Sunday, October 2, 2022 - 2:22pm
- கோலிவுட்டில் அறிமுகமாகும் இலங்கையர் ஷாம் பெனாண்டோ
பிரபல தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமான அல்லிராஜா சுபாஸ்கரனின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் மிக பிரமாண்டமான காவியத் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’ ஆகும்.
இது 1,000 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற தமிழ் வரலாற்று புனைக்கதையை திரையில் காட்டும் ஒரு முயற்சியாகும். இது செப்டெம்பர் 30 ஆம் திகதி முதல் இலங்கையில் திரையிடப்பட்டுள்ளது.
கல்கி கிருஷ்ணமூர்த்தியின் 1955 ஆம் ஆண்டு நாவலைத் தழுவி அதே தலைப்புடன் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை, புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். திரைப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, பிரபு, ஆர். சரத்குமார், இலங்கையைச் சேர்ந்த ஷாம் பெனாண்டோ உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒஸ்கார் விருது நாயகன் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
நீண்டகாலமாக இந்த கதையை திரைப்படமாக்க வேண்டுமென்ற இயக்குனர் மணிரத்னத்தின் கனவை, 2019 ஆம் ஆண்டில் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் நனவாக்கியுள்ளது.
மணிரத்னம் தனது 'கனவு திட்டம்' என பெயரிட்டுள்ள இந்த திரைப்படம், 2019 ஆம் ஆண்டில் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் நிதியுதவியுடன் வடிவம் பெறத் தொடங்கியது. பத்திரிகைகள், இரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் '2022 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் புளொக்பஸ்டர்' திரைப்படம் என பொன்னியின் செல்வன் திரைப்படம் பரவலாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொன்னியின் செல்வன் திரைப்படமானது, இலங்கை இரசிகர்களுக்கு குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்குவதற்கு காரணம், இது சோழப் பேரரசரான முதலாம் ராஜராஜ சோழன் (கி.பி. 947 - கி.பி 1014) என பின்னாளில் புகழ்பெற்ற அருள்மொழிவர்மனின் ஆரம்ப கால கதையைச் சொல்கிறது. இலங்கை கி.பி. 993 முதல் 1070 வரை சோழப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்ததாக அறியப்படுவதனால், இக்கதையை தழுவிய நாவலின் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, தனது நாவலுக்கான தகவல்களை சேகரிக்க ஒரு சில தடவைகள் இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றும், இந்நாவல் அனைத்து தலைமுறையினரிடையேயும் வரவேற்பையும், புகழையும் கொண்டுள்ளதோடு, இரசிகர் பட்டாளத்தையும் கொண்டுள்ளது. இந்நாவல் தொடர்ச்சியாக பாராட்டப்படுவதோடு, அதன் இறுக்கமான கதைக்களம், தெளிவான கதை மற்றும் சோழப் பேரரசின் அதிகாரப் போராட்டம், சூழ்ச்சிகள் சித்தரிக்கப்பட்ட விதம் ஆகியவற்றிற்காக பல்வேறு விமர்சனங்கள் மற்றும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இந்நாவலானது, கடந்த 70 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலும்/ தென்னிந்தியாவிலும் மறுக்கமுடியாத சிறந்த விற்பனைக்குள்ளான நாவல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
தயாரிப்பாளர் அல்லிராஜா சுபாஸ்கரன், 2.0, RRR, டான், சீதா ராமம், புஷ்பா, தர்பார், கத்தி உள்ளிட்ட பல தமிழ் மொழி பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப் படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவுனரான பிரிட்டனில் வசிக்கும் இலங்கை தொழிலதிபர் ஆவார்.
சுபாஸ்கரன், ஸ்ரீ லங்கா பிரீமியர் லீக் (SLPL) தொடரின் 'ஜப்னா கிங்ஸ்' அணியின் உரிமையாளராகவும் உள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டில் 'வருடத்தின் சிறந்த சர்வதேச தொழில்முனைவோர்' விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பாராட்டுக்களையும் அவர் தனது தொழில் முனைவு முயற்சிகளுக்காக பெற்றுள்ளார்.
ஷாம் பெனாண்டோ, பொன்னியின் செல்வன் படத்தில் 5ஆம் மிஹிந்து அரசரின் கதாபாத்திரத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமாகின்றார். இலங்கை தொலைக்காட்சி, திரைப்படம், நாடகம் மற்றும் குரல் நடிகராக ஷாம் விளங்குகின்றார். இவர் 'ஒப நெத்துவ ஒப எக்க', 'பிரேமய நம்', 'தெவன விஹங்குன்' போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலம் பெற்றுள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படம், லைகா புரொடக்ஷன்ஸ் லங்கா நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்டு, EAP நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் திரைப்படமாகும். இது அனைத்து Savoy/EAP திரையரங்குகளிலும், நாடளாவிய ரீதியில் 75 இற்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்படுகின்றது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment