தமிழக் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் பத்தாவது வருட நிறைவு விழாவிலே அளிக்கப்பெற்ற வாழ்த்துப்பா

 


பத்து ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்தமையைக்; கொண்டாடும் முகமாகச் சென்ற 9 -  10 2022 ஞாயிற்றுக் கிழமை  ஒரு இரவு உணவு நிகழ்வுடன் கூடிய பெரு விழா ஒன்றினைப் பெருமையுடன்  தமிழ்க்கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் அரங்கேற்றியது.  பெருந் திரளாக வருகை தந்து சிறப்பித்த அந்த விழாவிலே வழங்கப்பெற்ற வாழ்த்துப் பாவை தமிழ்முரசு நேயர்களுடன் பகிர்வதிலே மகிழ்ச்சி அடைகிறேன்.

 கலைமற்றும் தமிழோடு பண்பாடு வளர்த்துக்

                காலத்தின் தேவைதனைப் பூர்த்தி செய்து

விலையறியாத் தனிப்பெருமை கொண்டு பணியில்

                மிகவுயர்ந்து பலர்வாழ்த்த மிளிரும் கழகம்!

தலையாய கழகமெனத் தரணி போற்றத்

                தகைமைசால்  செயற்குழுவும் திறமையோடியக்க

நிலையாக என்றென்றும் கற்பக தருப்போல்

                நின்றுயர்ந்து பலனியற்றி வாழி! வாழி!!


துறைபோன தமிழறிஞர் பலரை அழைத்தவர்

                சொல்;வன்மை விஞ்சவெழும் இலக்கிய விருந்தால்

நிறைவாகத் தமிழின்தேன் மதுரச் சுவையை

                நெஞ்சமெலாம் நிரப்பிடுதே! தமிழரைத் தன்னுட்

சிறைவைத்துத்  தினம்மகிழும் சீர்மிகு  கழகஞ்

                சிறந்துயர ஆணிவேராய்த் திகழுஞ் செம்மல்

மறைபோற்றும் மதுரைப்பதி மண்ணின் மைந்தன்

                மாமனிதன் அனகன்பாபு வளர்த்திட  வாழி!


சிந்தனைசொல் செயல்களிலே திறமை மிக்க

                செயற்குழுவின் கைவண்ணம்செம்மை கூட்ட

விந்தைமிகு கலைஞரையும் சேர்த்த ழைத்தோர்

                வெற்றிவிழா வெனச்சித்திரைத் திருவி ழாவும்

செந்தமிழர் கொண்டாடும் புத்தாண்டை ஒட்டிச்

                சீராய்முத்திரைபதித்தெமைக் கிறங்க வைத்துச்

சுந்தரஞ்சேர் கந்தகுகன் அருளால் இன்றும்

                சோபித்துப் பெருவிழாவாய்த் தொடரு தையா!


பாராளு மன்றங்கள் இரண்டிலுந் தொடர்ந்து

                பாரம்பரி யப்பொங்கல் விழாக்களை நடாத்திச்

சீராகச் செயலாற்றிச் சரித்திரம் படைத்துச்

                சிம்மநடை போடுதேபண் பாட்டுக் கழகம்

சோராது கழகத்தோர் சுயநல மின்றித்

                தூயதமி ழோடுகலை வளர்த்து வாழி!

காரானை முகத்தானின் அருட்செயல் தானோ?

                காலத்தை வென்றென்றும் நிலைத்து வாழி!.


அருங்கலைகள் பலவளர்க்க ஆண்டு தோறும்

                அற்புதமாய்  விழாவெடுக்குங்கழகம் வாழி!

பெருவிழாக்கள் தந்திடுதே எனப்பலர் வியந்து

                பேறாகப் பெற்றோமென்(று) உவக்க வாழி!

திருவருளின் துணையுடனே ஓர்பத் தாண்டின்

       திறங்கூறும் நிறைவுவிழா நனிசி றக்க

ஒருமனதாய் அறிஞரெலாங் கூடி வாழ்த்த

                உவந்தினிதே பாரதியும் வாழ்த்த வாழி!

 

      

 


இயற்றியவர்--

 சிவஞானச் சுடர் பல்வைத்திய கலாநிதி

 பாரதி இளமுருகனார்.

சிட்னி - அவுஸ்திரேலியா

 

No comments: