எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 31 கதைகளிலிருந்து கல்வெட்டு வரையில் தொடரும் எழுத்தூழியம் ! முருகபூபதி


இலங்கையை விட்டு  நான் வெளியேறி  ஆறு  ஆண்டுகளுக்குள் ( 1988 – 1993 )   முக்கியமான சில தலைவர்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் கொல்லப்பட்டுவிட்டனர்.

1988 இல் விஜயகுமாரணதுங்க

1989 இல் அமிர்தலிங்கம் – யோகேஸ்வரன்.

1989 இல் ரோகண விஜேவீரா

1991  இல் ரஞ்சன் விஜேரத்ன.

1991 இல் ராஜீவ்காந்தி

1993 இல் லலித் அத்துலத் முதலி

1993  இல் ரணசிங்க பிரேமதாச

மக்கள் மட்டுமன்றி,  மக்களின் தலைவர்கள்


எனக்கருதப்பட்டவர்களும்  அரசியல் காரணங்களினால் கொல்லப்பட்ட காலம் அது.  அவர்கள் பற்றிய பதிவுகளை  இலங்கை மற்றும்  புகலிட  ஊடகங்களில் எழுதிக்கொண்டிருந்த அதே சமயம்,   நான் நெருங்கிப் பழகிய கலை, இலக்கியவாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் பற்றியும் எழுதினேன்.

 ஒருவகையில் கல்வெட்டு போன்று எழுதிவந்த அத்தகைய நினைவுப்பதிவுகள் கடந்த 15 ஆம் திகதி கொழும்பில் மறைந்த எனது அருமை நண்பர் இலக்கியத் திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன் வரையிலும் தொடருகிறது.

Column – Columnist என்று ஆங்கில  ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த வார்த்தைகளை நண்பர் சிவகுமாரன் பத்தி – பத்தி எழுத்தாளர்கள்  என அறிமுகப்படுத்தினார்.

பேராசிரியர் கா. சிவத்தம்பி  நினைவுப் பதிவுகளை – நினைவுப்பதிகை என்று குறிப்பிட்டார்.

இவர்களிடம் கற்றதையும் பெற்றதையும் எனது ஊடக வாழ்விலும் பயன்படுத்தினேன்.

வீரகேசரி வாரவெளியீட்டில் இலக்கியப் பலகணியை எழுதுமாறு தூண்டியதுடன்தொடர்ந்தும்  அதற்கு களம்  தந்தவரான        ( அமரர் ) பொன். ராஜகோபால் அவர்கள்தான் அத்தகைய பதிவுகளுக்கு  மூலகாரணம்.

மல்லிகை ஜீவா 1981  ஆம் ஆண்டின் இறுதியில்  தமிழகம் சென்று திரும்பியதையடுத்து,  அவரைச்சந்தித்து ஒரு நேர்காணல் எழுதித்தருமாறு பணித்தவர்தான் பொன். ராஜகோபால்.  அதனை எனது சொந்தப்பெயரில் எழுதியதனால் , ஆசிரிய பீடத்திலிருந்த சிலரது கண்களை அது  உறுத்திவிட்டது.  வீரகேசரி ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்து அதனை எழுதினாலும் , அந்த ஒரு பதிவுக்காக  எனக்கு 15 ரூபா சன்மானம் கிடைப்பதற்கும் வழிகோலியவர் ராஜகோபால்.


தொடர்ந்தும் வாரவெளியீட்டில்  கலை, இலக்கியப்புதினங்கள் எழுதச்சொன்ன அவர், அதற்காக ரஸஞானி என்ற புனைபெயரையும் சூட்டினார்.

ஒவ்வொரு வாரமும்,  நாட்டில் நடக்கும்  கலை, இலக்கிய புதினங்கள் பற்றியும் மறைந்துவிடும் எழுத்தாளர்கள் பற்றியும் எழுதிவந்தேன்.

அவ்வாறு எழுதி எழுதி ஆக்க இலக்கியப் படைப்புகளை                  ( சிறுகதை ) எழுதுவதிலிருந்து தூர விலகிச்சென்றுகொண்டிருந்தேன். 

என்னையும் அறியாமல், நானே  எழுத்துத் துறையில்  அஞ்சலிக்குறிப்பு  எழுதும்  சிலுவையையும் சுமந்தேன்.  அவுஸ்திரேலியாவுக்கு வந்து,  கடந்துவிட்ட 35 வருடங்களுக்குள் அஞ்சலிக் குறிப்புக் கட்டுரைகளே அதிகம் எழுதிவிட்டேன்.

 “  நாம் இறந்துவிட்டால், நிச்சயம் உம்மிடமிருந்து ஒரு


அஞ்சலிக்குறிப்பு ஆக்கம் ஏதாவது ஒரு ஊடகத்தில் வெளிவந்துவிடும். அந்த ஆறுதலுடன் எமது ஆத்மா  சாந்தியடைந்துவிடும்  “ என்று என்னிடமே  வேடிக்கையாகச் சொன்ன எழுத்தாளர்கள் சிலர் மறைந்தவேளையிலும்  அவர்கள் பற்றி எழுத நேர்ந்ததுதான் கொடுந்துயரம்.

சமகாலத்தில்  ஈழத்தின் மூத்த எழுத்தாளர்கள் நீர்வை பொன்னையன்,  மல்லிகைஜீவா,  செ. கணேசலிங்கன்,  தெணியான்,  கே. எஸ். சிவகுமாரன் மற்றும் தமிழகத்தில்  கு. சின்னப்ப பாரதி,  ஐரோப்பாவில்  தேனீ இணைய இதழ் ஆசிரியர் ஜெமினி கெங்காதரன், நடு இணைய இதழ் ஆசிரியர் கோமகன்,  கலைஞர் ஏ. ரகுநாதன்  ,  இலங்கையில் அற்பாயுளில் மறைந்த சிதம்பரப்பிள்ளை சிவகுமார்  மற்றும் எனது உடன் பிறந்த அக்கா செல்வி சண்முகவடிவம்பாள் உட்பட பலர் பற்றியும் அஞ்சலிக்குறிப்பு கட்டுரைகள் எழுதநேர்ந்தது.

ஈழத்தின் முக்கியமான  தமிழ் இலக்கிய ஆளுமைகள் 


மறைந்தபோது, அங்கிருக்கும் ஊடகங்களின் ஆசிரிய பீடத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்புகொண்டு எழுதித்தாருங்கள்  எனக்கேட்குமளவுக்கு தொடர்ச்சியாக இந்த சிலுவையை சுமந்துகொண்டிருக்கின்றேன்.

கடந்த சில வருடங்களாக சிறுகதைகள் எழுதுவதை குறைத்துக்கொண்டு,  நூல்கள் பற்றிய  வாசிப்பு அனுபவத்தையும்,  ஆளுமைகளின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும்  ஆக்கங்களையும் அஞ்சலிக்குறிப்புகளையும் எழுதிக்கொண்டிருப்பதை அவதானித்து வந்த இருவர் என்னை செல்லமாக கடிந்துகொண்டனர்.

இவ்வாறு தொடர்ந்து எழுதி சிறுகதை எழுத்தாளன் என்ற அடையாளத்தை தொலைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னவர்களில் ஒருவர் எனது உடன்பிறந்த தங்கை பரிமளஜெயந்தி நவரட்ணம். மற்றவர் உடன் பிறக்காத நேசமலர் தங்கை சிட்னியில் வதியும் கலை, இலக்கிய ஆர்வலர் செல்வி யசோதா பத்மநாதன்.

அதனால், இறுதியாக வெளியான எனது ஏழாவது கதைத் தொகுதியான கதைத் தொகுப்பின் கதை நூலை ( யாழ். ஜீவநதி வெளியீடு )  இவர்கள் இருவருக்குமே சமர்ப்பணம் செய்தேன்.

இலக்கிய நண்பர்கள் மல்லிகை ஜீவா ,  தெணியான், கே. எஸ். சிவகுமாரன் ஆகியோர் இலங்கையில் வாழ்ந்துகொண்டிருந்தவர்கள். இவர்கள் மறைந்தவுடன் இவர்கள் பற்றிய அஞ்சலிப்பகிர்வு ஆக்கங்களை எழுதி தாமதமின்றி அனுப்பி உதவுங்கள் என்று குறிப்பிட்ட சில ஊடகங்களிலிருந்து கேட்டபோது,   “  வேறு எவரும் இல்லையா..?  “ என்றே கேட்கத்தோன்றியது.

இவர்கள் பற்றி தமிழ் விக்கிபீடியாவில் பல குறிப்புகள் இருக்கின்றன.  படங்களையும் எளிதாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

விக்கிபீடியா குறிப்புகளை உசாத்துணையாகக் கொண்டு ஊடகங்களிலிருப்பவர்களே ஒரு கட்டுரையை எழுதிவிட முடியும்.

ஆனால், அதற்குத்  தயாரில்லாமல்,  விரைவாக எழுதி அனுப்புங்கள் எனக்கேட்கும்போது, மறைந்தவர்களின் ஆத்மாவுக்காக பொறுத்துக்கொள்ள நேர்ந்துவிடுகிறது.

மற்றும் ஒரு வேடிக்கையும் இதில் உறைபொருளாக  தொக்கி நிற்கிறது.

ஒரு ஊடகத்திற்கென எழுதியதையே  எமக்குத்தராமல்,  சற்று வித்தியாசமாக எழுதித்தாருங்கள் என்பார்கள்.

குறிப்பிட்ட ஆளுமையின் பிறந்த ஆண்டும்  மறைந்த ஆண்டும்  மாத்திரம் ஒரேவிதமாக இருக்கும் எனச்சொல்லியிருக்கின்றேன்.

நண்பர் இலக்கியத் திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன் அவர்களும் தொடக்கத்தில் சிறுகதைகள்தான் எழுதினார். இவரைப்போன்று நண்பர்கள் பேராசிரியர்கள் கைலாசபதி, நுஃமான்,  இலக்கிய விமர்சகர் தொ. மு. சி. ரகுநாதன் ஆகியோரும் சிறுகதைகள்தான் எழுதினார்கள்.

 காலப்போக்கில் அவர்களும்  விமர்சனம், பத்தி எழுத்து என தடம் மாறிச்சென்றனர்.  அதனால், அவர்களிடமிருந்த  இயல்பான ஆக்க இலக்கிய படைப்பூக்கம் படிப்படியாக மறைந்துபோய்விட்டது.

சிவகுமாரனுக்கும் இதுதான் நேர்ந்தது.  எனினும் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களும் ஊக்குவிக்கப்பட்டவர்களும் தற்போது அவருக்கு தமது முகநூல்களின் ஊடாக அஞ்சலி எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

இம்மாதம் 20 ஆம் திகதி ( 20-09-2022 ) செவ்வாய்க்கிழமை இலங்கை நேரம் காலை 9-00 மணி முதல்  பிற்பகல் 2-00 மணி வரையில் அவரது பூதவுடல் பொரளை A. F. Raymonds மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கபட்டு, பொரளை இந்து மயானத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என ஒரு முகநூல் குறிப்பு  தெரிவிப்பதாக, இந்த பத்தியின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்ட,  வீரகேசரி வாரவெளியீட்டின் முன்னாள் ஆசிரியர் ( அமரர் ) பொன். ராஜகோபாலின் புதல்வர் நாவலன் ராஜகோபால் எனக்கு தகவல் தெரிவித்தார்.

முகநூல் அறிமுகமாகாதிருந்த காலப்பகுதியிலேயே அஞ்சலிக்குறிப்புகள்  எழுதத்தொடங்கி,  சிலுவை சுமந்த நான், தற்போது இந்த முகநூல் கலாசாரத்திற்குள் பிரவேசிக்காமலேயே தொடர்ந்து ஊடகங்களிலும் இதழ்களிலும் இணைய இதழ்களிலும் எழுதிக்கொண்டிருக்கின்றேன்.

இந்தப்பதிவை நண்பர் சிவகுமாரனுக்கே சமர்ப்பணம் செய்கின்றேன்.

( தொடரும் ) 



No comments: