பூமி காட்டும் புதினம் (பயணக் குறிப்புகள்) (கன்பரா யோகன்)


நாங்கள் நோர்வேயில் தரையிறங்கத் தீர்மானித்திருந்தது பேர்கன் நகரிலுள்ள விமான நிலையத்தில்தான்.  

துபாயிலிருந்து நேரடியாக பேர்கன் செல்ல முடியாததால் டென்மார்க்கின் கோபன்ஹேகன் விமான நிலையம் சென்று அங்கிருந்து ஸ்கண்டிநேவியன் எயர் லைன்ஸ் மூலம் பேர்கனுக்குப் பயணித்தோம். விமானம் பறக்கத் தொடங்கியபோது மதியம் ஒரு மணி. நல்ல வெயில் வெளிச்சத்தில் கீழே டென்மார்க்கின் இரு தீவுகளையும் இணைக்கும் பாலமும் விரிந்து கிடந்த நீலக் கடலும் மனதை உற்சாகத்தில் நனைத்தது.

அரைவாசி தூரத்தைக் கடந்திருப்போம். வெளியே பார்த்தேன்.


விமானம் அசையாமல் நடுக்கடலில் மேல் நின்றது தெரிந்தது.  மனம் துணுக்குற்றது. சில வினாடிகளில் விமான பைலட்டின் அறிவிப்பு டேனிஷ் மொழியிலும் பிறகு ஆங்கிலத்திலும் தெளிவில்லாமல் வந்தது. ஒரு பணிப்பெண்ணும், ஆணும் அவசரமாக கடந்து சென்றனர். கூர்ந்து கவனித்ததில் அந்த அறிவிப்பு விமானத்தில் தொழிநுட்பக் கோளாறு என்றும் மீண்டும் உடனடியாக கோபன்ஹேகன் திரும்புவதாகவும் சொல்லப்பட்டிருந்தது தெரிந்தது.

மனைவி கைகளை  கும்பிட்டபடி பிரார்த்தனையைத் தொடங்கி விட்டார்.  நானும் மனதுக்குள் பிரார்த்திக் கொண்டு உடனே பேர்கன் விமான நிலையத்தில் அழைத்துச் செல்லுவதற்காக வரவிருக்கும் செல்வம் குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.

மீண்டும் கோபன்ஹேகன் விமான நிலையத்துக்கு வந்து மேலும் இரண்டு மணி நேரம் காத்திருந்து அங்கு அவர்கள் தந்த உணவு வவுச்சரைக் கொடுத்து வயிற்றுக்கு எதையோ போட்டு நிரப்பி மீண்டும் அடுத்த விமானமேறினோம். 

டென்மார்க்கில் மொழி டானிஷ் என்பதும் நோர்வேஜியன் மொழியை நோஸ்க் (Norsk) என்பதும், இரண்டு நாடுகளும் டானிஷ் க்ரோனர், நோர்வே க்ரோனர் என்ற இரு வேறு கரன்சிகளைப் பாவிக்கின்றனர் என்பதும் அறிந்திருந்தேன். நோஸ்க்கிலுள்ள எழுத்துமுறை  ஆங்கிலத்திலுள்ள 26 எழுத்துக்களுடன் மேலும் மூன்று எழுத்துக்களையும் கொண்டு எழுதப்படுகிறது. அந்த மூன்று எழுத்துக்களில் ஒன்று சைபர் ஒன்றைக் குறுக்கறுத்தது போன்றது. மற்றையது A ஐயும் E ஐயும் சேர்த்த எழுத்து, மூன்றாவது A எழுத்துக்கு மேலே சுழியொன்றைக் கொண்டது.


நோஸ்க் மொழி டானிஷ் மொழிக்கு நெருக்கமாகவே இருப்பதால் பெரும்பாலான சொற்களால் பொதுவாக  இருக்கின்றன. சாதாரணமாக நோஸ்க்கிலுள்ள சொற்களை உச்சரிப்பதற்கு எமது நாக்கு வளைந்து கொடுக்காது என்று பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது. அதனால் பெரும்பாலான பெயர்ப் பலகைகளில் உள்ள சொற்களை பார்த்து மலைத்துப் போய் நின்றிருந்தேன்.

பேர்கன் விமான நிலையத்தில் இறங்கியபோது மாலை ஆறு மணிக்கு மேலாகிவிட்டது.  விமான நிலையத்திற்கு வெளியில் வந்ததும் எதிரே ஒரு பாறைக் குன்றொன்றில் BERGEN?  என்ற எழுத்துக்கள் கேள்விக்குறியுடன் பதிக்கப்பட்டிருந்ததைக்க கண்டு ஆச்சரியப்பட்டு விசாரித்ததில் அதை வடிவமைத்தவரின் எண்ணக்கரு பேர்கன் நகர் ஆர்வத்துடன் தேடுவதற்குரியது என்று காட்டவே என்று அறிந்து கொண்டேன்.  நோர்வேயின் தலைநகர்  ஒஸ்லோவுக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரம் பேர்கன். முன்னொரு காலத்தில் பேர்கன் தலை நகராகவிருந்ததன் காரணம் அதற்கு பல துறைமுக வசதிகள் இருந்ததுதான்.

பொருட்களின் விலைகள் அவுஸ்திரேலிய விலையிலும் அதிகமாகவே இருந்தன. ஆனாலும் இங்கு ஊதியம் அதற்கேற்ப அதிகமாயுள்ளது என்பதும், இங்கு அரச பாடசாலை, உயர்கல்வி, பல்கலைக்கழகக்கல்வி உட்பட அனைத்தும் இலவசமாகவே கற்பிக்கப்படுகிறது என்பதையும் குறிப்பிட வேண்டும். பல இலங்கையர் இங்கே நோஸ்க் படித்தபின் உயர்கல்வியை இலவசமாக கற்று தொழில் புரிகின்றனர். சிலர் தமது பிள்ளைகளை இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா என்று அனுப்பியும் படிப்பிக்கின்றனர்.  அவர்களில் சிலரைச் சந்திக்க வீடுகளுக்கு சென்றபோது உணவு மேசையில் மெழுகுதிரி ஒன்றை ஏற்றி வைத்து விட்டு உணவருந்தும் பழக்கத்தை பரவலாக கண்டேன். அது நோர்வே நாட்டினரின் பாரம்பரியமோ என்று எண்ணத் தோன்றியது.

ஆங்கிலத்தில் fjord என்றழைக்கும் தமிழில் ஒடுங்கிய குடாக்கடல் என்ற அர்த்தத்தில் விளங்கும் ஒரு சொல்லுக்குரிய காட்சி விளக்கத்தை பேர்கன் நகரத்தையும் அதை சுற்றியுள்ள இடங்களிலும் கண்டு கொள்ள முடிந்தது. ஒடுங்கிய குடா என்று சொல்லக்கூடிய இந்த நீர்ப்பரப்புகள் கடல் நீர் உள் நுழைந்ததனால் உருவாகியதென்றாலும் இதன் தோற்றத்திற்கும் பனிப்பாறை  சுழற்சிகளுக்கும் (Glacier Cycles)  உள்ள தொடர்புகளை விஞ்ஞானிகள் கண்டறிந்திருந்தனர். நீண்ட காலத்திற்கு முன்பே பனிப்பாறைகளாயிருந்து அந்த பனியுகம் (Ice Age) முடிந்து பனிப்பாறைகள் கரைந்து ஓட பள்ளத்தாக்குளையும் நடுவே ஒடுங்கிய நீண்ட ஆனால் ஆழமான கடல் நீர்ப்பரப்பையும் அவை ஏற்படுத்தின என்றறிந்தனர். கடலுக்கு இரு பக்கமும் செங்குத்தாக நிற்கும் பாறை மலைகள் மிக உயர்ந்தவை. கீழே கடலும் ஆழமானது. ஆழமான இந்த குடாக்கடல்கள் சில ஆயிரம் மீட்டர் ஆழத்திலும் இருக்கின்றன.

அறியாதவர் எவரேனும் இவற்றை fjord என்று சொல்லாமல் ஏரி என்று சொல்லி விட்டால்  இங்குள்ளவர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். நோஸ்க்கிலுள்ளது போலவே ஒடுங்கிய குடாக்கடல் என்ற பொருள்பட ஆங்கிலத்திலும் fjord என்றே அழைக்கப்படுகிறதுஇதன் மூலச் சொல் நோர்வீஜிய ஆதிக் குடிகள் அல்லது வைக்கிங் சமூகத்தினர்  (Vickings) பேசிய மொழியாகிய Norse இலிருந்து வந்ததாக அறியப்படுகிறது.

நோர்வே நாட்டுக்கு வடக்கிலுள்ள நோர்வேஜீய கடலும் தெற்கு பக்கத்தில் வட கடலும் சங்கமிக்கின்றன. இவற்றிலிருந்து பேர்கனுக்கு மேற்கு கரையோரமாக  எண்ணற்ற ஒடுங்கிய குடாக்கடல்கள் ( fjords) வந்து நகரைத் தொடுகின்றன. இவற்றை பார்ப்பதற்கு மலைகளினூடே சுற்றிச் சுற்றிப் பாதைகள் அமைத்து சுற்றுலாப் பயணிகள் சென்று உச்சியில் நின்று வியந்து பார்க்கும் வண்ணம் குறுகலான பாதைகளை அமைத்திருக்கிறார்கள்.  ஒடுங்கிய பாதை என்றாலும் இரண்டு வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்வதற்கு சில இடங்களில் சிரமம் என்றாலும் எம்மை அழைத்துச்சென்ற செல்வம் காரைச் செலுத்திய வேகம் அவர் அந்த இடங்களில் நன்கு அனுபவப்பட்டவர் என்பதைக் காட்டியது. சில இடங்களில் மலைகளைக் குடைந்தும் பாதை போடப்பட்டிருக்கிறது. பாறைகளுக்கு சவால் விடுவதுபோல அவற்றைத் துளைத்து  வேர்விட்டு நிற்கும் நெடுத்த பைன் மரங்கள் வழியெங்கும் தென்பட்டன .

பாறை மலைகளை குடைந்தததில் 20 கிமீ  வரையில் நீளமான குகைப்பாதைகளும் இருக்கின்றன. நாங்கள் ஒருமுறை 12 கிமீ  நீளமான குகையை கடந்து சென்றோம். உள்ளே வர்ண விளக்குகளைப் போட்டு பயணிகளுக்கு மனோ ரம்மியத்தை ஏற்படுத்தும் வண்ணம் குகையலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது.

பேர்கன் நகரிலிருந்து வட கிழக்காக செல்லும் E16 என்ற பாதை பேர்கன் நகரையும் ஒஸ்லோ நகரையும் இணைக்கிறது. ஆனால் இது மலைகளை  சுற்றி தூர வளைந்து செல்வதால் பயண நேரம் அதிகம். நாங்கள் இந்தப் பாதையைத் தேர்ந்தது ஒஸ்லோவுக்கு செல்ல அல்ல. பேர்கன் தரைத்தோற்றத்தின் வனப்பைக் காண்பதற்கே. போகும் பாதையெங்கும் நீர்வீழ்ச்சிகள் விழுந்து கொண்டிருந்த பல மலைச் சரிவுகள் பாதையெங்கும் அரணாக நின்றன.  பிறகு மலைகளை சுற்றி வளைத்து வளைத்து கார் மேலே சென்றது. ஒரு மலை உச்சியில் கட்டபட்டிருந்த உணவு விடுதியொன்றுக்குள் நுழைந்து அதன் வெளியே வந்தால்  தெரியும் அந்த  நீண்ட மலைத்தொடர்களையும் ஒடுங்கி ஓடும் பள்ளத்தாக்கினையும் காண மக்கள் கூட்டம் வந்த வண்ணமேயிருந்தது. உணவுச்சாலைக்குள் எவரும் உணவருந்தியதைக் காணவில்லை என்றாலும் உள்ளே எவரும் நுழைந்து வெளியே செல்ல அனுமதிக்கின்றனர்.

நெடிதுயர்ந்த பல மலைகள் கமராவுக்குள் அடங்கிக் கொள்ளாத காட்சிப்  பிரமாண்டமாகத் தெரிந்தன. West Norwegian குடாக்கடலைச் சூழவுள்ள பெரும்பாலான இந்த இடங்களை யுனெஸ்கோ பாரம்பரிய மையங்களாக (UNESCO HERRITAGE SITE) பாதுகாத்து வருகிறது. அந்தக் காட்சியை ஒரு முறை பார்த்தவர்கள் நினைவிலிருந்து அதை அகற்றிப் போடுவது கடினம்.

பூமி காட்டும் இந்தப் புதினத்தை கண்ட கண்கள் முதலில் நம்ப மறுக்கின்ற போதிலும், தரையில் எழுந்து நிற்கும் இந்த இராட்சத மலைகள் கிட்டத்தட்ட 2.5 மில்லியன் வருடங்களுக்கு மேலாக ஏறத்தாழ  40 பனிப்பாறை சுழற்சிகளினால் (Glacial cycle) உருவாகிய தரைத்தோற்றம் என்று அங்கே குறிப்பிடப்பட்டிருக்கிறது. பனிப்பாறை உருகிய நதிகள் அரித்து அரித்து தம்மோடு கொண்டு சென்ற மண்ணும், பாறையும் போக எஞ்சிய ஒடுங்கிய பள்ளத்தாக்கில்  பெரும் பாறைச் சரிவுகளும், மண் சரிவுகளும் அப்போது  தொடர்ச்சியாக நிகழ்ந்திருக்கின்றன.

மலையிலிருந்து இறங்கி அங்கிருந்து Undredal என்ற ஆடுகள் வளர்ப்புப் பிரதேசமொன்றிற்கு வந்தோம். இங்கே எடுக்கும் ஆட்டுப்பாலிலிருந்து cheese தயாரிக்கிறார்கள். அங்குள்ள ஒரு உணவகத்தோடு அருகிலுள்ள கட்டடமொன்றில் முன்னர் சீஸ் தயாரித்த உபகரணங்களை பாதுகாத்து காட்சிக்காக வைத்துள்ளனர். நோர்வேயில் எல்லா இடங்களிலும் இந்த brown cheese கடைகளில் விற்பனைக்கு இருக்கிறது. இதன் சுவை ஒரு தனிரகமாக இருந்தது.

அங்கிருந்து Aurland என்ற வருடம் முழுவதும் உருகாத பனி மலைச் சாரல்  பிரதேசம் நோக்கி கார் சென்றது.  மைம்மல் பொழுதாகி விட்டது. உயரத்திலிருந்து பார்க்கையில் கீழே கடல் இரும்புத் தகடொன்றை நிலத்தில் அறைந்து வைத்தது போல உறைந்த அமைதியில் கிடந்தது. புதுக் தார் போட்ட ரோட்டைப் போல அதன் பரப்பில் மலைக்கு மேலால் வரும் கடைசிச் சூரியக் கதிர் பட்டு தெறித்ததில் மெல்லிய வரிகளாக சிறிய நீர் வளையங்கள் தெரிந்தன.

Stegastein என்ற இடத்திலுள்ள மலையிலிருந்து காணும் உயரக் காட்சிக்கு பலர் வருகிறார்கள். மலை விளிம்பு வரை வளைந்த பாதையிலிருந்து பாதாளக் காட்சியைப் படம் பிடிக்கும் ஆர்வத்துடன் அவர்கள் நிற்கிறார்கள். Aurland  பகுதி பொதுவாக வின்டர் காலங்களில் போக்குவரத்துக்காக மூடப்பட்டு விடும். பனிக்காலத்தில் இந்த இடம் எப்படியிருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன். இப்படியான பாதையின் இருபுறமும் வெண்சுவர் எழுப்பி விட்டது போல பனி மதிலாக நிற்க வாகனங்கள் விசேடமாகப் பூட்டிய  சில்லுகளுடன் அரைந்து செல்லுவதை திரைப் படங்களில் பார்த்திருக்கிறேன். 

இம்மலைகளில் இருந்த வித்தியாசம் யாதெனில் குடாக்கடலை (fjord) தொட்டு நிற்கும் மலைப் பாறைகளில்  வளர்ந்திருந்த மரக்கூட்டங்கள் போன்ற எதையும் இங்கே காணவில்லை.  பாறைகளும் குறைவு. இந்த மலைகளில் வருடம் முழுவதும் பெரும்பாலும் பனி மூடியிப்பதால் புல் வளராத மண் தரையாய்த் தோற்றமளித்தது. சில மணித்துளிகள் கார் ஓடிய பாதையிலே இரு முற்றிலும் வேறுபட்ட இந்த தரைத் தோற்றங்கள் பூமியின் புதிர்கள் பலவற்றுள் இதுவும் ஒன்றென நினைக்க வைத்தது. மலை உச்சிகளில் என்றும் உருகாத பனி வருட முழுவதும் ஆங்காங்கே உள்ள வெண்  திட்டுகளாகி கிடக்கின்றன. அவற்றை நெருங்குவதற்கு நீண்ட நேரம் மலைகளில் வளைந்து வளைந்து ஏறினோம். காலை வைத்தால் பனி மொறுக்கென்று புதைக்கிறது. உருகிய பனியிலிருந்து தண்ணீர் வாய்க்கால் வகுத்து வடிகிறது.

வரும் வழியில் இரவுணவை முடித்துக் கொண்டோம். அன்று மதியம் புறப்பட்ட நாங்கள் வீடு திரும்ப நள்ளிரவு கடந்து விடிந்து மூன்று மணியாகிவிட்டது. வரும் வழியில் பாதை திருத்த வேலைகள் நடந்து கொண்டிருந்ததும் தாமதத்திற்கு காரணமாகிவிட்டது.

கன்பராவில் உள்ள சில மலைகளில் ஏறியிருக்கிறேன். அவற்றுள் சில படிகள் இல்லாது கிறவல் போட்ட  ஒற்றைப் பாதைகளாவிருக்கும். வேறு சில பாறைகள், மரங்களினூடு செல்லும் பாதுகாப்பற்ற வழித்தடங்கள் கொண்டவை, அவற்றில் ஏறுவதும் சிரமம், அதை விட இறங்குவது இன்னும் சிரமம். நான் ஏறிய மலைகளிலும் பார்க்க மிக உயர்ந்ததும் சிரமமுமானதுமான மலையொன்றுக்கு எங்களை கூட்டிச் சென்றார் செல்வம். குடாக் கடலோரம் இருந்த அவர்களது விடுமுறை வீட்டிலிருந்து அரை மணி நேரத்தில் செல்லக்கூடிய தூரத்தில் அது இருந்தது.

மரங்களையும் புதர்களையும் பிடித்துக் கொண்டே ஏறினோம். மழை எப்போதும் பெய்யும் பகுதி அது. இதனால் சில இடங்களில் சதுப்பும் சேறும் இருந்தது. பாதையெங்கும் மழை நீர் வடிந்து கொண்டேயிருந்தது. தட்டையான பாறைகளில் பாசி வழுக்காத இடங்களில் கால் வைத்து ஏறினோம்.  உச்சிக்கு இன்னும் எவ்வளவு தூரம் என்று அடிக்கடி கேட்டுக் கொண்டே ஏறிக் கொண்டிருந்தோம். உச்சியில் சிறிய ஒரு கட்டடம் தெரிந்தது. அதன் உட்தளம்  மரத்தினாலானது.  அங்கே குடும்பமாக மலையேறி வருபவர்களுக்கு தங்கு மடம் போன்றதொரு கட்டடம்தான் அது. பிள்ளைகள் வந்தால் ஆறியிருந்து வாசிப்பதற்கு ஒரு கதைபுத்தகங்கள் கொண்ட தட்டுக்கள் சுவரில் பொருத்தப்பட்டிருந்தது. அங்கே வருபவர்கள் தங்கள் பெயர் முகவரியைக் குறித்துக் கொள்ளவும் ஒரு குறிப்பேடு இருந்தது.

கீழே மீண்டும் இறங்கி வந்தபோது வியர்வையில் நனைந்திருந்தோம். அங்கிருந்து நேரே கடலில் குளிப்பதற்காகச் சென்றோம். அது ஒரு பச்சை நிறக்கடல். குடாக்கடலின் ஒரு பகுதியாக இருந்த சிறிய ஏரியைப்போல தெரிந்தது.  அலை என்று எதுவுமில்லை. முதலில் குளிர் விறைத்தாலும் கொஞ்சம் பழகியதும் குளிர் தெரியவில்லை.

இங்குள்ளவர்களுக்கு மலையேற்றமும், மீன் பிடித்தலும் பொதுவான  பொழுது போக்காக  இருப்பதில் வியப்பேதுமில்லை. மலையும், கடலும் அருகிலேயே கிடக்கின்றனவே.

யாரும் மீன் பிடிக்க விரும்பலாம் ஆனால் எவரும் இலகுவில் மீனைப் பிடித்து விடமுடியாது என்று தெரிந்து கொண்டது பேர்கனில்தான். பரமேஸ் செல்வத்திடம் அவரது  தூண்டிலை வாங்கி கொண்டு குடாக்கடலுக்கு சென்றபோது நானும் பின் தொடர்ந்தேன். பிடித்த மீன்களைக் கொண்டு வருவதற்கு பை ஒன்றும் கொண்டு வரவில்லையே என்று மனதுள் என்னைத் திட்டிக் கொண்டபோதும் எதுவும் பேசாமல் நடந்தேன்.  போகும் பாதைக்கருகில் சிறிய பற்றைகள் போல நிற்கும் செடிகள் blue berry என்று நாங்கள் இங்கே விலை கொடுத்து வாங்கும் பழங்கள். ஆனாலும் சிறியதாயும் சுவையும் சற்று வேறுபட்டும் இருந்தன.  அங்கங்கே புதர்களினூடே சிறிய ஓடைகள் சல சலத்தன. பாறைகளையும் பற்றைகளையும் கடந்து கடலுக்கருகிலுள்ள பாறையொன்றில் அமர்ந்து தூண்டிலை தயார் படுத்தினோம். நாங்கள் நின்ற அந்தக்  கரையிலேயே கடல் மிக ஆழமாகவிருந்தது, அதுவே fjord இனது பண்பு.

தூண்டிலில் மண்புழு எதுவுமில்லை. அதில் ஈயத்தில் செய்த சிறு மீன் உருவம் மட்டுமே தொங்கிக் கொண்டிருந்தது. பரமேஸ் தூண்டிலை வீசி செயற்கை மீன் கொண்ட மெல்லிய இழை போன்ற நூலை விசுக்கி எறிந்தார். அது எங்கும் போகாமல் முன்னாலேயே விழுந்தது. தண்ணீரில் தூரத்துக்குப் போகவேயில்லை.  பல முறை முயற்சி செய்தும், நூலை சுழற்றும் சக்கரத்தை சரி செய்தும் பலனில்லை. செல்வத்துக்கு கைத்தொலைபேசியில் அழைக்க அவர் வந்து சரி செய்தார். இப்போது நீண்ட தூரத்துக்கு தூண்டிலை வீச முடிந்தது. இரண்டு மணி நேர முயற்சிக்குப் பின் பொய் மீனை விழுங்க வந்து மாட்டிக் கொண்ட ஏமாந்த மீனொன்றைப் பிடிக்க முடிந்தது. ஒரு சாண் நீளமுள்ள பெயர் தெரியாத மீன் ஒன்று. மீன்களை கொண்டு போவதற்கு பை கொண்டு வர நினைத்த முட்டாள்தனத்தை அப்போதும் எவரிடமும் சொல்லவில்லை.

பேர்கன் நகரில் வருடாந்தம் நிகழும் சர்வதேச இசை நிகழ்வு ஒன்று உள்ளது. பொதுவாகவே நகரமெங்கும் இசை பரவி நிற்பதை காட்டும் திறந்த வெளித் தற்காலிக மேடைகள் ஓகேஸ்ட்ராவுக்கான செட் அப்புக்களுட னும்  ஒலி அமைப்பு சாதனங்களுடனும் அமைக்கப்பட்டிருந்ததை கண்டேன்.

நோர்வே மீன் வளமும், எண்ணெய் வளமும் கொண்ட நாடு. இலங்கையிலும் கூட காரைநகரில் சீ - நோர் நிறுவனம் அந்தக் காலத்திலேயே இலங்கை நோர்வே நாடுகளின் இணைப்பில் இலங்கையில் மீன் பிடித்தலுக்கான கண்ணாடியிழைப் படகுகளை (Fibre glass boats) தயாரிப்பதை நோர்வே அறிமுகப்படுத்தியது. அதைவிட NORAD போன்ற பல அபிவிருத்தித் திட்டங்களை இலங்கையில் நடத்தியதுடன், REDBANA , FORUT  போன்ற சமூக  நல தொண்டு நிறுவனங்களையும் நோர்வே நாடுதான் இலங்கையில் முன்னெடுத்து வந்ததையும் குறிப்பிட வேண்டும்  



No comments: