உலகச் செய்திகள்

 இந்தியா – அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்கள் இடையே சந்திப்பு

ஆங் சான் சூகிக்கு 26 ஆண்டுகள் சிறை

மே 06 முடிசூடுகிறார் மன்னர் மூன்றாம் சார்ள்ஸ்

உக்ரைனிய நகரங்கள் மீது ரஷ்யா சரமாரித் தாக்குதல்

ரஷ்யாவைக் கண்டித்து ஐ.நாவில் அதிக வாக்கு

சவூதி - அமெரிக்கா இடையே வெளிப்படை மோதல்


 இந்தியா – அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்கள் இடையே சந்திப்பு

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை கட்டும் அவுஸ்திரேலியாவின் திட்டம் தொடர்பில் இந்தியாவுக்கு எதிர்ப்பு இல்லை என்றும் இது பற்றி சர்வதேச அணு கண்காணிப்பகத்தில் ஆதரவை அளிக்கும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார்.

ஏ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பொருளாதார உறவுகள் தொடர்ந்து நீடிப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய இடைக்கால வர்த்தக உடன்படிக்கை ஒன்று வர்த்தக உறவுகளை வலுப்படுத்த உதவும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார். ஆஸி. சென்ற எஸ். ஜெய்சங்கர் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் பென்னி வொங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.   நன்றி தினகரன் 






ஆங் சான் சூகிக்கு 26 ஆண்டுகள் சிறை

- மேலும் 2 ஊழல் குற்றச்சாட்டுக்கு நீதிமன்றம் தீர்ப்பு

தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கில் மியன்மாரின் முன்னாள் அரச தலைவி ஆங் சான் சூகியின் (77 வயது), சிறைத் தண்டனை 26 ஆண்டுகளாக நீடித்து நேற்று (12) மியன்மார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மியன்மாரின் இராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி. மியான்மரில் கடந்த 2020 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சியை பிடித்தது.

என்றாலும் தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பெப்ரவரியில் இராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. ஆங் சான் சூகி, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

அவர் மீது இராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டியது, கொரோனா விதிகளை மீறியமை, அலுவலக ரீதியான சட்டங்களை மீறியமை, ஊழல் முறைகேடுகள் என வழக்குகள் தொடரப்பட்டன.

இது தொடர்பான விசாரணை மியன்மார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த டிசம்பரில் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், சூகிக்கு இதுவரை 11 வழக்குகளில் 23 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்மீது மேலும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், சூகி மீதான மேலுமொரு வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில், இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதையடுத்து, குறித்த குற்றச்சாட்டுகளுக்கு தலா 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இச்சிறைத் தண்டனையை ஒரே தடவையில் 3 வருடமாக நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியான Maung Weik என்பவரிடமிருந்து இலஞ்சமாக 550,000 டொலர் பெற்றதாக அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இதன்மூலம், ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை 26 வருடங்களாக நீடிக்கப்பட்டுள்ளது.    நன்றி தினகரன் 






மே 06 முடிசூடுகிறார் மன்னர் மூன்றாம் சார்ள்ஸ்

மே ஆறில் முடிசூடுகிறார் மன்னர் மூன்றாம் சார்ள்ஸ்

பிரிட்டிஷ் மன்னர் சார்ள்ஸ் அடுத்த ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி முடிசூட்டப்படவுள்ளார். பக்கிங்ஹம் அரண்மனை அந்தத் தகவலை வெளியிட்டது.

73 வயது மன்னர், 900 ஆண்டு பழைமையான சடங்கில் அரியணை ஏறுவார். வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அவரது துணைவியார் கமிலாவும் முடிசூட்டப்படுவார். எலிசபெத் மகாராணி கடந்த மாதம் 8ஆம் திகதி காலமானார். அவரது புதல்வரான சார்ள்ஸ் உடனடியாக மன்னராகப் பதவியேற்றார்.

அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட 14 பொதுநலவாய நாடுகளின் சடங்குபூர்வத் தலைவராகவும் மன்னர் சார்ல்ஸ் பொறுப்பேற்றார்.

1953ஆம் ஆண்டுக்குப் பின் முதல்முறையாக நடைபெறும் முடிசூட்டு விழாவை பார்க்க ஆயிரக் கணக்கானோர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   நன்றி தினகரன் 






உக்ரைனிய நகரங்கள் மீது ரஷ்யா சரமாரித் தாக்குதல்

- பாரிய உயிர் மற்றும் பொருள் சேதம்

உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் மீது நேற்று (10) பரபரப்பான காலை நேரத்தில் ரஷ்யா சரமாரி ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதோடு இதனால் பல பொதுமக்கள் கொல்லப்பட்டு கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.

ரஷ்யாவை இணைக்கும் கிரிமியா பாலத்தில் இடம்பெற்று குண்டு வெடிப்பை ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்த நிலையில் அதற்கு பதிலடி கொடுப்பதாகவே இந்தத் தாக்குதகள் இடம்பெற்றுள்ளன.

இதில் தலைநகர் கீவில் தாக்குதல்கள் தீவிரமாக இருந்தது. இதனால் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு ஓட்டம் பிடித்ததோடு கரும்புகை வானை முட்டியது.

உக்ரைனின் மேற்கிலுள்ள லெவிவ், டெர்னோபில் மற்றும் சிடோமிர், அதேபோன்று மத்திய நகரான ட்னிப்ரோவிலும் வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.

கீவின் பரபரப்பான வீதி ஒன்றில் குண்டு வெடிப்பால் பாரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. கார்கள் சிதறிக் காணப்படுவதோடு கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. அவசரப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தலைநகரில் இடம்பெற்ற ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது எட்டுப் பேர் கொல்லப்பட்டு மேலும் 24 பேர் காயமடைந்திருப்பதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முக்கிய கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.

“ரஷ்யா எம்மை இந்த பூமியில் இருந்து முற்றாக அழித்தொழிக்க முயற்சிக்கிறது” என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

இதில் கார்கிவ்வின் வலுசக்தி கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் மின்சார மற்றும் நீர் துண்டிப்பு ஏற்பட்டிருப்பதாக அந்த நகர மேயர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது 75 ஏவுணைகள் வீசப்பட்டிருப்பதாக உக்ரைன் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இவைகளில் 41 ஏவுகணைகளை வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் முறியடிக்க முடிந்ததாக அது தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்களால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.   நன்றி தினகரன் 




ரஷ்யாவைக் கண்டித்து ஐ.நாவில் அதிக வாக்கு

உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை தனது ஆட்புலத்திற்குள் இணைக்கும் ரஷ்ய முயற்சியை கண்டித்து ஐ.நா பொதுச் சபையில் அதிகப் பெரும்பான்மை வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகள் வாக்களித்ததோடு சீனா மற்றும் இந்தியா உட்பட 35 நாடுகள் வாக்களிப்பதை தவிர்த்துக்கொண்டன. ரஷ்யாவுடன் பெலாரஸ், வட கொரியா, சிரியா மற்றும் நிகரகுவா ஆகிய நாடுகள் எதிராக வாக்களித்தன.

ஓர் அடையாள வாக்குப் பதிவாக இருந்த இந்தத் தீர்மானம், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்குப் பின் அந்த நாட்டுக்கு எதிராக பதிவான அதிக வாக்குகளாக இருந்தன.

கிரம்லினில் கடந்த வாரம் இடம்பெற்ற கோலாகலமான நிகழ்ச்சி ஒன்றில் வைத்து லுஹன்ஸ்க், டொனட்ஸ்க், சபொரிசியா மற்றும் கர்சோன் ஆகிய கிழக்கு உக்ரைனிய பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் ஆவணத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கைச்சாத்திட்டார்.

இந்நிலையில் உக்ரைனிய பாகங்களை இணைக்கும் எந்த ஒரு கூற்றையும் கோரிக்கையையும் சர்வதேச சமூகம் ஏற்காது என்றும் அது உடன் திரும்பப்பெற வேண்டும் என்றும் ஐ.நா கொண்டுவந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.   நன்றி தினகரன் 






சவூதி - அமெரிக்கா இடையே வெளிப்படை மோதல்

எண்ணெய் உற்பத்தி நாடுகளின் ஒபெக் பிளஸ் அமைப்பு எண்ணெய் உற்பத்தியை குறைக்க தீர்மானித்ததை அடுத்து அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியாவுக்கு இடையே வெளிப்படையான வார்த்தை மோதல் வெடித்துள்ளது. சவூதி அறிந்து கொண்ட ரஷ்யாவின் நலனை பலப்படுத்த செயற்படுகிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

ரஷ்யா உள்ளடங்கிய சவூதி தலைமையிலான ஒபெக் பிளஸ் அமைப்பு, வரும் நவம்பர் தொடக்கம் தினசரி எண்ணெய் உற்பத்தியில் இரண்டு மில்லியன் பீப்பாய்களை குறைக்க முடிவெடுத்தது அமெரிக்காவின் கோபத்தைத் தூண்டியுள்ளது. இது அதிகரித்து வரும் எண்ணெய் விலையில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்நிலையில் மிக அரிதான ஊடக அறிக்கை ஒன்றை கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட சவூதி அரேபியா, அமெரிக்காவின் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்தது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யப் போரில் சவூதி ஒரு பக்கம் சார்வதான குற்றச்சாட்டையே அது மறுத்திருந்தது.

எனினும் வெள்ளை மாளிகை பேச்சாளர் ஜோன் கிர்பி உடன் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். எண்ணெய் உற்பத்தியை குறைத்தால் ரஷ்யாவின் வருவாய் அதிகரிக்கும் என்பதும் அந்த நாட்டின் மீதான தடைகள் பலவீனப்படும் என்பதும் சவூதிக்குத் தெரியும் என்று அவர் கூறினார்.

இந்த உற்பத்திக் குறைப்பு தொடக்கம் எண்ணெய் வளம் கொண்ட சவூதியுடனான உறவை மீளாய்வு செய்யப்போவதாக அமெரிக்கா கூறி வருகிறது. ஒபெக் பிளஸின் முடிவு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் இராஜதந்திர பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஜமால் கசோக்கியின் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் சவூதி உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தபோதும், கடந்த ஜூலையில் பைடனின் சவூதிப் பயணம் அந்த முறுகலை தணிப்பதாக இருந்தது. “ஒபெக்கின் விநியோகக் குறைப்புக்கான முடிவு தார்மீக ரீதியில் இராணுவ அடிப்படையிலும் போருக்கு நிதி திரட்டுவதற்கு அனுமதிப்பதாக உள்ளது” என்று கிர்பி குறிப்பிட்டுள்ளார். இது வழக்கத்துக்கு மாறான கடினமான சொற்பிரயோகமாக பார்க்கப்படுகிறது.

பைடனின் ஜனநாயகக் கட்சி வரும் நவம்பரில் இடைக்காலத் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் முக்கியமான நேரத்திலேயே இந்த எண்ணெய் குறைப்பு இடம்பெற்றுள்ளது. நுகர்வுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, குறிப்பாக பெற்றோல் விலை உயர்வு தேர்தலில் தாக்கம் செலுத்தும் ஒன்றாக உள்ளது.

சவூதியின் இந்த முடிவு பற்றி லொஸ் ஏஞ்சல்ஸில் வைத்து செய்தியாளர்கள் கேட்டபோது, “அவர்களுடன் இது பற்றி நாம் பேசுவோம்” என்று பைடன் பதிலளித்தார்.

ஒபெக்கின் இந்த முடிவு வெறுமனே பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட ஒன்று என்று சவூதி அரேபியா தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆயுத விற்பனை உட்பட எல்லா வகையிலும் சவூதி அரேபியாவுடன் ஒத்துழைப்பதை அமெரிக்கா உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியின் செனட்டரும் அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுக் குழுத் தலைவருமான பாப் மெனெண்டெஸ் கூறியுள்ளார்.      நன்றி தினகரன் 



No comments: