உலகச் செய்திகள்

 உக்ரைனின் 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்தது ரஷ்யா

வட கொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனை

இந்தோனேஷியா கால்பந்து போட்டி வன்முறை; இதுவரை 174 பேர் மரணம்

இயன் புயலால் அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு

 ரஷ்யப் பாடசாலையில் சூடு; ஒன்பது பேர் பலி


உக்ரைனின் 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்தது ரஷ்யா

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைனின் தெற்கில் இருக்கும் ஸபோரிஷியா, ஹெர்சன் ஆகியவற்றைச் சுதந்திர பிராந்தியங்களாக அங்கீகரித்துள்ளார்.

ரஷ்ய எல்லையோரம் உள்ள டோனெஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பிராந்தியங்களோடு இந்த இரண்டு பிராந்தியங்களையும் ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது.

இதற்கான சிறப்புச் சடங்கு மொஸ்கோவில் நேற்று நடைபெற்றது. உக்ரைனின் இந்த நான்கு பிராந்தியங்களிலும் கடந்த ஐந்து நாட்கள் இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பை தொடர்ந்தே இந்தப் பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த சர்வஜன வாக்கெடுப்புகளில் ரஷ்யாவுடன் இணைய அதிகப் பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது.

எனினும் இந்த சர்வஜன வாக்கெடுப்பை மேற்குலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை.

உக்ரைனிய நிலப்பரப்பில் கிட்டத்தட்ட பதினைந்து வீதத்தை ரஷ்யா தன்னோடு சேர்த்துக் கொள்ளவுள்ளது. அது சுமார் போர்த்துக்கல் நாட்டின் நிலப்பகுதிக்கு ஒப்பானது என்று கூறப்படுகிறது.

உக்ரைனியப் பகுதியை ரஷ்யாவுடன் இணைக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் அந்த நான்கு வட்டாரங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர். அவர்களை ரஷ்யா நியமித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அந்த நிகழ்வில் சிறப்புரை ஆற்றினார்.

கடந்த பெப்ரவரி மாதத்தில் இருந்து உக்ரைனியப் போர் இடம்பெற்று வருகிறது.

உக்ரைனியப் பகுதிகளைத் தன்னுடன் இணைக்கும் ரஷ்யாவின் திட்டத்தை ஏற்கப் போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். ரஷ்யாவின் இந்த பிராந்திய இணைப்புகள் ஐ.நா சாசனத்தை மீறுவதாக இருக்கக் கூடும் என்று சட்டப் பெறுமானம் இல்லை என்றும் ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் குறிப்பிட்டுள்ளார்.   நன்றி தினகரன் 





வட கொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனை

தங்கள் நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா நாட்டின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தென் கொரியா வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, வட கொரியா தனது ஏவுகணையை கடலில் ஏவி சோதித்தது.

தனது 4 நாள் ஆசிய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக, தென் கொரியாவுக்கு கடந்த வியாழக்கிழமை வந்த கமலா ஹாரிஸ், அந்த நாட்டு ஜனாதிபதி யுூன் சுக்-யியோலைச் சந்தித்துப் பேசினார். மேலும், வட கொரியாவுடனான எல்லையில் அமைந்துள்ள இராணுவ விலக்கல் பகுதியில் அவர் உரையாற்றினார்.

அதற்கு முன்னதாக, அமெரிக்காவிலிருந்து கமலா ஹாரிஸ் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டபோதே வட கொரியா ஏவுகணை சோதனை செய்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியது. மேலும், அவர் ஜப்பானில் இருந்தபோது இரு ஏவுகணைகளை வட கொரியா புதன்கிழமை சோதித்தது.

இந்த நிலையில், கமலா ஹாரிஸ் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்ற பின் 3ஆவது முறையாக கடந்த வியாழக்கிழமை ஒரு ஏவுகணையை வீசி சோதித்ததாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தகவலை ஜப்பான் அதிகாரிகளும் உறுதி செய்தனர்.   நன்றி தினகரன் 




இந்தோனேஷியா கால்பந்து போட்டி வன்முறை; இதுவரை 174 பேர் மரணம்

- சொந்த மண்ணில் தோல்வியை தாங்க முடியாத வீரர்கள் அட்டகாசம்

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வன்முறையில் இது வரை 174 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 150 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், இந்தோனேசியாவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

 

 

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்றிரவு (01) இடம்பெற்ற கால்பந்து போட்டித் தொடரின்,  Arema FC மற்றும் Persebaya Surabaya ஆகிய இரு அணிகளுக்கிடையிலான போட்டியில், இரு அணிகளின் இரசிகர்களும் ஆரம்பம் முதலே போட்டிகளை வெறித்தனமாக இரசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தோல்வியடைந்த அணி; பொறுக்க முடியாத இரசிகர்கள்; திணறிய பொலிஸ்
இப்போட்டியில் அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. சொந்த மண்ணில் தங்கள் அணி தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள முடியாத அரேமா அணியின் தீவிர இரசிகர்கள், கடும் கோபமடைந்தனர். இதனையடுத்து மைதானத்துக்குள் குவிந்த இரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

இச்சந்தர்ப்பத்தில் களத்தில் இருந்த பல அரேமா வீரர்கள் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட இரசிகர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டனர். அப்போது நூற்றுக்கணக்கானோர் இந்த கண்ணீர்புகை குண்டுகளுக்கு இடையே சிக்கி மூச்சுவிட முடியாமல் திணறினர். மேலும் பல இடங்களில் பாதுகாப்பு படையினர் இரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தியதையும் பல்வேறு வீடியோக்களில் காணக்கூடியதாக உள்ளது.

 

 

கால்பந்து இரசிகர்களின் இந்த ரகளை பெரும் ரணகளத்தை ஏற்படுத்திய நிலையில், இதன்போது இடம்பெற்ற நெரிசல் மற்றம் மோதல் சம்பவங்களில் சம்பவ இடத்திலேயே பலர் உயிரிழந்ததோடு, தற்போது வரை 174 கால்பந்து இரசிகர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இவ்வாறு உயிரிழந்தவர்களில் பொலிஸ் அதிகாரிகளும் உள்ளடங்குவதோடு, 34 பேர் மைதானத்திற்குள் உயிரிழந்துள்ளனர். ஏனையோர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

படுகாயமடைந்த நிலையில் சுமார் 150 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவங்களை அடுத்து எஞ்சிய கால்பந்து போட்டிகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.    நன்றி தினகரன் 




இயன் புயலால் அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு

இயன் புயல் தாக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் பாரிய மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதோடு அந்த மாநிலம் முழுவதும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

அந்த மாநிலத்தை புரட்டிப்போட்ட புயலால் குறைந்தது 10 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

புயல் மீட்புப் பணிகளில் 7 ஆயிரம் இராணுவ வீரர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர் என புளோரிடா மாநில ஆளுநர் ரோன் டி சாண்டிஸ் தெரிவித்தார். இந்தப் புயலின் விளைவாக புளோரிடா மாநிலத்தில் 22 இலட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கின.

இயன் புயலால் ஏற்பட்டுள்ள சேதத்தின் அளவு நிச்சயம் பேரழிவாக இருக்கும் என தேசிய புயல் மையத்தின் உயர் அதிகாரியான அந்தோணி ரெய்ன்ஸ் தெரிவித்தார்.

இந்நிலையில், இயன் புயலினால் புளோரிடா மாநிலம் முழுவதும் கடும் துன்பத்தில் ஆழ்ந்துள்ளது என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.

இந்தப் புயலினால் கணிசமான உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சுவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், புளோரிடாவின் வரலாற்றில் மிகக் கொடிய புயலாக இந்தப் புயல் உருவாகலாம் என்றும் கூறினார்.

வெர்ஜீனியா, வட கரோலினா, தென் கரோலினா மாநிலங்களிலும் அவசர நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த புதன், வியாழக்கிழமை என இரு நாட்களில் 4 ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தப் புயல் அமெரிக்காவைத் தாக்கும் முன் கியூபா மற்றும் கரீபியன் தீவுகளில் பெரும் அழிவை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 




ரஷ்யப் பாடசாலையில் சூடு; ஒன்பது பேர் பலி

மத்திய ரஷ்யாவில் துப்பாக்கிதாரி ஒருவர் பாடசாலை ஒன்றுக்குள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

இசெவ்ஸ் நகரில் நேற்று இடம்பெற்ற இந்தத் தாக்குதலை அடுத்து அம்புலன்ஸ் வண்டிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தாக்குதல் இடம்பெற்ற பாடசாலையில் சுமார் 1,000 மாணவர்கள் மற்றும் 80 ஆசிரியர்கள் உள்ளனர்.

துப்பாக்கிதாரி சம்பவ இடத்திலேயே தற்கொலை செய்து கொண்டிருப்பதோடு உயிரிழந்தவர்களில் ஏழு மாணவர்கள் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இரு ஆசிரியர்கள் மற்றும் ஒரு காவலரும் கொல்லப்பட்டவர்களில் உள்ளனர்.

எனினும் இந்தத் தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் விபரம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் பாடசாலைகளில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறுவது மிக அரிதானதாகும்.

ரஷ்யாவின் தென்கிழக்கு நகரான கசானில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த 2021 மே மாதம் பதின்ம வயதினர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு சிறுவர்கள் உட்பட ஒன்பது போர் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பாடசாலையின் உட்பகுதியை காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளன. இதில் சில படங்களில் வகுப்பறை தரையில் இரத்தம் ​தோய்ந்து காணப்படுவதோடு ஜன்னல்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த துளைகள் உள்ளன.

இரு கைத்துப்பாக்கிகளைக் கொண்டு இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக உள்ளூர் எம்.பி ஒருவர் தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 



No comments: