இலங்கைச் செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஆர்ப்பாட்டம்

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை

காலி முகத்திடலில் எஞ்சியுள்ள தற்காலிக கூடாரங்கள் அகற்றம்

நல்லைக் கந்தன் உற்சவ காலத்தை முன்னிட்டு இன்று தெய்வீக திருக்கூட்டத் தொடர் நிகழ்வு

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து சேதம் விளைவித்ததாக 40 பேரின் புகைப்படம் வெளியீடு


காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஆர்ப்பாட்டம்

Saturday, August 13, 2022 - 6:00am


கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது போராட்டத்தை ஆரம்பித்து 2000 நாட்களை எட்டியுள்ள நேற்றைய தினத்தில் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏற்பாடு செய்திருந்த அந்த போராட்டம் வடக்கு மாகாணம் தழுவி கிளிநொச்சியில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதுடன் அவர்களுக்குரிய நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தியும், இனப் படுகொலையை மேற்கொண்டவர்களை கைது செய்ய கோரியும், இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காலை 9.30 மணியளவில் ஆரம்பமான இக் கவனயீர்ப்பு போராட்டம் ஏ9 வீதி ஊடாக இப் பேரணியாக கிளிநொச்சி டிப்போ சந்திவரை சென்றது.    நன்றி தினகரன் 






பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை

ஶ்ரீ தலதா உள்ளிட்ட அனைத்து கடவுள்களின் ஆசிர்வாதமும் அதற்கு பலமாக அமைய வேண்டும்
- கண்டி பெரஹரா நிறைவு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்த போதிலும் அந்த நெருக்கடியில் இருந்து நாடு நிச்சயம் மீண்டு வரும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்கு தலதா மற்றும் அனைத்து கடவுள்களின் ஆசிர்வாதம் பெரும் பலமாக அமையுமென சுட்டிக்காட்டினார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஶ்ரீ தலதா பெரஹரா விழா மற்றும் வருடாந்த நான்கு மகா விகாரைகளின் ஊர்வலம் வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து, கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (12) பிற்பகல் நடைபெற்ற வைபவத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வைக் கொண்டுவரும் புதிய பொருளாதாரம் தொடர்பில் அனைவரும் புதிய நம்பிக்கைகளுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மாளிகைக்கு ஊர்வலமாக வந்த தியவடன நிலமே நிலங்க தேல உள்ளிட்ட நான்கு மகா தேவாலயங்கள் உள்ளிட்ட ஏனைய தேவாலயங்களின் நிலமேக்கள் ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலில் ஜனாதிபதியினால் வரவேற்கப்பட்டனர்.

பின்னர் தியவதன நிலமே சம்பிரதாயபூர்வமாக பெரஹரா நிறைவடைந்தமை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு ஓலையை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

ஊர்வலத்தில் பயணித்த யானைகளுக்கு அடையாள ரீதியாக உபசாரம் செய்யும் வகையில் "சிந்து" எனும் யானைக்கு பழங்கள் வழங்கி உபசரித்தார்.

பெரஹராவில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு சம்பிரதாயபூர்மாக பரிசுகள் மற்றும் விருதுகளை ஜனாதிபதி வழங்கி வைத்ததுடன், வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் 07 அதி விசேட விருதுகள் உள்ளிட்ட 162 விருதுகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன. எசல பெரஹரா அறக்கட்டளை மற்றும் ஜனாதிபதி அலுவலகம் என்பன வருடாந்தம் இதற்கான அனுசரணையை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேலவினால் வரலாற்றுப் புகழ்மிக்க பெரஹரா (ஊர்வலம்) நிறைவு பற்றிய விடயங்கள் அடங்கிய அறிவிப்பை ஜனாதிபதி தலைமையிலான சபையில் சமர்ப்பித்தார்.

கிராமிய விகாரைகளுக்கான "எசல பெரஹரா அறக்கட்டளை" யிற்கான நிதியுதவி ஜனாதிபதியினால் வழங்கப்பட்டதுடன், "புனித தலதா கலாசாரம்" நூலும் இதன்போது ஜனாதிபதியிடம் வழங்கி வைக்கப்பட்டது.   நன்றி தினகரன் 





காலி முகத்திடலில் எஞ்சியுள்ள தற்காலிக கூடாரங்கள் அகற்றம்

கொழும்பு, காலி முகத்திடலில் எஞ்சியுள்ள தற்காலிக கூடாரங்களையும் அங்கிருந்த சிலரையும் பொலிசார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இன்று (12) பிற்பகல் இந்நடவடிக்கை இடம்பெற்றிருந்தது.

குறித்த பகுதியில் கடந்த ஏப்ரல் 03ஆம் திகதி முதல் இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியோர், அப்பகுதிக்கு 'கோட்டா கோ கம' என பெயரிட்டிருந்ததோடு, அங்கு தொடர்ச்சியாக தங்கியிருந்து, நூலகம், பல்கலை கற்றல் கூடம், சினிமா என பல்வேறு பிரிவுகளையும் அங்கு ஆரம்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை பதவியிலிருந்து விலகுமாறு கோரி முன்னெடுக்கப்பட்டு வந்த குறித்த ஆர்ப்பாட்டக்களம் பின்னர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் பதவி விலகுமாறு போராட்டத்தை முன்னெடுத்து வந்தது.

இந்நிலையில், காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அனுமதியின்றி தங்கியுள்ள அனைவரும் எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 5.00 மணிக்கு முன் வெளியேற வேண்டுமென பொலிஸார் அறிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட குறித்த உத்தரவை செல்லுபடியற்றதாக அறிவிக்குமாறு கோரி, மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு கடந்த ஓகஸ்ட் 05ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, உரிய சட்ட விதிகளைப் பின்பற்றாமல் காலி முகத்திடல் ´கோட்டா கோ கம' போராட்டப் பகுதியில் உள்ள சட்டவிரோத கூடாரங்களை ஓகஸ்ட் 10ஆம் திகதி வரை அகற்றப்படமாட்டாது என, சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உத்தரவாதமளித்திருந்தார்.

இதன் பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்களின் பெரும்பாலானோர் இணைந்து எடுத்த முடிவிற்கு அமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நான்கு ரிட் மனுக்களையும் நேற்று மன்தினம் வாபஸ் பெற்றனர்.

அத்துடன். காலி முகத்திடலில் உள்ள போராட்டக் களத்தை தாங்கள் காலி செய்வதாகவும் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவித்ததோடு, கடந்த இரு நாட்களாக அங்கிருந்த பெரும்பாலான கூடாரங்களை அகற்றியிருந்தனர்.

ஆயினும் தமது இலக்குகள் நிறைவேறும் வரை போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை எனவும், காலி முகத்திடலை விட்டு வெளியேறினாலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியேறும் வரை போராட்டத்தை கிராமங்களிலிருந்து நாடு முழுவதும் முன்னெடுப்போம் என போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஒரு சிலர் காலி முகத்திடலில் தொடர்ந்தும் இன்று வரை தங்கியிருந்த நிலையில், சட்டவிரோதமாக உரிய அனுமதியின்றி தங்கியிருந்த அவ்வாறான நபர்களையும், அங்கிருந்த தற்காலிக கூடாரங்களையும் பொலிஸார் இன்று நடவடிக்கை எடுத்திருந்தனர்.

றிஸ்வான் சேகு முகைதீன் - நன்றி தினகரன் 





நல்லைக் கந்தன் உற்சவ காலத்தை முன்னிட்டு இன்று தெய்வீக திருக்கூட்டத் தொடர் நிகழ்வு

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தால், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபத்திலே, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாடு மற்றும் அனுசரணையோடும், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் இணை அனுசரணையோடும் முன்னெடுக்கப்பட்டுவரும் தெய்வீகத் திருக்கூட்டத் தொடர் நிகழ்வு, நல்லைக் கந்தன் உற்சவப் பெருவிழாக் காலத்தினை முன்னிட்ட சிறப்பு நிகழ்வாக இடம்பெற்று வருகிறது.

அந்த வகையிலே, நல்லூர் உற்சவ காலத்தினை முன்னிட்ட தெய்வீகத் திருக்கூட்டச் சிறப்புத் தொடர் நிகழ்வின் பன்னிரண்டாம் நாள் வைபவம் இன்று சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு, நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபத்திலே, நல்லை ஆதீன முதல்வர் வணக்கத்திற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகளும் அமெரிக்கா, ஹாவாய் சைவ ஆதீனக் குருதேவர் சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளின் சீடர், வணக்கத்திற்குரிய ஆன்மிகச்சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகளும் திருமுன்னிலை வகிக்க, வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி. ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தலைமையில் இடம்பெறவுள்ளது.

தெல்லிப்பளை, பிரதேச செயலர் பிரிவின், பன்னாலை கணேசா அறநெறிப் பாடசாலையின் நிகழ்வு ஏற்பாட்டில், அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் அரங்கேறவுள்ளன.

சிறப்பு நிகழ்வுகள் வரிசையில், ‘வழிபாட்டு நடைமுறைகளை விதிகளாகச் சொல்லிய நாவலர் பெருமான்’ என்னும் தலைப்பில் சைவப்புலவர் சி.கா.கமலநாதனின் சிறப்புச் சொற்பொழிவும், திருமதி. சங்கீதா ரவிசங்கர் மற்றும் திருமதி. ஆரணி பாலச்சந்திரன் ஆகியோரின் சங்கீதக் கச்சேரி நிகழ்வும் இடம்பெறவுள்ளன.

நல்லைக் கந்தன் அருளாலே நிகழ்ந்தேறும் இத்தெய்வீகத் திருக்கூட்ட நிகழ்வினைக் காண வருமாறு அனைவரையும் அன்போடு அழைப்பதாக ஏற்பாட்டாளர்கள் வேண்டிக் கொண்டுள்ளனர்.

அ.கனகசூரியர் - நன்றி தினகரன் 





ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து சேதம் விளைவித்ததாக 40 பேரின் புகைப்படம் வெளியீடு

- விபரம் அறிந்தால் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவிப்பு

கடந்த ஜூலை 09ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து முறையற்ற ஒன்றுகூடலை மேற்கொண்டு, அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கொழும்பு மத்திய குற்ற விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், சமூக வலைத்தளங்கள் மற்றும் CCTV காட்சிகள் ஊடாக அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்களின் புகைப்படங்களை பொலிஸார் இவ்வாறு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை கைது செய்வதற்காக, சந்தேகநபர்கள் தொடர்பில் விபரம் அறிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

071-8591559
071-8085585
011-2391358
1997 (Hotline)

கொழும்பு மத்திய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.







No comments: