இலங்கைச் செய்திகள்

யாழில் பாணின் விலை குறையாது

இலங்கையில் இறுதிப்பகுதியை மாத்திரமே பார்வையிடமுடியும்

அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தலைமையில் நீதியமைச்சின் நடமாடும் சேவை நேற்று யாழ்ப்பாணத்தில்

கொழும்பில் பாரிய பேரணி; புறக்கோட்டை நோக்கிய வீதிகள் பொலிஸாரால் மூடல்

21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று முதல் நடைமுறையில்


யாழில் பாணின் விலை குறையாது

யாழ்ப்பாணத்தில் பாணின் விலையை குறைக்கமாட்டோம் என யாழ். மாவட்ட வெதுப்பாக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த காலங்களில் நாட்டின் ஏனைய பகுதிகளில் ஒரு இறாத்தல் பாண் 220 ரூபாய் தொடக்கம் 250 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. அதன்போது நாம் இலாப நோக்கமில்லாமல் 200 ரூபாய்க்கே பாணை விற்பனை செய்து வந்தோம். தற்போது பாணை 200 ரூபாயிற்கு அதிகமான விலையில் விற்றவர்களே 10 ரூபாய் விலை குறைப்பு செய்துள்ளனர்.

அதனால் நாம் 200 ரூபாயிலிருந்து 10 ரூபாய் விலை குறைப்பு செய்ய முடியாது. கோதுமை மாவின் விலை மேலும் குறைவடைந்தால் மாத்திரமே நாம் பாணின் விலையை குறைப்போம் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ்.விசேட நிருபர்   -  நன்றி தினகரன் 





இலங்கையில் இறுதிப்பகுதியை மாத்திரமே பார்வையிடமுடியும்

பூரண சந்திரகிரகணம் 08 ஆம் திகதி

கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவிப்பு

பூரண சந்திரகிரகணம் ஒன்று எதிர்வரும் 8 ஆம் திகதி நிகழவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் ஆய்வுப் பிரிவு பணிப்பாளர் பேராசிரியர் சந்தன

ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த சந்திர கிரகணத்தில் ஆசியாவின் சில பகுதிகளிலும் அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் பார்வையிட முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்த சந்திர கிரகணம் அரைவாசியாக தென்படக்கூடும் என்றும் இலங்கை நேரப்படி பி.ப 1.30 மணிமுதல் இந்த சந்திர கிரகணம் இடம்பெறுவதுடன் 4.29 மணியளவில் முழுமையடைவதாகவும் இரவு 7.26 மணியுடன் அது நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்திரனானது கிழக்கு திசையிலிருந்து மாலை 5.48 மணியளவில் மேலெழும்புவதோடு இலங்கையர்களுக்கு இதன் இறுதிப் பகுதியை மாத்திரம் பகுதியளவு கிரகணமாக பார்வையிட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திர கிரகணமானது இந்த வருடத்தின் இரண்டாவதும் இறுதியானதுமான சந்திரகிரகணமாக அமைவதுடன் மீண்டும் முழுமையாக சந்திரகிரணமொன்று 2025 மார்ச் 14 ம் திகதியே உலகில் நிகழவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.   

லோரன்ஸ் செல்வநாயகம்  -  நன்றி தினகரன் 




அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தலைமையில் நீதியமைச்சின் நடமாடும் சேவை நேற்று யாழ்ப்பாணத்தில்

இந்தியாவிலிருந்து திரும்பி வந்தோரும் பங்கேற்பு
• இன்றைய தினம் கிளிநொச்சியில்
 
நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் ஒழுங்கமைப்பில் நடமாடும் சேவை நேற்றைய தினம் யாழில் நடைபெற்றது.
 
யாழ்.மாவட்ட செயலகத்தில் காலை 9 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையில் குறித்த நடமாடும் சேவை நடைபெற்றது.
 
இதனை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் நீதி அமைச்சர், நீதி அமைச்சரின் செயலாளர் வசந்த பெரேரா, நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் சமுர்த்தியசிங்க, யாழ் மாவட்ட செயலர் க.மகேசன், மேலதிக செயலளர் ம.பிரதீபன், காணி மேலதிக செயலாளர் செ.முரளிதரன் பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய அமைச்சுக்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
குறித்த நடமாடும் சேவையில் பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பெற்றுக் கொள்ளல்,
 
பிரஜாவுரிமை சான்றிதழ் பெற்றுக் கொள்ளல், இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களுக்கான காணித்தேவை மற்றும் காணி உரிமை பிரச்சினைகள் , வன்முறையால் பாதிக்கப்பட்ட சொத்து மற்றும் உயிரிழப்பு காயத்திற்கான நட்டஈடு பெற்றுக் கொள்ளல், தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளல், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினூடாக ஏற்கனவே அனுப்பப்பட்ட கோவைகளை பூரணப்படுத்தல் தொடர்பான சேவைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.குறித்த நடமாடும் சேவையில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம், இழப்பீட்டுக்கான அலுவலகம், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், மாகாண காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் ஆகிய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் பங்கு பற்றியிருந்தன. இதேவேளை குறித்த நடமாடும் சேவை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி திறன் விருத்தி மத்திய நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது.
 
முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியாவை சேர்ந்தவர்களும் கிளிநொச்சியில் இன்று நடைபெறுகின்ற நடமாடும் சேவையில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
யாழ்.விசேட நிருபர்





கொழும்பில் பாரிய பேரணி; புறக்கோட்டை நோக்கிய வீதிகள் பொலிஸாரால் மூடல்

அடக்குமுறைக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு பேரணி எனும் பெயரிலான எதிர்ப்பு பேரணியை தடுத்து கொழும்பு, மருதானையிலிருந்து புறக்கோட்டை நோக்கிய வீதிகள் பொலிஸாரால் மூடப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தினகரன் 





21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று முதல் நடைமுறையில்

பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் அண்மையில் (21) நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான 22ஆம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று (31) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

அரசியலமைப்புக்கான 22ஆம் திருத்தச் சட்டமூலம் 2022 ஓகஸ்ட் 10ஆம் திகதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் பின்னர் இதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய நீதி அமைச்சு சார் ஆலோசனைக் குழுவில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஒக்டோபர் 20, 21 ஆகிய இரு தினங்கள் அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் குறித்த விவாதங்கள் நடைபெற்றன.

இரண்டாவது மதிப்பீட்டின் இறுதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 179 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குழுநிலையில் திருத்தங்கள் உள்ளடக்கப்பட்ட பின்னர் மூன்றாவது மதிப்பீட்டுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 174 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய  அரசியலமைப்புக்கான 22ஆம் திருத்தச் சட்டமூலம், 21ஆவது அரசியலமைப்புத் திருத்தமாக இன்று முதல் (31) அமுலுக்கு வருகிறது.   நன்றி தினகரன் 





No comments: