தமிழ் வளர்ப்போம்! (முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கிறை….) - --- மெல்போர்ன் அறவேந்தன்

சொந்தம் என இந்தத் தமிழினி

எந்தன் உயிர் வந்துப் பரவிட

பந்தம் அது எந்தத் தருணமும் தளராதே!

 

கற்றுத் தெளி வித்துத் தரணியில்

வெற்றிப் படி எட்டும் தமிழிதை

சற்றும் இனி விட்டுக் கொடுத்திட முடியாதே!

 

குற்றம் குறை பெற்றுப் பலமொழி

சுற்றிக் கொடி கட்டித் திரிகையில்

பற்றுப் பிடிப் பற்றுத் தமிழினி விழலாமோ?

 

வெட்டிப் பலி யிட்டுப் பிறகிவர்

கட்டுக் கதை சொல்லித் திரிகையில்

கெட்டுத் தமிழ் பட்டுக் கருகிட விடலாமோ?

 

அங்கம் உடல் விட்டுப் பிரிந்திட

தங்கம் விலை தந்துப் பயனிலை

பங்கம் அது இந்தத் தமிழினி பெறலாமோ?

 

சங்கம் பல கண்டப் பயிரிது

எங்கும் அது தங்கித் தழைத்திட

பொங்கிப் படை கொண்டுத் தமிழிதை வளர்ப்போமே!

           No comments: