நாமறிந்தவரையில் சிறையிலிருந்தவாறு இலக்கியம் படைத்தவர்கள், அரசியல் வரலாறு எழுதியவர்கள் உலகத் தலைவர்களாகவும் அறிமுகமானார்கள்.
அறிஞர் சோக்ரட்டீஸ் சிறைவைக்கப்பட்டு,
மரணதண்டனைக் கைதியாக இருந்து நஞ்சு தரப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில்
ஈடுபட்ட குற்றத்திற்காக பலர் சிறைவாசம் அனுபவித்தனர். மகாத்மா காந்தியும் எழுத்தாளர்தான். பண்டிதர் நேருவும் சிறையிலிருந்து மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள்தான்
உலக சரித்திரம் என்ற நூலாகியது. “ அதனைப்படித்த
பின்னரே தான் கம்யூனிஸ்டாக மாறினேன். “ என்று ஒரு தடவை சொன்னவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தோழர் எம். கல்யாணசுந்தரம்.
ஆபிரிக்க மக்களின் விடுதலைக்காக போராடிய நெல்சன்
மண்டேலாவும் எழுத்தாளர்தான். இவரது Long Walk to freedom நூல் உலகப்பிரசித்தி பெற்றது.
தமிழ்நாட்டில் பொடா சட்டத்தின்
கீழ் சிறைவைக்கப்பட்ட சுப. வீரபாண்டியனும்
அதே பெயரில் ஒரு நூலை எழுதினார்.
இவ்வாறு சிறையிலிருந்துகொண்டு
எழுதிய பலரை பட்டியலிடமுடியும்.
இலங்கையில் சமகாலத்தில்
ஒரு தமிழ் அரசியல் கைதி சிறையிலிருந்தவாறே நாவல் எழுதி தேசிய சாகித்திய விருது பெற்றுள்ளார்.
அவர்தான் சிவ ஆரூரன்
என்ற பெயரில் எழுதிவரும் சிவலிங்கம் ஆரூரன். பல வருடங்களாக சிறையிலிருக்கும் அவர் ஒரு பொறியியல்
பட்டதாரி. வடமராட்சியைச் சேர்ந்த அவர் சிறந்த
கல்விப்பின்புலம் மிக்க குடும்பத்திலிருந்து வந்தவர். எதிர்காலக் கனவுகளுடன் படித்தவர். காலம் அவரை சந்தேகத்தின்
பேரில் சிறையில் தள்ளியிருக்கிறது.
அரசியல் கைதியாக நீண்ட
காலம் சிறைக்கூண்டுக்குள் வாழ்ந்திருக்கும் சிவ ஆரூரன், தனது சிறை வாழ்வையே சவாலாக்கிக்கொண்டு தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார்.
ஏற்கனவே யாழிசை, யாவரும்
கேளீர், வலசைப்பறவைகள் , ஊமை மேகம், முதலான நாவல்களையும் எழுதி விருதுகளும் பராட்டுச்
சான்றிதழ்களும் பெற்றவர். The innocent victims என்ற பெயரில் ஆங்கிலத்திலும் ஒரு நூலை வரவாக்கியவர். அத்துடன் பூமாஞ்சோலை என்ற
கதைத் தொகுதியையும் வெளியிட்டிருப்பவர்.
இவை யாவும் இலங்கையில்தான் வெளிவந்திருக்கின்றன.
தன்னை சிறைக்குப் பார்க்க வரும் தந்தையாரிடமிருந்தே ஆங்கில – தமிழ் அகராதியும் தருவித்து
படித்து தனது ஆங்கில அறிவையும் விருத்தி செய்துகொண்டவர்.
இந்தத் தகவல்களை நாம் இணைய ஊடகங்களிலிருந்து தெரிந்துகொள்கின்றோம்.
ஆனால், இலங்கை இலக்கிய விமர்சகர்களில் எத்தனைபேரின்
கண்களுக்கு இவரது படைப்புகள் தென்பட்டுள்ளன!?
இலங்கை அரசுடன், அடிக்கடி போரில் காணாமல் போனவர்கள் பற்றியும் அரசியல் கைதிகள் பற்றியும் பேசுவதாக பாவனை காட்டுகின்ற தமிழ் அரசியல் தலைவர்களின் கண்களில் கூடவா சிவ ஆரூரனின் படைப்புகள் தென்படவில்லை எனக் கேட்கத்தோன்றுகிறது.
பதின்ம வயதில் சிறைப்பறவையாகியிருக்கும் சிவஆரூரன் தற்போது 40 வயதினை கடந்துவிட்டார். அவரது இளமைக்கால கனவுகள் பல சிதைக்கப்பட்டுள்ளன.
எனினும் ஓர்மத்துடன் அவர் அந்த சிறைக்கூண்டுக்குள்
வாழ்ந்தவாறே புத்தகங்களை வாசித்துக்கொண்டும், சிறந்த புத்தகங்களை உள்ளே தருவித்து படித்துக்கொண்டும், தான் பெற்ற வாசிப்பு
அனுபவத்தையே மூலதனமாகக் கொண்டு சிறந்த படைப்புளை வழங்கி ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு
வளம் சேர்த்துள்ளார்.
சிறைக்காவலர்களின் பலத்த பாதுகாப்புடன் விருது
வழங்கும் விழாவுக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவருக்கு, அவர் சிறையிலிருந்து எழுதிய ஆதுரசாலை நாவலுக்கு
தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது.
மனம் திறந்து பாராட்டுகின்றோம்.
சிறைக்குள்ளேயும் வெளியேயிருந்து போதை வஸ்துக்களை கடத்திக் கொண்டிருக்கிறார்கள் முதலான செய்திகள் வெளிவரும் காலத்தில், வெளியே இருந்து
சிறந்த புத்தகங்களை தருவித்துக் கொண்டிருந்தவரான இந்த இளைஞர்
ஏனைய சிறைக் கைதிகளுக்கு சிறந்த முன்னுதாரணம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சில தமிழ் அரசியல் கைதிகளை
அரசு பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்திருக்கிறது. மலரவிருக்கும் புத்தாண்டுக்குப் பின்னர் தைப்பொங்கல் தினத்தன்றும் மேலும் சில தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற செய்தியும், குறிப்பிட்ட அரசியல் கைதிகளின் உறவுகளிடம் பாலை வார்த்திருக்கிறது.
அதே சமயம் முன்னாள் போராளிகளை கண்காணிக்க இராணுவ
புலனாய்வுப் பிரிவு தயாராகியிருப்பதாகவும் செய்திகள் கசிகின்றன.
இது தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடும்
செயலுக்கு ஒப்பானது.
அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்த நீதியமைச்சர்
விஜயதாச ராஜபக்ஷவும், தமிழ் அரசியல் கைதிகளின்
விடுதலை குறித்து அவர்களின் உறவினர்களிடம் நம்பிக்கை தரும் வார்த்தைகளை வழங்கியிருக்கிறார்.
ஏற்கனவே கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு தமிழ் அரசியல் கைதி விடயத்திலும் முன்னர் நடந்த
தேர்தல் காலத்தில் அரச தரப்பினர் நம்பிக்கை தெரிவித்திருந்தமை தற்பொழுது நினைவுக்கு
வருகிறது.
1971 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் நிகழ்ந்த மக்கள்
விடுதலை முன்னணியின் கிளர்ச்சியின்போது கொல்லப்பட்டவர்களை விடுத்து ஏராளமானோர் அரசியல்
கைதிகளாக நாடெங்குமிருந்த சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.
அவர்கள் மத்தியிலும் படித்தவர்களும், எழுத்தாற்றலும் பாடும்
ஆற்றலும் மிக்க பலர் இருந்தனர். அவர்களினால் சிறைகளில் பாடப்பட்ட விடுதலைக்கீதம் பின்னாளில் பிரசித்தமடைந்தது. அப்போது சிறையிலிருந்தவர்களில் லயனல்போப்பகே சிறந்த எழுத்தாளராகவும், அரசியல் ஆய்வாளராகவும் பாடலாசிரியராகவும் பாடகராகவும் மிளிர்ந்தார்.
அவரும் பொறியியல் பட்டதாரிதான். ரோகண விஜேவீர மாஸ்கோ சென்று லுமும்பா பல்கலைக்கழகத்தில்
மருத்துவம் படித்தவர்தான்.
இவர்களும் சிறையிலிருந்தபோது சிறந்த புத்தகங்களை
படித்தனர். எழுதினர்.
அண்மையில் சிறையிலிருந்து இலக்கியம் படைத்து
தேசிய சாகித்திய விருது பெற்றிருக்கும் சிவ ஆரூரன் குறித்த சிந்தனை வந்தபோது மேலே சொல்லப்பட்ட
தகவல்களும் நினைவுக்கு வந்தன.
விருது பெற்றிருக்கும் எழுத்தாளர் சிவ ஆரூரனை
வாழ்த்துவோம்.
விரைவில் இவருக்கு விடுதலை கிடைக்கவேண்டும்.
---0---
No comments:
Post a Comment