எழுத்தும் வாழ்க்கையும் - ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 35 குழந்தைகளிடமிருந்து நாம் கற்பதும் பெறுவதும் ! முருகபூபதி


ஒரு காலகட்டத்தில், எனக்கு நெருக்கமான சிநேகிதனாக இருந்தவன்  எனது மகன் முகுந்தன். அது அவனது இளமைப்பருவ காலம்.

இரவில் என்னோடுதான் உறங்குவான். அவ்வேளைகளில் அவனுக்கு


கதைகள் சொல்லவேண்டும்.  ( Bed time stories ) எனது பாட்டி தையலம்மா என்னை உறங்கவைத்த காலத்தில் எனக்குச்சொன்ன கதைகளைத்தான், காலப்போக்கில் நான் எழுத்தாளனாக வந்த பின்னர் பாட்டி சொன்ன கதைகள் தொடராக லண்டனிலிருந்து வெளியான தமிழன் இதழில் வெளியானது.

அந்தத் தொடர் புத்தகமாக்கப்பட்டபோது அதன் ஆசிரியர் எஸ்.கே. காசிலிங்கம் அணிந்துரை எழுதினார். மல்லிகைப் பந்தல் வெளியீடாக நண்பர் செ. கணேசலிங்கனின் ஏற்பாட்டில்  சென்னை குமரன் பதிப்பகத்தால் அச்சாகியது.  மல்லிகை ஜீவா அதற்கு பதிப்புரை எழுதியிருந்தார்.


இந்த நூலின் வெளியீட்டு நிகழ்வு 1997 இல் மெல்பனில் நடந்த பின்னர், எங்கள் நீர்கொழும்பில் மல்லிகை ஜீவா பாராட்டு விழாவுடன் பாட்டி சொன்ன கதைகள் நூலும் அங்கே அறிமுகப்படுத்தப்பட்டது என்ற செய்தியையும் வாசகர்களுக்கு கடந்த அங்கத்தில் சொல்லியிருந்தேன்.

இந்த நிகழ்விலெல்லாம் கலந்துகொண்ட எனது மகன் முகுந்தன், அவற்றில் பேசிய பேச்சாளர்களின்  உரைகளையும் மனதில் உள்வாங்கியிருந்தான்.

ஏற்கனவே நான் அவனுக்கு சொன்ன கதைகளாகவும் அவை இருந்தமையால், தனது ஆரம்ப பாடசாலையில்  ( Melbourne – Craigieburn Primary School ) மூன்றாம் வகுப்பில்  கதை எழுதும் பாடத்தில், எனக்கு பாட்டி சொல்லித்தந்து, நான் அவனுக்கு சொல்லிக்கொடுத்த மூளை என்ற கதையை ஆங்கிலத்தில் Brain  என்ற தலைப்பில் எழுதி, அதற்குப்பொருத்தமான படங்களையும் வரைந்து வகுப்பில்  காண்பித்து. ஆசிரியரின் ஊக்கமூட்டும் பதிவையும் அதற்கான வண்ண முத்திரையையும் பெற்றுவந்து எனக்கு காண்பித்தான்.

தொடர்ந்து வேறும் சில கதைகளையும் ஆங்கிலத்தில் எழுதியிருந்தான்.

பாட்டியின் முன்னோர்களிகளினால், பாட்டிக்கு கடத்தப்பட்டு, பின்னர் பாட்டியிடமிருந்து எனக்கு கடத்தப்பட்டு, அதன்பிறகு என்னிடமிருந்து எனது மகனுக்கு கடத்தப்பட்ட கதைகள் அவை.

அதனால், தலைமுறை தாண்டியும் வாழும் கதைகளாகிவிட்டன.

தமிழ்நாட்டில் பாட்டி சொன்ன கதைகளை அச்சிட்ட நண்பர் செ. கணேசலிங்கன் ஒரு பிரதியை  அங்கிருந்த  நூலக சேவைகளுக்கு அனுப்பியிருக்கிறார். அங்கிருந்தவர்கள் அதனைப்படித்துவிட்டு  மேலும் 700 பிரதிகளை கேட்டு வாங்கி ஆரம்ப பாடசாலைகளுக்கு சிறுவர் இலக்கிய வரிசையில் பரிந்துரைத்துள்ளனர். பின்னரும் 1500 பிரதிகளை கேட்டுப்பெற்றுள்ளனர்.

நண்பர் கணேசலிங்கனும்  அவர்கள் கேட்டவாறு மேலும் பிரதிகள் அச்சிட்டு கொடுத்துவிட்டு, எனது எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம் குறித்து சிலாகித்து எழுதியிருந்தார்.

அவர் நினைத்திருந்தால் அந்தத்  தகவலை என்னிடம்


மறைத்திருக்கலாம்.  அதனால் கிடைத்த ரோயல்டியை எனக்கு அனுப்பாமலேயே,  எனக்கு தகவலை சொல்லிவிட்டு,  என்னை ஒரு நாவல் எழுதுமாறு என்னை தொடர்ந்து  தூண்டினார்.  அவ்வாறு என்னை  எழுத வைத்த நாவலையும் அவரே அச்சிட்டு வெளியிட்டுத்தந்தார். அதுதான் பறவைகள் நாவல். அது 2002 ஆம் ஆண்டு வெளியானது.  அதற்கு 2003 ஆம் ஆண்டு இலங்கையில் தேசிய சாகித்திய விருது கிடைத்தது.

பாட்டி சொன்ன கதைகளை பாட்டிக்கே சமர்ப்பித்திருந்தேன்.

பின்னாளில் பாட்டி சொன்ன கதைகள் நூலை கொழும்பில் தமிழ்க்கதைஞர் வட்டத்தின் ஸ்தாபகர் வ. இராசையா மாஸ்டர் ( இலக்கியவாதி திருமதி வசந்தி தயாபரனின் தந்தையார் ) கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் அறிவோம் பகிர்வோம் நிகழ்ச்சியில் மதிப்பீடு செய்து உரையாற்றினார். அதன் எழுத்துப் பிரதியும் எனக்கு பின்னர் கிடைத்து ஊடகங்களிலும் வெளிவந்தது.


குறிப்பிட்ட நூலிலிருந்து சில கதைகளை தேர்ந்தெடுத்த செ. கணேசலிங்கனின் புதல்வர் குமரன், தனது இலக்கியன் பதிப்பகத்தின் மூலம், வண்ணப்படங்களுடன்  இரண்டாவது  பதிப்பை வெளியிட்டார்.

அதற்கு இலங்கை கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் அங்கீகார சான்றிதழும் கிடைத்தது.

கடந்த ஆண்டு ( 2021 ) மெல்பனில் குறிப்பிட்ட இரண்டாவது பதிப்பினை மல்லிகை ஜீவா நினைவரங்கில்  வெளியிட்டபோது, இங்கு பிறந்து வளர்ந்து படித்துக்கொண்டிருக்கும் ( மெல்பன் பாரதி பள்ளி மாணவர் ) செல்வன் ஹரீஜன் பசுபதிதாசன் தனது வாசிப்பு அனுபவத்தை உரையாக சமர்பித்தார்.

இவரது வாசிப்பு அனுபவம், யாழ். ஈழநாடு  வார இதழிலும் வேறும் சில ஊடகங்களிலும் ( அவுஸ்திரேலியா அக்கினிக்குஞ்சு – தமிழ் முரசு ) வெளிவந்தது.

கடந்த ஆண்டு மெல்பனில்,  பாட்டி சொன்ன கதைகளின்


வண்ணப்படங்களைக் கொண்ட புதிய பதிப்பு  எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய சட்டத்தரணி செ. ரவீந்திரன் அண்ணரினால் வெளியிட்டு வைக்கப்பட்டபோது, எனது சில குடும்ப நண்பர்களின் குழந்தைகளை அழைத்து வழங்கச்செய்தேன்.

அவ்வாறு பெற்றுக்கொண்டவர்களில் எனது பிள்ளைகள் பாரதி, பிரியா,  முகுந்தன் ஆகியோரின் குழந்தைகளும் இடம்பெற்றனர்.

ஆனால், இந்தச்செய்திகளை அறிவதற்கும் இக்காட்சிகளை காண்பதற்கும் எனது பாட்டி தையலம்மா இல்லை.  அவரது ஆத்மா பார்த்துக்கொண்டிருக்கும் என்ற குருட்டு நம்பிக்கையுடன் இந்தப்பதிவை எழுதுகின்றேன்.

எனது வாழ்வில் கிட்டும் சொந்தங்கள்  எவ்வாறு தொடர்கதையாகுமோ, அவ்வாறே எனது எழுத்துலக வாழ்வில் நான் எழுதிய சிறுவர் இலக்கியமும்  தொடர்கதையாகிவிட்டது.

1997 ஆம் ஆண்டு பத்துவயதிலிருந்த எனது மகன் முகுந்தனையும் அழைத்துக்கொண்டு இலங்கைக்கு பத்து ஆண்டுகளின் பின்னர் நான் சென்றபோது பல சுவரசியமான சம்பவங்களும் நடந்தன.

குழந்தைப் பருவத்தில் கொழும்பிலிருக்கும் அவுஸ்திரேலியத் தூதரகத்திற்கு சென்றிருக்கும் ( 1991 இல் ) மகன்  அதன்பின்னர், என்னுடன்தான் 1997 இல் கொழும்புக்கு வந்தான்.

புறக்கோட்டை பஸ் நிலையத்தில் அவன் கேட்ட ஓசைகளும் கண்ட காட்சிகளும் அவனுக்கு சற்று கலக்கத்தை தந்துவிட்டன.


மெல்பனில் வாகனங்களின் தொடர்ச்சியான ஒலி எழுப்பும் ஓசைகளை கேட்காதிருந்த அவனுக்கு கொழும்பில் வாகனங்கள் எழுப்பிய தொடர்ச்சியான ஓசை அதிர்ச்சியை தந்தது. காதை பொத்திக்கொண்டு,  எனது கையை இறுகப்பற்றியவாறு வந்தான்.

புறக்கோட்டையிலிருந்து வெள்ளவத்தைக்கு செல்வதற்காக பஸ்தரிப்பிடத்தில் நின்றபோது, எதிர்ப்புறமாக ஒரு பஸ்வண்டிக்கு அருகில் நின்ற ஒருவன்  “ பொரளை… பொரளை … மருதானை… மருதானை  “    என்று தொடர்ச்சியாக கத்திக்கொண்டிருந்தான்.

மகன் என்னை இறுக அணைத்துக்கொண்டான்.

 “ அப்பா… அந்த ஆள் என்ன சொல்கிறான்..?  “

மகன் காண்பித்த திக்கின் பக்கம் பார்த்தேன்.

 “ தம்பி… இங்கே பொரளை என்ற ஊர் இருக்கிறது. அந்த ஊருக்கு மருதானை என்ற ஊருக்கூடாகச்செல்ல முடியும். அவன் அந்த பஸ்ஸின் கண்டக்டர் ( நடத்துனர் ). அவன் பயணிகளை அழைக்கின்றான்.  “

 “ அப்பா… இந்த ஊரில் இருக்கும் ஆட்களுக்கு எழுத வாசிக்கத் தெரியாதா….?  “

 “ ஏன் தெரியாது…? இவர்களும் படித்தவர்கள்தான்  “ என்றேன்.

                                               “ அந்த பஸ்ஸில் பொரளை – மருதானை


என்று எழுதியிருப்பார்கள்தானே..? அதனைப்பார்த்து வாசித்து விட்டு அவர்கள் ஏறிச்செல்லலாம்தானே..? அந்த ஆள் ஏன் அவ்வாறு கத்திக்கத்தி தனது சக்தியை ( Energy ) விரையம் செய்கிறான்..?  “ எனச்சொன்ன மகன், அதன்பிறகு எனது இடுப்பிலிருந்து தனது கைகளை தளர்த்தினான்.

மாலையில் ஊருக்குத் திரும்பும்போது  புறக்கோட்டை பஸ் நிலையத்தில் இருவரும் பொது மலகூடத்தில் சிறுநீர் கழிக்கச்சென்றோம்.  வெளியே வரும்போது  அதன் வாயிலில் நின்ற ஒருவர் எம்மிடம் இரண்டு ரூபா பணம் கேட்டார்.

 “ ஏன்… ?   “ எனக்கேட்டேன்.

 “ அங்கே சிறுநீர் கழித்தால், அதற்கான கட்டணம்தான் அது .. “ எனச்சொல்லி பணத்தை பெற்றுக்கொண்டார்.

இந்தக் காட்சியும் எனது மகனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 “ எங்கட மூத்திரத்திற்கும் நாம் இங்கே பணம் கொடுக்கவேண்டுமா அப்பா..? !  “ எனக்கேட்டான்.

மகன் அத்துடன் நிற்கவில்லை.  வீடு திரும்பியதும்  நீர்கொழும்பில் , எனது அக்கா, தங்கை, தம்பிமாரின் பிள்ளைகளிடம் வந்து,  “ கொழும்பில் தனதும் அப்பாவினதும்  மூத்திரத்திற்கும் பணம் வாங்கினார்கள். அப்பா கொடுத்தார்.  ஒன்றுக்கு ஒரு ரூபா ! இரண்டுக்கும் இரண்டு ரூபா !  “ என்று சொல்லிச்சிரித்தான்.  நாம் அவுஸ்திரேலியா திரும்பும் வரையில் இந்தக்கதையே எங்கள் வீடுகளில் பெரும் கதையாக பேசப்பட்டு சிரிக்கப்பட்டது.

அடுத்துவரவிருக்கும் 36 ஆம் அங்கத்தில் வெளிநாடொன்றிலிருந்து தனது புதல்வனுடன் சென்ற ஒரு அன்பர் எனக்குச்சொன்ன கதையுடன் வாசகர்களை சந்திப்பேன்.

அதுவரையில் காத்திருங்கள்.

( தொடரும் ) 
No comments: