என்றும் பதினாறு – ஐந்து நிமிடக் குறும்திரைப்படப் பிரதி - கே.எஸ்.சுதாகர்

நான்கு பாத்திரங்கள் :        ரவிச்சந்திரன், மோகன், இளம் பெண்,

முதியவர் (இளம்பெண்ணின் தந்தை)

 

காட்சி 1

வெளி

மெல்பேர்ண், அவுஸ்திரேலியா

இரவு

மெல்பேர்ண் நகரின் ஒரு புறநகரப் பகுதி. மழை தூறிக் கொண்டிருக்கின்றது. ஒரு சில வாகனங்கள் வீதியில் போய்க் கொண்டிருக்கின்றன. மோகன், ரவிச்சந்திரன் என்ற இரண்டு இளைஞர்கள் / நண்பர்கள் ஒரு காரில் போய்க் கொண்டிருக்கின்றார்கள். ரவிச்சந்திரன் காரை ஓட்டுகின்றான். மெல்லிய இசையில் சினிமாப்பாடல் ஒலிக்கின்றது. கார், பஸ் ஸ்ராண்ட் ஒன்றைக் கடக்கின்றது. யாரோ ஒரு இளம் பெண்(வெள்ளை இனத்துப் பெண்) பஸ் ஸ்ராண்டிற்குள்ளிருந்து வெளியே வந்து காருக்குக் கை காட்டுகின்றாள். `ஸ்றீற் லாம்பின்’ வெளிச்சத்தில் அவள் ஒரு பள்ளி மாணவி போலத் தெரிகின்றாள்.

ரவிச்சந்திரன் : ஏய் மோகன்… பள்ளிக்கூடப் பிள்ளை போலக் கிடக்கு. பஸ் இனி இந்தப் பக்கம் வருமோ தெரியாது. நேரமும் இருட்டிப் போச்சு. பாவம். என்னெண்டு கேட்டுக் கூட்டிக் கொண்டு போய் விடுவோமா?

காரின் வேகம் குறைகின்றது. மோகன் சற்றுத் தயங்கியபடியே தலையை ஆட்டுகின்றான். கார் றிவேர்ஷில் திரும்புகின்றது. அந்தப்பெண் – அழகான பெண் காரிற்குக் கிட்ட வருகின்றாள்.

            மோகன்                   :           Where to go? (எங்கே போக வேண்டும்?)

            பெண்                       :           மில்பாங்க் றைவ்

ரவிச்சந்திரன்   :           எங்கடை இடத்திலையிருந்து ஒரு ஃபைவ்  

                         மினிற்ஸ் றைவ் தான். கூட்டிக்கொண்டு போவம்.

மோகன்                        :           Ok. Come… (சரி… ஏறுங்கோ)

அந்தப் பெண், காரின் பின் புறக் கதவைத் தானே திறந்து ஏறிக்கொள்கின்றாள். (கார்க் கதவு மூடும் சத்தம்) / (அவளது முகம் க்ளோஸ் அப்பில் காட்டப்படுகின்றது. இளம் பெண். பதினாறு வயது இருக்கும்.)

கார் பிரதான வீதியில் இருந்து உள்ளே திரும்புகின்றது. வீதியின் ஒருபுறம் வீடுகளும், மறுபுறம் `றிசேவ்’ ஆகவும் இருக்கும். அறுபது எழுபது வீடுகள் கொண்ட இருண்ட பயத்தை ஏற்படுத்தும்  `நோ எக்சிற்’ வீதி. பிரதானவீதியில் இருந்து உள் வீதியில் நுழையும் போது மழை பலக்கத் தொடங்குகின்றது. காரின் வானொலிச்சத்தத்துடன் மழை இரைச்சல் போட்டி போடவே மோகன் வானொலியை நிறுத்தி வைக்கின்றான். (சற்றே பயத்தை ஏற்படுத்தும் ஓசை, மழை பலக்கும் சத்தம்). இந்த இடத்தில் படத்தின் டைட்டில்கள் போடலாம்.

அந்தப்பெண் மோகனையும் ரவிச்சந்திரனையும் நோட்டம் விடுகின்றாள்.

            மோகன்                     : ரவி… வாசனை ஒரே தூக்குத் தூக்குது…

            ரவிச்சந்திரன்    : What is your name?      (உங்கடை பெயர் என்ன?)

            பெண்                          : (சத்தமில்லை)

            மோகன்                     : What are you studying? (நீங்கள் என்ன படிக்கிறியள்?)

            பெண்                          : (மெளனமாக இருக்கின்றாள்)

மோகன்                        : ரவி… உவள் குடிச்சிட்டு வந்திருக்கிறாள் போல. அதுதான் ஒண்டும் கதைக்கிறாள் இல்லை. மணம் போக பெர்வியூம் அடிச்சிருக்கிறாள். நீ ஒருக்கா காரை ஓரம் கட்டு…

ரவிச்சந்திரன்   : இவன் இனிக் கிறுக்குத்தனம் பண்ணப் போறான். என்ன நடந்தாலும் இனிப் பிடிபடப் போறது நானும் தான்.

கார் ஒரு ஓரமாக `ஹசாட் லைற்’ போட்டபடி நிற்கின்றது. மோகன் மழைக்குள் இறங்கி, பின்புறக் கதவைத் திறந்து, உள்ளே ஏறி அந்தப் பெண்ணின் பக்கத்தில் அமர்கின்றான். அவளை முகர்ந்து பார்க்கின்றான்.

            பெண்                        : The last house (கடைசி வீடு) (சொல்லிவிட்டு தலை குனிந்தபடி இருக்கின்றாள்.)

மோகன் திரும்பவும் காரில் இருந்து இறங்கி வந்து, முன்னாலே ஏறிக் கொள்கின்றான்.

மோகன்                        : எடு காரை. குடிச்சிருக்கிறாளா எண்டு அவளை நான் முகர்ந்து பாத்ன். ஆனால் அவள் குடிக்கேல்லை. நல்ல பிள்ளை. அச்சாப் பிள்ளை.

வீதியில் இரண்டொரு வீடுகளில் மாத்திரம் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. கடைசி வீடு `வெதர் போர்ட் ஹவுஸ்’. வீடு வெளிச்சமின்றி இருண்டு கிடக்கின்றது. கார் நிற்கின்றது. பெண் இறங்குகின்றாள்.

            பெண்                                      : Thanks… Bye..

            மோகன் & ரவிச்சந்திரன்          : Bye

பெண் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே செல்கின்றாள். கேற் கிரீச் என்று ஓசை எழுப்புகின்றது. மோகனும் ரவிச்சந்திரனும் காருக்குள் இருந்து அவள் போவதைப் பார்த்தபடி இருக்கின்றார்கள். கேற் ஓவென்றபடி திறந்து கிடக்கின்றது. சற்று நேரத்தில் வீடு வெளிச்சம் போடுகின்றது. இவர்கள் காரை `U’ ரேணில் திருப்பி போகின்றார்கள்.

கார் சிறிது நேரம் ஓடுகின்றது. தற்செயலாக காரின் பின் இருக்கையைத் திரும்பிப் பார்க்கின்றான் மோகன். அங்கே அந்தப் பெண் இருந்த இடத்தில் ஒரு `ஸ்காவ்’ (scarf) இருக்கின்றது.  (ஸ்காவ் க்ளோஸ் அப்பில் காட்டப்படுகின்றது)

மோகன்            : டேய் ரவி… கிளி ஸ்காவை விட்டிட்டுப் போட்டுது.  திருப்பு    காரை. குடுத்திட்டுப் போகலாம் (பதட்டத்துடன்)

கார் திரும்பி மீண்டும் பெண் வீட்டுக்குப் போகின்றது. அவர்கள் வீட்டு `லைற்’ எரிந்து கொண்டிருக்கின்றது. `கேற்’ ஓவென்று திறந்திருக்கின்றது. இருவரும் உள்ளே சென்று கதவைத் தட்டுகின்றார்கள். (கதவை மெலிதாகத் தட்டும் சத்தம்) வீட்டினுள் இருந்து குரல் ஒலிக்கின்றது. உள்ளிருந்து ஒரு மனிதர் நடந்து வரும் காலடிச்சத்தம். ஒரு முதியவர், எழுபது எழுபத்தைந்து வயதிருக்கலாம், கதவைத் திறக்கின்றார்.

மோகன்         : Not long ago. We brought a girl in our car and dropped her off here. She forgot this scarf(கொஞ்ச நேரத்துக்கு முன்னாலை – ஒரு பெண்ணைக் காரில் கொண்டுவந்து இங்கே இறக்கி விட்டோம். அவள் இந்த ஸ்காவை மறந்துபோய்  எங்கடை காருக்குள்ளை விட்டிட்டாள்.

மோகன் அந்த ஸ்காவை முதியவரிடம் நீட்டுகின்றான்.

 

முதியவர்    : She is my daughter. Come inside. (அவள் என்னுடைய மகள் தான். உள்ளே வாருங்கள்.)

முதியவர் இருவரையும் உள்ளே கூட்டிச் செல்கின்றார்.

 

காட்சி மாற்றம் 2

உள்

முதியவரின் வீடு

இரவு

உள்ளே மங்கலான வெளிச்சம். வீடு அலங்கோலமாகக் கிடக்கின்றது. சுவர்க்கடிகாரத்தின் ஒலியைத் தவிர வேறு சத்தம் இல்லை. சுவரில் மனைவி, மகளின் படங்கள் தொங்குகின்றன.

ரவிச்சந்திரன்    : எழுபது வயது முதியவருக்கு பள்ளி மாணவி வயதில் மகளா? (மோகனின் காதுக்குள் கிசுகிசுக்கின்றான்)

முதியவர்             : She is the one in this picture! (இந்தப் படத்தில் இருப்பவள் தானே! ) சுவரில் தொங்கும் படத்தைச் சுட்டிக் கேட்கின்றார்

மோகன்                   : yes…

முதியவர்                : She is my daughter. She died in a car accident at the age of sixteen. It happened when she went to school, thirty years ago. That time she was making a scarf. (அவள் என்னுடைய மகள் தான். தனது பதினாறு வயதில் கார் அக்‌ஷிடென்ற் ஒண்டில் இறந்து போனாள். முப்பது வருஷங்களுக்கு முந்தி அவள் பள்ளிக்கூடம் போகேக்கை நடந்தது. அப்ப அவள் ஸ்காவ் பின்னிக் கொண்டிருந்தாள்.)

முதியவரை, ரவிச்சந்திரனும் மோகனும் மேலும் கீழும் பார்க்கின்றனர். ரவிச்சந்திரன் பயந்தபடியே பின்புறமமாக அடியெடுத்து வைக்கின்றான். (பயத்தை ஏற்படுத்தும் ஓசை)

முதியவர்    : This is how she would occasionally get in the car and come here and leave. ( இப்பிடித்தான் இடைக்கிடை காரில் ஏறி இங்கே வந்துவிட்டுப் போவாள்.)

மோகன் சுவரில் தொங்கிய அந்தப் பதினாறு வயதுப் பெண்ணின் புகைப்படத்தை மீண்டும் பார்க்கின்றான். அது ஒருதடவை அவனைப் பார்த்துக் கண் சிமிட்டுகின்றது. ரவிச்சந்திரனைப் பார்க்கின்றான். அவன் அங்கு இல்லை. அவன் முன்னதாகவே ஓடிச் சென்று கார் கதவின் பக்கத்தில் நிற்கின்றான்.

                        மோகன்            : I am going. Bye. (போய் வருகின்றேன்.) (சொல்லிவிட்டு முதியவரின் பதிலுக்குக் காத்திராமல் அவசர அவசரமாக வெளியேறுகின்றான்)

                        முதியவர்    : Is good. Bye. (நல்லது. போய் வாருங்கள்.)

மூச்சிரைக்க பயக் கலக்கத்தில் வெளியே வருகின்றான் மோகன். காரடியில் ரவிச்சந்திரன் காரின் கதவைத் திறந்தபடி நிற்பதைப் பார்க்கின்றான்.

                        மோகன்            : ரவி… எடு காரை. சீக்கிரம்.

ரவிச்சந்திரன் மோகனது காற்சட்டையைப் பார்க்கின்றான். அது ஈரமாக நனைந்திருக்கின்றது. மோகன் பயத்தில் சிறுநீர் கழித்துவிட்டான் என்பதைக் கண்டுகொண்டான் ரவிச்சந்திரன். கார் கிரீச்சிட்டபடி விரைந்து புறப்படுகின்றது.

(முற்றும்) 


No comments: