இதோ எந்தன் தெய்வம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 நூற்றுக்கணக்கான படங்களில் அப்பா வேடங்களில் நடித்து புகழ்


பெற்றவர் மேஜர் சுந்தரராஜன்.இவருடைய இளமை காலம் முழுதும் வயதான வேடங்களில் நடிப்பதிலேயே கழிந்தது.ஆனாலும் விரல் விட்டு எண்ணக் கூடிய சில படங்களில் இவர் கதாநாயகனாகவும் நடித்தார்.அப்படி கதாநாயகனாக நடித்த படங்களில் ஒன்றுதான் இதோ எந்தன் தெய்வம்.

பிரபல இயக்குனரான ஏ சி திருலோகசந்தர் இயக்கிய இப்படத்தில்

ஹீரோவாக நடித்தார் மேஜர்.ஆனால் கதாநாயகியுடன் டூயட் பாடும் வாய்ப்பு இவருக்கு கிட்டவில்லை.அந்த வேலையை முத்துராமன் பார்த்துக்கொண்டார்.ஜோடி இன்றி தனி ஆவர்த்தனம் வாசிக்கும் வேலைதான் இவருக்கு கிடைத்தது.

முறை தவறி பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு மறைந்து விடுகிறாள் தாய்.குழந்தையை பொறுப்பேற்கும் ஒரு கிழவி அதனை திருடனாக வளர்கிறாள்.வளரும் அவன் கொள்ளைக்காரன் ஆகிறான்.சிறை செல்கிறான்.அங்கு நண்பன் ஒருவனால் ஏமாற்றப்பட்டு சிறைக்கு வந்த ஒருவனை சந்திக்கிறான்.சிறை மீண்டதும் அவன் குடும்பத்துக்கு உதவ முனைகிறான்.அதனால் பல இடர்கள் அவனுக்கு ஏற்படுகிறது.


இப்படி அமைந்த படத்தின் கதையை தூயவன் எழுத வியட்நாம் வீடு சுந்தரம் அர்த்த புஷ்டியுடன் வசனங்களை எழுதியிருந்தார். நான் நெனச்சா எந்த பெண்ணையும் எந்த நேரத்திலும்அடைய முடியும் ஆனால் நான் நெனச்சும் எனக்கு கிடைக்காதது தாய் ஒண்ணுதாம்மா என்ற வசனம் மேஜரின் கதாபாத்திரத்தை அப்படியே வெளிப்படுத்தியது. பாடல்களை கவிஞர் கண்ணதாசன் இயற்ற எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.எஸ் பி பி சுசிலா குரலில்

அம்பிகை நேரில் வந்தாள் பாடல் இனிமையாக அமைந்தது.அதே போல் டி எம் எஸ் குரலில் ஒலித்த தானே வளர்ந்த மரம் தனியாக நின்ற மரம் பாடல் உருக்கமாக ஒலித்தது. பெண் போதை மதுவிலும் இனிது பாடல் ஆலத்தின் கவர்ச்சி நடனத்தில் ரசிகர்களை மயக்கியது. நடன இயக்குனர் ஏ கே சோப்ரா.படத்தை விஸ்வநாத் ராய் ஒளிப்பதிவு செய்தார்.


படத்தில் முத்துராமன் கே ஆர் விஜயா இருவரும் ஜோடியாக நடித்தனர். முத்துராமன் அளவுடன் நடிக்க,கே ஆர் விஜயா உணர்ச்சிகரமாக நடித்தார். இவர்களுடன் ஆர் எஸ் மனோகர்,நாகேஷ், எம் பானுமதி,எஸ் வி ராமதாஸ்,வி .கே ராமசாமி,சி கே சரஸ்வதி, பேபி இந்திரா ஆகியோரும் நடித்தனர்.

பாபு படத்தை தயாரித்த திருலோக் அந்தப் படத்தில் இடம் பெற்று பிரபலம் அடைந்த இதோ எந்தன் தெய்வம் பாடலின் முதல் வரியை தனது அடுத்த படத்தின் தலைப்பாக்கி விட்டார்.மேஜர் நடித்த வேடத்தில் சிவாஜி நடித்திருந்தால் படம் பெற வேண்டிய வெற்றியை பெற்றிருக்கும் என்று படம் வெளிவந்த போது பேசப்பட்டது.ஆனாலும் மேஜர் தன் நடிப்பில் குறை வைக்கவில்லை.நடிப்பில் தான் மேஜர் தான் என்பதை நிரூபித்தார்.
No comments: