எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 38 கர்மவீரர்கள் இணைந்திருந்த சங்கம் மாயமானது ! நினைவுகள் மாத்திரம் மாயமாகாது ! ! முருகபூபதி


அவுஸ்திரேலியாவுக்கு 1987 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வந்த பின்னர், மீண்டும் 1997 ஆம் ஆண்டுதான் இலங்கைக்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது என முன்னைய அங்கங்களில் தெரிவித்திருந்தேன்.

அப்போது, வடக்கு – கிழக்கிற்குத்தான் என்னால் செல்ல முடியாது போய்விட்டது.  அங்கிருந்த பல இலக்கியவாதிகள் குறிப்பாக வடக்கிலிருந்தவர்கள், மேற்கிலங்கைப்பக்கம் வந்திருந்தார்கள்.

வடக்கில் போர் மேகங்கள் பரவியிருந்த சூழலில்  அவர்களுக்கு அப்போது கொழும்பு பாதுகாப்பானதாக இருந்தது.

இறுதியாக 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எமது இலங்கை


முற்போக்கு எழுத்தாளர் சங்கம் யாழ். நல்லூர் நாவலர் மண்டபத்தில் நடத்திய முழுநாள் கருத்தரங்கில் கலந்துகொண்டேன்.

அதன்பின்னர் நான் கலந்து கொண்ட சங்கத்தின் நிகழ்ச்சி, 1997 ஆம் ஆண்டு டிசம்பர்  மாதம் 06 ஆம் 07 ஆம் திகதிகளில் வெள்ளவத்தை இராமகிருஷ்ண சிறிய மண்டபத்தில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவ்வேளையில் இலங்கையில் நின்றமையால்,  குறிப்பிட்ட இரண்டு நாள் கருத்தரங்கிலும் என்னால் கலந்துகொள்ள முடிந்தது.

அந்தக்கருத்தரங்கை முன்னிட்டு சங்கத்தின் அமைப்புச் செயலாளர் என். சோமகாந்தன்,  கலை - இலக்கிய ஆய்வு மலர் ஒன்றை தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தார்.

அதில் எனது கட்டுரையும் இடம்பெறல்வேண்டும், என்று அவர் சொன்னார். கருத்தரங்கு நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் கேட்டார்.

     இன்னும்    இரண்டு   நாட்களில்   நடக்கவிருக்கும்                                   ஆய்வரங்கில் வெளியிடப்படவுள்ள   மலருக்கு   கட்டுரை   கேட்கிறீர்களே?                  எப்படி சாத்தியம்?   என்றேன்.


   “உமது   கட்டுரை  இடம்பெறவேண்டும்.            உடனே  எழுதித்தாரும். “   என்றார்.


புலப்பெயர்வும்   ஒட்டுறவும்   என்ற   சிறிய   கட்டுரையை            அவர்  முன்னிலையிலேயே  உடனே எழுதிக்கொடுத்துவிட்டு  நீர்கொழும்புக்கு  வந்துவிட்டேன்.

 எனக்குச்    சந்தேகம்.      குறுகிய   கால   அவகாசத்தில்    எனது கட்டுரையையும்  பதிப்பித்து   மலரையும்  அச்சிட்டுவிடுவாரா?


 என்ன    ஆச்சரியம்.?!

முதல் நாள் கருத்தரங்கிற்காக அந்த சனிக்கிழமை காலையிலேயே வெள்ளவத்தைக்கு வந்துவிட்டேன். மண்டப வாயிலில் என்னை வரவேற்ற சோமகாந்தன், என்னிடம் அந்த ஆய்வு மலரை நீட்டினார்.

இத்தகைய கர்மவீரர்கள் இருந்த எமது சங்கம் தற்போது இயங்காமல் முடங்கிவிட்டது .

சங்கத்தின் தூண்களாக விளங்கிய பலர் இன்றில்லை.  அந்தத் தூண்களை நினைவுகளாக சுமந்து சுற்றிச் சுற்றி வலம் வந்துகொண்டிருக்கின்றேன்.


நினைவுகள் சாசுவதமானவை. அதற்கு மரணமே இல்லை.

இலங்கையில் நின்ற அந்தக்  காலப்பகுதியில் பேராசிரியர் க. கைலாசபதியின் நினைவு தினம் வந்தது.  அவர் 1982 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி கொழும்பு அரசினர் மருத்துவ மனையில் மறைந்தார்.

எமக்கு அதிர்ச்சி தந்த மரணம்.  தினகரன் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியவர். அப்போது நான் மாணவப் பருவத்திலிருந்தேன். அவரும் நான் இலக்கியப்பிரவேசம் செய்தபின்னர் எனது நண்பர்கள் வட்டத்திலிருந்தவர். இறுதியாக அவரை 1982 டிசம்பர் 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை நானும் நண்பர் பேராசிரியர் சபா . ஜெயராசாவும் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தோம்.

அவர் உடல் நலம் தேறிவருகிறார்   என்ற தலைப்பில் வீரகேசரி


வாரவெளியீட்டுக்காக ஒரு சிறிய செய்தியையும் அப்போது                    ( டிசம்பர் 05 ஆம் திகதி )எழுதியிருந்தேன். அந்தச்செய்தியையும் அவர் மருத்துவமனை படுக்கையிலிருந்தவாறு பார்த்தார்.

அதேசமயம் தினகரன் பிரதம ஆசிரியராக அப்போதிருந்த ஆர். சிவகுருநாதன், கைலாசபதி முன்னர் எழுதிய மகாகவி பாரதி பற்றிய ஒரு கட்டுரையை டிசம்பர் 05 ஆம் திகதி ஞாயிறு தினகரன் வாரமஞ்சரியில் மறுபிரசுரம் செய்திருந்தார். அக்காலப்பகுதியில்  பாரதிக்கு பிறந்த நூற்றாண்டு தொடங்கிவிட்டது.

கைலாசபதி இந்தக்கட்டுரையையும் பார்த்துவிட்டுத்தான் மறுநாள் தனது கண்களை நிரந்தரமாக மூடிக்கொண்டார்.

1997 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நண்பர் ராஜஶ்ரீகாந்தன் தினகரன் ஆசிரியராகவிருந்தார்.


கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடந்த ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் என்னைச்சந்தித்த அவர், ஒரு வெள்ளைத்தாளை என்னிடம் நீட்டி இதில் உங்கள் கையொப்பத்தை எழுதித்தாருங்கள் எனக்கேட்டார்.

எதற்கு…?

கைலாஸின் நினைவு தினம் வருகிறது. டிசம்பர் மாதம் முழுவதும்  தினமும் கைலாஸ் பற்றிய கட்டுரைகளை வெளியிடவிருக்கின்றோம். நீங்களும் எழுதித்தாருங்கள். உங்கள் கட்டுரையுடன் உங்கள் பெயரை அச்சில் வெளியிடாமல் உங்கள் கையொப்பத்துடனேயே பதிவுசெய்து வெளியிடப்போகின்றோம்   என்றார்.

கைலாசபதி நண்பர்களுக்கு ஒழுங்காக கடிதம் எழுதுபவர். கவிஞர் முருகையன் வசம் ஒரு பெரிய கோவையே இருந்தது. அதில் கைலாஸின் பல இலக்கிய கடிதங்களையும் பார்த்திருக்கின்றேன்.

ராஜஶ்ரீகாந்தனின் வேண்டுகோளை ஏற்று கடிதக்கலையிலும்    பரிமளித்த    கைலாஸ்  என்ற    தலைப்பில்  தினகரன் 1997 டிசம்பர் 10 ஆம்  திகதிய  இதழில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன்.


அதிலிருந்து  சில பகுதிகளை  தற்போது  இங்கு  மீண்டும்   பதிவு

செய்கின்றேன்.


எத்தனையோ   வேலைப்பளுவுக்கு   மத்தியிலும்    அவர்   தமது    நண்பர்களுக்கு கடிதம்

எழுதவும்,   தமக்கு   வரும்   கடிதங்களுக்கு  பதில்    எழுதவும்                       தவறவில்லை  என்பது   வியப்பானது.   மல்லிகைப்பந்தல்   1996   இல் வெளியிட்ட ‘எங்கள்   நினைவுகளில்   கைலாசபதி’   என்ற   நூலில்                       திரு.   ரா.   கனகரத்தினம்    அவர்களுக்கு    கைலாஸ்    எழுதிய   சில   கடிதங்கள்   தொகுத்து   வெளியிடப்பட்டுள்ளன.

பொதுவாக    ஒருவர்    மற்றவருக்கு    எழுதும்    கடிதங்களை    பிறர்   பார்ப்பதும்    வாசிப்பதும்    நாகரீகம்    அல்ல   என்பது             பண்பு.   அந்தரங்கம்   புனிதமானது   என்பதனால்                                    இந்தப்பண்பு    பின்பற்றப்படுகிறது.
ஆனால்,  கைலாஸின்   கடிதங்கள்  அந்தரங்கமான    விடயங்களை            அலசுவதில்லை என்பதனால்   பகிரங்கமாகின்றன.   அதற்கு   அவற்றில்   ‘அந்தரங்கம்’   இல்லை என்பது    மாத்திரம்   காரணமல்ல. அவை   இலக்கியத்தரமானவை.    பல ஆலோசனைகளை -   வழிகாட்டல்களை   எடுத்துரைப்பவை  என்பதனால்                     பகிரங்கமானவையாகின்றன.
ஆனால்,   கைலாஸ்   மற்றவர்களுக்கு   எழுதும்   கடிதங்கள் - பதில்கள்   என்றாவது ஒருநாள்   தொகுக்குப்பட்டு   வாசகர்களுக்குப்  

பகிரங்கமாகப்   பகிரப்படலாம்   என்ற  நம்பிக்கையுடன்   எதிர்பார்ப்புடன்  
           எழுதப்படவில்லை   என்பது   சத்தியமானது.


1953   முதல்   1956   வரையில்   கைலாஸ்    நண்பர்                            கனகரத்தினத்திற்கு   எழுதிய   சில   கடிதங்கள்                                தொகுக்கப்பட்ட  ‘எங்கள்  நினைவுகளில்   கைலாசபதி’              என்ற   நூலைப்படித்தபொழுது,    பேராசிரியரின்   ‘அகம்’                துலாம்பரமாகத்தெரிகிறது.   ஆக்க   இலக்கியங்களில்   படைப்பாளியின்   அகத்தை   எம்மால்   பூரணமாக   அறியமுடியாது.    ஆனால்,    கடிதங்கள்   அப்படி   அல்ல.
ஆக்க    இலக்கியங்கள்,    பத்திரிகைகளில்    இலக்கிய                இதழ்களில்   வெளியாகும்.   வாசகர்    படிப்பர்.   நண்பர்கள்       எழுதும்   கடிதங்கள்   நண்பர்களின்  பார்வைக்கு   மாத்திரமே.
ஆனால்,    அவை   இலக்கியத்தரம்   கருதி   வாசகர்   மத்தியில்   வலம்வரும்பொழுது   அவற்றை   எழுதியவரின்   அகத்தை               நாம்   முழுமையாக புரிந்துகொள்ள   முடிகிறது.
     மகாத்மா காந்தி,   பாரதியார்,   வ.வெ.சு ஐயர்,   அரவிந்தர்,   அறிஞர் அஸீஸ், கி. ராஜநாரயணன்   முதலானோர்   எழுதிய   கடிதங்களை   பல ஆண்டுகளுக்கு முன்னர்    சேகரித்து   தொகுத்து    வாசகர்களுக்கு                                  வழங்கினார்     எழுத்தாளர் மு. கனகராஜன்.
இந்த   வகையில்   கைலாஸ்,   முருகையனுக்கும்                                      கனகரத்தினத்திற்கும்   எழுதிய கடிதங்கள் - பதில்கள்    கவனத்தைப்பெறுகின்றன.
       1953   இல்   ஆங்கிலத்திலிருந்து    தமிழுக்கு                                      மொழிபெயர்க்கும் உத்திமுறையில்   தாம்

பரிசோதனைக் கட்டத்தில்’    இருப்பதாகவும்   சித்தார்த்தன் என்ற   தமது    நண்பர்  ஆங்கிலப்புலமை   மிக்கவராக    இருப்பதனால்   அவரை மொழிபெயர்ப்புத்துறையில்   ஊக்குவித்த   தகவலையும்               கைலாஸ்   கூறுகிறார்.
அதேஆண்டில்   அவர்   சிறுகதை   எழுதியதையும்  

அதிலும்   தாம் பரீட்சார்த்தமான   முயற்சிகளை   மேற்கொண்டதையும்               சொல்கிறார்.   மொழிபெயர்ப்பில்    தமக்கு   ஏற்படும்                      சிரமங்களையும்   ஒப்புக்கொள்கிறார்.
தாம்   படித்த   படைப்புகள்  தமிழக  இதழ்களில்   பிரசுரமான   விமர்சனங்கள், ரசித்து    நோக்கிய   வானொலி   நிகழ்ச்சிகள்,    நாடகங்கள்…   இப்படி  பல விடயங்களைக்    குறிப்பிட்ட    கடிதங்களில்   அலசுகிறார்        கைலாசபதி.
கடிதம்   எழுதுவதும்  ஒரு   கலைதான்   என்பதைப்படைப்பாளிகளுக்கு   உணர்த்திய    பேராசான்    கைலாசபதியின்    இதர      கடிதங்களும்  தொகுக்கப்பட்டால்   பயனுடையதாக   இருக்கும்  என  நம்புகின்றேன்.

சமகாலத்தில் எழுத்தாளர்கள், முகநூலில் மடல்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவற்றில் இலக்கியத்தரம் இருந்தால் மகிழ்ச்சியே.

இல்லையேல்,   ஏமாற்றம்தான்.

எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அன்று இரண்டு நாட்கள் நடத்திய கருத்தரங்கு எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

அங்கே நீண்ட இடைவெளிக்குப்பின்னர் பல இலக்கிய நண்பர்களை சந்தித்தேன்.  அவர்களில் ஒருவர் சு. இராஜநாயகன் மாஸ்டர்.

இவர்தான் 1975 ஆம் ஆண்டு எனது  முதலாவது கதைத் தொகுதி சுமையின் பங்காளிகள் வெளியானபோது யாழ். வீரசிங்கம் மண்டபத்தில்  அறிமுக அரங்கு நடந்தபோது அதற்கு தலைமை தாங்கியவர்.

இவர்தான் பிற்காலத்தில்  யாழ். முரசொலி, வீரகேசரி, தினக்குரல், யாழ். ஈழநாடு முதலானவற்றில் பணியாற்றிய ஊடகவியலாளர் ஆர். பாரதியின் தந்தையார்.

அந்தக்கருத்தரங்கில் கலந்துகொண்ட பலர் இன்று இல்லை.  அவர்கள் பற்றிய பசுமையான நினைவுகளுடன் எனது பயணம் தொடருகின்றது.

( தொடரும் )

No comments: