இலங்கைச் செய்திகள்

 சிரேஷ்ட ஊடகவியலாளர் கே.எஸ். சிவகுமாரன் காலமானார்

வடக்கில் சிங்கப்பூர், மலேசிய ஒத்துழைப்புடன் அபிவிருத்தி

தாமரைக் கோபுரம் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு


சிரேஷ்ட ஊடகவியலாளர் கே.எஸ். சிவகுமாரன் காலமானார்

- அறிவிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் அனுதாபம் தெரிவிப்பு

சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஈழத்து முக்கிய திறன் ஆய்வாளர்களில் ஒருவருமான கே.எஸ். சிவகுமாரன் காலமானார்.

1936 ஒக்டோபர் 01ஆம் திகதி கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு புளியந்தீவு, சிங்களவாடி பிரதேசத்தில் பிறந்த கைலாயர் செல்லநைனார் சிவகுமாரன், கொழும்பு நகரில் நீண்டகாலம் வாழ்ந்து வந்த நிலையில் இவர் நேற்றிரவு (15) இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

மரணிக்கும் போது அவருக்கு 85 வயதாகும்.

இவரது பெற்றோர் திருகோணமலையையும், மட்டக்களப்பையும் பூர்வீகமாகக் கொண்டவர்களாவர். இலங்கையிலும், பின்னர் ஓமானில் 1998 முதல் 2002ஆம் ஆண்டு வரை ஆங்கில இலக்கிய ஆசிரியராகப் பணியாற்றிய இவர், மாலைதீவிலும் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

இலக்கியம், நாடகம், திரைப்படம், ஊடகங்கள், அறிவியல், செய்தித் திறனாய்வுகள், அரசியல் திறனாய்வுகள், இசை, நடனம், ஓவியம், மொழிபெயர்ப்பு, சிறுகதை, கவிதை போன்ற பல துறைகளிலும் எழுதி ஒலி, ஒளிபரப்பில் தனது பணியை முன்னெடுத்து வந்துள்ளார்.

இலங்கை வானொலியில் தமிழிலும், ஆங்கிலத்திலும் நிகழ்ச்சிகளை வழங்கிய இவர், 30 தமிழ் நூல்களையும், 2 ஆங்கில நூல்களையும், இரண்டு ஆங்கில மொழிக் கலைக்களஞ்சியங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

ஆங்கிலம், மற்றும் சிங்கள மொழிகளிலும் எழுதி வந்த அவர், ரேவதி என்ற புனைபெயரிலும் திரைப்படம் சம்பந்தமான கட்டுரைகளை ஆங்கிலத்தில் இவர் எழுதி வந்துள்ளார்.

1959 இல் நாவலாசிரியர் வரிசையில் வரதராசனாரின் இடம் என்பதே இவர் எழுதிய முதலாவது இலக்கியத் திறனாய்வுக் கட்டுரையாகும். ஜீவநதி சஞ்சிகை கே. எஸ். சிவகுமாரனுடைய பவள விழாச் சிறப்பிதழாக ஓர் இதழை வெளியிட்டுள்ளது.

சிரேஷ்ட தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், பன்னூலாசிரியரும் , வானொலி அறிவிப்பாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமென பல்வேறு முகங்களைக் கொண்ட கே.எஸ். சிவகுமாரன், லேக் ஹவுஸ் நிறுவனத்தின் டெய்லிநியூஸ் பத்திரிகையில் கடமையாற்றியதோடு, தினகரன், வாரமஞ்சரி, சண்டே ஒப்சேர்வர் பத்திரிகைகளில் பல்வேறு ஆக்கங்களை எழுதி வந்தார்.

கொழும்பு 10 புனித ஜோசப் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்த அவர், பேராதனைப் பல்கலைக்கழக இளங்கலை பட்டத்தை பெற்றுள்ளார்.

சாகித்திய ரத்னா விருது பெற்ற இவர் ஒரு ஆங்கில ஆசிரியருமாவார்.

அவரது மறைவு தொடர்பில் சிரேஷ் அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

"1966 முதல் வர்த்தக ஒலிபரப்பில் அறிவிப்பாளராக இணைந்தவர். தனக்குப் பின்னே வந்த இளைய தலைமுறை அறிவிப்பாளர்களான எம்போன்றோரை வாழ்த்தி வரவேற்ற பண்பாளர். தமிழில் மட்டுமன்றி ஆங்கில சேவையிலும் அறிவிப்பாளராகப் பணிபுரிந்த முதல் சாதனையாளர். சிறிது காலம் வானொலி நிலையத்தின் செய்திப் பிரிவிலும் ஒரு செய்தி ஆசிரியராகப் பங்களிப்பினை நல்கியவர்...."

அவர் தொடர்பில் சிரேஷ்ட அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு

அவர் தொடர்பில் சிரேஷ்ட எழுத்தாளர் பௌசர் மஹ்ரூப் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு

நன்றி தினகரன் வடக்கில் சிங்கப்பூர், மலேசிய ஒத்துழைப்புடன் அபிவிருத்தி

 ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவிப்பு

வடக்கில் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தி முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாராஜா தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கு விஜயம் செய்துள்ள அவர் அங்கு பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து வரும் நிலையில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு மாகாணம் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை நோக்கிச் செல்கின்றது. சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் தொழிற்சந்தை அணுகுகைக்கான வாய்ப்புக்கள் இவ்விரு நாடுகளுக்குமுரிய அந்தந்த எமது உயர்ஸ்தானிகராலயங்கள் மூலம் நடைபெற்று வருகின்றன.

சிங்கப்பூரின் வெற்றிடங்கள் பற்றி ஏற்கனவே ஆளுநர் அலுவலகத்தின் முகப்புத்தகப் பக்கத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை அமைப்பதற்கான அழைப்பை ஜனாதிபதி அறிவித்ததிலிருந்து சிங்கப்பூர் நான்ஜங் பல்கலைக்கழகத்துடனும் மலேசியாவிலிருந்து சாத்தியமான முதலீடுகளுடனும் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் சிங்கெல்த்துடன் மிக நெருக்கமான ஒத்துழைப்பிலிருந்து வடக்கு மாகாணத்தின் சுகாதார சேவை பயனடையும்.

நான்கு பருவகால விடுதிகள் உள்ளடங்கிய தனியார் முதலீட்டாளர்கள் வாய்ப்புக்களை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்வார்கள்.

சூரிய மின்கலன்களைப் பொருத்துவது மற்றுமொரு விருப்பிற்குரிய விடயமாகும் என்றுள்ளது.   நன்றி தினகரன் 

 
தாமரைக் கோபுரம் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு

- வார நாட்களில் பி.ப. 2.00 - இரவு 10.00 வரை
- வார இறுதியில் ந.ப. 12.00 - இரவு 10.00 வரை
- ரூ. 500, ரூ. 2,000 நுழைவுச்சீட்டு
- ரூ. 2,000 நுழைவுச்சீட்டு ஒன்லைனில் பெற வசதி
- 10 வயதுக்குட்பட்டோருக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் ரூபா. 200
- ஒக்டோபர் 01 முதல் பாடசாலை மாணவர்கள் பாவையிட வசதி
- நாளாந்தம் 1,400 - 2,000 நுழைவுச்சீட்டுகள் விற்பனை

கொழும்பு தாமரைக் கோபுரம் இன்று (செப்டெம்பர் 15) தொடக்கம் பொதுமக்கள் பார்வையிடுவதற்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வாரநாட்களில் பிற்பகல் 02.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரைக்கும், வார இறுதி நாட்களில் நண்பகல் 12.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரைக்கும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தாமரைக் கோபுரத்தைப் பார்வையிடலாம்.

கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ (தனியார்) கம்பனியால் நிர்வகிக்கப்படும் இத்தாமரைக் கோபுரத்தைப் பார்வையிடுவதற்காக உள்ளூர் சுற்றுலாப்பயணி ஒருவருக்கான சாதாரண நுழைவுச்சீட்டுக் கட்டணம் ரூபா 500 ஆகும். அத்துடன் ரூபா 2,000 பெறுமதியான விசேட நுழைவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை,10 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு நுழைவுச்சீட்டுக் கட்டணமாக ரூபா. 200 அறவிடப்படுவதுடன், பாடசாலை மாணவர்களுக்கான கட்டணமாக ரூபா. 200 மாத்திரம் அறவிடப்படும்.

பாடசாலை மாணவர்கள் பார்வையிடுவதற்காக ஒக்டோபர் 01 ஆம் திகதி தொடக்கம் திறந்து வைக்கப்படும். அதற்காக கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ (தனியார்) கம்பனியின் முற்கூட்டிய அனுமதியைப் பெற்றுக்கொண்டு சமூகமளித்தல் வேண்டும்.

மேலும் ரூ. 2,000 விசேட நுழைவுச் சீட்டுக் கட்டணத்தை இணைய வழியூடாக ஒதுக்கிக் கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டு வருவதுடன், தொழிநுட்ப ரீதியான விடயங்கள் பூர்த்தியடைந்தவுடன் அதுதொடர்பாக பொதுமக்களுக்கு அறியத்தரப்படும்.

வெளிநாட்டவர்களுக்கு நுழைவுச்சீட்டுக் கட்டணம் 20 அமெரிக்க டொலர்களாவதுடன், 10 வயதுக்குக் குறைவான பிள்ளைகளுக்கு 10 அமெரிக்க டொலர் செலுத்தி நுழைவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

தெற்காசியாவில் உயரமான தொலைத்தொடர்புக் கோபுரமாகக் கருதப்படும் தாமரைக் கோபுரத்தைப் பார்வையிடுவதற்காக தற்போது வார நாட்களில் நாளொன்றுக்கு விநியோகிக்கப்படும் உச்சபட்ச நுழைவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 1,400 ஆவதுடன், வார இறுதி நாட்களில் நாளொன்றுக்கு விநியோகிக்கப்படும் உயர்ந்தபட்ச நுழைவுச்சீட்டுக்களின் எண்ணிக்கை 2000 ஆகும். எதிர்வரும் காலங்களில் விநியோக்கப்படும் உயர்ந்தபட்ச நுழைவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.    நன்றி தினகரன் No comments: