அதிகாரம் 4.
1983 ஆண்டு நாட்டில் இனமுறுகல் மேலும் தீவிரமடைந்தது. ஜே.ஆர். ஜெயவர்த்தன அதற்கு மேலும் மேலும் எண்ணெய் விட்டுக்கொண்டிருந்தார். யூலையில் பெரும் கலவரமாக வெடித்த அது பல தமிழர்களைக் காவு கொண்டது.
சந்திரமோகனுக்கும் பத்மினிக்கும் இடையில் இருந்த
பிணக்கைத் தீர்த்து வைக்க பல மாதங்கள் எடுத்தன. அவர்கள் இருவரும் இணைந்து வாழ்வதை,
அவர்களைத் தவிர மற்ற எல்லாரும் விரும்பியிருந்தார்கள். இதனால் விவாகரத்திற்கு
விண்ணப்பிக்க பல மாதங்கள் எடுத்தன.
பொத்தி வைக்கப்பட்டிருந்த இரகசியம் மெல்ல கசியத்
தொடங்கியது. மலையகத்தில் இவர்களின் பிரிவைப் பற்றி ஒருவருக்கும்
தெரிந்திருக்கவில்லை. பத்மினியை அங்கு கூட்டிச் செல்லாததற்கு நிறையவே சாக்குப்
போக்குகள் சொல்லி வந்தான் சந்திரமோகன். நாட்டுபிரச்சினைகளையும் அதற்குக் காரணமாக இழுத்தான்.
சந்திரமோகனுக்குத் திருமணம் என்று கேள்விப்பட்ட நாளில் இருந்து சாரதா பித்துப் பிடித்தவள் போலானாள். எதையும் எவரையும் வெறித்துப் பார்த்தபடி இருந்தாள். தினமும் கோவிலுக்குச் சென்று சுவாமியை முழுசிப் பார்த்தாள். சந்திரமோகனுக்குத் திருமணம் நடந்த அன்று காலைகூட கோவிலில் போய் இருந்துவிட்டாள். பின்னர் அவளை பலாத்காரமாகவே கோவிலில் இருந்து அகற்ற வேண்டியிருந்தது.
அவளை அப்படியே வைத்திருந்தால் பிரச்சினை ஆகிவிடும்
என்று உணர்ந்த தந்தையும் உறவினர்களும் அவளுக்கு ஒரு கலியாணத்தைச் செய்து
வைத்தார்கள். சுந்தரத்திடம் சொத்துப்பத்துகள் என்று பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை.
தனது வசதிக்கேற்ப சாரதாவிற்கு ஒருவனைத் தேர்ந்தெடுத்தார். அவளுக்கு வாய்த்த யோகன்
ஒரு ஆமாம்சாமி. அவன் ஒரு சமையல்காரன். எல்லாத்துக்கும் தலையை ஆட்டிக்கொண்டே இருந்தான்.
வாழ்க்கை பற்றிய எந்தவித விளப்பமும் இல்லாத சேங்கு அவன்.
தினம் தினம் எங்கோ வேலைக்குப் போய்க் கொண்டிருந்தான். அவன் எங்கு போகின்றான்
வருகின்றான் என்றெல்லாம் சாரதா கேட்பதில்லை. அவனுக்கும் தெரிவதில்லை.
அவனால் அவர்களுக்குச் சாப்பாட்டிற்குக் குறைவில்லை.
வரும்போது உணவுடன் வருவான். இரவு உணவை மாமனாருக்கும் சாரதாவிற்கும் அவனே போட்டுக்
குடுப்பான். சிலவேளைகளில் விதம்விதமாக சமைத்தும் போடுவான். சாரதா சிலவேளைகளில் சாப்பிடுவாள், சிலவேளைகளில்
எறிந்து போடுவாள். அது அவளின் மனநிலையைப் பொறுத்தது. அவர்கள் வீட்டு நாய்
மாத்திரம் கொளுத்து விளைந்து இருந்தது.
ஒருபோதும் சாரதா அவனுடன் அன்பாக நடந்து கொண்டது
கிடையாது. அவளின் உள்ளக்கிடக்கை எதையும் அறியாமல் அவளைப் பிடித்துத் தள்ளிவிட்டதன்
வினை அது. தந்தைக்கு பரம திருப்தி. வார இறுதியில் எங்காவது குடித்துவிட்டு
வரும்போது மருமகனுக்கும் வாங்கி வருவார். அவனும் இறைச்சிப் பிரட்டல் செய்து, இரண்டு
பேரும் சாப்பிட்டு உளறுவார்கள், கூத்தடிப்பார்கள்.
சாரதாவிற்குப் பிள்ளைகள் பிறக்கவில்லை. கூடி
இருந்தால்தானே பிள்ளையும் குட்டியும். சாரதா அவனுக்கு இடம் குடுக்கவில்லை. ஒருநாள்
சாரதாவின் தலையணையின் கீழ் சந்திரமோகனின் படம் ஒன்றை யோகன் கண்டெடுத்தான். அதை தனது
சாரத்தினுள் முடிந்து வைத்தான். வேண்டும்போது எடுத்து அதை வெறித்து வெறித்துப்
பார்த்தான்.
ஒருநாள் அதிகாலை வீட்டிற்கு முன்பாகவுள்ள மாமரத்தில்,
யோகன் தூக்குப் போட்டு இறந்து கொண்டான். பிணத்தைக் கண்ட சாரதா அழவில்லை. நேராக
கோவிலுக்குச் சென்று அங்கேயே தங்கிவிட்டாள். பின்பு பொலிஸ் வந்து அவளை விசாரணை
செய்துவிட்டு வீட்டிற்குக் கூட்டிச் சென்றார்கள்.
எல்லாம் முடிந்துபோய் விட்ட பின்னர் ஒருநாள்
தங்கம்மாவின் வீட்டில் போய் நிரந்தரமாகத் தங்கிக் கொண்டாள் சாரதா. ஊராரும்
தங்கம்மாவும் எவ்வளவு சொல்லியும் அவள் தன்னுடைய வீட்டிற்குப் போக மறுத்துவிட்டாள்.
சுந்தரம் மருமகன் இறந்தபின்னர் சாரதாவிடம் எதுவும் கதைப்பதில்லை.
இந்தச் சம்பவங்கள் நடந்தபோது சந்திரமோகன்
விவாகரத்துக்கு விண்ணப்பித்து மூன்று மாதங்கள் கடந்து விட்டன. சாரதாவின் கணவன்
இறந்த செய்தி கேட்டு, சந்திரமோகன் மலையகத்திலிருந்து ஓடோடி வந்தான். வந்தவனுக்கு
ஆச்சரியம் காத்திருந்தது. சாரதா அவனின் வீட்டில் இருந்தாள். சாரதாவுக்கு ஆறுதல்
சொன்னான். ஆறுதல்கள் பலனளிக்கவில்லை. அவளைத் தன் வீடு போகச் சொல்லி சந்திரமோகன்
வற்புறுத்தினான். அவள் அதைக் கேட்டுக் கொள்ளவில்லை. “இதுதான் என்னுடைய வீடு” என்று
சொன்னாள்.
வீட்டிற்கு வந்த மறுநாள் சாரதாவின் பின்னால் மந்திரம்
சபிக்கப்பட்டவன் போல ஒட்டி ஒட்டித் திரிந்தான் சந்துறு. தங்கம்மாவிற்கு அது
பிடிக்கவில்லை. ஊரிற்குள் பலபேர் பலவிதமாக பேசத் தொடங்கினர்.
“ஒண்டில நீ இஞ்சை இரு. அல்லது அவள் இஞ்சை இருக்கட்டும்.
இரண்டிலை ஒண்டு” முடிவாகச் சொல்லிவிட்டாள் தங்கம்மா. அதுவே சந்திரமோகனுக்கு
வேதவாக்காகி விட்டது. தங்கம்மா அப்படிச் சொல்லுவாள் என்று சந்திரமோகன் கனவிலும்
நினைக்கவில்லை. அதுவே போதும் என்றாகிவிட்டது சந்திரமோகனுக்கு. மறுநாள் காலை,
“அம்மா நான் போட்டு வாறன்” என்று சந்திரமோகன்
சொன்னபோது தங்கம்மா திகைத்து விட்டாள்.
அதன்பிறகு விவாகரத்துப் பெறும் வரைக்கும் சந்திரமோகன்
ஒருபோதும் ஊர் திரும்பியதில்லை.
ஒரு கோடை விடுமுறையின் போது சந்திரமோகன் சாரதா
திருமணம் எளிமையாக நடந்தது. சாரதாவின் பித்தும் வந்தவழியே பறந்து போனது.
உல்லாசப்பறவைகள் போல ஊரெல்லாம் கை கோர்த்தபடி அன்று
அவர்கள் இருவரும் சுற்றித் திரிந்தார்கள். முதலிரவு ஆயிரம் ஆயிரம் மன்மதக்
கனவுகளோடு பாய்ந்து பாய்ந்து வந்தது.
அன்றைய இரவில், முன்பொருநாள் பத்மினியிடம் கேட்டது
போல – அந்தக் கேள்வியை சாரதாவிடம் சந்துறு கேட்கவேண்டிய தேவை இருக்கவில்லை. ஆனால்
அந்தக் கேள்வியை சற்று மாற்றி யோசித்துப் பார்த்தான்.
“அது சரி சாரதா... உன்னுடைய ஆமாம்சாமி எப்பிடி? அதிலை
ரொம்ப முரடனோ...?” கேட்க நினைத்தான். ஆனால் கேள்வி தொண்டைக்குள் இடறுப்பட்டுக்
கொண்டது. சந்துறு இந்தத்தடவை தப்பித்துக் கொண்டான்.
... தொடரும்
No comments:
Post a Comment