உலகச் செய்திகள்

உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணை: அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை 

மகாராணி சார்பில் உம்ரா யாத்திரை வந்தவர் கைது

உக்ரைன் போருக்குப் பின் புட்டின் - ஜின்பிங் சந்திப்பு

உலகில் நீண்ட காலம் ஆட்சி புரியும் மன்னராக புருணை சுல்தான் சாதனை

அமெரிக்க துணை ஜனாதிபதி வீட்டுக்குச் சென்ற குடியேறிகள்


உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணை: அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை 

உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்தால் அது 'சிவப்புக் கோட்டை' தாண்டுவதாக இருக்கும் என்றும் (அமெரிக்காவை) உக்ரைன் மோதலில் ஈடுபடும் தரப்பாக கருத வேண்டி இருக்கும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.

'ரஷ்யா தனது ஆட்புலங்களை பாதுகாக்கும் உரிமையை பெற்றுள்ளது' என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மரியா சகரோவா கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா உக்ரைனுக்கு மேம்பட்ட வழிகாட்டல் ரொக்கெட் அமைப்பின் ரொக்கெட்டுகளை வெளிப்படையாக வழங்குகிறது. இது 80 கிலோ மீற்றருக்கு அப்பால் தாக்கக்கூடியதாக உள்ளது. எனினும் அமெரிக்க ரொக்கெட்டுகளால் ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்துவதில்லை என்று உக்ரைன் உறுதி அளித்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இந்த ஏவு முறை மூலம் 300 கிலோமீற்றர் தூரம் வரை ஏவுகணைகளை வீச முடியும். உக்ரைனிடம் அவ்வாறான ஏவுகணை இருப்பதை அந்நாட்டு அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

எனினும் உக்ரைன் கட்டுப்பாட்டு நிலப்பகுதியில் இருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் ரஷ்ய விமானத் தளம் மீது கடந்த ஓகஸ்ட் 9ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் பற்றிய விளக்கம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

எனினும் கடந்த பெப்ரவரியில் உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்ய துருப்புகளை எதிர்ப்பதற்கு பெரும் அளவு ஆயுத உதவியை அமெரிக்கா மற்றும் ஏனைய மேற்கத்திய நாடுகளிடம் உக்ரைன் கோரி வருகிறது.

உக்ரைனுக்கு 3 பில்லியன் டொலர் புதிய இராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா கடந்த மாதம் உறுதி அளித்தது. இதன்மூலம் அமெரிக்கா அந்நாட்டுக்கு வழங்கும் பாதுகாப்பு உதவிகள் 10.6 பில்லியன் டொலர்களாக அதிகரித்தது.   நன்றி தினகரன் 




மகாராணி சார்பில் உம்ரா யாத்திரை வந்தவர் கைது

காலஞ்சென்ற இரண்டாம் எலிசபெத் மகாராணிக்காக உம்ரா வழிபாட்டில் ஈடுபட முஸ்லிம்களின் புனித தலமான மக்காவுக்கு பயணித்த ஆடவர் ஒருவரை சவூதி அரேபிய நிர்வாகம் கைது செய்துள்ளது.

யெமன் நாட்டைச் சேர்ந்த அந்த ஆடவர் முஸ்லிம் அல்லாதோருக்கு தடுக்கப்பட்ட மக்கா பெரிய பள்ளிவாசலில் இருந்து கடந்த திங்கட்கிழமை சமூக ஊடகத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில், மகாராணிக்காக தாம் உம்ரா செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கா யாத்திரையில் ஈடுபடுபவர்கள் பதாகைகள் அல்லது கோசங்களை மேற்கொள்வதற்கு தடை உள்ளது. இதனை மீறியதற்காகவே அவர் கைது செய்யப்பட்டதாக சவூதி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.    நன்றி தினகரன் 




உக்ரைன் போருக்குப் பின் புட்டின் - ஜின்பிங் சந்திப்பு

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு உக்ரைன் விவகாரம் குறித்து அக்கறை இருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்ததாய், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார். இருப்பினும், ரஷ்யா–உக்ரைன் போரில் சீனா நடுநிலையில் இருப்பதை அவர் பாராட்டினார்.

போர் ஆரம்பித்த பின் இரு தலைவர்களும் முதல்முறையாக ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துள்ளனர். உஸ்பகிஸ்தானில் நடைபெறும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டின்போதே கடந்த வியாழக்கிழமை (15) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இருவரும் நீண்ட நாள் நண்பர்கள் என்று கூறி அன்பைப் பரிமாறிக்கொண்டனர். 'உக்ரைன் நெருக்கடியைப் பொறுத்தவரை நமது சீன நண்பர்களின் நியாயமான நிலைப்பாட்டிற்கு நாங்கள் மிகுந்த மதிப்பு வழங்குகிறோம்' என்று புட்டின் ஷிஜின்பிங்கிடம் கூறினார்.

ரஷ்ய–உக்ரைன் போரில் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அது உலகளவில் எரிசக்தி, உணவு விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், ரஷ்யா உக்ரைன் நிலப்பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து தீவிரம் காட்டிவருகிறது.   நன்றி தினகரன் 





உலகில் நீண்ட காலம் ஆட்சி புரியும் மன்னராக புருணை சுல்தான் சாதனை

பிரிட்டனின் எலிசபெத் மகாராணி காலமானதை அடுத்து, புருணை சுல்தான் ஹசனல் போல்கியா உலகில் நீண்ட காலத்திற்கு ஆட்சி செய்துவரும் மன்னராகியுள்ளார்.

1967ஆம் ஆண்டு மன்னரான அவர் சுமார் 55 ஆண்டுகளாக ஆட்சி செய்துவருவதாக பெர்னாமா செய்தி நிறுவனம் கூறியது.

எலிசபெத் மகாராணியின் ஆட்சி 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. கடந்த வியாழக்கிழமை (08) அவர் காலமானார். அவரின் பூதவுடலை தாங்கிய பேழை ஸ்கொட்லந்தில் உள்ள பால்மோரலிலிருந்து நகரங்கள், கிராமங்கள் வழி கொண்டு செல்லப்பட்டு வருகிறது. எலிசபெத் மகாராணியின் மகனான இளவரசர் சார்ல்ஸ் பிரிட்டனின் புதிய மன்னராக அரியணை ஏறியுள்ளார்.   நன்றி தினகரன் 






அமெரிக்க துணை ஜனாதிபதி வீட்டுக்குச் சென்ற குடியேறிகள்

குடியேறிகள் தொடர்பில் அரசியல் மோதல் அதிகரித்து வரும் நிலையில் குடியேற்றவாசிகளை ஏற்றிய இரு பஸ்கள் டெக்சாஸில் இருந்து வொஷிங்டன் டிசியில் இருக்கும் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஸின் வீட்டுக்கு அருகில் அனுப்பப்பட்டுள்ளன.

குடியேற்றக் கொள்கைகளை இறுக்குமாறு வலியுறுத்தி இருக்கும் டெக்சாஸ் மாநிலத்தின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஆளுநர், இந்த நடவடிக்கையை திட்டமிட்டே மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

புளொரிடா குடியேறிகளை மஸ்ஸசுவெட்ஸுக்கு அனுப்பிய அடுத்த நாளே இது இடம்பெற்றுள்ளது.

இந்த இரு மாநிலங்களினதும் நடவடிக்கை ஜனநாயகக் கட்சி ஆட்சியில் இருக்கும் பகுதிகளுக்கு குடியரசு மாநிலங்கள் குடியேறிகளை அனுப்பும் நடவடிக்கையாக உள்ளது.

ஆளும் ஜனநாயகக் கட்சி குடியேற்ற சட்டங்களை முழுமையாக செயல்படுத்த தவறி இருப்பதாக குடியரசு கட்சியினர் குறிப்பிடுகின்றனர்.

இதில் துணை ஜனாதிபதியின் வீட்டுக்கு அருகில் அழைத்து வரப்பட்ட 75 தொடக்கம் 100 பேர் அளவான குடியேறிகள் அங்கே தரித்திருந்தபோது அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று அவர்களை தேவாலயம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளது.    நன்றி தினகரன் 





No comments: