தலைக்கேறும் போதையும் தாழ்ந்துபோகும் சமுதாயமும் ! ? அவதானி

 


மதுவெறி தலைக்கேறியவர்களைப் பார்த்து , கண் மண் தெரியாமல் குடித்துவிட்டு வருகிறார் என்றுதான் முன்னர் சொன்னார்கள்.

ஆனால், சமகாலத்தில்  கெரோயின் முதலான போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வருபவர்களைப் பார்த்து  புதிய வேதாந்தம்தான் சொல்ல நேர்ந்துள்ளது.

கெரோயினுக்கு அடிமையானவர்களுக்கு கண், மண் மட்டுமல்ல,  உடன்பிறந்த சகோதரிகளும் தெரிவதில்லையோ..? என்றுதான்


கேட்கத் தோன்றுகிறது.  அண்மையில் வடக்கில் சுன்னாகம் பொலிஸ் பிரிவில், கெரொயின் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான ஒருவரால்,  அன்னாரின் சகோதரி வன்புணர்வுக்கு ஆளாகி, அவமானம் தாங்கமுடியாமல் தற்கொலை செய்துள்ளார்.

பதறவைக்கும் இச்செய்தியை இன்னும் சில மாதங்களில் நாம் கடந்து சென்றுவிடலாம்.  தினம் தினம் போதை வஸ்து கைப்பற்றப்பட்டது,  அதன் விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைதானார்கள் என்ற செய்திதான் ஊடகங்களில் பரவலாக வெளியாகின்றன.


இது இவ்விதமிருக்க,  சமகாலத்தில் பாடசாலை செல்லும் மாணவர்களின் புத்தகப் பைகளும் சோதனையிடப்படவேண்டும் என்ற செய்தி பொலிஸ் தரப்பிலிருந்து வெளியானது. அவ்வாறாயின் பாடசாலைகளிலும் போதைப்பொருள் விநியோகம் நடக்கிறது என்பதே பொருள்.

சுன்னாகத்தில் நடந்திருக்கும் சம்பவம் சமுதாயத்திற்கு தலைகுனிவையே ஏற்படுத்தியிருக்கிறது.  கெரோயின் போதை என்னவெல்லாம் செய்யத்தூண்டும் என்பதற்கு அச்சம்பவம் முக்கிய சாட்சி.

பதின்மவயதிலிருந்த யுவதியை,  சகோதரனே பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியிருக்கின்றான்.  அந்தப்பெண் தற்கொலை செய்துவிட்டாள்.

சட்டம் இதற்கு எத்தகைய தண்டனையை வழங்கப்போகிறது.

சில வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியாகவிருந்த மைத்திரிபால சிறிசேன, போதை வஸ்து கடத்தல்கார்கள், விற்பனையாளர்களை தூக்கிலே தொங்கவிடுவேன் என்றெல்லாம் சூளுரைத்தார்.  அவரது வாக்குறுதி செய்தியாகவே காற்றில் பறந்து சென்றது.

தற்போது அதிகாரத்திற்கு வந்திருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா, மரணதண்டனை உத்தரவுக்கு தான் கையொப்பம் இடமாட்டேன் எனச்சொல்கிறார்.

இத்தகைய ஜனாதிபதியின் முன்னிலையில்தான்  மரண தண்டனைக் கைதியாகவிருந்த ஒருவர் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொள்கிறார்.

எங்கள் தேசம் எங்கே செல்கிறது…?

வடக்கில் வட்டுக்கோட்டை பிரதேசத்தில் 40 கிலோ பூசணிக்காயை, அது விளைந்த தோட்டத்திலிருந்து களவாடி,  அருகிலிருக்கும் மூளாய் பிரதேசத்தில் விற்றவரை கைதுசெய்துள்ள பொலிஸார்,  இந்த போதை வஸ்து கும்பல்களை கைதுசெய்வதில் அசிரத்தை காண்பிப்பதாகத்தான் தெரிகிறது.

கைப்பற்றப்பட்ட போதை வஸ்து பொதிகளை காட்சிப்படுத்தி, ஊடகங்களுக்கு போஸ் கொடுக்கும் காவல்துறை,  உடன்பிறந்த சகோதரியையே வன்புணர்வுக்குட்படுத்தியவரையும் கைது செய்திருக்கலாம்.

இனி, அடுத்து என்ன…?

போதைத் தடுப்பு புனர்வாழ்வு முகாமுக்கு அவர் அனுப்பப்படலாம். ஆனால், அவரால் மாண்ட ஒரு பெண்ணின் உயிரை மீளப்பெறமுடியுமா..?

இத்தகைய போதைப்பொருள் சார்ந்த குற்றச்செயல்களுக்கு   சவூதி  அரேபியா   -   சிங்கப்பூர்   -  மலேசியா -இந்தோனேசியா    உட்பட   பல  நாடுகளில்   மரணதண்டனை   உட்பட கடூழியச்சிறைத்தண்டனைகளும்    வழங்கப்படுகின்றன.

ஆனால் -   இலங்கையில்   சட்டத்தின்    ஓட்டைகளின்   ஊடாக   பல போதைவஸ்து    கடத்தல்காரர்கள்    எப்படியோ    தப்பிவிடுகிறார்கள். அவுஸ்திரேலியா    போன்ற   சில    நாடுகளில்   மரணதண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டாலும்,    கொடிய   குற்றங்கள்    செய்தவர்களுக்கு நீண்ட   பல   வருடகால   சிறைத்தண்டனைகளை   தீர்ப்பாக   வழங்கி சிறையிலிட்டு    மில்லியன்    டொலர்    செலவில்   அந்தக்கைதிகள்  பராமரிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்தும் விமர்சனங்கள் இருக்கின்றன.

இலங்கைக்குள் போதை வஸ்து வரும் மார்க்கங்கள் சில. கடல்மார்க்கமாக வந்தால், அவ்வாறு கடத்துபவர்களை கடலில் கண்காணிக்கும் கடற்படை கைதுசெய்யவேண்டும்.  வான் மார்க்கமாக வந்தால், விமான நிலையங்களில் இயங்கும் சுங்கப்பகுதி கண்டுபிடிக்கவேண்டும்.  எளிதாக கண்டுபிடிப்பதற்கு நவீன தொழில் நுட்ப சாதனங்களும் உள்ளன. அவற்றையும் நம்பாத காவல் துறை,   மோப்ப நாய்களையும் விமான நிலையங்களில் நடமாட விடுகின்றது.

இத்தனை கெடுபிடிகளுக்கு மத்தியிலும் போதை வஸ்து நாட்டுக்குள் புழக்கத்திற்கு வருகின்றதாயின், எங்கோ பெரிய துவாரம் இருக்கிறது.  அதன் ஊடாக வந்தவண்ணமே இருக்கின்றன.

தென்னிலங்கையில்  போதை வஸ்து கடத்தல்காரர்கள், விற்பனையாளர்கள் பலர் பாதாள உலக கும்பல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பது பரகசியம்.  அண்மைக்காலங்களில் அவர்கள் மத்தியில் நடக்கும் துப்பாக்கிச்சூட்டுச்சம்பவங்களின் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால், உண்மை துலக்கமாகும்.

போதை வஸ்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்காக நாடெங்கும் சமூக ஆர்வலர்கள் பல்வேறு விழிப்புணர்வு முகாம்களையும்  ஊர்வலங்களையும் நடத்திவருகின்றனர்.

ஆயினும்,  அன்றாடம் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் போதைப்பாவனையாளர்களை கட்டுப்படுத்தியிருப்பதாக சொல்லவில்லை.

நாட்டில் போதைவஸ்தை முற்றாக ஒழிப்பதற்காக மீண்டும் மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவேன் எனச்சொன்ன முன்னாள் ஜனாதிபதியின் பேச்சை நம்பி, சிலர் மரண தண்டனையை நிறைவேற்றும் பணியை செய்யும் அலுகோசு வேலைக்கும் விண்ணப்பித்தனர்.

ஆனால், அதே ஜனாதிபதி ஒரு வெளிநாட்டுப்பெண்ணை கொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகி மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.

அவருக்குப்பின்னர் அந்தப்பதவிக்கு வந்தவரான கோத்தபாய ராஜபக்‌ஷ,  மற்றும் இரண்டு மரண தண்டனைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கினார். இதில் ஒருவர் முன்னாள் இராணுவ அதிகாரி. மற்றவர் அரசியல்வாதி.  அவ்வாறு விடுவிக்கப்பட்ட அரசியல்வாதிக்கு  வீடமைப்பு நிர்மாண சபையின் தலைவர் பதவியையும் வழங்கினார்.

எமது மக்கள்  பார்த்து வாசித்து கடந்துசென்ற செய்திகள்தான் இவை.

தற்போது போதைவஸ்துக்கு அடிமையான ஒருவரால், அன்னாரின் சகோதரியே வன்புணர்வுக்கு ஆளாகி, அவமானம் தாங்கமுடியாமல் தனது உயிரை மாய்த்திருக்கும் செய்தியையும் மக்கள் கடந்து சென்றுவிடலாம்.

இத்தகைய சமுதாய சீரழிவுகளுக்கு எப்போது முற்றுப்புள்ளி இடப்படும்….?

திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாதுதான். 

போதை வஸ்து பாவனைக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்கு காவல்துறையும் சமூக ஆர்வலர்களும் குறிப்பாக பிரஜைகள் குழுக்களும்  தீவிர நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளவேண்டும்.

இல்லையேல்,  நாடு மிகவும் மோசமாகச் சீரழிந்துவிடும்.  எங்கிருந்தோ வரும் அந்த விஷக்கிருமி, பாடசாலைகளுக்குள்ளும் பிரவேசிக்கத் தொடங்கிவிட்டது என்பதற்கான சமிக்ஞையே பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளை சோதனையிடும் செய்தி.

போதைபொருள் தடுப்பு இயக்கம்,  இனி ஒவ்வொரு வீடுகளிலிருந்தும் தொடங்கப்படல்வேண்டும்.  அதற்கு அடிமையானவர்களை கண்டும் காணாமல் செல்லாமல்,  உடன் உரிய நடவடிக்கை எடுத்தல்வேண்டும்.

அத்தகையோரிடமிருந்து தங்கள் பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பதற்காகவாவது விழிப்புணர்வோடு செயற்பட வேண்டும்.




No comments: