உலகச் செய்திகள்

பேரணி ஒன்றில் இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு; உயிராபத்து இல்லை 

இந்திய, பிரான்ஸ் விமானப்படை ஜோத்பூரில் கூட்டு போர்ப் பயிற்சி

வட கொரியா கண்டம் பாயும் ஏவுகணை வீச்சு

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம்: புலம்பெயர்தல் தொடர்பில் பேச்சு

வட, தென் கொரியாக்கள் பரஸ்பரம் ஏவுகணை வீச்சு


பேரணி ஒன்றில் இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு; உயிராபத்து இல்லை 

துப்பாக்கிச் சூட்டை அடுத்து இம்ரான் கான் மக்களை நோக்கி கையசைப்பதையும், காயமடைந்த அவரது கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஒருவரையும் படத்தில் காணலாம்...

- துப்பாக்கிதாரி கைது; இதுவரை எவரும் பொறுப்பு கூறவில்லை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

பாகிஸ்தானின் குஜ்ரன்வாலாவில் இன்று (03) இடம்பெற்ற பேரணியொன்றில் துப்பாக்கிதாரி ஒருவரால் இவ்வாறு சரமாரியாக துப்பாக்கிச் சூடு  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

இதன் போது இம்ரான் கானின் காலில் துப்பாக்கி சூடு ஏற்பட்டதில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் அவருக்கு உயிர் ஆபத்து எதுவும் இல்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவத்தில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலர் உள்ளிட்ட மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

சம்பவம் தொடர்பில் துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரியின் அடையாளம் உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை என்பதோடு, இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்நாட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்ட காட்சிகளுக்கமைய, இம்ரான் கான் காயத்தின் மீது துணியால் கட்டப்பட்ட காலுடன் அவரது பாதுகாப்புக் குழுவின் உதவியுடன் கொள்கலன் ஒன்றில் இருந்து வாகனம் ஒன்றிற்குள் செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, உடனடியாக விசாரணையை ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இம்ரான் கான் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து நீண்ட பேரணி ஒன்றை கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி லாகூரில் இருந்து ஆரம்பித்தார், நவம்பர் 11ஆம் திகதி இந்த பேரணி இஸ்லாமாபாத்தை அமையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது அரசாங்கம் கடந்த  ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, முன்கூட்டிய தேர்தலை நடத்துமாறு கோரி  இம்ரான் கான் நாடு முழுவதும் பேரணிகளை நடத்தி வருகிறார்.     நன்றி தினகரன் 


இந்திய, பிரான்ஸ் விமானப்படை ஜோத்பூரில் கூட்டு போர்ப் பயிற்சி

இந்தியாவினதும் பிரான்ஸினதும் விமானப் படைகள் கருடா கூட்டு விமான போர்ப் பயிற்சியை ஜோத்பூரில் ஆரம்பித்துள்ளன. இப்பயிற்சி எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறும் என்று இந்திய விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இப்பயிற்சியில் பிரான்ஸ் நான்கு ரபெல் போர் விமானங்களையும் ஏ–330 பல்வகைப் பணிகளை மேற்கொள்ளக்கூடிய போக்குவரத்து விமானமொன்றையும் 220 வீரர்களுடன் ஈடுபடுத்தியுள்ளது. இந்தியா ரபெல் போர் விமானம், சுகோய்–30 எம்.கே.ஐ, தேஜாஸ் மற்றும் ஜகுவார் ஜெட் விமானங்கள், எம்.ஐ. 17 மற்றும் புதிய உள்நாட்டு தயாரிப்பான இலகுரக யுத்த ஹெலிகொப்டர்களுடன் இப்பயிற்சியில் பங்குபற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இக்கூட்டுப் பயிற்சியின் ஊடாக இந்திய விமானப்படையும் பிரான்ஸின் விமான மற்றும் விண்வெளி படையினரும் தங்கள் செயற்பாட்டு திறன்களையும் இயங்குதளத்தையும் மேம்படுத்திக் கொள்வர். இந்திய விமானப்படையின் எரிபொருள் நிரப்பும் விமானமும் முன்னெச்சரிக்கை விடுக்கும் விமானங்களும், கட்டுப்பாடு விமானங்களும் கூட இப்பயிற்சியில் இணைந்து கொண்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.   நன்றி தினகரன் 
வட கொரியா கண்டம் பாயும் ஏவுகணை வீச்சு

பதற்றம் அதிகரிப்பு

வட கொரியா நேற்று (3) கண்டம் விட்டு கண்டம் பாயும் பலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை வீசிய நிலையில் அது பாதி பயணத்தில் தோல்வி அடைந்திருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் ஏழாவது முறையாகவே வட கொரியா கண்டம் பாயும் ஏவுகணையை வீசி இருப்பதோடு அந்த நாடு அணு ஆயுத சோதனை நடத்தும் என்று எதிர்பார்க்கும் நிலையிலேயே இந்த ஏவுகணை வீச்சு இடம்பெற்றுள்ளது.

அதேபோன்று வட மற்றும் தென் கொரியாக்கள் பரஸ்பரம் ஏவுகணை வீசி ஒரு தினத்திலேயே இது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளுர் நேரப்படி காலை 7.40க்கு நீண்ட தூர ஏவுகணை ஒன்றை வட கொரியா ஏவியதாக தென் கொரிய கூட்டுப் படை தளபதி குறிப்பிட்டுள்ளார். இந்த ஏவுகணை 760 கிலோமீற்றர் தூரம் பறந்து சுமார் 1,902 கிலோமீற்றர் உயரத்தை அடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

எனினும் இந்த ஏவுகணை வீச்சு தோல்வியில் முடிந்திருப்பதாக தென் கொரிய இராணுவம் கூறியது. இதன்போது வட கொரியா மேலும் இரு குறுகிய தூர ஏவுகணைகளையும் வீசியுள்ளது.

இந்த ஏவுகணை வீச்சுகள் காரணமாக ஜப்பான் தனது வடக்கு பிராந்தியத்தில் உள்ள மக்களை வீடுகளில் இருக்கும்படி அறிவுறுத்தியது.    நன்றி தினகரன் 
இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம்: புலம்பெயர்தல் தொடர்பில் பேச்சு

இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இராஜதந்திர உறவின் 60ஆவது வருட நிறைவைக் கொண்டாடும் சூழலில் ஒழுங்கு முறையானதும் வழமையானதுமான புலம்பெயர்தலைப் பாதுகாப்பாக மேம்படுத்துவதுடன் தொடர்பான விடயங்கள் குறித்து இரு தரப்பும் பிரஸ்ஸல்ஸில் கூடி பேச்சுவார்த்தையொன்றை நடாத்தியுள்ளன.

இப்பேச்சுவார்த்தையின் போது ஒழுங்கு முறையற்ற புலம்பெயர்தலைத் தவிர்த்தல், ஒழுங்குமுறையானதும் வழமையானதுமதான புலம்பெயர்தலைப் பாதுகாப்பாக மேம்படுத்துதல், அது தொடர்பிலான விவகாரங்கள் என்பன குறித்து விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

அத்தோடு இரு தரப்பினரதும் நன்மைகள் கருதி திறமைமிகு தொழில்வாண்மையாளர்கள், மாணவர்கள் மற்றும் திறன் விருத்தி பணியாளர்களின் புலம்பெயர்வை எளிதாக்குவதற்கு சாத்தியமான விடயங்களில் ஒத்துழைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன.   நன்றி தினகரன் 

வட, தென் கொரியாக்கள் பரஸ்பரம் ஏவுகணை வீச்சு

வட மற்றும் தென் கொரிய நாடுகள் மற்ற நாட்டின் கடற்பகுதியில் விழும் வகையில் முதல் முறையாக பரஸ்பர ஏவுகணைகளை வீசியுள்ளன.

வட கொரியா நேற்று வீசிய ஏவுகணை ஒன்று தென் கொரிய நகரான சொக்சோவுக்கு 60 கிலோமீற்றருக்கு குறைவான தூரத்தில் விழுந்துள்ளது. மூன்று மணி நேரம் கழித்து இதற்கு பதிலடியாக தென் கொரியாவும் ஏவுகணை வீசியுள்ளது.

தமது ஆட்புலத்தை அத்துமீறியதை ஏற்க முடியாதது என்று தென் கொரிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது. வட கொரியாவுக்கு பதிலடியாக தெற்கு வானில் இருந்து தரையை தாக்கும் மூன்று ஏவுகணைகளை வீசியுள்ளது. அவை வடக்கு எல்லைக் கோட்டை கடந்து ஒத்த தூரத்தில் விழுந்தன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென் கொரியா மற்றும் அமெரிக்கா இடையிலான கூட்டு இராணுவ ஒத்திகை தொடர்ந்தால் அமெரிக்கா மற்றும் தென் கொரியா வரலாற்றில் மிகப் பயங்கரமான விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்று வட கொரியா கடந்த செவ்வாய்க்கிழமை எச்சரித்திருந்தது.

இந்நிலையில் வட கொரியா நேற்று கிழக்கு மற்றும் மேற்குப் பக்கமாக குறைந்தது 10 ஏவுகணைகளை வீசியது என்று தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்போது தென் கொரியா குறைந்தது ஒரு ஏவுகணையை வீசியதோடு அது எல்லையில் இருந்து தெற்காக 26 கிலோமீற்றர் தூரத்தில் விழுந்தது.

இதனைத் தொடர்ந்து தென் கொரியா, வட கொரியாவின் கிழக்குக் கடலுக்கு அப்பால் போர் விமானங்களில் இருந்து மூன்று ஏவுகணைகளை வீசியது.

இந்த சம்பவம் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. வட கொரியா ஏற்கனவே இந்த ஆண்டில் 50க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசியுள்ளது. இதில் ஒரு பலிஸ்டிக் ஏவுகணை ஜப்பான் வானுக்கு மேலால் பறந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 
No comments: