மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா
சிவனருளைப் பெற்றுமே திருமூலர் வந்தார்
தவநிலையி லிருந்தவரும் தத்துவத்தை மொழிந்தார்
புவியுள்ளார் அகத்தினிலே புதுக்கருத்தை விதைத்தார்
அவனியிலே திருமூலர் வாழுகிறார் என்றும்
ஒருகுலமே என்றவரும் உரத்துமே சொன்னார்
ஒருதேவன் உலகதனைக் காப்பதுவாய் உரைத்தார்
அலங்காரம் விரும்பாது அருட்சக்தி என்றார்
அன்புதான் இறையென்று அவருறைக்கச் சொன்னார்
உயர்பதவி வகித்தாலும் உயர்செல்வம் இருந்தாலும்
உயிரிருக்கும் உடலுக்கே உரித்தென்றார் மூலர்
உயிர்பிரிந்த பின்னாலே பிணமென்று சொல்லி
அதையெரித்து நீர்மூழ்கி மறந்திடுவார் என்றார்
உடம்பினை இழுக்கென்று எண்ணி நின்றார்
உடம்புக்குள் உயர்பொருள் உறையு தென்றார்
இழுக்கென எண்ணிய உடம்பை இப்போ
விழிப்புடன் காத்திடல் வேண்டும் என்றார்
படைத்தவன் மகிழ்ந்திடப் பச்சிலை போதும்
பால்தரும் பசுவுக்கும் பசும்புல் போதும்
பசித்தவர் புசித்திட கொடுத்திடு உணவை
உளத்தினால் நல்லுரை பகருதல் உயர்வே
நால்வகை அறங்களை நயமுடன் சொன்னார்
நாநில முள்ளோர் ஆற்றிடல் சிறப்பே
இலகுவாய் அறத்தைத் தேர்ந்துமே சொன்னார்
புலன்களை இழுக்கெனப் பலர் மொழிந்தார்கள்
புலன்களால் நல்லன கெடு மென்றார்கள்
புலன்களை அடக்குதல் முறை யென்றார்கள்
புலன்களை எதிரியாய் கண்டுமே நின்றார்
திருமூலர் புலன்களை சிறப்புடன் பார்த்தார்
ஒளிதரும் விளக்காய் புலன்களை உணர்ந்தார்
புலன்களைக் கொண்ட உடம்பினைக் கோவிலாய்
ஆக்கியே அதனுள் அமர்த்தினார் இறையினை
சீவனைச் சிவமாய் கண்டனர் மூலரும்
அழுக்குடை உடம்பினை ஆக்கினார் கோவிலாய்
சித்தரின் சிந்தனை எத்தனை தத்துவம்
மொத்தமாய் உலகினை மாற்றிடும் சிந்தனை
மயக்குறு மதுவினை விலத்திட மொழிந்தனர்
மாண்பிலா முறைகளை மறந்திட வுரைத்தனர்
மண்ணினை விண்னினை நுண்மையாய் பார்த்தனர்
மருத்துவம் தத்துவம் சேர்த்துமே தந்தனர்
உலகிடை பிறப்பதும் முடிவினில் இறப்பதும்
நலனோடும் வாழ்வதுவதுவும் நலனின்றி நோவதுவும்
எனும்நிலை இருக்கையில் நன்றாய்த் தமிழில்
தன்னைப்பாட படைத்தான் இறைவன் என்றார்மூலர்
தத்துவம் பாடினார் சமயமும் பாடினார்
உத்தம அறங்களை உணர்வுடன் பாடினார்
சத்தியம் பாடினார் சன்மார்க்கம் பாடினார்
அத்தனை பாடலும் தமிழிலே பாடினார்
இனித்திடும் எம்தமிழ் இறையினைக் காட்டிடும்
பொறுப்புடன் தத்துவம் எடுத்துமே உரைத்திடும்
தமிழினை மொழிந்திட இறைவனும் பணித்தனன்
தரணியில் மூலனாய் வந்துமே பிறந்திட்டார்
ஆகமம் காட்டிடிடும் அருமறை காட்டிடிடும்
அடியவர் போற்றிடும் திருமுறை ஆகிடும்
அழகினைக் காட்டிடிடும் அருளினைக் காட்டிடிடும்
அருந்தமிழ் மூலனார் செப்பிய மந்திரம்
No comments:
Post a Comment