எம் ஜி ஆர் உருவாக்கிய கட்சி பொன்விழா காணுகிறது! - ச .சுந்தரதாஸ்

.

தமிழ்நாட்டின் தனிப் பெரும் ஆளுமைகளில் ஒருவராகத் திகழ்ந்த புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் தொடங்கிய அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இவ்வாரம் பொன்விழா காணுகிறது.ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் 72ம் ஆண்டு அக்டோபர் 17ம் திகதி எம் ஜி ஆர் என்ற தனி மனிதனால் தொடங்கப் பட்ட இக் இக்கட்சி பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்து இன்றும் தொடர்ந்து இயங்குகிறது.


1949ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கிய போது அறிஞர் அண்ணா உட்பட ஐந்து தலைவர்களின் வழி நடத்தலுடனேயே அது ஆரம்பிக்கப்பட்டது.ஆனால் 23வருடங்கள் கழித்து தி மு க விலிருந்து எம் ஜி ஆர் விலக்கப் பட்டு அ தி மு காவை அவர் தொடங்கிய போத ,தனக்கு இருந்த மக்கள் செல்வாக்கை மட்டும் நம்பி தனி மனிதனாகவே அதனை உருவாக்கினார்.அரசியல் களத்தை பொறுத்த வரை இது ஒரு சாதனையாகும்.ஒரு சினிமா நடிகனால் கட்சி தொடங்கி என்ன சாத்தியது விட முடியும் என்று விமர்சனங்களும்,தாக்குதல்களும் முன்வைக்கப் பட்ட போதும் நடக்காததை நடத்திக் காட்டுபவனே விந்தைகளின் தந்தை என்பது போல் கட்சியைத் தொடங்கி அதனை ஆட்சிக்கு கட்டிலிலும் அமர்த்திக் காட்டியவர் எம் ஜி ஆர்.தி மு க வில் ஆளுமையும் செல்வாக்கும் மிக்க தலைவராக திகழ்ந்த எம் ஜி ஆரின் பெறுமதியை நன்கு உணர்ந்திருந்தவர் அண்ணா.எக் காரணம் கொண்டும் எம் ஜி ஆரின் மனம் நோகாமலேயே அவர் நடந்து கொண்டார்.1967ம் ஆண்டு தி மு க தமிழகத்தில் பதவிக்கு வந்த போது தான் அமைக்கவிருந்த அமைச்சரவை பட்டியலை மருத்துவ மனையில் எம் ஆர் ராதாவால் சுடப்பட்டு படுத்து கிடந்த எம் ஜி ஆரின் பார்வைக்குஅனுப்பி வைத்தார் அண்ணா.இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்றப்படுத்திய போதும் அண்ணா அது பற்றி கவலைப்படவில்லை.ஆஸ்பத்திரியில் படுத்துக்க கொண்டே தேர்தலில் பறங்கிமலை தொகுதியில் வெற்றி பெற்று தி மு காவுக்கே இன்ப அதிர்ச்சியை கொடுத்தவர் எம் ஜி ஆர்.ஆகவே எம் ஜி ஆர் ஒரு பொன் முட்டை இடும் வாத்து என்பதை அவர் நன்கு புரிந்திருந்தார்.

1969ல் அண்ணாவின் மறைவைத் தொடர்ந்து அடுத்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியா,அல்லது நாவலர் நெடுங்செழியனா என்ற பலப் பரிட்சை நடந்த போது கலைஞர் கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராவதற்கு எம் ஜி ஆர் தனது ஆதரவை வழங்கினார். ஆதரவு வழங்கிய எம் ஜி ஆருக்கும் ,கருணாநிதிக்கும் இடையே அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே மனக் கசப்பு வளர்ந்தது.அதன் எதிரொலியாக எம் ஜி ஆர் தி மு காவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.ஆனால் சற்றும் அசராமல் புதுக் கட்சி கண்டு ஜெயித்தார்.
எம் ஜி ஆர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதுக்கு பல காரணங்கள் கூறப் பட்ட போதும்,கழகத்தில் அண்ணாவைப் போல் கருணாநிதி தனக்கு உரிய இடம்,மரியாதை கொடுக்கவில்லை என்ற மனக் கசப்பே காரணமாக கணிக்கப்பட்டது.இந்த மனக் கசப்பை அன்று மத்தியில் ஆட்சி செய்த இந்திராகாந்தி தலைமையிலான இந்திரா காங்கிரஸ் கருணாநிதிக்கு எதிராக சரியான முறையில் பயன் படுத்தி வெற்றி கண்டது.

எம் ஜி ஆர் தொடர்ந்து தி மு காவில் இருந்திருந்தால்,அல்லது அவர் இருக்கும் படி கருணாநிதி நடந்திருந்தால் அ தி மு க என்ற கட்சியே உருவாகி இருக்காது.ஆனால் எம் ஜி ஆரை குறைத்து மதிப்பிட்டதன் பலன் அடுத்த 14ஆண்டுகளுக்கு முதலமைச்சர் நாற்காலியை கருணாநிதியிடம் இருந்து விலக்கி வைத்தது.

72ம் ஆண்டு கட்சி தொடங்கி 87ல் மறையும் வரை எம் ஜி ஆர் தமிழக முதல்வராக பதவியில் இருந்தார்.இவருடைய காலத்தில் சத்துணவு திட்டம் அமுலுக்கு வந்தது.ஆயிரக் கணக்கான ஏழை குழந்தைகளுக்கு பலன் அளித்தது.புதிய தமிழ் எழுத்துகளின் சீர்திருத்தம் அமுலானது.தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம் உருவானது.ஈழப் போரில் பாதிக்கப் பட்ட பொது மக்களுக்கும்,போராளிகளுக்கும் ஆதரவு கரம் நீட்டப்பட்டது,

எம் ஜி ஆரின் ஆட்சியின் போது எரிசாராய ஊழல்,போன்ற சில முறைகேடுகளும் சுட்டிக் காட்டப்பட்டன.அனாலும் எம் ஜி ஆர் என்ற தனி மனித சக்திக்கு முன்னால் அவை பிசுபிசுத்துப் போய் விட்டன.ஆனால் எம் ஜி ஆர் நோய் வாய்ப்பட்ட பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பங்கள் அவரை சலிப்படையச் செய்தன. கட்சியிலும்,எம் ஜி அரிடமும் ஜெயலலிதாவுக்கு இருந்த செல்வாக்கு கட்சியின் மூத்த தலைவர்களின் அதிருப்தியை பெற்றுக் கொண்டது.எம் ஜி ஆரின் நெருங்கிய சகாவான ஆர் எம் வீரப்பன் தலைமையின் கீழ் அவர்கள் அணிவகுத்தனர்.எம் ஜி ஆரின் மனைவியான வி என் ஜானகியின் ஆசிர்வாதமும் மாறைமுகமாக அவர்களுக்கு கிடைத்தது.இவை எல்லாம் எம் ஜி ஆரின் உடல் நிலையையும்,மன நிலையையும் வெகுவாக பாதித்தது. தனக்கு பின் கட்சியையும்,ஆட்சியையும் யார் வழி நடத்துவார்கள் என்பதை சுட்டிக் காட்டாமலேயே 1987 டிசம்பர் மாதம் 24ம் தேதி அவர் மறைந்தார்.அதன் பின் கட்சிக்குள் ஜானகி அணி ஜெயலலிதா அணி என்று இரண்டாகப் பிரிந்து முரண்பட்டவர்கள் ஆட்சியை கருணாநிதியிடம் காவு கொடுத்து விட்டு , பின்னர் ஓர் அணியாகி ஒற்றுமையானார்கள்.
அதன் பலனாக 1991ல் ஜெயலலிதா தலைமையிலான அ தி மு க அரசு பதவிக்கு வந்தது.ஆனால் அவர் தலைமையில்அரசால் எம் ஜி ஆர் போன்று தொடர்ந்து ஆட்சி செய்ய முடியவில்லை.சாண் ஏறினால் முழம் சறுக்குவது போல் ஒரு முறை ஆட்சி,மறுமுறை தோல்வி என்ற நிலையே நிலவியது.ஆனால் 2011ல் ஆட்சிக்கு வந்த அ தி மு க ஐந்து ஆண்டுகள் பதவியில் நீடித்து 2016ல் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.ஆனாலும் மிக குறுகிய காலத்துக்குளேயே ஜெயலலிதாவின் மறைவை அடுத்து கட்சிக்குள் சில பலப் பரீட்சைகள் இடம் பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நீடித்தது.

கடந்தாண்டு இடம் பெற்ற தேர்தலில் அ தி மு க தோல்வியை கண்டு தனது ஐம்பதாவது பிறந்த நாளின் போது எதிர் கட்சியில் அமர்ந்துள்ளது.அது மட்டுமன்றி கட்சிக்குள் உருவாகியிருக்கும் ஓ பி எஸ் ,இ பி எஸ் தலைமையில் ஆன மோதல்கள் கட்சித்தொண்டர்களிடையே விசனத்தை ஏற்டபடுத்தியுள்ளது.இன்னும் இரண்டாண்டுகளில் நடக்கவிருக்கும் இந்திய நாடாளுமன்ற தேர்தலில் இது எதிரொலிக்க கூடும்.அதற்குள் ஆளுமையும்,மக்கள் செல்வாக்கும்,செயல் திறனும் கொண்ட ஒருவரை அடையாளம் கண்டு அவர் தலைமையின் கீழ் செயல் பட்டாலேயே அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் முன்னேற்றம் காணும்!


No comments: