பால்வண்ணம் சிறுகதைத் தொகுப்பு - வாசிப்பு அனுபவம் - குரு அரவிந்தன்

 .

எழுத்தாளர் கே. எஸ். சுதாகரின் பால்வண்ணம் சிறுகதைத் தொகுப்பை வாசிக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவுஸ்ரேலியாவில் இருந்து தமிழ் இலக்கியத்திற்குத் தரமான சிறந்த ஆக்கங்களைத் தந்து கொண்டிருக்கும் அவரைக் கனடா வந்த போது நேரடியாகச் சந்தித்திருக்கின்றேன். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் மட்டுமல்ல, வெளிப்படையாக அவர் பேசுவதால் நல்ல நட்புகளைத் தேடி வைத்திருப்பவர்.

சென்னை எழுத்துப் பிரசுரத்தின் வெளியீடாக இச்சிறுகதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. இந்த நூலுக்கான அட்டைப்படத்தை கலாநிதி எம்.கே. எஸ். சிவகுமாரன் சிறப்பாக வரைந்திருக்கின்றார். ஜேர்மனியில் இருந்து வெளிவரும் வெற்றிமணி வண்ண இதழின் ஆசிரியர் மட்டுமல்ல, மகாஜனாவின் ஓவியக்கலை ஆசிரியராகவும் இருந்தவர்.

இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் இதழின் ஆசிரியரான திரு. தி. ஞானசேகரன் இந்த சிறுகதைத் தொகுப்பிற்கு முன்னுரை எழுதியிருக்கின்றார். அவர் தனது முன்னுரையில்தெளிந்த நீரோட்டம் போன்று அநாயாசமாக கதைகளை நகர்த்திச் செல்லும் ஆசிரியரின் திறனும், அவரது சிறந்த மொழிநடையும் பாராட்டத் தக்கவகையில் அமைந்திருப்பதும், பல்வேறுபட்ட கருவும் உருவும் கொண்ட கதைகள் தொகுக்கப்பட்டிருப்பதும் வாசகரது இரசனைக்கு நல்விருந்தாக அமையும்என்று குறிப்பிட்டிருக்கின்றார். ஒவ்வொரு வாசகனின் இரசனையும் வித்தியாசமாக இருந்தாலும், இலக்கியத்தரம் வாய்ந்த நீண்ட காலமாக வெளிவரும் ஞானம் இதழ் ஆசிரியரின் இந்த முன்னுரையில் இருந்து இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளின் தரத்தை வாசகர்கள் ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.




பன்னிரண்டு சிறுகதைகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. இதில் ஆறு சிறுகதைகள் போட்டியில் பரிசுகள் பெற்றவை. முதலாவது கதை பால்வண்ணம். அட்டைப்படத் தலைப்பில் இடம் பெற்ற பெயரும் இதுதான். ‘பால்வண்ணம் என்ற தலைப்பும் அருமை, பால் தூய்மையானது, வெண்ணிறமானது, நிறையுணவு, வீசப்பட வேண்டிய பகுதியற்றது. அதுபோல காதலும்கூட ஒரு வலி நிவாரணியாக இருக்கக்கூடியதுஎன்று இந்தத் தலைப்பைப் பற்றி திருமதி கோகிலா மகேந்திரன் தனது வாழ்த்துரையில் குறிப்பிடுகின்றார். ‘இந்த எழுத்தாளரை உருவாக்கிய யூனியன் கல்லூரி நல்லாசிரியர்கள்யாராக இருக்கும் என்று தாங்கள் கலந்துரையாடியதாகத் திருமதி கோகிலா மகேந்திரன் மேலும் தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டிருக்கின்றார். திருமதி கோகிலா மகேந்திரனும், நானும் மகாஜனக் கல்லூரியில் கல்விகற்ற சமகாலத்தில் எழுத்தாளர் கே. எஸ். சுதாகர் அருகே இருந்த யூனியன் கல்லூரியில் கல்வி கற்றிருக்கின்றார். இரண்டு கல்லூரிகளும் அருகருகே இருந்ததால் இலக்கிய வேர்கள் அங்குமிங்கும் பரவி இருக்கலாம் என்பது எனது எண்ணம். தமிழ் இலக்கிய உலகத்திற்கு மகாஜனக் கல்லூரி தந்தநவரத்தினங்களில்திருமதி கோகிலா மகேந்திரனும் ஒருவர் என்பதில் எழுத்தாளர்களாகிய எங்களுக்கும் பெருமையே!

பால்வண்ணம் பருவம் கண்டுஎன்ற பாசம் படத்தில் வந்த பாடல் மாணவப் பருவத்தில் திரைப்பட இரசிகர்களின் மனதில் பதிந்து விட்ட வரிகள். எனக்கும் பழைய பாடல் வரிகள் பிடிக்கும் என்பதால், மாணவப் பருவத்து நிகழ்வுகளைக் கதையாக்கும் போது இந்த வரிகளும், எம்ஜிஆர், சரோஜாதேவியின் பாடல் காட்சிகளும் ஆசிரியருக்கு நினைவுக்கு வந்திருக்கலாம். கதைக்கேற்ற பொருத்தமான தலைப்பாக இருக்கின்றது. அழகைப் பார்த்து காதல் வருவதில்லை என்பதை எடுத்துக் காட்டும் இந்தக்கதை, சொல்லாத காதல்தான் ஒருதலைக்காதல் என்று இதுவரை எண்ணியிருந்த எனக்கு சொல்கிற காதலும் சிலசமயங்களில் ஒருதலைக் காதலாகிவிடுவதுண்டு என்பதைப் பரிசுபெற்ற இந்தக் கதை மூலம் அழகாகப் புரிய வைத்திருக்கிறார் ஆசிரியர்.

இன்னுமொரு கதைதூங்கும் பனிநீர்மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீர் என்ற கம்பனோடு தொடர்புடைய ஏற்றப் பாடல். அடுத்தவரி என்வென்று கம்பனே ஏங்கித் தவித்த பாடல் வரியைக் கவிஞர் கண்ணதாசன் திரையுலகிற்கு அறிமுகமாக்கிய வரியே தலைப்பாக இருக்கின்றது. மூன்றாவது கதைவெந்து தணிந்த காடுபடம் முதலில் வந்ததா அல்லது இவரது கதை முதலில் வந்ததா தெரியவில்லை. தலைப்பு மட்டுமே தொடர்பாக இருக்கின்றது. ‘அனுபவம் புதுமைஎன்ற கதையின் தலைப்பும் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில்அனுபவம் புதுமை அவரிடம் கண்டேன்பாடல் வரியில் இருந்து வந்திருக்கிறது. பழைய பாடல்களில் ஆசிரியர் ஊறிப்போனதால் அவரது விருப்பமான பாடல் வரிகளைத் தலைப்பாக்கியிருக்கலாம். இவற்றைவிட அம்மாவின் எண்பதாவது பிறந்ததின உரை, கலைந்தது கனவு, ஏன்?, தலைமுறை தாண்டிய தரிசனங்கள், யாரோ ஒளிந்திருக்கிறார்கள், பாம்பும் ஏணியும், கனவுகாணும் உலகம், நாமே நமக்கு ஆகிய கதைகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொருகதைகளும் வெவ்வேறு வகையான கருப்பொருளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன. எனவே நான் அந்தக் கதைகளைப் பற்றிக் குறிப்பிடுவதைவிட, நீங்களே கதைகளை வாசித்து அதன் சுவை இன்பத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

சினிமாவில் அதிக ஈடுபாடு கொண்டதாலோ என்னவோ, இவரது கதைகளில் அதிக இடங்களில் சினிமா வாசனை வீசுகின்றது. இச்சிறுகதைகளின் வடிவநேர்த்தியும், மொழி நடையும் சிறப்பாக இருக்கின்றன. பல்லாயிரக் கணக்கான இரசிகர்களும் இதுபோன்ற இவரது கதைகளால் ஈர்க்கப்படுவதில் வியப்பே இல்லை. அதனால்தான் இவரதுவளர் காதல் இன்பம்என்ற நாவலைத் திரைப்படமாக்க முன்வந்திருக்கிறார்கள் என்பதும் பாராட்டப்பட வேண்டியது. இதன் மூலம் மேலும் பல இரசிகர்கள் இவரது வாசகர்களாக உருவாகுவார்கள் என்பது திண்ணம். இன்னும் பல வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து, இது போன்ற பல ஆக்கங்களை வெளியிட்டு தமிழ் இலக்கிய உலகை மேம்படுத்த வேண்டும் என நூல் ஆசிரியர் கே.எஸ். சுதாகரை வாழ்த்துகின்றேன்.

 


No comments: