அஞ்சலியிலும் ஆணவம் காண்பிக்கும் அரசியல்வாதிகள் ! அவதானி

 “ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும்


தாழ்வு  “ என்று எமது முன்னோர்கள் மிகவும் தீர்க்கதரிசனமாகத்தான் சொன்னார்கள்.

ஆனால், இந்த தமிழ் மூதுரையை தமிழ் சமூகம்தான் மனதில் நிலைநிறுத்தி, அதற்கேற்ப வாழத்தலைப்படவில்லை என்பதை மீண்டும் யாழ்ப்பாணம் நல்லூரில் நிரூபித்திருக்கிறார்கள் சில அரசியல்வாதிகள்.

குறிப்பிட்ட  சில இந்த அரசியல்வாதிகளுக்கு தியாக தீபம் திலீபன் தற்கொடை செய்துகொண்டபோது 15 வயதிற்கும் குறைவுதான்.  தமது தொண்டர்கள் அடாவடித்தனங்களில் ஈடுபட்டபோது கைகட்டி நின்று வேடிக்கை பார்த்த இன்றைய தலைவருக்கும் அன்று தீலிபன் மறைந்தபோது 15 வயதிற்கும் குறைவுதான்.

1987 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 15 ஆம் திகதி திலீபன் தனது


உண்ணா நோன்பை ஆரம்பித்து, 26 ஆம் திகதி உயிர் நீத்தார். இடைப்பட்ட  நாட்களில் நீரும் அருந்தாமல் அவர் இலங்கை – இந்திய அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக காந்தீய வழியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டார்.

காலையில் ஆரம்பித்து மாலையில் முடிக்கும் உண்ணாவிரதத்தை திலீபன் மேற்கொள்ளவில்லை.  விடுதலைப்புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் வடக்கு மாகாணம் இருந்த காலத்தில் திலீபன் நினைவேந்தல் அவர்களின் ஏற்பாட்டில் நடந்தது. 

2009 ஆம் ஆண்டு மேமாதம் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர்,  தமிழர் தரப்பு அரசியலில் காட்சிகளும் மாறிவிட்டன.  விடுதலைப் புலிகளின் தலைவரால் ஜனநாயக அரசியல் தேவைக்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும்  முரண்பாடுகளுடனும் , சிலரது வெளியேற்றங்களுடனும், தொடர்ச்சியான அறிக்கைச்  சமர்களோடும் நூலறுந்த பட்டமாக அலைந்துழன்றுகொண்டிருக்கிறது.

பாராளுமன்றம் ,  மாகாண சபை, மற்றும் உள்ளுராட்சி மன்றங்களில்  கிடைக்கும் ஆசனங்களுக்காக தேர்தலை மாத்திரம் நோக்கமாகக்  கொண்ட கட்சி அரசியல் முனைப்பினால்தான்  தமிழர் தரப்பு அரசியல் சீரழிந்துகொண்டிருக்கிறது.

பொது எதிரி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது, இவர்கள் யார் துரோகி..? யார் இனப்பற்றாளர்..? என்று பட்டி மன்றம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு கட்சிக்குள் ஏற்பட்ட பூசலும் முரண்பாடும்  யாழ். மாநகர சபையிலிருந்து, திலீபன் நினைவேந்தல் வரையில் தொடருகின்றது.

இதன் உச்சக்காட்சியை அண்மையில் நல்லூரில் தியாகி  திலீபன் 35 வருடங்களுக்கு முன்னர் உயிர் நீத்த இடத்திலேயே காணமுடிந்தது.

ஈழத்தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்களில் மட்டுமன்றி, தென்னிலங்கையிலும் திலீபன் நினைவேந்தல் நடந்திருப்பது சமகால செய்தி.  பேரினவாத அரசுகள்தான் இதுபோன்ற தமிழருக்கான நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னர் சட்டத்தின் துணைகொண்டு அடக்க முற்பட்டன.

கோத்தபாய ராஜபக்‌ஷவின் பதவி விலகலுக்குப் பின்னர், இந்தக்கெடுபிடிகள் குறைந்திருந்தன. 

அவர் பதவியிலிருந்தபோதே காலிமுகத்திடல் கோத்தா கோ கம போராட்டத்தில் ,  யாழ். பொது நூலக எரிப்பு, முள்ளிவாய்க்கால் – கறுப்பு ஜூலை என்பன நினைவு கூறப்பட்டன.

இலங்கைத்   தமிழர் வாழ்வில் நிகழ்ந்த  மூன்று துன்பியல் நிகழ்வுகளையும்   மூவின மக்களும் ஒற்றுமையாக இணைந்து தென்னிலங்கையில் நினைவுபடுத்தினர்.

இந்தப்பின்னணிகளிலிருந்தும் நல்லூரில் நடந்திருக்கும் அநாகரீக சம்பவங்களை நாம் பார்க்கவேண்டும்.

அரசியலில் ஆணவம் மிஞ்சிவிட்டால், கோவணமும் மிஞ்சாது. 

நினைவுகூரல்களுக்குள்  கட்சி அரசியல் பிரவேசித்தால்  அது சீரழிவின் தொடக்கப்புள்ளியாகவே அமையும்.  அத்தகைய புள்ளியே நல்லூரில் தென்பட்டுள்ளது.  இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.  நினைவேந்தல்களை நடத்துவதற்காக பலரும் அங்கம் வகிக்கும் பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியும் நடந்திருக்கிறது.

ஈழத்தமிழர்களைப்பொறுத்தமட்டில்  அவர்கள் மீதான பெரும்பான்மை இனத்தின் அடக்குமுறைகள் பல நினைவுகூரல் தினங்களை வரலாற்றில் பதிவு செய்துள்ளன.

1972 இல் உருவான புதிய அரசியல் அமைப்பின் பின்னர் தோன்றிய தேசிய இனப்பிரச்சினையின் பெறுபேறுகள்தான்  குறிப்பிட்ட நினைவு கூறல்கள்.

தியாகி திலீபன் நினைவேந்தல் தினத்திற்கு முன்பும் பின்பும் பல சம்பவங்கள்  தமிழ் பிரதேசங்களில் நிகழ்ந்துள்ளன.

நவாலி புனித பேருவானவர் தேவாலயத்தின் மீதான விமானத்தாக்குதல்  1995 ஜூலையிலும் வடமராட்சி நாகர்கோவில் மகாவித்தியாலயம்  மீதான குண்டுத்தாக்குதல்  1995 செப்டெம்பரிலும்  1996 செப்டம்பரில்  கைதடி இராணுவ காவலரணில் தடுத்துவைக்கப்பட்டு,  செம்மணியில் மாணவி செல்வி கிருஷாந்தி குமாரசாமி அவரது தாயார் மற்றும் தம்பி அயலவர் உட்பட  நால்வர் சடலமாக மீட்கப்பட்ட  சம்பவமும் நடந்தன.

இவ்வாறு பல கொடுமைகளை ஈழத்தமிழர் வரலாற்றின் ஏடுகளில் நாம் பார்க்க முடியும்.  இச்சம்பவங்கள் நடந்த நாட்கள் ஒவ்வொரு வருடமும் வரும்போது,  கொல்லப்பட்டவர்களின் உறவுகள், நினைவேந்தல்களை அனுஷ்டிக்கின்றனர்.

ஆனால், எவராலும் கொல்லப்படாமல் தானே தனது உயிரை தற்கொடை மூலம் போக்கிக்கொண்ட ஒருவரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஏற்றப்பட்ட தியாக தீபச்சுடர்விளக்கையும் தட்டி விழுத்துமளவுக்கு ஆணவம் உச்சந்தலைக்கு ஏறியிருக்கிறதென்றால்,  இந்த கட்சி அரசியல் ஆணவம் எதிர்காலத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்..?

இரண்டு வருடங்களுக்கு முன்னர் அதாவது 2020 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் திலீபன் நினைவேந்தலுக்கு தடைவிதித்திருந்ததை அறிவோம்.

திலீபன்,  தடைசெய்யப்பட்ட  விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் என்ற பிரதான காரணத்தை முன்வைத்தே அன்று யாழ். பொலிஸார் நீதிமன்றிடம் தடை உத்தரவுக்கு அனுமதி கோரியிருந்தனர்.

இந்த சமீபத்திய வரலாறு தெரிந்தவர்கள்தான் நல்லூரில் இம்முறை எந்தத்தடையும் இல்லாத காலப்பகுதியில்  வாய்த்தர்க்கத்திலும்  கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

பிரபாகரன் இருந்திருந்தால், இவ்வாறெல்லாம் நடக்குமா..? என்ற குரல்களும் எழுந்திருக்கின்றன !

அதற்காக பிரபாகரன் உயிர்த்தெழுந்து வரமுடியுமா..?

அவர் அவ்வாறு வரமாட்டார் என்பதனால்தானே   அவர் அன்று உருவாக்கிய தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் முரண்பாடுகளின் கூடாரமாகியிருக்கிறது.

நினைவேந்தல்களிலும் உரிமைகோரும் படலங்கள் தோன்றியிருக்கின்றன.

இலங்கை அரசியல் வரலாற்றிலிருந்து  எமது தமிழ் சமூகம் கற்றிருக்கும் பாடங்கள் புத்திக்கொள்முதலாக அமையவேண்டும்.

ஆனால்,  தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அது ஜனநாயகம் பேசிய  அரசியலாயிருந்தால் என்ன ஆயுதங்கள் பேசிய அரசியலாயிருந்தாலென்ன அனைத்திலுமே ஆணவம்தான் மேலோங்கியிருந்திருக்கிறது.

திலீபனின் நினைவேந்தலில் வார்த்தைகளையும் கைகளையும் ஆயுதமாக பாவித்தவர்கள்,  அடுத்து என்ன செய்யப்போகிறார்கள்..?  என்பதை சமூக  ஆர்வலர்கள் மாத்திரமல்ல பொது எதிரிகளும் கூர்ந்து அவதானித்துக்கொண்டுதானிருக்கிறார்கள்.

---0---

 

 

 

No comments: