இருண்ட அறைக்குள் கறுத்தப் பூனைகளைத் தேடும் அரசியல் ! அவதானி

இலங்கையில் தொடர்ந்தும் மின்வெட்டு நடைமுறையிலிருக்கிறது.


  எந்த நேரத்தில்  மின்வெட்டு வரும் என்பது தெரியாமல்,  மக்கள் தங்களது அன்றாட நிகழ்ச்சி நிரலை அமைக்க வேண்டியிருக்கிறது.

மின்வெட்டினால்,  மாணவர்களின் கல்வி மட்டுமல்ல,  மருத்துவம், உற்பத்தி,  கணினி தொழில் நுட்பம், பொருளாதாரம், உட்பட பல  அத்தியாவசிய தேவைகளும் - சேவைகளும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது.


இந்தப்பின்னணிகளுக்கு மத்தியில்தான், மக்களின் வரிப்பணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் சில அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் வாசஸ்தலத்தின் மின்கட்டணங்கள் முறையாக இதுவரை செலுத்தப்படவில்லை என்ற செய்திகளும் கசிகின்றன.

இதுபற்றி பாராளுமன்றத்திலும் குரல்கள் எழுந்தபோது,  ஆளையாள் குற்றம் சுமத்தும் நாடகங்கள்தான் அரங்கேறிவருகின்றன.

எதிர்தரப்பைச் சேர்ந்த  பாராளுமன்ற உறுப்பினர்  ஒருவர் தங்கியிருக்கும் அரச வாசஸ்தலத்தில் மின்கட்டண நிலுவை   இருப்பதாக அரச தரப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினால்,  “ அது தான் செலுத்தவேண்டிய கட்டணம் அல்ல, தனக்கு முன்னர் அங்கு குடியிருந்த அரசியல்வாதி செலுத்தாமல் விட்ட கட்டணம்  “  என்கிறார் அவர்.

அத்துடன், இதுவரையில் மின்சார கட்டணம் செலுத்தாத அமைச்சர்களையும்  பாராளுமன்ற உறுப்பினர்களையும் சுட்டிக்காண்பிக்கிறார்.

இவ்வாறு ஆளையாள் குற்றம் சுமத்திக்கொண்டு காலத்தை கடத்தி வருகின்றனர்.

வடக்கிலே புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஒரு பொது நூலகம் மின்சார கட்டணத்தை செலுத்தவில்லை என்பதற்காக மின்சார சபை அதன் மின் இணைப்பினை துண்டித்துவிட்ட செய்தி பற்றி கடந்த வாரம் சுட்டிக்காண்பித்திருந்தோம்.

மக்கள்,  குறிப்பாக வாசகர்கள், மாணவர்கள் பயன்படுத்திவந்திருக்கும் ஒரு நூலகத்திற்கு மின்சார சபை காண்பித்திருக்கும் நீதி, இந்த அரசியல்வாதிகள் தங்கியிருக்கும் அரசுக்கு சொந்தமான வாசஸ்தலங்களின் மின்கட்டண நிலுவைக்கு என்ன செய்தது? எனக்கேட்கத் தோன்றுகிறது.

அமைச்சர்கள், எம். பி.க்களுக்கு வாசஸ்தலங்களை


ஏற்படுத்திக்கொடுப்பதுடன், அவர்களின் சிறப்புரிமைகள் குறித்தும் கவனம் செலுத்திவரும் சபாநாயகருக்கு இத்தகைய செய்திகள் எட்டுவதில்லையா..?

அமைச்சரவை இதுவரையில் எத்தனை முறை மாற்றப்பட்டிருக்கிறது..?  புதிதாக நியமனம் பெற்றுள்ள பல இராஜாங்க அமைச்சர்களுக்கு தாங்கள் செய்யவேண்டிய கடமைகள் யாவை என்பது பற்றியும் தெரியாதிருக்கிறதாம்.

நாட்டிலே எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால், மசகு எண்ணெயுடன் வந்த கப்பல் ஒன்று,  பணம் செலுத்தாமையினால் காத்து நிற்கிறது !

கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக  கடலில் நிற்கும் இக்கப்பலுக்காக, ஒருநாள் தாமதக்கட்டணம் 150, 000 ஆயிரம் அமெரிக்க டொலர்களை அரசு  செலுத்தவேண்டியிருக்கிறது.

மொத்தத்தில் தரையிலும் கடலிலும் கட்டண நிலுவை !

ஒன்று மின்சாரம் சார்ந்தது மற்றது எரிபொருள் சார்ந்தது. இவை இரண்டும் மக்களுக்கு அத்தியாவசியமானவை.

இது இவ்விதமிருக்க, நிருவாகக் குறைபாடுகள் காரணமாகவும் பொருத்தமற்ற செயற்பாடுகளினாலும் இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம் 90 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்துள்ளது. இதன் இலங்கை நாணயப் பெறுமதியை கணித்துக்கொள்ளுங்கள்.

 இதே வேளை,  ரணில் விக்கிரமசிங்கா  ஜனாதிபதியாகவிருக்கும் தினேஷ் குணவர்தனா பிரதமராகவிருக்கும் அரசாங்கம், அவசரமாக முன்னுரிமை கொடுத்து கவனிக்கவேண்டிய விடயங்களை தேசிய சமாதானப் பேரவை பட்டியல் மூலம் சுட்டிக்காண்பித்துள்ளது.

அத்துடன்,   “ காலத்தை கடத்த நிராகரிப்பு அல்ல,     ஆட்சி முறையில் அரசியல் ஞானமே அவசியம்  “ எனவும் வலியுறுத்தியுள்ளது.

1993-1994, 2001-2004, 2015-2018, 2018-2019, 2022   காலப் பகுதிகளில் ஐந்து தடவைகள் பிரதமராகவும், 1994-2001, 2004-2015 காலப்பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவராகவும், தற்போது அடித்த சுக்கிரதிசையினால் 134 வாக்குகளில்  ஜனாதிபதியாகவும் பதவியிலிருப்பவர்தான் ரணில் விக்கிரமசிங்கா.

இவருக்குத் தெரியாத அரசியல் ஞானமா..? எனவும் சிலர் கேட்கலாம்.

ஆனால், இன்றைய அவரது ஞானம் ராஜபக்‌ஷவினரின் மொட்டுக்கட்சியின் தாளத்திற்கு ஏற்ப ஆடுவதற்கே தூண்டுகிறது.

அதனால், மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் நிகழப்போகிறது.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ வசித்த அரசின் அதிகாரபூர்வ வாசஸ்தலமே, தனக்கு இனிமேல்  வசிப்பதற்கு அரசு தரவேண்டும் என்று நாட்டைவிட்டு ஓடிச்சென்று திரும்பி வந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷ கேட்டுள்ளார்.

இந்த அண்ணன் தம்பிகளுக்கு தலைநகரத்தில் வேறு வீடுகள் உண்மையிலேயே இல்லையா..? 

நாடு,  கொவிட் பெருந்தொற்று நீடித்தமையாலும் அரசியல் ஸ்திரத்தன்மையை இழந்தமையினாலும்,  எரிபொருள், அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு முதலான காரணிகளினாலும் அதளபாதாளத்தை நோக்கிச்சென்றுகொண்டிருக்கும்போது,  வீடு வாசல்கள், சொத்து சுகம் இருப்பவர்களுக்கு மேலும் வீடுகள்  தேவைப்படுகிறது.!?

மின்சாரக்கட்டணம் செலுத்தாமலிருக்கும் ஒரு சிரேஷ்ட அமைச்சர்,  சில வருடங்களுக்கு முன்னர் வெளிநாடு ஒன்றுக்கு வந்தவிடத்தில் கவனக்குறைவினால் தங்கியிருந்த உல்லாச விடுதியின் மாடியிலிருந்து தவறி விழுந்து காலை முறித்துக்கொண்டவர். 

அவருக்கான மருத்துவ செலவுகளையெல்லாம் அன்றைய மகிந்தரின் அரசே கவனித்தது.

தற்போது அதே அமைச்சர் மின்கட்டணம் செலுத்தாமலிருக்கிறார்.  அதனையும் தற்போதைய ரணில் அரசு செலுத்தும் என்ற நம்பிக்கையில் அவர் இருக்கக்கூடும்.

இந்த இலட்சணத்தில்,  தங்களை விமர்சிக்கவேண்டாம் என அவர் தரப்பில் சொல்லப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மூலகர்த்தாக்கள் ராஜபக்‌ஷ குடும்பத்தைச் சேர்ந்த மூன்று அண்ணன் தம்பிகளும் சில அமைச்சர்களும்தான் என சுட்டிக்காண்பித்து அவர்களுக்கு எதிரான வழக்கொன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

இந்த நெருக்கடிக்கு இவர்களே பொறுப்புக் கூறல்வேண்டும் என்று உயர்நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் நாட்டை விட்டுச்சென்ற முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ மீண்டும் திரும்பி வருவாரா என்பதிலும் சந்தேகம் நிலவுகிறது.

இவர்கள் இதற்கு முன்னர் இதுபோன்ற எத்தனை வழக்குகளை சந்தித்தவர்கள் ? ! வழக்கம்போன்று தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்.

அரச நிருவாகக் கொள்கைகளை நவீனமயப்படுத்துவதற்காக தேசிய சபையும், அதற்கு ஆலோசனை வழங்கும் உப குழுக்களும் அமைக்கப்படுகின்றன.

ஆனால்,  இவை இலங்கையில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் முதலானவற்றில் நவீனத்துவத்தை காணப்போகின்றதா..? அல்லது தொடர்ந்துகொண்டிருக்கும்  நட்டங்களை முற்றாக நீக்கி,  வசூலிக்கவேண்டிய நிலுவைகளைப்பெற்று அரச திரைசேரிக்கு வழங்கப்போகின்றதா…?  என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

நாட்டுக்கு மின்சார கட்டண நிலுவைகளை செலுத்தாமல்  காலத்தை கடத்திக்கொண்டிருக்கும் அமைச்சர்கள், பல வருடங்களுக்கு முன்னர்  எம். பி. ஆகவும் அமைச்சராகவும் பிரதமராகவும் பணியாற்றி, பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவாக பணிஸ் வழங்கிய ( கல்வி அமைச்சராகவிருந்தபோது ) கலாநிதி தகநாயக்கா அவர்களின் எளிமையான வாழ்க்கையை விசாரித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

நாட்டு மக்களின் வரிப்பணத்தில் வாழும் அரசியல்வாதிகள், நட்டுக்கு செலுத்தவேண்டிய கட்டணம் கூடிக்கொண்டே செல்கிறது.

அதனை யார்தான் வசூலிப்பார்..?

---0--- No comments: