இன்று இலங்கையின் பெருமைமிகு படைப்பாளியாக இருக்கும்
பிரசன்ன விதானகே அவர்கள் இரண்டு விஷயங்களுக்காக இந்த வாரம் பேசு பொருளாக இருந்தார். ஒன்று, பொன்னியின் செல்வன் படத்தில் இலங்கை சம்பந்தப்பட்ட காட்சி நேர்த்தி, வசனப் பயிற்சிக்காக மணிரத்னம் குழுவினருக்கு அவர் கொடுத்த பங்களிப்பு.
இன்னொன்று தான் அதி விசேஷமானது.
செப்டெம்பர் இறுதி வாரத்தில் (செப் 26) பிரிஸ்பேனில் நிகழ்ந்த Asia Pacific Screen Awards (APSA) 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த படைப்பாளியாக, Cultural Diversity Award ஐத் தனது Gaadi வழியாகப் பெற்றுக் கொண்டார். இந்த விருதைப் பெறும் முதல் இலங்கையர் என்ற கெளரவம் அவருக்குக் கிட்டிருயிருக்கிறது.
போர் மட்டுமல்ல சாதியமைப்பின் முதற் பலிகடாவும் பெண்கள் தான். அப்பேர்ப்பட்டதொரு வலிமிகு யதார்த்தத்தை இலங்கையின் வரலாற்று இழையொன்றோடு தொட்டுப் பயணிக்கின்றது Gaadi .
இலங்கையில் மட்டுமல்ல, இந்தியாவிலும் சாதிய ஒடுக்குமுறையில் பலிகடாவாக்கப்பட்ட சமூகத்துப் பெண்கள் மார்பகத்தை மறைக்க மேலாடை அணியத் தடை விதிக்கப்பட்ட சூழல் நிலவியிருந்தது. கேரளாவில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்குள் இந்தப் பாங்கில் இருந்த சமூகத்தவர் நிகழ்த்திய “தோள் சீலைப் போராட்டம்” 37 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் அவர்களுக்கு ஒரு விடிவைத் தந்தது.
அதுபோலவே Gaadi யின் களம், இவ்விதம் போராட்டமற்ற
அபலைகளின் வாழ்வின் ஒரு பக்கத்தை “திக்கிரி” வழியே காட்டுகின்றது.
ஒரு ஆடை மறைப்பை வைத்து சாதிய ஏற்றத்தாழ்வைக் காட்டும் போலித்தனத்தை சம்பவ வழி அது சொல்லி வரலாற்றின் இருண்ட பக்கத்தைக் காட்டுகின்றது.
திக்கிரி என்ற அந்த இளம் பெண் தன்னுடைய சுற்றத்துப் பெண்களோடு துள்ளிக் குதித்துப் பாயும் அந்த மகிழ் தருணத்தில் இருந்து மேட்டுக்குடியான அவள், தாழ்த்தப்பட்டதாக ஒதுக்கி வைக்கப்படும் ரொடி என்ற சாதி அமைப்பில் முத்திரை குத்தப்படும் அவல நாட்கள் ஈறாக அவளோடு நாமும் அல்லது அவளாக நாமும் மாறுகின்றோம். அதுதான் இந்தப் படம் எவ்வளவு தூரம் யதார்த்தம் நிரம்பியது என்பதன் அளவுகோல்.
இந்தப் படத்தில் குறித்த சாதியினரின் அவலப் பயணத்தைக் காட்டும் அதே வேளை தென்னிந்திய மன்னன் ஶ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தங்களை ஆள்வதா என்ற சிங்கள மக்களின் விசனத்தையும் படம் பிடித்துக் காட்டுகின்றது. அதுவே மாற்றான் ஆங்கிலேயன் காலூன்ற வழி விடுவதையும் சொல்லி விடுகின்றது.
சாதிப் போலித்தனத்தால் மேட்டுக்குடி மக்களும் பின்னால் சமப்படும் காட்சி வழியே இயக்குநரின் நேர்த்தியான சமூகப் பிரக்ஞை வெளிப்படுகின்றது.
“கலைப்படம்" என்பதனுள் அடங்கும் சலிப்பும், கொட்டாவியும் அற்ற இன்னோர் பக்கம் அச்ச உணர்வும், பச்சாதாபமும், பரிதவிப்புமாக இந்தப் படைப்பு நம்முள் ஏற்றும் அந்த உணர்வோட்டம் ஒன்றே போதுமே?
இந்தப் பயணம் கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னனான ஶ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1814) பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்டு இலங்கை முழுவதும் ஒரு குடையின் கீழ் ஆள்வதற்குக் கால்கோல் முயற்சிகள் நடக்கும் தறுவாயில் கதைக்கள மாந்தர்களும் பயணிக்கிறார்கள். அரசுக்கு எதிராக குழப்பங்கள், அந்தச் சதி செய்தவர்களுக்கான தண்டனை அது அப்படியே மூலக் கதையோடு ஒட்டிப் பயணிப்பது என்று நேர்த்தியான திரைக்கதை அமைப்பு.
ஒரு வரலாற்றுப் பின்னணி கொண்ட படைப்பைத் தன் ஆரம்பம் முதல் இறுதி நொடிகள் வரை தக்க வைக்க இங்கே கோடிகள் தேவை இல்லை, படோபமான அரங்க அமைப்புகள் வேண்டாம் என்பதை உடையலங்காரம், கண்டி தேசத்து மலையடிவாரங்கள், காடுகள் வழியாகக் கச்சிதமாகப் பார்வையாளர் மனதில் ஏற்றி விடுகிறார்கள். அரசகுடும்பத்துக் காட்சிகளில் வெறும் கை விளக்கு, குத்து விளக்கு ஒளியே அந்தப் பிரமாண்டத்தின் தேவை இன்மையைக் காட்டி விடும்
நிறை ஒளியமைப்பாக இருக்கிறது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தின் குரலாகவே இயல்பாகவே எழுகின்ற வாத்திய இசை கலக்காத பூர்வப் பாடலில் கூட ஆடை குறித்த ஏக்கமாகத் தொனிக்க விடுகின்றார்கள்.
திக்கிரி என்ற இளம் பெண்ணாக நடித்த தினாரா புஞ்சிஹேவ வின் கண்களாலேயே குதூகலம், மிரட்சி, பரிதவிப்பு எல்லாம் காட்டி விடுகின்றார். ரவீந்திர ரந்தெனிய என்ற மூத்த கலைஞரைத் தவிர மீதி எல்லாமே நமக்கு அறிமுகமற்ற முகங்கள். ஆனால் எல்லொருமே அவர்கள் பால் நம்மை ஈர்க்கிறார்கள்.
திக்கிரியைக் “கைப்பற்றிய”தற்காகத் தன் சமூகத்தில் இருந்தும் விலகி, ஆட்சியாளர்களுக்கும் தெரியாமல் ஓடி, இன்னும் உயர்சாதி மக்களின் கழுகுக் கண்களிடமும் அகப்படாமல் அவளைக் காத்துப் பயணிக்கும் விஜய என்ற ரொடி சமூகத்து இளைஞன் சஜீத அன்ரனிக்கு வெறும் முப்பதே வயதாம். படம் எடுக்கும் சூழலில் இன்னும் 3 வயது தள்ளிப் போட வேண்டும். எப்பேர்ப்பட்ட அசுர நடிப்பு அது. நாம் இன்னும் தனுஷைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நம்மருகே இந்த இன்னொரு கலைஞன் பயமுறுத்துகிறான் தன் அப்பாவித்தனமான நடிப்பால். அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வதும், தன்
சமூகத்தவரை மீளக் கண்டு சந்தோசப்படுவதும், அவலச் சூழலில் அடித்துப் போடப்பட்டவனாகக் குழறும் போதும் அந்த மகா கலைஞனை மனதாரப் போற்ற வைக்கிறது.
நம் கலைஞர் ஜெயபாலனும் வந்து போனார் என்பதைப் பூதக்கண்ணாடியால் பார்த்து உறுதிப்படுத்த வேண்டும். இது அவருக்கான படமல்ல. அல்லது படத்தொகுப்பில் அவரின் காட்சிகள் ஏப்பம் விடப்பட்டிருக்கலாம்.
இசையமைப்பாளர் கே, “யுத்தம் செய்” வழியாக நமக்கெல்லாம் அறிமுகமான தமிழ் இசையமைப்பாளர், பிரசன்ன விதானகேயுடன் இன்னொன்றாகச் சேரும் (இதற்கு முன் Usaviya Nihandai மற்றும்
Her. Him. The Other) படைப்பிது.
Gaadi படத்தின் நிறைவில் அவர் அதுவரை சலனப்படாமல் இருந்தவர் கொடுக்கும் மன ஓசை அப்படியே உள்ளிறங்கிப் படத்தின் ஆழமான சிந்தனையை இசையாகப் பரிணமித்து நிற்கும் போது கே என்ற இசையமைப்பாளரின் சாகித்தியம் துலங்குகின்றது.
சாந்தினி பார், Gangs of Wasseypur, Liar's Dice, உள்ளிட்ட மிக முக்கிய இந்திய சினிமாக்களில் ஒளிக்கண்ணாகப் பயணித்தவர், இந்தியத் தேசிய விருதுகளின் சொந்தக்காரர் ராஜீவ் ரவி தான் இதற்கு ஒளிப்பதிவாளர்.
பிரிஸ்பனில் நிகழ்ந்த அந்த விருதேற்பு நிகழ்வோடு சிட்னி வந்த பிரசன்ன விதானகேயின் Gaadi படத்தின் திரையிடலில் அவரோடு மனம் விட்டுப் பேசும் வாய்ப்பும் கிடைத்தது.
பொன்னியின் செல்வன் படத்துக்காக இலங்கையிலேயே நடிகர்களைத் திரட்டி அந்தக் காட்சிகளுக்கு உதவுவதற்காக மணிரத்னம் வேண்டுகோளை அவரிடம் முன் வைத்ததை நமது ஈழத்துப் படைப்பாளி கேசவராஜன் அண்ணனும் சொல்லி நடிகர்களைத் திரட்ட உதவியிருந்தார். ஆனால் கோவிட் இரண்டாம் அலையில் இந்த முடிவு கைவிடப்பட்டு தாய்லாந்திலேயே இலங்கைக் காட்சிகளும், இந்திய நடிகர்கள் கலப்போடு எடுக்கப்பட்டதை ஆதங்கப்பட்டுச் சொன்னார் பிரசன்ன.
இதுவரை வந்த இந்தியத் தமிழ் சினிமாக்களில் மிகத் திருத்தமான சிங்களப் பிரயோகத்தை பொன்னியின் செல்வனில் அவதானித்ததைக் குறிப்பிட்டேன். இதற்காகப் பழங்காலப் பேசும் சிங்கள மொழிப் பிரயோகத்தை அதன் இயல்பு கெடாமல் பயன்படுத்த உதவியதாகவும், இலங்கை மன்னன் மகிந்தனாக நடித்த ஷாம் பெர்னாண்டோவை (Gaadi இலும் முக்கிய பாத்திரம்) தன்னுடைய With You, Without You படத்தை முன்பு பார்த்த அனுபவத்தில் மணிரத்னம் விரும்பி ஒப்பந்தம் செய்ததாகக் குறிப்பிட்டார் பிரசன்ன விதானகே.
நம் தமிழ்ச் சூழலிலும் பிரமாண்டப் பகட்டின்றி, புனைகதைப் பிரமாண்டமின்றி காட்சிப்படுத்தப்படாத வரலாற்றின் பக்கங்கள் முடங்கிக் கிடக்கின்றன. ஆனால் கொள்வார் யாருமிலர் என்ற ஏக்கமே எழுந்தது இந்தப் படைப்பைப் பார்த்த பின்.
கானா பிரபா
No comments:
Post a Comment