சிட்னியில் 5 நூல்களின் அறிமுகம் - செ .பாஸ்கரன்

 .

நேற்றையமாலைப்பொழுது என்றும் இல்லாதவாறு ரம்மியமாக இருந்தது. நீண்ட இடைவெளிகளுப்பின்பு இலக்கிய வாதிகள் எழுத்தாளர்கள் என பலர் ஒன்றுகூடி இருந்ததுதான் அதன் சிறப்பு. 

22 வருடங்களாக தமிழையும் இலக்கியத்தையும் இரண்டு கண்களாகக் கொண்டு இயங்கிக் கொண்டு வருகின்ற அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆதரவில் ஐந்து நூல்களின் அறிமுக விழா தூங்காபி கொமினிற்றி மண்டபத்தில் இடம்பெற்றது. மெல்பேணில் இருந்து எழுத்துக்களையும் இலக்கியத்தையும் முன்னெடுத்துக் கொண்டும் எழுத்தாளர்களை ஊக்குவித்து கொண்டிருக்கும் எழுத்தாளர் திரு முருகபூபதி அவர்களின் முயச்சியால் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்ச்சியை சட்டத்தரணி கலாநிதி சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள் மிக அழகாக தலைமை தாங்கியிருந்தார். நிகழ்ச்சி திருமதி கனகா கணேஷ் அவர்களுடைய வரவேற்புரையுடன் ஆரம்பமாகியது. ஒரு இலக்கிய விழாவிற்கு அல்லது ஒரு நூல் அறிமுக விழாவிற்கு இத்தனை பெரிய கூட்டம் வருகை தந்து இருந்தது என்பது ஒரு மிகப்பெரிய விடயம் என்று கூறலாம். இலக்கியம் பேசுகின்றபோது அல்லது இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் ஒன்று கூடுவது என்பது குறைவாகவே இருந்து கொண்டு இருக்கின்ற நிலையிலே இந்தவிழா சிறப்பாக இருந்தது.

தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வரலாற்று சுவடுகள் ஒளிப்படத் தொகுப்பு திரையில் காண்பிக்கப்பட்டது. 22 வருடங்களாக இலக்கியத்திற்கும் எழுத்தாளர்களுக்கும் எப்படி எல்லாம் இந்த சமூகம் சேவை செய்து கொண்டிருக்கின்றது என்பதை மிக அழகாகவும் பாரதியாருடைய பாடல்கள் பின்னணியில் ஒலிக்கவும் கொடுத்திருந்தார்கள்.




அதைத்தொடர்ந்து கலாநிதி சந்திரிகா சுப்பிரமணியன் தலைமைஉரையை மிகச் சுருக்கமாகவும் ஆழமாகவும் ஆற்றியிருந்தார். அவருடைய உரை அவருடைய இலக்கிய அறிவையும் ஆளுமையும் வெளிக்காட்டியது. முதலிலேயே ஊடகவியலாளரும் எழுத்தாளருமான சன்முகம் சபேசன் அவர்களின் காற்றில் தவழ்ந்தத சிந்தனைகள் என்ற கட்டுரை நூல் பற்றி எழுத்தாளர் விக்னேஸ்வரனின் உரை அமைந்தது. மிக அழகாக தொட்டு சென்றார். காற்றில் தவழ்ந்த இந்த உரை பல பத்திரிகைகளிலே வந்திருக்கின்றது, இப்போது சிட்னியில் வெளியிடுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது என்று குறிப்பிட்டிருந்தார்.


அடுத்து நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசன் அவர்களின் இந்துமதத்தின் சிந்தனைகள் என்ற கட்டுரை. அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல வருடங்களாக மேற்கொண்ட இந்த நிகழ்ச்சியை தொகுத்து பல விடயங்களை அதற்குள்ளே பொறுக்கி எடுத்து மிக அழகாக அந்த இந்து மதத்தின் பரிணாம சிந்தனைகளை வெளிக் கொண்டு வந்திருந்தார். ஒரு நாட்டிய ஆசிரியராகவும் வானொலியாளராகவும் ஒரே நேரத்தில் இருந்து கொண்டிருக்கின்ற கார்த்திகா கணேசரு டைய இந்த கட்டுரை தொகுதிகளை பிரபலமான பேச்சாளரும் எழுத்தாளருமான திரு திருநந்தகுமார் அவர்கள் நகைச்சுவையோடும் கேள்விகளோடும் மிக அழகாக அறிமுகம் செய்தார். இந்து மதத்திலேயே சொல்லப்படுகின்ற விடயங்களை வைத்துக் கொண்டு கூர்ப்பை பற்றி மிக அழகாக சொல்லி இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்,





இதனை தொடர்ந்து நொயல் நடேசன் அவர்களின் அந்தரங்கம் என்ற சிறுகதைத் தொகுதியை கவிஞர் செ.பாஸ்கரன் அறிமுகப்படுத்தி வைத்தார். நோயல் நடேசன் உடைய நாவல்கள் சிறுகதைகள் எல்லாமே ஒரு வித்தியாசமான பார்வையைக் கொண்டதும்  பல கேள்விகளை முன்வைப்பது மான எழுத்துக்கள். ஆகவே எப்போதும் அசாதாரணமாகவே இருக்கும், அதுபோலவே இந்த அந்தரங்கம் என்ற சிறுகதைத் தொகுதிகளும் அந்தரங்கமான விடயங்களையும் வித்தியாசமான அணுகு முறைகளையும் சமுதாயத்திலே அசாதாரணமாக இருக்கக் கூடிய விடயங்களை இவர் பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து கனடாவில் இருந்து வருகை தந்துள்ள எழுத்தாளரும் ஆசிரியருமான ஸ்ரீரஞ்சனியின் ஒன்றே வேறே என்ற சிறுகதைத் தொகுதியை கவிஞரும் ஊடகவியலாளருமான சௌந்தரி கணேசன் அவர்கள் அறிமுகப்படுத்தினார். இந்த அறிமுகத்தின் போது இந்தப் புத்தகம் பெண்கள் படிக்க வேண்டிய புத்தகம் என்றும் பெண்கள் முன்வைக்கின்ற கேள்விகளுக்கெல்லாம் பல கோணங்களில் பதில்கள் இருக்கின்றன என்கிறார், சிறுகதை ஒன்றே வேறே என்ற தலைப்புக்கு ஏற்றது போல் ஒன்றாகவும் வேறாகவும் இந்த எழுத்துக்கள் இருக்கின்றது என்றும் குறிப்பிட்டு அந்த சிறுகதைத் தொகுதியைப் பற்றி எடுத்துரைத்திருந்தார்




இறுதியாக திரு முருகபூபதி அவர்களின் கதைத்தொகுப்பின் கதை என்ற சிறுகதையை எழுத்தாளர் கானா பிரபா அவர்கள் அறிமுகப்படுத்துவதாக இருந்தது. தவிர்க்க முடியாது அவர் வரமுடியாத காரணத்தால் செல்வி அம்பிகா அசோகபாலன் அவர்கள் கனா பிரபா அவர்களின் அறிமுக உரையை மிக அருமையாக நிகழ்த்தி எல்லோரினதும் பாராட்டையும் பெற்றுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து ஏற்புரைகள் இடம்பெற்றது. இந்த உரைகளை செய்கின்றபோது காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் ஆசிரியர் திரு சபேசன் அவர்களின் மனைவியார் ஏற்புரையை வழங்கினார். தன்னுடைய கணவனுடைய எழுத்துக்கள் பற்றியும் அவர்களுடைய செயல்கள் பற்றியும் மிக அழகாகவும் சுருக்கமாகவும் குறிப்பிட்டார்.


அதனை தொடர்ந்து கார்த்திகா கணேசன் அவர்கள் இந்து மதத்தின் பரிணாம சிந்தனைகள் என்ற தன்னுடைய புத்தகத்தின் ஏற்புரையில் நகைச்சுவையாகவும் திரு திருநந்தகுமார் கேட்ட சில கேள்விகளுக்கு பதிலை கொடுத்து அமர்ந்து கொண்டார்.

அதைத்தொடர்ந்து அந்தரங்கம் நூலின் ஆசிரியரான நோயல் நடேசன் அவர்கள் வழமையாக குறிப்பிடுவது போல ஆழமான விடயங்களையும் எழுத்துக்களில் முன்னெடுக்கப்படுகின்ற விடயங்கள் பலருக்கு பிடித்தும் பிடிக்காமலும் இருக்கலாம் ஆனால் வித்தியாசமான கேள்விகளோடு தான் அது இருக்கும் என்று குறிப்பிட்டு உரையை முடித்துக் கொண்டார்.


அடுத்து கனடாவிலிருந்து வருகை தந்துள்ள எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி ஒன்றே வேறே என்ற சிறுகதைத் தொகுதிக்கான ஏற்புரையில் தான் ஆரம்பத்திலேயே எழுதியதாகவும் பின்பு நீண்ட காலங்கள் குடும்ப சுமை காரணமாக எழுதாமல் விட்டதாகவும் தன்னை எழுத தூண்டிய முருகபூபதிக்கு நன்றியும் தன்னுடைய ஏற்புரையில் தெரிவித்துக்கொண்டார். சௌந்தரி கணேசன் மிக அழகாக தன்னுடைய கதைகளை பார்த்திருக்கிறார் அதற்கான கேள்விகளை முன் வைத்து இருக்கின்றார் என்று குறிப்பிட்டிருந்தார்.


குறிப்பிட்ட நேரத்திலே மிக அழகாக இந்த இலக்கிய நிகழ்வு நிறைவுபெற்றது. அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளாமல் சுருக்கமாகவும் அழகாகவும் இந்த நிகழ்ச்சியை கொண்டு சென்றார் தலைமை தாங்கிய சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள் அதேபோல் ஏற்புரையம் நன்றியுரையும் வழங்க வந்த திரு முருகபூபதி அவர்கள் ஒரு உருக்கமான வேண்டுகோளை முன்வைத்தார் என்றே குறிப்பிடலாம் மூத்த எழுத்தாளர்களுக்கும் இளைய எழுத்தாளர்களுக்கும் இடையே நிற்கின்ற ஒருவனாக இதுவரை காலமும் தான் இருந்து வந்திருக்கின்றேன். எல்லோரையும் ஒன்றாய் அழைத்து செல்ல வேண்டிய ஒரு தேவை இந்த சமூகத்திற்கு இருக்கின்றது. இதே போல் மற்றவர்களும் இனிவரும் காலங்களில் இந்த சங்கத்தில் எழுத்தாளர்களை அரவணைத்து, எழுத்தாளர்களும் நல்ல உறவுகளோடு, நல்ல மனிதர்களோடு பழக வேண்டும் நல்ல விதமாக பழக வேண்டும் நேர்மையாக பழக வேண்டும் இது தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதுமட்டுமல்ல 22 வருடங்கள் ஒரு சங்கத்தை எடுத்துச் செல்வது என்பது இலகுவான காரியமல்ல எத்தனை தலைவர்கள் மாறி மாறி இந்த சங்கத்திற்கு வந்தாலும்கூட முருகபூபதி பின்புலத்தில் இருந்து அதை இயக்கிக் கொண்டிருப்பது தான் உண்மை என்று எல்லோருக்குமே தெரியும். அதே போல் எல்லா எழுத்தாளர்களையும் அரவணைத்து, ஒவ்வொரு எழுத்தாளர்களையும் புதியவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பது கூட முருகபூபதி அவர்களுடைய ஒரு மிகப்பெரிய செயல்தான்.







நிகழ்ச்சியின் இறுதியில் இடம்பெற்ற சிற்றுண்டி. நல்ல சிற்றுண்டி வழங்கப்பட்டு எழுத்தாளர்கள் எல்லோருமே ஒருவரோடொருவர் நன்றாக பேசி சிரித்து அந்த மாலைப்பொழுது உண்மையிலேயே ஒரு இலக்கிய மாலை பொழுதாக மிக அழகாக அமைந்திருந்தது. புதிய எழுத்தாளர்கள் , நீண்ட கால எழுத்தாளர்கள் இப்படி எல்லோருமே ஒன்றுகூடி அந்த நிகழ்ச்சியில் சிரித்துப் பேசி இலக்கியங்களை பகிர்ந்து கொண்டது மிக திருப்தியாக இருந்தது என்று தான் கூற வேண்டும். இப்படியான நிகழ்வு தொடர்ந்து இடம் பெற வேண்டும் அதற்கான அடித்தளங்களை நிச்சயமாக நாங்கள் எடுக்க வேண்டும். தொடர்ந்து கூட வேண்டும், பேச வேண்டும் குறைகள் அனைத்தையும் நேரிலேயே பேசிக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருக்கின்றது. இந்த நிகழ்ச்சி எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல் வாசகர்களுக்கும் ஆனந்தத்தை கொடுத்திருக்கும். அங்கே வந்த எழுத்தாளர்களில் பலர் வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றியவர்கள் அல்லது அவர்களோடு தொடர்பு உடையவர்கள், அல்லது எழுத்துத்துறையில் ஈடுபாடு கொண்டவர்கள். அவர்களை எல்லாம் பூபதி உறவுமுறை சொல்லி அறிமுகப் படுத்தியது மிகவும் இனிமையாக இருந்தது. அந்த இனிமையான மாலைப்பொழுதாய் நிறைவு செய்துகொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

1 comment:

Anonymous said...

சிறப்பு பாஸ்கரன். நன்றி