வியட்நாமின், சம்பா இந்து அரசு-2 - நோயல் நடேசன்

 .

பல வருடங்கள் முன்பாக கம்போடியாவிலுள்ள  அங்கோவாட் போயிருந்தபோது,  கமர் (Khmer) இராஜதானிக்கும்  வியட்நாம் பகுதியிலுள்ள சம்பா என்ற  இந்து அரசுக்கும்  தொடர்ச்சியான போர் நடந்தது என அங்கு குறிப்பு  எழுதியிருந்ததைப் பார்த்தேன். அக்கால  சம்பா அரசு தற்போது வியட்னாமின் மத்திய பகுதியே  என்று சொல்லப்பட்டது.  அக்காலத்தில் இந்துக்களாக இருந்த அந்த சம்பா மக்கள் இஸ்லாமியராக இப்பொழுது மாறிவிட்டார்கள் என்றார் எனது வழிகாட்டி .

அதன்பின் சில தடவை வியட்நாம் சென்றபோது எதோ காரணத்தால் அந்தப்பகுதி எங்கள் பிரயாண பிரதேசமாக வரவில்லை. இம்முறை போவதற்கு முன்பாக எனது நண்பன்-  தொல்பொருள்ஆய்வாளர்  ,   “ அந்தப்பகுதி மை சன் (My Son) என்றும் , ஆனால் அவர்கள்  அதை மீ சன் என்கிறார்கள். அதையும்  பார்த்துவிட்டு வா  “ என்றபோது எனது மனதில் பார்க்கவேண்டும் என்ற உணர்வு  கிணற்றாமையாக தொடர்ந்து வாழ்ந்தது.

எமக்கு மொழி தெரியாதபோது முகவர்கள் மூலம் ஒழுங்குபடுத்திய  பாதைகளிலே  பயணிப்போம். இம்முறை   கேட்டபோது பயண முகவர்  ஏற்கனவே  பணம் கொடுத்த பின்பு அதை மாற்றுவது கடினமானது என்ற போதும், எப்படியும் அதைச் செய்யவேண்டுமென உறுதி கொண்டேன்.

எங்களது வழிகாட்டியாக  மத்திய வியட்நாம் நகரான ஹு (Hoe) என்ற இடத்தில்  எமக்கு அறிமுகமான பெண்ணிடம்,   நாங்கள் மீ சன் போகவேண்டும்  “ என்றபோது,    “ அது நாங்கள் போகும் வழியில் இல்லை.  ஆனால்,  40 கிலோமீட்டர் மேற்கே உள்ள மலைப்பிரதேசம்தான் அது.அங்கு செல்ல  செலவு அதிகமாகும்    என்றபோது அதைத் தருவதாகப் பேசினோம் .

கடற்கரைகள் கடந்து அழகிய மலைப்பிரதேசங்களுடாக எமது வாகனம் சென்று, இறுதியில் பள்ளத்தாக்கான மீ சன் பிரதேசத்தை அடைந்தது. மீ சன் அக்காலத்துச் சம்பா இராச்சியத்தின் புனிதப் பிரதேசம்.  காசி அல்லது மக்கா போன்றது.


மலைக்குன்றுகள் நிறைந்த பிரதேசத்தில் பல உடைந்த கோவில்களும்  இடிந்த  கட்டிடங்களும்  இருந்தன . அமெரிக்கர்கள் விமானத்திலிருந்து குண்டு வீசி உடைந்த கட்டிடங்கள்.  அந்தக் குண்டுகள் ஏற்படுத்திய  பள்ளங்கள் தெரிந்தன . அங்குள்ள கட்டிட அமைப்பு,  இந்து  தெய்வங்களின் சிலைகள் எல்லாம்  ஒரு மகோன்னதமான கலைஞர்கள் தங்கள் கலைத் திறமைகளை வெளிக்காட்டிய இடம் என நினைக்கவைத்தது. அங்குள்ள மியூசியத்தில்  வரைபடங்கள் வைக்கட்டுள்ளன.  சிலைகள் நகரத்திலுள்ளன. அத்துடன் அப்சரா நடனம் மற்றும் சங்கீத கலை நிகழ்ச்சியைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. தற்பொழுது இந்திய அரசின் உதவியுடன் மீள் அகழ்வுகள் நடக்கின்றன.

வரலாற்று மாணவர்களாக  சிறிது திரும்பிப் பார்ப்போம்.  

வரலாறு

இங்கே குறிப்பிடும் சம்பா பிரதேசம் 4 -13 நூற்றாண்டு வரை மத்திய வியட்நாம். வியட்நாமின் வடபகுதி  சீனர்கள் வசமும், தென்பகுதி கமர் எனப்படும் கம்போடியர் வசமும் இருந்தது.

ஆரம்பத்திலிருந்த இந்துக் கோவில்கள் மரத்தாலானவை. அவை  பிற்காலத்தில் எரிந்தன. சில நூற்றாண்டுகள் பின்பாக சுட்ட செங்கட்டிகளாலான ஆலயங்கள் இங்கு அமையத் தொடங்கின.  தற்போது உள்ளவை 7  ஆம்  நூற்றாண்டிற்கு  பின்னானவையாகும்.

சம்பா ராஜ்ஜியம்,  சம்பாபுர எனச் சமஸ்கிருதத்தில் அழைக்கப்பட்டது.

பிற்காலத்தில் வடக்கிலிருந்து மகாயான பௌத்தம் வந்தபோதும் சைவம் எனப்படும் சிவ வழிபாடே மக்களிடையே முதன்மையாக ஆயிரம் வருடங்கள் இருந்தது . கடற்துறை முகமான பகுதியால் அரேபிய மற்றும் பாரசீக வணிகர்களின்  வியாபார வருகையால் இஸ்லாம் இங்கு பரவியது. தற்போதைய சம்பா மக்கள் பெரும்பலானவர்கள் இஸ்லாமியர்.

 இங்கும் தேவ  மொழியாக சமஸ்கிருதமும் உள்ளது.   அத்துடன் இந்த மலைப்பகுதியை மேரு மலையாக உருவகப்படுத்தி உள்ளார்கள். இங்கிருந்து ஓடும் பொன்   (Thu Bon River) ஆறும்  புனித கங்கையாக கருதப்படுகிறது. இது இறுதியில் தென்சீனக் கடலில் வீழ்கிறது. இங்கு மக்களிடையே  பாவிக்கப்பட்ட மொழி சம்பா மொழி,  தமிழ்,  மலையாளம்,  கமர் போன்று  வட்டெழுத்து தன்மையானது.( தென் பிரமி குடும்பம்).

இந்த இடம் பிரான்சிய படைவீரர்களாலும் பின்  தொல்பொருள் ஆய்வாளர்களால் அறியப்பட்டது.  ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.   அமெரிக்கர்களின் வருகைக்குப்பின்  வியட்கொங் கெரில்லாக்கள் இங்கு இருந்ததால் குண்டு வீசி பல கட்டிடங்கள் அழிக்கப்பட்டது. அமெரிக்கர்களின் B52 விமானங்களில் இருந்து விழுந்த குண்டுகளால் உண்டாகிய அழிவுகளின் சுவடுகள்   இன்னமும் தெரிகிறது.

இந்தப்  பிரதேசம் ஐக்கிய நாடுகளில் கலை கலாச்சார பிரிவால்(UNESCO) பாதுகாக்கப்படவேண்டிய  பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டு,  இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை  மியூசியத்தில் வைத்திருக்கிறார்கள்.  அத்துடன் சம்பா கலாச்சாரம்,பாடல்கள், நாட்டியம், இசைக்கருவிகள்  என்பவற்றுக்கு புத்துயிர்ப்பு கொடுக்கும் முயற்சி நடைபெறுகிறது. . 

சம்பா மக்கள் தற்பொழுது வியட்னாமில் வசிக்கும் ஐம்பத்தி நான்கு   சிறுபான்மை இனக்குழுக்களில்  ஒரு குழுவாக இருக்கிறார்கள். அவர்கள் இன்னமும் தங்களது பாரம்பரிய சடங்குகளை பின்பற்றுகிறார்கள்.  

சம்பா நாகரீகம் பல வழிகளில் 1300 வருடங்கள் மத்திய வியட்நாமில் இருந்ததற்கான பல தடயங்கள் இருந்தாலும்,  மை சன் மற்றும் பூ நகர்(Po Nagar)  ஆகிய இரண்டு இடங்களிலும் தற்போது செறிந்து உள்ளன . இந்த இரு பகுதிகளும் இரண்டு அரசுகளின் புனிதப் பிரதேசங்களாக இருந்தது.  மை சன் பகுதி சிவனது இடமாகவும் பூ நகர்  பகவதி அல்லது மகிஷாசவர்தினியின் கோவில்களாலானது. மை சன் பகுதி அரிக்கா (கமுகு) எனவும் பூ நகர்ப் பகுதியை தென்னை எனவும் அழைக்கிறார்கள்.   இந்த இரு பகுதியினரும்  பங்காளிகளாக  தொடர்ந்து திருமணக் கலப்புகளில் ஈடுபட்டனர்.

நான்காம் நூற்றாண்டில் இந்து மதம் இந்த மக்களிடையே உள்வாங்கப்படுகிறது..  சம்பாபுரத்தை ஆண்ட பத்திராவர்மன் (Bhadravarman 380-413) வணங்குவதற்காகத் தனது பெயரால் பத்திரீஜவரம் என்ற தனது பெயரால் சிவனுக்குக் கோவில் அமைப்பதிலிருந்து வரலாறு தொடங்குகிறது. இந்த இடம் ஏற்கனவே கூறியதுபோல் மலை மற்றும் புனித ஆறு ஓடுவதால் வணக்கத்துக்குரிய  பிரதேசமாக உருவகிக்கப்படுகிறது. இவை மரத்தலானவை என்பதால் எரிகிறது. ஏழாம்  நூற்றாண்டிலே சுட்ட செங்கல்லால் கோவில்கள் மீண்டும்  கட்டப்படுகிறது. இங்கும் செங்கற்களை  ஒன்றுடன் ஒன்று இணைப்பதற்குக் களிமண்ணுடன் இங்கு கிடைக்கும் மரப் பசையையும்  பயன்படுத்தினார்கள்.  இப்பிரதேசத்தில் இன்னமும்  பல தேவைகளுக்கு மரத்திலிருந்து கிடைக்கும் இந்தப் பசையையே மக்கள்  பாவிக்கிறார்கள்.

சமீபத்தில் மகாபலிபுரம் சென்று பார்த்தேன்.  கிட்டத்தட்ட அக்காலத்தில் அல்லது நூற்றாண்டுகள் பின்பாக கோவில்கள் இங்கு கட்டப்பட்டிருக்கலாம். மகாபலிபுர கடற்கரை கோவிலிலும் இப்படியான பசையே பாவித்தார்கள்.  கடற்கரைப் பிரதேசங்களில்  சிப்பி சுட்ட சுண்ணாம்பையும் மற்றைய இடங்களில் களிமண்ணையும் பாவிப்பார்கள். தற்காலத்தில் நாம் பாவிக்கும் சீமெந்தின் மூலப்பொருட்கள் இவையே.

மை சன்னிலும் சில  இடங்களில் சுண்ணாம்பும் பாவித்திருக்கிறார்கள்   தற்பொழுது நாம் பார்க்கும் கட்டிடங்களும் கோவில்களும் இப்படியாக  7 நூற்றாண்டுகளுக்குப் பின்பானவை. மை சன் வணக்கத்திற்கான பிரதேசமாக மட்டுமல்லாது அரசகுலத்தவரை புதைக்கும் இடமாகவும்  இருந்தது. கட்டிக்கலையைப் பார்த்தால் தென்னிந்திய அல்லது திராவிட கட்டிடக்கலையே கடலூடாக  கொண்டுவரப்பட்டது வலியுறுத்தமுடியும் .   

இரண்டாவது ஜெயா இந்திரவர்மனது காலத்தில் (875) இல் மகாயான புத்தம் உள்வாங்கப்படுகிறது. ஆரம்பத்தில் அரச மதமாக இந்துமதமும் பின்பு பௌத்தமும்  இருந்தது.

சம்பாபுர என அழைக்கப்பட்ட இந்த  நாட்டில் ஹோய் ஆன் (Hoe Ann)பகுதி கடல் துறைமுகமாகவும்,  உள்பிரதேசமாக  தலைநகரம்  சிங்கபுர என்ற பெயருடன் இருந்தது.  அதைவிடப் புனித பிரதேசம் மை சன் எனவும் அங்கு   பொன் ஆறு என்ற புனித ஆறு ஓடுகின்றது. இந்த  அமைப்பு ஆரம்ப இந்திய அரசுகளின் வடிவமைப்பிற்கு ஒத்ததாக   இருந்ததாக சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு அரசர்களும் தொடர்ச்சியாக புதிய கோவில்களைக் கட்டிய காலத்தை அமராவதிக் காலம் என்கிறார்கள்.  இறுதியில் 11  ஆம் நூற்றாண்டில் ஹரிவர்மன் என்ற அரசனின் காலத்தின் பின்பாக மை சன் நலிவடைகிறது.13 ஆம் நூற்றண்டின்பின்பு,  விஜயா நகரக்காலத்தில்  எதுவிதமான கட்டுமானமும்  நடைபெறவில்லை. கைவிடப்பட்ட  இந்தப் பிரதேசம் 1896 இல் பிரான்சில் படைவீரர்களால் கண்டு பிடிக்கப்பட்டு ஆய்வுக்குள்ளாகிறது.

அரச அமைப்பு

ஆரம்பத்தில் இருந்தே சம்பாபுர  ஒரு தனிராச்சியமற்று பல தனி   மண்டலங்களாகவே பிரிந்து சிற்றரசர்களால் ஆளப்பட்ட சமஷ்டியான அமைப்பாக இருந்தது. எல்லா மக்களும் சம்பா இன  மக்களல்ல.  பல இன மக்கள் ஓர் அரசின் கீழ் வாழ்ந்தார்கள். விவசாயம் , கடல் வாணிபம் இரண்டுமே முக்கியமாக இருந்தது. இவர்கள் காலத்தில் நூறு நாட்களில் விளையும் அதிசய நெல் இங்கு கொண்டு வரப்பட்டு விளைவிக்கப்பட்டது. சீனாவிலிருந்து பாத்திரங்கள்,  மட்கலங்கள் பீங்கான் செய்யும் கலையும் இங்கு வந்தது.

  அழிவு

ஐந்தாம் நூற்றாண்டில் வட வியட்னாமை ஆண்ட  சீனர்கள் படையெடுத்து ஏராளமான சிலைகளையும் 4800 கிலோ தங்கத்தையும் கொள்ளையடித்து சம்பா அரசை அழித்துச் சென்றார்கள். அதன் பின்னர்  ஜாவா அரசின் படையெடுப்பு  சம்பா அரசின்மீது  நடந்தது. இறுதியில் கமர் அரசுடன் நீடித்த யுத்தம்-   கிட்டத்தட்ட நூறாண்டுகால  போர்,  சம்பா அரசை வேரறுத்தது. பிற்காலத்தில் வியட்நாமியர்கள் இவர்களின்  பிரதேசத்தை கைப்பற்றினார்கள். சம்பா மக்கள் இந்தோ சீனா தீபகற்பமெங்கும் சிதறினார்கள்.      

சம்பா மக்களில் பெரும்பகுதியினர் தற்பொழுது கம்போடியாவில் இஸ்லாமியரகளாக வாழ்கிறார்கள். பொல் பொட்டின் காலத்தில் பலர் கொலை செய்யப்பட்டார்கள். சிறு பகுதியினர்  வியட்நாமில் இந்துக்களாக தற்பொழுது வாழ்கிறார்கள்.

மகோன்னதமாக அரசு நடத்திய சம்பா மக்கள்  , சிதறி கம்போடியா,  வியட்நாம்,  தாய்லாந்து என வாழ்கிறார்கள். இவர்களை   பழிவாங்கப்பட்ட(Persecuted race)  ஒரு இனமாகக்  கருதமுடியும்.    

ஒரு இந்திய அல்லது இந்து  மையப்படுத்தப்பட்ட அரசாக 1௦௦௦ கிலோ மீட்டர் நீளத்துடன் மலைகளுக்கும் தென் சீன கடலுக்கும் இடையே 12௦௦ வருடங்கள் தொடர்ந்து தன்னாட்சிப் சம்பா அரசு இருந்தது பெரிய விடயம்.   தற்போதைய அமெரிக்காவின் வரலாறு 2௦௦ வருடங்களே என்பதிலிருந்து  எனது முன்னைய கூற்றை நீங்கள் புரிந்து கொள்ளமுடியும்.

மேலும் அறிய  K A Nilakanta Sastri  -South Indian influences in the Far Ear

 G codes -The indianised States of Southeast Asia.


No comments: