உலகச் செய்திகள்

 சல்மான் ருஷ்டி மீது கூரிய ஆயுத தாக்குதல்

டொனால்ட் ட்ரம்பின் வீட்டில் பொலிஸ் அதிரடிச் சோதனை

உக்ரைனிய அணுமின் நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: ஐ.நா எச்சரிக்கை

ஆப்கான் தலிபான் ஆதரவு மதத் தலைவர் படுகொலை

சீனாவின் குழுவில் இருந்து இரு நாடுகள் வெளியேற்றம்

சீன எல்லையோரமாக இந்திய - அமெரிக்க போர்ப் பயிற்சி

இங்கிலாந்து பயணித்த பாகிஸ்தான் வீரர்களும் மாயம்


சல்மான் ருஷ்டி மீது கூரிய ஆயுத தாக்குதல்

- கண்ணை இழக்கும் நிலையில் வைத்தியசாலையில் போராடி வருகிறார்
- தனது பாதுகாப்பு தொடர்பில் தஸ்லிமா நஸ்ரின் அச்சம் வெளியீடு

நேற்று (12) நியூயோக்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து சல்மான் ருஷ்டி மீது கத்திக் குத்து தாக்குதல் நடாத்தப்பட்ட நிலையில் அவர் தற்போது அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

1988ஆம் ஆண்டு 'ஷாத்தானின் வசனங்கள்' (Satanic Verses) எனும் நூலை வெளியிட்டதைத் தொடர்ந்து, உலக முஸ்லிம்களின் வெறுப்பை கட்டிக்கொண்ட இறைமறுப்பு எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு, கொலை அச்சுறுத்தல் இருந்து வந்திருந்தமை குறிப்பிடத்த்தக்கது.

75 வயதான சல்மான் ருஷ்தி மீது 24 வயதான ஹாதி மாதர் (Hadi Matar) எனும் இளைஞன் ஒருவனே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இவர் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாநிலத்தின் பெயார்வியூ எனும் இடத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதில் கழுத்திலும், அடிவயிற்றுலும் தாக்குதலுக்குள்ளான சல்மான் ருஷ்டி அங்கிருந்து உடனடியாக ஹெலிகொப்டர் மூலம் பென்சில்வேனியாவிலுள்ள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

ஆபத்தான நிலையில் உள்ள சல்மான் ருஷ்டி ஒரு கண்ணை இழக்கக்கூடும் என அவரது மருத்துவர் தெரிவித்துள்ளனர்.  அவரது கையிலுள்ள நரம்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, அவரது ஈரலும் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபரிடமிரந்து மீட்கப்பட்ட முதுகுப்பை மற்றும் இலத்திரனியல் சாதனங்களை ஆய்வு செய்வதற்கான உத்தரவை பெறும் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸார், இச்சம்பவம் தொடர்பான நோக்கமோ அல்லது குற்றச்சாட்டுகள் தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லையென தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் போது, ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் தாக்கிய நபரை விரைந்து வந்து தரையில் அழுத்திப் பிடித்ததாகவும், பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும், பார்வையாளர்களில் ஒரு மருத்துவர் ருஷ்டிக்கு முதலுதவி செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ருஷ்டியுடன் இருந்து நேர்காணல் மேற்கொண்ட ஹென்றி ரீஸ் (Henry Reese) என்பவரின் தலையில் சிறிய காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹென்றி ரீஸ் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பின் இணை நிறுவுனர் என்பதோடு, இவ்வமைப்பு துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தலின் கீழ் நாடுகடத்தப்பட்ட எழுத்தாளர்களுக்கான புகலிடத்தை வழங்குகிறது.

ருஷ்டி மீது தாக்குதலை மேற்கொண்ட நபர் அவரைத் தொடர்ச்சியாக பல முறை தாக்கியதாகவும், அவர் இறுதி வரை தனது தாக்குதலை நிறுத்தவில்லையெனவும் லிண்டா ஆப்ரம்ஸ் எனும் பார்வையாளர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அவரை அடக்க ஐந்து பேர் முயள்சி செய்தனர், அவர் தொடர்ந்தும் ருஷ்டி மீது குத்திக்கொண்டே இருந்தாரென, லிண்டா ஆப்ரம்ஸ் தெரிவித்துள்ளார். அவர் ஆத்திரத்துடன் காணப்பட்டிருந்தார். மிக  வலிமையாகவும் வேகமாகவும் இருந்தார். என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மும்பாயில் பிறந்த சல்மான் ருஷ்டிக்கு தற்போது 75 வயதாகும். இவருக்கு 3 மனைவிகளும் 2 பிள்ளைகளும் உள்ளனர்.

1981 இல் Midnight's Children எனும் நூலின் மூலம் இவர் புகழ் பெற்றார். இதன் ஒரு மில்லியன் பிரதிகள்  இங்கிலாந்தில் மாத்திரம் விற்பனையாகியுள்ளது.

1988 இல் வெளியிடப்பட்ட அவரது நான்காவது புத்தகமான - The Satanic Verses (சாத்தானிக் வசனங்கள்) அவரை சுமார் 10 வருடங்கள் தலைமறைவாக வாழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியது.

முஸ்லிம்கள் மத்தியில் இது சீற்றத்தைத் தூண்டியதோடு, குறித்த நூலின் உள்ளடக்கம் மதத்தையும் கடவுளையும் அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. சில நாடுகளில் இப்புத்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ருஷ்டிக்கு எதிரான கலவரங்களில் பலர் கொல்லப்பட்டதோடு ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்திற்கும் கல்லெறியப்பட்டது.

1991 ஆம் ஆண்டில், புத்தகத்தின் ஜப்பானிய மொழிபெயர்ப்பாளர் கத்தியால் குத்தப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு, இத்தாலிய மொழிபெயர்ப்பாளரும் கத்தியால் குத்தப்பட்டார். புத்தகத்தின் நோர்வே வெளியீட்டாளர் வில்லியம் நைகார்ட் சுடப்பட்டார் ஆனால் குறித்த இருவரும் உயிர் பிழைத்தனர்.

புத்தகம் வெளியாகி ஒரு வருடம் கழித்து, ஈரானின் உயர் தலைவர் ஆயதுல்லா கொமேனி, சல்மான் ருஷ்டியை தூக்கிலிட அழைப்பு விடுத்தார். $3m (£2.5m) வெகுமதியை இதற்காக வழங்குவதாகவும் அறிவித்தார்.

ருஷ்டியின் மீதான குறித்த பரிசு தொடர்ந்தும் அமுலில் உள்ளது என்பதுடன், ஈரான் அரசாங்கம் கொமேனியின் ஆணையிலிருந்து விலகியிருந்தாலும், ஒரு காசி-உத்தியோகபூர்வ ஈரானிய மத அறக்கட்டளை 2012 இல் அவ்வெகுமதியை மேலும் $500,000 ஆக அதிகரித்தது.

சல்மான் ருஷ்டி மீதான கத்திக்குத்து பற்றி ஈரான் அரசிடம் இருந்து எந்தவொரு பதிலும் வெளியிடப்படவில்லை. ஈரானிய ஊடகங்கள் சல்மான் ருஷ்டியை ஒரு விசுவாச துரோகி என்று வர்ணித்துள்ளன.

பிரித்தானிய மற்றும் அமெரிக்க குடியுரிமை பெற்ற சல்மான் ருஷ்டி, நடைமுறையில் இஸ்லாத்தை பின்பற்றாத முஸ்லிம் பெற்றோருக்கு பிறந்தவர் என்பதோடு அவர் ஒரு நாத்திகரும் ஆவார். கருத்துச் சுதந்திரத்திற்காக குரல் கொடுப்பவராக தன்னை அடையாளப்படுத்திய அவர், தனது செயற்பாடுகளை சரியென வலியுறுத்தி வந்துள்ளார்.

தி சாத்தானிக் வெர்சஸ் வெளியானதில் இருந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக சல்மான் ருஷ்டி மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளார். ருஷ்டி தனது நாவலின் முக்கிய உந்துதல் புலம்பெயர்ந்த அனுபவத்தை ஆராய்வதாக கூறினார், ஆனால் முஸ்லிம்களில் பலர் முஹம்மது நபியின் சித்தரிப்பு மற்றும் குர்ஆன் கடவுளின் வார்த்தையாக வெளிப்படுத்தப்பட்டதன் தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக கவலையுற்றனர்.

சாத்தானிய வசனங்கள் முதலில் அவரது பிறந்த நாடான இந்தியாவிலும் பின்னர் ஈரானின் ஆயயதுல்லா கொமேனி தனது அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பும் பல நாடுகளிலும் தடை செய்யப்பட்டன.

இந்த புத்தகத்தை வெளியிடுவதில் சம்பந்தப்பட்டவர்களைக் கொல்ல வேண்டும் என்றும், கொலைகளில் பங்கேற்பவர்களுக்கு வெகுமதிகளை வழங்குவதாகவும் கொமேனி அறிவித்திருந்தார்.

போராட்டங்களின் பரவலை கண்டு அஞ்சிய சல்மான் ருஷ்டி முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்டதோடு, அதனைத் தொடர்ந்து தலைமறைவானார்.

2007 ஆம் ஆண்டு சல்மான் ருஷ்டிக்கு ராணியால் நைட் (Knight) பட்டம் வழங்கப்பட்டபோது, ​​அது ஈரான் மற்றும் பாகிஸ்தானில் எதிர்ப்புகளைத் தூண்டியது, அங்கு ஒரு அமைச்சரவை அமைச்சர்  "தற்கொலைத் தாக்குதல்களை இது நியாயப்படுத்துகிறது" என்று கூறினார்.

ருஷ்டி கலந்து கொண்ட பல இலக்கிய நிகழ்வுகள் அச்சுறுத்தல்கள் மற்றும் பகிஷ்கரிப்புகளுக்கு உட்பட்டுள்ளன. ஆனால் அவர் தொடர்ந்தும் எழுதி வருகிறார். அவரது அடுத்த நாவலான Victory Cityஎதிர்வரும் பெப்ரவரி 2023 இல் வெளியிடப்படவுள்ளது.

இதேவேளை, தனது லஜ்ஜா நாவல் மூலம் முஸ்லிம்களின் மத நம்பிக்கையைப் புண்படுத்தியதாக நீதிமன்றம் கூறியதையடுத்து, வங்காளதேசத்தில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன், ருஷ்டியின் தாக்குதலுக்குப் பின்னர் தனது சொந்தப் பாதுகாப்பு குறித்து அஞ்சுவதாகக் தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 

டொனால்ட் ட்ரம்பின் வீட்டில் பொலிஸ் அதிரடிச் சோதனை

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பிளோரிடா வீட்டில் FBI பொலிஸார் சோதனை நடத்தியதாகவும் அந்த முகவர்கள் தமது பாதுகாப்புப் பணப்பெட்டி ஒன்றை உடைத்துத் திறந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பாம் கடற்கரையில் உள்ள மாரா லாகோ இல்லத்தை பெரும் எண்ணிக்கையான எப்.பி.ஐ முகவர்கள் ஆக்கிரமித்தனர் என்று டிரம்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டிரம்ப் உத்தியோகபூர்வ ஆவணங்களை கையாள்வதுடன் தொடர்புபட்டே கடந்த திங்கட்கிழமை இந்த சோதனை இடம்பெற்றிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. “இது எமது நாட்டின் இருண்ட காலம்” என்று குறிப்பிட்ட டிரம்ப், “அமெரிக்க ஜனாதிபதி ஒருவருக்கு இதற்கு முன்னர் இதுபோன்ற ஒன்று நடந்ததில்லை” என்றார். இந்தத் தேடுதல் பற்றி எப்.பி.ஐ மற்றும் சட்டத் திணைக்களம் எந்தக் கருத்தும் வெளியிடவில்லை.

டிரம்பின் ஜனாதிபதி தவணைக்காலம் நிறைவுற்றதும் அவரது மாரா லாகோ இல்லத்திற்கு இரகசிய ஆவணங்கள் கொண்டுசெல்லப்பட்டது குறித்து அமெரிக்க நீதித்துறை விசாரணை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 


உக்ரைனிய அணுமின் நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: ஐ.நா எச்சரிக்கை

உக்ரைனின் சபொரிசியா அணுமின் நிலையம் மீது மேலும் ஷெல் குண்டுகள் வீசப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பில் ரஷ்யா மற்றும் உக்ரைன் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

ஐரோப்பாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமாக இருக்கும் இந்த அணு ஆலையின் அலுவலகம் மற்றும் தீயணைப்பு நிலையத்தின் மீது கடந்த வியாழக்கிழமை 10 தடவைகள் தாக்குதல் இடம்பெற்றதாக இரு தரப்பும் குறிப்பிட்டுள்ளன.

நிலைமை குறித்து பேசுவதற்கு அழைக்கப்பட்ட ஐ.நா பாதுகாப்புச் சபை கூட்டத்தில், இது ஆபாயகரமான மணித்தியாலமாக இருந்தது என்று அணு கண்காணிப்பு நிறுவனத்தின் தலைவர் ரபாயேல் கிரோசி எச்சரித்துள்ளார்.

இது பேரழிவுக்கு இட்டுச் செல்லும் என்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அணு நிலையத்துக்குச் செல்ல ஐ.நா நிபுணர்களுக்கு உடன் அனுமதி அளிக்கும்படி சீனா மற்றும் அமெரிக்கா அழைப்பு விடுத்தபோதும், கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இது போன்ற கோரிக்கைகள் செயற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அணு நிலையத்தைச் சூழ இராணுவ தடை வலயம் ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்கா முன்னதாக அழைப்பு விடுத்திருந்தது. “அணு நிலையம் ஒன்றுக்கு அருகில் இடம்பெறும் மோதல்கள் ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது” என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும் இராணுவ தடை வலயம் ஒரு தேர்வாக அமையாது என்று குறிப்பிட்ட ரஷ்யாவின் ஐ.நா பிரதிநிதி, அது இந்த ஆலை மேலும் ஆத்திரமூட்டல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டினார்.

மத்திய கிழக்கு உக்ரைனில் இருக்கும் இந்த அணு நிலையம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதி மீது கடந்த வாரமும் ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்றது. அது தொடர்பில் ரஷ்யா மற்றும் உக்ரைன் பரஸ்பரம் குற்றம்சாட்டின.

ரஷ்யா இந்த நிலையத்தை ஒரு இராணுவத் தளமாக மாற்றி இருப்பதாகவும் அங்கிருந்து நடத்தப்படும் தாக்குதல்களுக்கு உக்ரைனியப் படையினால் பதில் தாக்குதல் நடத்த முடியாத நிலை இருப்பதாகவும் உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.

இந்தக் கூற்றை ரஷ்யா மறுத்துள்ளது.

உக்ரைன் அணுசக்தி நிறுவனம் கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், “ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் ஒருமுறை சபொரிசியா நிலையம் மற்றும் அணு நிலையத்திற்கு அருகாமையில் இருக்கும் பகுதி மீது ஷெல் தாக்குதல் நடத்தி உள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உருக்கியொட்டற் பகுதிக்கு அருகில் இருக்கும் நிர்வாக அலுவலகம் ஒன்று தாக்கப்பட்டிருப்பதாகவும் பல கதிரியக்க சென்சார்கள் சேதமடைந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அருகில் இருக்கும் புல்வெளிப் பகுதியில் சிறிய தீ ஏற்பட்டபோதும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அணு நிலையத்திற்கு அருகில் இருக்கும் தீயணைப்பு நிலையமும் தாக்கப்பட்டிருப்பதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.   நன்றி தினகரன் 

ஆப்கான் தலிபான் ஆதரவு மதத் தலைவர் படுகொலை

தலிபான்களை ஆதரிப்பவரும் பெண் கல்விக்கு ஆதரவானவருமான ஆப்கானின் முன்னணி மதத் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

காபுலில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் ஒன்றில் ஷெய்க் ரஹிமுல்லா ஹக்கானி பலியாகியுள்ளார்.

தற்கொலைதாரி தனது செயற்கைக் காலில் மறைத்து வந்த குண்டை வெடிக்கச் செய்தே மதத் தலைவரை கொன்றிருப்பதாக தலிபான் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

இஸ்லாமிய அரசுக் குழு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. மதத் தலைவரின் அலுவலகத்துக்குள்ளேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஷெய்க் ஹக்கானி ஆப்கான் தலிபான் அரசுக்கு ஆதரவாக உள்ளார். அவர் ஆப்கான் இஸ்லாமிய அரசு குழுவை விமர்சிக்கும் முன்னணி மதத் தலைவராகவும் உள்ளார்.

கடந்த ஆண்டு தலிபான்கள் ஆப்கானில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் அங்கு கொல்லப்பட்ட முக்கிய புள்ளியாக இவர் உள்ளார். ஆப்கானில் சர்ச்சைக்குரிய ஒன்றாக உள்ள பெண் கல்வி தொடர்பில் ஆதரவாக அவர் முன்னதாக பத்வா அல்லது மத ஆணை ஒன்றை பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 


சீனாவின் குழுவில் இருந்து இரு நாடுகள் வெளியேற்றம்

ஐரோப்பாவின் மத்திய, கிழக்கு நாடுகளுடன் ஈடுபடும் சீனாவின் சிறப்புக் குழுவிலிருந்து எஸ்தோனியாவும் லத்வியாவும் வெளியேறியுள்ளன.

ரஷ்யாவுடன் சீனா கொண்டிருக்கும் நெருக்கமான உறவு, தாய்வான் மீதான சீன இராணுவத்தின் அதிகரிக்கும் நெருக்கடி ஆகியவை தொடர்பிலான அக்கறைகள் இதற்குக் காரணம்.

குழுவிலிருந்து வெளியேறினாலும் சீனாவுடன் ஆக்ககரமான நடைமுறைகேற்ற உறவுகளைக் கொண்டிருக்கத் தொடர்ந்து செயல்படவிருப்பதாக எஸ்தோனியாவும் லத்வியாவும் கூறியுள்ளன.

கடந்த ஆண்டு லித்துவேனியா குழுவிலிருந்து வெளியேறியது.

2012ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட குழுவில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 9 நாடுகளே எஞ்சியுள்ளன.   நன்றி தினகரன் 


சீன எல்லையோரமாக இந்திய - அமெரிக்க போர்ப் பயிற்சி

ஒக்டோபரில் ஆரம்பம்

எதிர்வரும் ஒக்டோபர் 18 முதல் 31 வரையில் உத்தர்காண்டில் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டு யுத்தப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன.

'யுத்தபியாஸ்' என அழைக்கப்படும் இந்த யுத்தப் பயிற்சி சீன எல்லைக்கு அருகாமையில் அவுலி என்ற பகுதியில் நடைபெறும் என்றும் மலைப்பாங்கான பகுதியில் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்வது தொடர்பாக இப் பயிற்சி அமைவும் என்றும் புதுடில்லி தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

இது இந்தியா – அமெரிக்க படைகள் கூட்டாக ஈடுபடும் 18வது போர்ப் பயிற்சியாகும்.

இவ்விரு நாடுகளும் கடைசியாக அலஸ்காவில் தமது பயிற்சியை நடத்தியிருந்தன. கடும் பனிக்காலத்தில் யுத்தம் செய்வது தொடர்பானதாக இப்பயிற்சி அமைந்திருந்தது.    நன்றி தினகரன் 
இங்கிலாந்து பயணித்த பாகிஸ்தான் வீரர்களும் மாயம்

இங்கிலாந்தின் பெர்மிங்ஹாமில் நடைபெற்ற பொதுநலவாய போட்டியில் பங்கேற்கச் சென்ற இரு பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர்கள் காணாமல்போயுள்ளனர். சுலைமான் பலொக் மற்றும் நசீருல்லா ஆகிய வீரர்கள், அணியினர் பாகிஸ்தான் திரும்புவதற்கு சில மணி நேரம் இருக்கும்போது காணாமல்போயிருப்பதாக பாகிஸ்தான் குத்துச்சண்டை சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் கடந்த திங்கட்கிழமை முடிவுற்றதோடு காணாமல்போன வீரர்களின் கடவுச்சீட்டு உட்பட பயண ஆவணங்கள் சம்மேளன நிர்வாகத்திடமே தொடர்ந்தும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, பாகிஸ்தான் ஒலிம்பிக் குழு குத்துச்சண்டை வீரர்கள் காணாமல் போன விவகாரம் குறித்து விசாரிக்க நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பளுதூக்குதல் மற்றும் ஈட்டி எறிதல் ஆகியவற்றில் இரண்டு தங்கம் உட்பட 8 பதக்கங்களை வென்ற பாகிஸ்தான் குத்துச்சண்டையில் எந்தப் பதக்கத்தையும் வெல்லவில்லை. ஏற்கனவே பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கச் சென்ற இலங்கை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் என பத்துக்கும் அதிகமானவர்கள் இங்கிலாந்தில் காணாமல்போனமை குறிப்பிடத்தக்கது   நன்றி தினகரன் 


No comments: