எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 33 1997 இல் மெல்பனில் நடந்த வெள்ளிவிழா உறவு என்ற வானத்திலே நாம் பறவை ஆகலாம்... முருகபூபதி

 .

உறவு என்ற வானத்திலே நாம் பறவை ஆகலாம்... முருகபூபதி




                                                                     
எழுத்துலகப் பிரவேசம் செய்து இருபத்தியைந்து வருடகாலம் நெருங்கிய வேளையில் 1997 ஆம் ஆண்டு பிறந்துவிட்டது.

அதுவரையில் (  1972 – 1997 )  எழுதியவற்றை திரும்பிப் பார்த்தேன்.  இரண்டு கதைத் தொகுதிகளும்                                                    ( சுமையின் பங்காளிகள் – சமாந்தரங்கள் ) ஒரு பயண இலக்கியம் ( சமதர்மப்பூங்காவில் ) ஒரு கட்டுரை நூல்                                   ( நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் ) ஆகியன மாத்திரமே வெளியிட்டிருந்தேன்.

மற்றும் ஒரு தொகுதிக்கு தேவைப்பட்ட சிறுகதைகள் இருந்தன. அவை இலங்கை வீரகேசரி , தினகரன்,  மல்லிகை,  பிரான்ஸ் பாரிஸ் ஈழநாடு, ஓசை , லண்டன் ஈழமுரசு, அவுஸ்திரேலியா மரபு ,  அக்கினிக்குஞ்சு,  கலப்பை  ஆகியனவற்றில் வெளியாகியிருந்தன.

அத்துடன் பிரான்ஸிலிருந்து வெளியான தமிழன் இதழிலும் பாட்டி சொன்ன கதைகள் என்ற தொடரும் வெளிவந்திருந்தது.  இதனையும் மற்றும் ஒரு சிறுகதைத் தொகுதியையும் வெளியிடலாம்  என்ற எண்ணம் மனதில் துளிர்த்தது.

பிரான்ஸிலிருந்து அப்போது பாரிஸ் ஈழநாடு வெளியிட்டுக்கொண்டிருந்த நண்பர் குகநாதனிடம் எனது விருப்பத்தை தெரிவித்தேன்.  அவர் கதைகளை தொகுத்து, சென்னையில் ஒரு பதிப்பாளருக்கு அனுப்பச்சொன்னார். தொகுதிக்கு இயந்திரங்கள் என்ற தலைப்பினை வைத்து தபாலில் அந்தப்பொதியை தமிழகத்திற்கு அனுப்பினேன்.

பாட்டி சொன்ன கதைகள் தொகுப்பினை மல்லிகை பந்தல் வெளியீடாக்கும் எண்ணத்தில் மல்லிகை ஆசிரியர் நண்பர் டொமினிக் ஜீவாவுக்கு அனுப்பினேன்.

அத்துடன், அதுவரையில் வெளியான நான்கு நூல்கள் பற்றியும் இலக்கிய விமர்சகர்கள் இதழ்கள், ஊடகங்களில் எழுதியிருந்த விமர்சனங்களையும் தொகுத்து,  மெல்பன் மரபு ஆசிரியர் நண்பர் விமல் அரவிந்தனிடம் சேர்ப்பித்து, கணினியில் பதிவேற்றி  பக்கம் வடிவமைத்து தருமாறு கோரியிருந்தேன்.

இறுதியில் குறிப்பிட்ட பாட்டி சொன்ன கதைகள் தொகுப்பும், முருகபூபதியின் படைப்புகள் என்ற விமர்சனத் தொகுப்பும் அச்சாகி வெளிவந்தன.

தமிழகத்திற்கு அனுப்பப்பட்ட கதைகள் அச்சாகவில்லை. கதைகளும் தொலைந்துவிட்டது.  அதற்காக நான்  வருந்தவில்லை.

தனிப்பட்ட வாழ்க்கையில், பொது வாழ்வில் எத்தனையோ இழப்புகளை சந்தித்து,  கடந்து வந்து பக்குவப்பட்ட அனுபவத்துடன்,  “ ஒரு பஸ் போனால் மற்றும் ஒரு பஸ் வரும்  “ என்று என்னை நானே தேற்றிக்கொள்ளும் இயல்பும்  இன்றளவும் என்னிடம் குடியிருக்கிறது.

அதனால்தான், தனிப்பட்ட மற்றும் பொதுவாழ்வில்,  எழுத்துலக வாழ்வில் என்னோடு இணைந்து வந்தவர்கள் முரண்பட்டுக்கொண்டு விட்டுச்சென்றாலும்,  சற்றுக்கவலையும் ஏமாற்றமும் வந்தாலும், பின்னர் சுதாரித்துக்கொண்டு எழுந்துவிடுவேன்.

வெற்றிடம் வந்தால்,  அவ்விடத்திற்கு நிரப்பும் வேலையை கச்சிதமாகச் செய்துவிடும் பழக்கத்தை பாடசாலையில் ஆங்கிலப்பாடத்தில் கற்றுக்கொண்டேன்.

அந்தப்பாடத்தை Fill in the blanks என்பார்கள்.  தமிழிலும் அத்தகைய பாடங்கள் இருந்தன. இடைவெளி நிரப்பும் பாடம் எனக்கு மிகவும் பிடித்தமானது.


அந்தப்பாடங்களை வாழ்க்கையிலும் கடைப்பிடித்தமையால், வருத்தப்படுவதை குறைத்துக்கொள்வதும் எனது இயல்பானது.

பயணத்திற்கு தயாராகும்போது பஸ்ஸையோ, ரயிலையோ, விமானத்தையோ தவறவிட்டுவிட்டால் கவலைதான். அதற்காக சோர்ந்துவிட முடியுமா..? தரையில் தவறி விழுந்துவிட்டால், தொடர்ந்தும் விழுந்தே கிடப்போமா..? எழுந்துவிட மாட்டோம் !

 “ கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு, காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு  என்று கவியரசர் எமக்காகத்தானே பாட்டு எழுதிவைத்துள்ளார்.


இலக்கியப்பணி, தன்னார்வத் தொண்டுகள் மத்தியில்  இழப்புகள், ஏமாற்றங்கள் வரும் – போகும். 

பாட்டி சொன்ன கதைகள் நூலையும் முருகபூபதியின் படைப்புகள் விமர்சன நூலையும் மெல்பனில் வெளியிடுவதற்கு நாள் குறித்தேன்.  அக்காலப்பகுதியில்  அறுபது வயதைக்கடந்துவிட்ட எனது மதிப்பிற்கும் அன்பிற்குமுரிய நால்வர் மனதில் தோன்றினார்கள்.  கலை, இலக்கியம், ஓவியம்,  கூத்து, கவிதை முதலான துறைகளைச்சார்ந்து பல பணிகளை அயர்ச்சியின்றி தொடர்ந்தவர்கள் அவர்கள்.

அவர்களை குறிப்பிட்ட எனது எழுத்துலக பிரவேச வெள்ளிவிழாவில் பாராட்டி கௌரவிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து அவர்களுடன் தொடர்புகொண்டேன்.


அவர்கள்தான் ஓவியர் கே. ரி. செல்வத்துரை, அண்ணாவியார் இளைய பத்மநாதன், கவிஞர் அம்பி, மூத்த படைப்பாளி எஸ். பொன்னுத்துரை.

முதலிருவரும் மெல்பனிலும் மற்றும் இருவரும் சிட்னியிலும் இருந்தனர்.

இவர்கள் பற்றிய கட்டுரைகளை எழுதி, அவற்றையும் தொகுத்து சிறிய மலராகவும் வெளியிடவேண்டும் என்ற எண்ணமும் மனதில் துளிர்த்தது.

கவிஞர் அம்பி பற்றி எழுதித்தருவதற்கு இலக்கிய சகோதரி அருண். விஜயராணி முன்வந்தார். எஸ். பொன்னுத்துரை பற்றி எழுதித்தருவதற்கு நண்பர் சிவசம்பு முன்வந்தார்.

ஓவியர் பற்றியும் அண்ணாவியார் பற்றியும் நானே எழுதிக்கொள்வோம் என்ற தீர்மானத்துடன் இருவரிடமும் நேரில் சென்றேன்.  அக்காலப்பகுதியில் அண்ணாவியார் இளைய பத்மநாதன், மெல்பன் பாரதி பள்ளியில் மாணவர்களுக்கு நாடகப்பயிற்சியும் பாடமும் நடத்திக்கொண்டிருந்தார். அவரை ஒரு பாரதி பள்ளி வளாகத்தில் சந்தித்து பேட்டி எடுத்தேன். ஓவியர் செல்வத்துரை அய்யாவை சந்திக்கச்சென்றபோது அவர் உடல் நலக்குறைவோடு இருந்தார்.


எனினும் தனது கடந்த கால ஓவியக்கலை, ஒளிப்படக்கலை அனுபவங்களை சுவாரசியமாகச் சொன்னார்.  விழாவில் தனது ஓவியங்களை காட்சிப்படுத்துவதற்கும் அனுமதி தந்தார்.

இந்த நான்கு ஆளுமைகள் பற்றிய சிறப்பு மலருக்கு நம்மவர் என்ற பெயரைச்சூட்டினேன். அதற்கு அழகான அட்டைப்படத்தை எனது குடும்ப நண்பர் நவரத்தினம் அண்ணரின் புதல்வன் நவநீதன் வரைந்து தந்தார்.

மலருக்கான சிறு விளம்பரங்களை எனது நட்புக்குரிய அன்பர்கள் சிலர் தந்தனர்.  சிட்னியிலிருந்த எழுத்தாளர் பேராசிரியர் ஆசி. கந்தராஜாவை தொடர்புகொண்டு குறிப்பிட்ட விழாவுக்கு தலைமை தாங்க வருமாறு அழைத்தேன். அத்துடன் வெளியிடப்படும் நம்மவர் மலருக்கும் ஒரு கட்டுரையை அவரிடம் கேட்டுப்பெற்றேன்.

குறிப்பிட்ட வெள்ளிவிழாக்காலத்திற்குள்  எனது ஆக்கங்களுக்கு களம் வழங்கிய அனைத்து இதழ்கள், பத்திரிகை ஊடகங்களுக்கும்  நன்றி தெரிவிக்கும் பதிவையும் அம்மலரில் எழுதினேன்.

நண்பர் விமல் அரவிந்தன் இம்மலரையும் அழகாக வடிவமைத்து அச்சிட்டுத்தந்தார்.

இம்மலரில் பேராசிரியர் கந்தராஜா, சர்வதேசிய மட்டத்தில் கலை இலக்கியப்பரிமாணம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

இம்மலரை தமிழ் நூலகம் ஆவணகத்தில் இப்போதும்  வாசிக்க முடியும். இணைப்பு :  https://noolaham.net/project/537/53653/53653.pdf

விழா மெல்பன் வை. டபிள்யூ, சி. ஏ. மண்டபத்தில் ஒரு மாலைப்பொழுதில் வெகு சிறப்பாக நடந்தது.

கௌரவம் பெரும் ஆளுமைகளுக்கு பொன்னாடையும் போர்த்தி,  விருதுகளையும் வழங்க ஏற்பாடு செய்தேன். அந்தப்பணியை மெல்பன் வானொலி ஊடகவியலாளர்களை அழைத்து செய்யவைத்தேன்.

விழா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கவரும் எழுத்தாளர் பேராசிரியர் ஆசி. கந்தராஜாவையும் கௌரவிக்கவேண்டும். என்ன செய்யலாம்…?  என யோசித்தேன். ஊரிலிருந்த எனது அம்மா அதற்கு தக்க ஆலோசனையை தந்தார்.

 “ நல்லதோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறாய்.  உனது எழுத்துலக வாழ்க்கையில் 25 வருடங்களை கடந்துவிட்டாய். அதற்குள் சில இழப்புகளையும் தனிப்பட்ட வாழ்வில் சந்தித்துவிட்டாய். உன்னருகிலிருந்து உனக்கு ஆறுதல் சொல்லவும் முடியவில்லை.

இனி உனது வாழ்வில் வசந்தம் வீசட்டும். அதற்கு நீ நடத்தப்போகும் விழா வழிகாட்டும்.  நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குபவருக்கு இரண்டு குத்துவிளக்குகளை வழங்கு.


ஆனால், அவற்றை வெறுமையாக கொடுக்காதே.  அவற்றில் தீபமேற்றிக்கொடு.   “ என்று அம்மா தொலைபேசியில் சொன்னவாறே அந்த கடமையையும் செய்தேன்.

விழாவன்று அந்த மேடையில் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன்  அண்ணரின் துணைவியார் ஜெஸி ரவீந்திரன் அண்ணி விளக்கில் தீபம் ஏற்றித்தந்தார், எனது மகன் முகுந்தன் அந்த விளக்குகளை தலைமை தாங்கிய பேராசிரியர் கந்தராஜாவுக்கு வழங்கினான்.

இதெல்லாம் தற்செயலாக நிகழ்ந்த சம்பவங்கள்தான்.  ஆனால், அவற்றுக்கெல்லாம் பின்னால் ஏதோ ஒரு சக்தி இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது என்பதை பின்னர்தான் உணருகின்றோம்.

அன்று விளக்கேற்றித்தந்த திருமதி ஜெஸி அண்ணி குடும்பத்தின் உறவில்  பின்னாளில், கந்தராஜாவின் புதல்வி மருத்துவர் விளக்கேற்ற வந்தார்.

ரவீந்திரன் அண்ணரின் அருமைத் தம்பி விக்னேஸ்வரனின் புதல்வர் மருத்துவர் அச்சுதனை பேராசிரியர் கந்தராஜாவின் செல்வப்புதல்வி  மருத்துவர் மயூரி கரம்பற்றினார்.

குறிப்பிட்ட திருமண வரவேற்பு உபசார நிகழ்ச்சியும்  மெல்பனில் 2014 ஆம் ஆண்டு  வெகு சிறப்பாக நடந்தது. கந்தராஜா இந்நிகழ்வில் உரையாற்றும்போது 1997 ஆம் ஆண்டு நடந்த எனது வெள்ளிவிழாவை நினைவுபடுத்தினார்.

 “ உறவு என்ற வானத்திலே
நாம் பறவை ஆகலாம்...
உள்ளம் என்ற தோட்டத்திலே
நாம் மலர்கள் ஆகலாம்.... “

என்ற கவியரசு கண்ணதாசனின் பாடலை ( நாம் மூவர் திரைப்படம் 1966 ) நினைவில் கொள்ளுங்கள்.

1997 ஆம் ஆண்டு நடந்த எனது எழுத்துலகப்பிரவேச வெள்ளிவிழாவில் மெல்பன் வானொலி ஊடகவியலாளர்கள் விக்கிரமசிங்கம், சண்முகம் சபேசன், உதயம் பத்திரிகையின் சார்பில் தில்லைக்கூத்தன் சிவ சுப்பிரமணியம், மருத்துவர் இராஜன் இராசையா ஆகியோர்  கௌரவம் பெற்ற நான்கு ஆளுமைகளுக்கும் விருதுகளை வழங்கினர்.


திருமதி சுமதி சத்தியமூர்த்தி தமிழ் வாழ்த்து பாடி விழாவை தொடக்கிவைத்தார்.

நண்பர் இலேடியஸ் பெர்ணான்டோ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இந்த விழா,  கலை, இலக்கிய ஆளுமைகளை, சமூகப்பணியாளர்களை வாழும்போதே வாழ்த்திக்கொண்டாட வேண்டும் என்ற மரபினை மெல்பனில் அறிமுகப்படுத்தியது.

அதன்பின்னர் விக்ரோரியா இலங்கைத்  தமிழ்ச்சங்கமும் இதுபோன்ற விழாக்களை முன்னெடுத்தல் வேண்டும் என்று அதில் அங்கம் வகித்திருந்த நண்பர் சண்முகம் சபேசன் வலியுறுத்தியிருக்கிறார்.

அவ்வாறே இச்சங்கமும் தனது வெள்ளிவிழாக்காலத்தில் முத்தமிழ் விழாவைத் தொடர்ந்து ஆளுமைகளை பாராட்டி விருது வழங்கும்  விழாவை  மெல்பன் Hungarian Community Centre மண்டபத்தில் நடத்தியது. 

முத்தமிழ் விழாவில் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அன்று எழுத்தாளர் பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசாவின் தலைமையில் நடந்த இலக்கியகக்   கருத்தரங்கில் கவிக்கோவுடன், நானும் மாவை நித்தியானந்தனும் உரையாற்றினோம்.

 

( தொடரும் )

 

 

No comments: