நலந்தரும் நவாத்திரி
முத்தேவியர்க்கும் துதி
இவ்வுலகில் எம்மைக் காத்திடுவாய் அம்மா !
[ துர்க்கையம்மன் துதி ]
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா
ஈரமுடை நெஞ்சை ஈந்திடுவாய் தாயே
இணையில்லா திருவடியைப் பற்றுகிறோம் தாயே
கோரமுடை நினைப்பைக் கொன்றொழிப்பாய் தாயே
குவலயதில் வாழத் துணைநீயே தாயே
ஆணவமாம் நினைப்பை அகற்றிவிடு தாயே
அகந்தை அகமேறா ஆக்கிவிடு தாயே
தீமையெமை அணுகா திருப்பிவிடு தாயே
திக்கெட்டும் நிறைந்தாய் துர்க்கையம்மா நீயே
சோர்வடையும் எண்ணம் துடைத்தெறிவாய் தாயே
தொலைநோக்குப் பார்வை கொடுத்தருள்வாய் தாயே
வாய்மையுடன் வாழ வரமருள்வாய் தாயே
மாநிலத்தில் எமக்குத் துணைநீயே தாயே
அச்சமதை அகற்ற அருகணைவாய் அம்மா
ஐயநிலை போக்க அருள்புரிவாய் அம்மா
இச்சைகொண்டு உன்னை இறைஞ்சுகிறோம் அம்மா
இவ்வுலகில் எம்மைக் காத்திடுவாய் அம்மா
அருளோடு பொருளை அளித்திடுவாய் அம்மா !
[ இலக்குமிக்குத் துதி ]
பாருலகில் வாழப் படைத்துவிட்டாய் தாயே
வாழ்வு வளமாகத் தனம்வேண்டுந் தாயே
தினம் போற்றுமெம்மை திகப்படையா வண்ணம்
அனுதினமும் எமக்கு அருள்புரிவாய் தாயே
பொருளில்லா உலகில் பொழுது விடியாதே
பொருளின்றி எதுவும் எமையணுக மாட்டா
அருளோடும் பொருளும் உன்னிடத்தே உண்டு
அருளோடு பொருளை அளித்திடுவாய் அம்மா
நோயின்றி வாழ நூல்கள்பல கற்க
வாய்மையுட னிருக்க வறுமையது போக
ஆதார மனைத்தும் உன்கருணை அம்மா
அருள்சுரந்து எம்மை அரவணைப்பாய் அம்மா
தானதர்மம் செய்ய பெருமாசை தாயே
தனமட்டும் எமக்குத் தங்குதில்லை தாயே
ஆனமட்டும் நாமும் உழைக்கின்றோம் அம்மா
ஆனாலும் தனமோ அணுகவில்லை அம்மா
நீமனது வைத்தால் நிறைந்துவிடும் அம்மா
நினைப் பெல்லாம் நீயாயிருக்கிறாய் அம்மா
வாழ்நாளில் நாமும் வறுமையின்றி வாழ
வரமருள்வாய் இலக்குமித்தாயேநீ எமக்கு
பொற்பதம் பணிந்தோமம்மா நற்றுணை என்றும்நீயே !
[ சரஸ்வதி துதி ]
மாதரது குரலிலும் மழலையரின் மொழியிலும்
கீதமென ஒலித்திடும் குயிலனது குரலிலும்
பேதமற அமர்ந்துமே பெருங்கருணை பொழிகிறாய்
வீணையினை மீட்டிடும் வெண்டாமரை வாணியே
நூல்பல கற்கவேண்டும் நுண்பொருள் உணரவேண்டும்
வாய்மையாய் வாழவேண்டும் மனவழுக் ககலவேண்டும்
தாழ்மையாய் இருக்குமெண்ணம் தான்மன மமரவேண்டும்
வாணியே வேண்டுகின்றோம் வழங்கியே நிற்பாயம்மா
கற்றவர் அணைக்கவேண்டும் மற்றவர் மதிக்க வேண்டும்
நற்றமிழ் நாவிலென்றும் நடமிட்டு நிற்கவேண்டும்
சொற்றமிழ் சிறக்கவேண்டும் சுவையுடன் பாடவேண்டும்
பொற்பதம் பணிந்தோமம்மா நற்றுணை என்றும்நீயே
ஞானியர் போற்றுமம்மா நான்மறை உணர்த்துமம்மா
தேனினும் இனிமைமிக்காய் தெளிவினை ஊட்டுகின்றாய்
வானவர் வியக்குமாறு மதியினைத் தந்துநின்று
வையத்தார் விரும்புவண்ணம் வைத்திட்டாய் வாணித்தாயே
ஏழைகள் கற்கவேண்டும் இருப்பவர் ஈய்தல்வேண்டும்
வாழ்விலே கல்விச்செல்வம் வானோங்கி நிற்கவேண்டும்
தோழமை உணர்வுகொண்டு கற்றவர் இணையவேண்டும்
நாளெலாம் பரவுகின்றோம் நல்லருள் புரிவாயம்மா
No comments:
Post a Comment