சக்தி லீலை - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 1970 ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அம்மனின் அருளை விளக்கும்


விதத்தில் படங்கள் வெளிவரத் தொடங்கின.ஆதி பராசக்தி,நம்ம வீட்டு தெய்வம்,அன்னை அபிராமி,அம்மன் அருள்,என்று வந்த படங்களின் வரிசையில் 1972ம் ஆண்டு வெளி வந்த படம்தான் சக்தி லீலை.

சமூகப் படம்,புராணப் படம்,பொழுதுபோக்கு படம் என்று பல தரப்பட்ட படங்களை டைரக்ட் செய்வதில் திறமை பெற்றவர் டி ஆர் ராமண்ணா.ஏற்கனவே காத்தவராயன்,ஸ்ரீவள்ளி,அருணகிரிநாதர் ஆகிய பக்திப் படங்களை இயக்கிய இவர் வண்ணப் படமான இதனை இயக்கியிருந்தார்.

புராணக் கதையை அடிப்படையாக கொண்ட படம் என்பதால்

ஏராளமான கதாபாத்திரங்கள் அதனால்
ஏராளமான நடிகர்கள் படத்தில் இடம் பெற்றார்கள்.குறிப்பாக சக்தியின் மகிமையை சொல்லும் படம் என்பதால் அன்றிருந்த முன்னணி நடிகைகளான ஜெயலலிதா,சரோஜாதேவி,கே ஆர் விஜயா,மஞ்சுளா,உஷா நந்தினி ஆகியோர் படத்தில் நடித்தார்கள்.இவர்கள் அனைவரையும் ஒரே படத்தில் பார்க்கும் வாய்ப்பும் ரசிகர்களுக்கு கிடைத்தது.எம் ஜீ ஆர்,சிவாஜி இருவருடனும் ஜோடி சேர்ந்து நடித்த இவர்கள் இணைந்து நடித்த ஒரே படம் இதுவாகத் தான் இருக்க்க வேண்டும். ஆனால் எம் ஜீ ஆரும் சிவாஜியும் படத்தில் இடம் பெறவில்லை!

இவர்களுடன் ஜெமினி கணேசன்,சிவகுமார்,ஏ வி எம் ராஜன்,எஸ் ஏ அசோகன்,சுந்தரராஜன்,எஸ் வி சகஸ்ரநாமம்,செந்தாமரை,சண்முகசுந்தரம்,கே விஜயன்,கே கண்ணன் ஆகியோரும் படத்தில் நடித்திருந்தனர்.இவர்களுக்கு முத்தாய்ப்பாக கே பி சுந்தராம்பாளும் படத்தில் தோன்றியிருந்தார்.

பிருங்கி முனிவரின் அலட்சியத்தினால் ஆவேசப்படும் சக்தி அவரை அழித்து விடுகிறாள்.அதன் காரணமாக பூ உலகில் கன்னியாகுமரியில் கன்னிதேவியாக அவதரித்து சிவனை அடைய தவம் இருக்கிறாள்.பிருங்கி முனிவரோ வாணாசுரன் என்ற பெயரில் மறு பிறவி எடுத்து கடும் தவம் இருந்து பிரம்மன் மூலம் சகல வரங்களையும் பெறுகிறான்.மும் மூர்த்திகள்,நவகிரகங்கள்,இந்திரன்,எமன் என்று எல்லோரையும் அடக்கும் வரம் பெரும் அவன் தனக்கு எந்த விதத்திலும் சாவு வரக் கூடாதென வரம் பெறுகிறான்.ஆனால் கன்னிப் பெண்ணால் மரணம் வரக் கூடாது என்பதை மட்டும் கேட்கத் தவறுகிறான்.அந்த பொயிண்டின் அடிப்படையில் கன்னிப் பெண்ணாகத் தவம் இருக்கும் சக்தி அவனை வதம் செய்து பூ உலகை ரட்சிக்கின்றாள்.

இப்படி அமைந்த படத்தின் கதையில் மேலும் சில சக்தியின்

மகிமையை சொல்லும் கதைகளும் இடம் பெற்றிருந்தன.படத்தின் கதை வசனத்தை அனுபவமிக்க வசனகர்த்தாவாக துறையூர் மூர்த்தி எழுதி இருந்தார்.அவரின் அனுபவம் பல இடங்களில் வசனங்கள் மூலம் பளிச்சிட்டன.ஆண்டவனுக்கு பதில் சகல வரங்களையும் பெற்ற தன்னை வணங்கினால் என்ன என்ற வாணாசுரனின் கேள்விக்கு நீ உலகில் எதை படைத்தாய் உன்னை வணங்க என்று பக்தையாக வரும் கே பி சுந்தராம்பாள் கேட்பது நல்ல லாஜிக்!

படத்தில் சிவனாக ஜெமினியும்,நாரதராக சிவகுமாரும்,கோவில்

பூசாரியாக ஏ வி எம் ராஜனும் நடித்தனர்.பிருங்கி முனிவராக வரும் சண்முகசுந்தரம் வேடத்துக்கு பொருந்தினார்.ஆனாலும் வாணாசுரனாக நடித்த அசோகன் அந்த பாத்திரமாகவே மாறி விட்டார் எனலாம்.வசனம் பேசும் பாங்கு,உடல் அசைவு,முகபாவம் என்று வாணாசுரனாகவே மாறிவிட்டார் அவர்.உருக்கமாக நடிக்கும் வேடம் ஏ வி ராஜனுக்கு,பழகிய வேடம் சிரமமின்றி செய்திருந்தார்.கே ஆர் விஜயா ஓ கே.பாடுவதுடன் அசோகனுடன் வாதம் செய்யும் வேலை கே பி சுந்தராம்பாளுக்கு.நிறைவாக செய்திருந்தார்.


படத்துக்கு இசையமைத்தவர் மெல்லிசை மன்னர் டி கே ராமமூர்த்தி.தனது ஐம்பதாவது வயதில் இப் படத்துக்கு இசையமைத்த ராமமூர்த்திக்கு இந்த ஆண்டு நூற்றாண்டாகும்!காலை பொழுதே வருக வருக,உறங்கக் கூடாது கண்ணே மாயன்கள் கூடாது,எங்கும் தெய்வம் ஆகிய பாடல்கள் ரசிகர்களை சென்று அடைந்தன.படத்தின் ஒளிப்பதிவை ராமண்ணாவின் கண்ணான எம் ஏ ரஹ்மான் கையாண்டார்.

படம் சக்தியின் மகிமையை கூறும் விதத்தில் அமைந்த போதும் அதற்கு தேர்வு செய்த கதைகள் ரசிகர்களை குறிப்பாக பெண் ரசிகைகளை பெரிதும் கவரவில்லை.இதனால் சக்தி லீலை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.ஆனாலும் நவராத்திரி காலத்தில் சக்தியின் மகிமையை நினைவு கூற ஒரு படம் எனலாம்!

No comments: