அப்போது சொல்லவில்லை. ஆனால், அதற்கான காரணம் எனக்கு 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான் தெரிந்தது.

எனது பிறந்த திகதி குறிப்பிட்ட ஜூலை மாதம்தான் வருகிறது.  1972


ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான மல்லிகையில் எனது முதலாவது சிறுகதையை ( கனவுகள் ஆயிரம் ) வெளியிட்ட ஜீவா, 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்ட மல்லிகை இதழில் எனது படத்தையும் பதிவேற்றி அட்டைப்பட அதிதியாக கௌரவித்திருந்தார்.

என்னைப்பற்றிய குறிப்புகளை அதில் எழுதியவர் எழுத்தாளர் ஆப்தீன். தற்போது ஜீவாவும் ஆப்தீனும் இல்லை. ஆனால், குறிப்பிட்ட மல்லிகை இதழை நூலகம் ஆவணகத்தில் பார்க்க முடியும்.

ஒவ்வொருவர் வாழ்விலும் மாதா, பிதா, குரு, தெய்வம் முக்கியமானவர்கள் என எமது முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்.

தெய்வத்தை நேருக்கு நேர் பார்க்காது போனாலும் , நாம் மனித உருவிலும் ஜீவராசிகளின் வடிவத்திலும்தான் தெய்வத்தை பார்த்திருக்கின்றோம். 

ஆனால், மாதா, பிதா, குருவுடன் நாம் எமது வாழ்க்கையை கடந்து வந்திருக்கின்றோம்.

எனது வாழ்நாளில் நான் நான்கு பாடசாலைகளில் படித்திருக்கின்றேன்.

அவை: நீர்கொழும்பு விவேகானந்தா வித்தியாலயம்                                  ( இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி )  யாழ். ஸ்ரான்லி கல்லூரி ( இன்றைய கனகரத்தினம் மத்திய கல்லூரி ) நீர்கொழும்பு அல்கிலால் மகா வித்தியாலயம், பலாங்கொடை புனித ஜோசப் பாடசாலை.

 இவற்றுள் எனது முதலாவது பாடசாலை விவேகானந்தா வித்தியாலயம் எனது உயிரிலும் உணர்விலும் இரண்டக் கலந்திருப்பதற்கு காரணம், இவ்வித்தியாலயம் 1954 ஆம் ஆண்டு விஜயதசமி நாளில் தொடங்கப்பட்டபோது  நான்தான் அங்கே முதலாவது மாணவனாக இணைத்துக்கொள்ளப்பட்டேன். ( எனது சேர்விலக்கம் : 01 ) 

பிற்காலத்தில்,  இவ்வித்தியாலயம் ஸ்தாபகரின் பெயரில்  மாற்றமும் கண்டு,  அதன் தரமும் உயர்ந்தபோது, 1972 ஆம் ஆண்டு பழையமாணவர் மன்றத்தை அங்கே உருவாக்கினோம்.

இந்த ஆண்டில்தான் நான் இலக்கிய மற்றும் ஊடகத்துறைக்குள் தீவிரமாக  நுழைந்தேன்.


வீரகேசரியில் விஜயரத்தினம்  கல்லூரி பற்றிய செய்திகளையெல்லாம் எழுதத் தொடங்கினேன்.  1975  ஆம் ஆண்டு எனது முதல் கதைத் தொகுதி சுமையின் பங்காளிகள் நூலின் வெளியீட்டு விழா இக்கல்லூரி மண்டபத்தில் அதிபர் வ. சண்முகராசா தலைமையில் நடந்தது.   அதற்கு 1976 ஆம் ஆண்டு தேசிய சாகித்திய விருது கிடைத்தபோது பழைய மாணவர் மன்றத்தினர் என்னை பாராட்டி விழா எடுத்தனர்.  மன்றத்தின் தலைவர் சோ. யோகநாதன் தலைமையில் அந்த விழா நடந்தது.

1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னரும் இக்கல்லூரியுடன் தொடர்பிலிருந்தேன். அவுஸ்திரேலியாவில் 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பின் ஆதரவில் இக்கல்லூரியில் கற்ற நலிவுற்ற ஏழை மாணவர்களுக்கும் உதவும் நடவடிக்கையை முன்னெடுத்தேன். இந்தப்பணி இற்றைவரையில் தங்கு தடையின்றி தொடருகின்றது.

1999 ஆம் ஆண்டு கல்லூரிக்கு சில தேவைகள் இருப்பதாக


அப்போதைய அதிபர் திரு. ந. கணேசலிங்கம் தெரிவித்தார்.  நான் வாழும் நாட்டில் அக்கல்லூரியில் படித்த மாணவர்கள் இணைந்து இதுவரையில் பழைய மாணவர் மன்றத்தை உருவாக்கவில்லை. அத்தகைய மாணவர்கள் இந்த கடல்சூழ்ந்த கண்டத்தில் ஒரு சிலரே இருக்கின்றனர்.

அதனால், 1999 ஆம் ஆண்டளவில் வெளியான எனது வெளிச்சம் ( சிறுகதைகள் ) சந்திப்பு ( நேர்காணல் ) ஆகிய நூல்களில் கணிசமான பிரதிகளை கல்லூரிக்கு சேர்ப்பித்து,  ஒரு விழாவை நடத்தி விற்று நிதியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என தகவல் அனுப்பினேன்.

அதிபர் அந்த நூல்களின் வெளியீட்டு அரங்கினை எனது சமுகம் இன்றியே வெகு கோலாகலமாக நடத்தினார்.

கொழும்பிலிருந்து மல்லிகை ஜீவா, மேமன் கவி ஆகியோரும் மற்றும் மு. பஷீர் கல்லூரி ஸ்தாபகரின் புதல்வர் ஜெயம் விஜயரத்தினம், மற்றும் எமது உறவினர் அ. மயில்வாகனன் மாமா , தாய் மாமனார் இரா. சுப்பையா, எனது அம்மா உட்பட சகோதர சகோதரிகள் உறவினர்கள் , ஊர் அன்பர்கள் திரண்டு வந்திருந்தார்கள்.

எழுத்தாளர்கள்,  விழா மண்டபத்திற்கு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்துச்செல்லப்பட்டனர்.


எனக்கு  சிறுவயதில் ( பாலர் வகுப்பில் ) கற்பித்த ஆசிரியை பெரிய ரீச்சர் அம்மா திருமதி மரியம்மா திருச்செல்வமும் கலந்து சிறப்பித்தார். ( எனது கடிதங்கள் நூலை இவருக்குத்தான் சமர்ப்பித்தேன்.  இவர் பின்னாளில் கனடா சென்று அங்கே மறைந்தார் )

மல்லிகை ஜீவா,  அந்த விழாவில் எவருமே  எதிர்பாராதவகையில் மல்லிகை ஜூலை மாத இதழை அங்கே எனது அம்மாவுக்கும், பெரிய ரீச்சர் அம்மாவுக்கும் மேடையில்  வழங்கி அனைவரையும் அச்சரியத்தில் மூழ்கடித்தார்.

அந்த இதழில்தான் என்னை அட்டைப்பட அதிதியாக ஜீவா கௌரவித்திருந்தார்.

அன்றைய தினம் வெளியிடப்பட்ட எனது இரண்டு நூல்களிலிருந்து கிடைக்கப்பெற்ற நிதி முழுவதையும்  எனது அம்மா,  கல்லூரி அதிபர் திரு. கணேசலிங்கம் அவர்களிடம் வழங்கினார்.

வெளிச்சம் தொகுப்பில் புகலிட வாழ்வுக்கோலங்களை சித்திரிக்கும் கதைகள் இடம்பெற்றிருந்தன.

சந்திப்பு நேர்காணல் தொகுப்பில்,  கவிஞர் அம்பி, எஸ்.பொன்னுத்துரை, ஓவியர் செல்வத்துரை, எஸ்.அகஸ்தியர், இந்திரா பார்த்தசாரதி, பரீக்‌ஷா ஞாநி, எஸ். வைதீஸ்வரன், சார்வாகன்,  அண்ணாவியார் இளையபத்மநாதன், கலைஞர்  மாவை நித்தியானந்தன் ஆகியோரைப்பற்றிய நேர்காணல்களையும் பதிவுகளையும் எழுதியிருந்தேன்.

அண்ணாவியார் இளைய பத்மநாதனின் கருத்துக்களுக்கு


எதிர்வினையாக என். கே. ரகுநாதன் எழுதிய எதிர்வினையையும் இந்நூலில் இடம்பெறச்செய்தேன்.

எஸ். பொன்னுத்துரை பற்றிய நேர்காணலை அவர் தனது தீதும் நன்றும் என்ற நூலில் மறுபதிப்பு செய்திருந்தார்.

இந்நூலை எனது அம்மாவுக்கே இவ்வாறு சமர்ப்பணம் செய்திருந்தேன்:  

 “ என்றும் நற்சுக

சிரஞ்சீவியாக வாழும்

எனதருமை மகனுக்கு “   எனத் தொடங்கி எழுதும் அம்மாவுக்கு

இந்நூல் சமர்ப்பணம். 

 

சந்திப்பு நூலில் எனது முன்னுரை பின்வருமாறு அமைந்திருந்தது:

 

 “ கருத்து முரண்பாடுகள் ஒரு மனிதனின் மேன்மையை இனம் காண்பதில் தவறிழைத்துவிடல் தகாது   என்பதில் நான் திடசித்தமானவன்.

 

“ I do not agree with a word of what

you say, but I will defend to the Death your Right to say it "

 

என்ற வால்டேயரின் கூற்றுடன் உடன்பாடு மிக்கவன்.


இலக்கிய உலகில் பயிலத் தொடங்கிய நாள் முதலாக அல்ல, அதற்கும் முன்பே எனது இயல்பு அப்படித்தான்.

 

எனவே, கலை, இலக்கிய தேவை நிமித்தம் நான் சந்தித்தவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கருத்துக்களையும் அனுபவங்களையும் பதிவு செய்வதிலும் ஆர்வம் கொண்டிருந்தேன்.

 

எனது வாழ்நாளில் கலை, இலக்கிய வாதிகளை மாத்திரமின்றி அரசியல் தலைவர்கள், தொழிற்சங்க வாதிகள், சமூக சேவையாளர்கள், பிரமுகர்கள், தொழிலாளர்கள் உட்பட பலதரப்பட்டவர்களையும் பத்திரிகை, சஞ்சிகைகளுக்காக நேரில் சந்தித்திருக்கின்றேன்.

 

மல்லிகை மாசிகையால் அறிமுகமாகி,  இலக்கியவாதியாகவும்

வீரகேசரியால் பத்திரிகையாளனாகவும் இயங்கத் தொடங்கி யதனால் இச்சந்திப்புகள் பதிவாகின.

எனினும், இந்தத் துறையில் என்னை மிகுந்த ஆர்வமுடன் ஈடுபடத் துாண்டியது 'மல்லிகை’ தான் என்பதில் பெருமைப் படுகின்றேன்.

 

இதற்காக நண்பர் டொமினிக் ஜீவா அவர்களுக்கு நன்றிகூற விரும்புகிறேன்.

 

இலக்கிய உலகில் பிரவேசித்த காலப்பகுதியில் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை தமிழ் அபிமானி வண.எம். ரத்னவன்ஸ தேரோ, தமிழகப் படைப்பாளி அசோகமித்திரன், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டொக்டர் எஸ்.ஏ.விக்கிரம சிங்கா முதலானோரை சந்தித்து பெற்ற கருத்துக்களையும் அனுபவங்களையும் மல்லிகை’ இதழ்களில் பதிவுசெய்து பகிர்ந்திருக்கின்றேன்.

 

இந்த முன் அனுபவத்தின் வாயிலாகத்தான் இச்சந்திப்புகள் தொடருகின்றன.

 

இத்தொகுப்பில் இடம்பெறும் சந்திப்பு நேர்காணல் படைப்புகள் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னர் எழுதப்பட்டவை.

 

வாசகர்களினதும் பத்திரிகைகளினதும் தேவை கருதி மறுபிரசுரமான சந்திப்புகளும் உண்டு. சாதனங்கள் பெருகி உலகம் சுருங்கிக்கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில் மறுபிரசுரம் செய்யப்படுவதன் நோக்கம் ‘பக்கம்’ நிரப்புவதற்காக எனக் கருதமுடியாது.

 

பூமிப்பந்தின் ஒரு திசையில் வாழும் வாசகனுக்கு கிடைக்கும் படைப்பு இன்னுமொரு திசையில் இருக்கும் வாசகனுக்கு கிடைக்கப் பெறுவதில்லை.

 

இத்தொகுப்பில் இடம்பெறுபவர்கள் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம், நாடகம், நாட்டுக்கூத்து, ஒவியம் முதலான

பலதுறைகளிலும் தமது காத்திரமான பங்களிப்புகளை

வழங்கியவர்கள்.

 

கவிஞர் அம்பி, எழுத்தாளர் எஸ்.பொ.அண்ணாவியார் இளைய பத்மநாதன், ஒவியர் கே.ரி.செல்வத்துரை ஆகியோர் - எனது எழுத்துலக பிரவேச வெள்ளிவிழா-இலக்கியவிழாவாக 15.11.97 இல் அவுஸ்திரேலியாவில் நடைபெற்றபொழுது பாராட்டி கெளரவிக்கப்பட்டவர்கள்.

 

இவர்கள் தொடர்பான ஆக்கங்கள் கொண்ட நம்மவர் மலரும்

இவ்விழாவில் வெளியிடப்பட்டது.

 

ஒவியர் கே.ரி.செல்வத்துரை அவர்கள் 17.4. 98  இல் மறைந்தார். அன்னாரின் கனவுகள் அவரைப்பற்றிய சந்திப்பில் பதிவாகியுள்ளன. அவை நனவாகவேண்டும்.

 

இச்சந்திப்புகள் - இலங்கையில் தினக்குரல் -  தினகரன் வாரமஞ்சரி, மரபு (அவுஸ்திரேலியா) பாரிஸ் ஈழநாடு (பிரான்ஸ்) ஒசை (பிரான்ஸ்) உதயம் (அவுஸ்திரேலியா) நம்மவர் மலர் (அவுஸ்திரேலியா) புதினம் (இங்கிலாந்து) முதலானவற்றில் பிரசுரமானவை.

 

வெளியிட்ட ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றி.

இந்நூலை வெளியிடுவதில் ஆலோசனையும் ஆதரவும்

வழங்கிய இனிய நண்பர் செ.கணேசலிங்கன் அவர்களுக்கும் எனது அன்புகலந்த நன்றி.

 

அன்புடன்

 

லெ. முருகபூபதி

 

6.6.1998

 

குறிப்பிட்ட இந்த திகதிக்குப்பின்னர்,  இந்தப்பதிவில் சொல்லப்பட்ட பலர் மறைந்துவிட்டனர்.

 

எனினும் நினைவுகளாக எனது எழுத்துலகப்பயணத்தில் தொடர்ந்தும் இணைந்து வருகின்றனர்.

 

( தொடரும் ) 

No comments: