அஞ்சலிக்குறிப்பு கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரனை இழந்தோம் ! முருகபூபதி


இலக்கியத் திறனாய்வாளராகவும் ஊடகவியலாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் திகழ்ந்த  எழுத்தாளர்  கே.எஸ்.சிவகுமாரன் நேற்று முன்தினம் 15 ஆம் திகதி தமது 86 ஆவது வயதில்  கொழும்பில் மறைந்துவிட்டார்.

இவரது மறைவை ஈடுசெய்யப்பட வேண்டிய இழப்பு என்றே நாம் கருதவேண்டும்.  அன்னாரின் வாழ்வையும் பணிகளையும் கூர்ந்து அவதானித்தால், அவரது வகிபாகம், ஈழத்து இலக்கிய உலகிற்கு குறிப்பாகவும் தமிழ் – ஆங்கில ஊடகத்துறையில் பொதுவாகவும் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியது  என்பது தெரியவரும்.

சுமார் ஆறு தசாப்த காலம் எழுத்தூழியம் புரிந்துவந்திருக்கும் கே.


எஸ். சிவகுமாரன், அந்திமகாலத்தில் உடல் நலம் குன்றியிருந்தவேளையிலும் முகநூல் வாயிலாக தொடர்ந்தும் பதிவுகளை வெளியிட்டு வந்தவர்.

மட்டக்களப்பில்  1936  ஆம்   ஆண்டு   ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி பிறந்த  சிவகுமாரன்,   புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின்   மாணாக்கர்.  பாலுமகேந்திரா                   மட்டக்களப்பில்  வாழ்ந்த  காலத்தில்  சச்சிதானந்தன் என்பவருடன்  இணைந்து  தேனருவி  என்ற  கலை  இலக்கிய  இதழை  வெளியிட்டபொழுது,   அதில்  பல  ஆக்கங்களை எழுதியிருக்கும்  சிவகுமாரனின்  ஒரு  நூலுக்கு                                           பாலுமகேந்திரா முன்னுரை    எழுதியுள்ளார்.

சிவகுமாரனின்   அசையும்  படிமங்கள்  என்ற    சினிமாத்துறை   நூலின் முகப்பில்   இந்த பால்யகாலத் தோழர்கள்தான்  இணைந்து தோன்றுகின்றனர்.

மற்றவர்களின் படைப்புகளையும் அவர்தம் இலக்கியப் பணிகளையும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தமது பத்திகளில் அறிமுகப்படுத்திவந்த  சிவகுமாரன்தான் தமிழில் பத்தி எழுத்து என்னும் பிரயோகத்தை அறிமுகப்படுத்தியவர் என்ற தகவல் பலருக்குத் தெரியாது.


Thamil Writing in Srilanka, Aspects of Culture in Srilanka ஆகிய தமது நூல்களிலும் தமிழில்  எழுதியிருக்கும் ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்,  நாவல் இலக்கியம் தொடர்பான நூல் உட்பட பல நூல்களிலும் எம்மவர்களின் படைப்புகளை திறனாய்வு செய்து அறிமுகப்படுத்தியிருக்கும் இவரது இயல்பு ஏனையவர்களுக்கு குறிப்பாக விமர்சகர்களுக்கு முன்மாதிரியானது.

ஒரு நூலைப்படித்தால் அது இவரைக் கவர்ந்துவிட்டால் தாமதமின்றி ஆங்கிலத்திலோ தமிழிலோ அதனை அறிமுகப்படுத்தி,  ஏதேனும் இதழில் எழுதிவிடுவார். அத்துடன் இலக்கிய உலகின் சமகால நிகழ்வுகளையும் இரண்டு மொழிகளிலும்


தமது பத்திகளில் பதிவுசெய்துவிடுவார்.

இலங்கையில் நீண்டகாலம் வெளியான மல்லிகை, மற்றும் தற்போதும் வெளியாகும் ஞானம் இதழும் கே.எஸ்.சிவகுமாரனை அட்டைப்பட அதிதியாக கௌரவித்து பாராட்டியுள்ளன.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதி இவருக்காக பிரத்தியேகமாக தனிச்சிறப்பிதழும் வெளியிட்டுள்ளது.

இலங்கை வானொலி, த ஐலண்ட், வீரகேசரி, முதலான ஊடகங்களிலும் பணியாற்றியவர். டெயிலிநியூசில் பத்தி எழுத்துக்களை எழுதினார். இலங்கை வங்கி உட்பட பல வர்த்தக ஸ்தாபனங்களிலும்  மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றியவர்.


இலங்கை வானொலியின் தமிழ் வர்த்தகசேவையில் பகுதிநேர அறிவிப்பாளராகவும் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் செய்திப் பிரிவில் துணை ஆசிரியராகவும் சேவையாற்றிய கே.எஸ். சிவகுமாரன் இலங்கையில் அமெரிக்கத் தூதரக தகவல் பிரிவிலும் சிறிதுகாலம் பணியாற்றியிருக்கிறார். நவமணி இதழின் ஸ்தாபக ஆசிரியரும் இவரே.

கொழும்பில் மூன்று சர்வதேசப் பாடசாலைகளிலும் அமெரிக்கா, மாலைதீவு, ஓமான் ஆகிய நாடுகளிலுள்ள பாடசாலைகளிலும் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்குண்டு. இலங்கை திரைப்பட தணிக்கை அதிகாரியாகவும்


கடமையாற்றியவர். சிறுகதை, திறனாய்வு, பத்தி எழுத்துக்களில் மாத்திரம் கவனம்செலுத்தியவர் அல்ல. தரமான சினிமா பற்றிய பிரக்ஞையுடனும் இயங்கியவர்.

அசையும் படிமங்கள்,  சினமா ஒரு உலகவலம் ஆகிய இவரது நூல்கள் சினமா பற்றியவை. இந்தியாவில் நடந்த பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்குபற்றியவர்.

நாம் சினிமா என எழுதியபோது இவர் சினமா என்றே எழுதிவந்தவர்.

இத்தனை அனுபவங்களுக்குப்பின்னரும், தாம் இன்னமும் இலக்கியத்தில் கற்றுக்கொண்டிருக்கும் மாணவன்தான் என்று மிகுந்த கூச்சத்துடன் தன்னடக்கத்துடனும்  சொல்லிக்கொண்டிருந்தவர்.


சிவகுமாரன் தன்னை ஒரு இலக்கிய விமர்சகன் என்று சொல்லிக்கொள்ள விரும்பாதவர். தான் ஒரு திறனாய்வாளன்தான் என்று எப்போதுமே அடக்கமாகச் சொல்லிக்கொண்டவர், சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். அத்துடன் ஆங்கிலத்திலும் தமிழிலும் கவிதைகளும் எழுதியவர்.
ஆயினும் ஒரு விமர்சகராக, திறனாய்வாளராக, பத்தி எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராகத்தான் வெளியுலகிற்கு அறியப்பட்டவர்.

இருமை, சிவகுமாரன் கதைகள்  ஆகிய இரண்டு சிறுகதைத்தொகுப்புகள் இதுவரையில் வெளியாகியிருக்கின்றன. பெரும்பாலான இவரது கதைகள் உளவியல் சார்ந்திருக்கும்.

கே.எஸ்.எஸ்., பேராதனைப் பல்கலைக்கழக ஆங்கிலப் பட்டதாரி. தமது வாழ்நாளில் பெரும் பகுதியை இலக்கியத்திற்கும் ஊடகம் மற்றும் இதழியலுக்கும், மொழிபெயர்ப்பிற்கும் கல்வித்துறைக்கும் அர்ப்பணித்தவர். தன்னை எங்கும் எதிலும் முதனிலைப்படுத்திக்கொள்ள விரும்பாத அளவுக்கு அதிகமான தன்னடக்க இயல்புகொண்டவர்.

விமர்சகர்கள், விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் ஆளாகும் இயல்பினர் என்பதனாலோ என்னவோ, தம்மை ஒரு திறனாய்வாளர் என்று சொல்லிக்கொள்வதில் அமைதி கண்டவர். எவரையும் தமது எழுத்துக்களினால் காயப்படுத்தத் தெரியாதவர்.

ஒருவரது குணம் அவரது இயல்புகளிலேயே பெரிதும் தங்கியிருக்கிறது. அமைதியான சுபாவம், கலந்துரையாடல்களிலும் உரத்துப்பேச விரும்பாத இயல்பு மற்றவர்களின் கருத்துக்களை பொறுமையாக செவிமடுக்கும் குணம் முதலானவையே அவரது மிகச்சிறந்த பலமாக இருந்தவை.

1983   வன்செயலில்  அவரது வெள்ளவத்தை  முருகன்  பிளேஸ்  வீடும்  தாக்கப்பட்டது.   அவர்  மயிரிழையில்    உயிர்தப்பினார்.  சில  நாட்களில்   தனது  சில  உடைமைகளை   எடுத்துவருவதற்கு  அவர் மீண்டும்   திரும்பியபொழுதும்  அந்த  வீட்டருகே   அந்த தீயசக்திகள்  அடுத்த    தாக்குதலுக்கு   தயாராகத்தான்                            நின்றார்கள்.

” நான்  எனது  புத்தகங்களைத்தான்  எடுக்க  வந்தேன் ” – என்று  இவர் சிங்களத்தில்   சொன்னபொழுது,                                                                            “அவைதான்  உமது  வீட்டில்  அதிகம்   இருந்தன”  என்று   அங்கு  நின்ற  ஒருவன் சொல்லியிருக்கிறான்.

அதனைக்கேட்டு  அவருக்கு  சிரிப்பு  வந்துள்ளது.                                  அந்த  இழப்பிலும் அவரது    முகத்தில்  தவழ்ந்த  புன்னகையினால்                                         வெட்கித்துப்போன அந்த   ரவுடிகள்       சமாவெண்ட                                                                                  ( மன்னித்துக்கொள்ளுங்கள்)  என்றார்களாம்.

” இனி   எதுவும்   நடக்காது   வீட்டில்   வந்திருங்கள் ” – என்றும் சொல்லியிருக்கிறான்    ஒரு   ரவுடி.

”இனி  என்னதான்  நடக்கவிருக்கிறது”  என்று   மனதிற்குள்          தமிழிலோ அல்லது   ஆங்கிலத்திலோ  சொல்லிக்கொண்டுதான்  இந்த              அறிவாளி   வீட்டினுள்    நுழைந்திருப்பார்.

அதன்   பிறகும்  நாட்டை  விட்டு  புலம்பெயராமல்  அதே வெள்ளவத்தை   முருகன் பிளேஸ்    இல்லத்தில்  தொடர்ந்தும் வாழ்ந்தவாறே    இலக்கியப்பணியாற்றியவர்.    

அத்தகைய ஆளுமையான கே. எஸ். சிவகுமாரன் அவர்கள் நேற்று முன்தினம் 15 ஆம் திகதி சிந்திப்பதையும், எழுதுவதையும் நிறுத்திக்கொண்டு எம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டார்.

இனி எம்மிடம் எஞ்சியிருப்பது, அவர் பற்றிய நினைவுகளும் அவர் விட்டுச்சென்றுள்ள படைப்புகளும்தான்.

சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகின்றோம்.

No comments: