நீண்ட இடைவெளிக்குப் பின்னர், நீர்கொழும்பிலிருந்த எனது குடும்பத்தினரையும் யாழ்ப்பாணத்திலிருந்த மல்லிகை ஜீவாவையும் சென்னையில் சந்தித்து, அவர்களுடன் தமிழ்நாட்டில் பயணங்களை மேற்கொண்டுவிட்டு, மீண்டும் சிங்கப்பூர் வழியாக அவுஸ்திரேலியா திரும்பினேன்.
சென்னை விமானநிலையத்தில்
எனது அரவணைப்பிலிருந்து கதறி அழுதவாறு பிரிந்த மகனும் மற்றும் கண்கள் குளமாக நின்ற
மகள்மாரும் அம்மாவும், மனைவியும் எனது கண்களை விட்டு அகலவில்லை.
“ குடும்பத்தை கெதியா அழைக்கப்பாரும் “ என்று மாத்திரம் ஜீவா சொன்னார்.
நளவெண்பாவில் ஒரு வரி இவ்வாறு வரும். “ கண்ணிலான்
பெற்றிழந்தான். “
அந்த முப்பது
நாட்களும் கால்களில் சக்கரம் பூட்டியவாறு விரைந்து ஓடிவிட்டன.
சுமார் மூன்று
வருடங்கள் குடும்பத்தினரை விட்டுப்பிரிந்து வாழ்ந்து, மீண்டும் சந்தித்து - முப்பது நாட்களே அவர்களுடன் செலவிட்டு, மீண்டும்
பிரிந்து வரநேர்ந்தது.
மல்லிகை
ஜீவா, யாழ். திரும்பியதும் தமிழகப் பயணம் பற்றி
மல்லிகையில் எழுதினார். நானும் எழுதினேன். அத்துடன் தினகரன் பிரதம ஆசிரியர் சிவகுருநாதனுடன்
தொடர்புகொண்டு, தமிழகப் பயணம் பற்றிய தொடர்
எழுதப்போவதாகச் சொன்னேன்.
கணினி வசதி
இல்லாத அக்காலப்பகுதியில், வார இதழுக்குரிய
ஆக்கங்களை முற்கூட்டியே எழுதி அனுப்பிவிடவேண்டும்.
சுமார் 12 வாரங்கள் தமிழகப் பயணம் பற்றிய குறிப்புகளை படங்களுடன் தினகரன் வாரமஞ்சரியில்
எழுதினேன்.
அவ்வேளையில்
எனது சில கலை, இலக்கிய , ஊடக நண்பர்களிடமிருந்து கடிதங்கள் வரத்தொடங்கின. இலங்கை நிலைமைகள் மோசமான நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தன.
இந்தியப்படை
வெளியேறியதும், இலங்கைப் படைகள் தனது வேட்டையை
தொடங்கியிருந்தன.
எனக்கு வந்த
கடிதங்களில் “ அவுஸ்திரேலியாவுக்கு எவ்வாறு
வரலாம். “ என்ற பொதுவான கேள்வியே தொனிப்பொருளாக
இருந்தது.
நானும் சளைக்காமல், இங்கிருந்த நிலைமைகளை எழுதிக்கொண்டிருந்தேன். அதன்பின்னர் அவர்களிடமிருந்து கடிதங்கள் வரவில்லை.
தமிழ் மக்கள் அன்று எவ்வழியிலாவது நாட்டை விட்டு தப்பிச்செல்ல தயாரகவிருந்தனர். இன்று சமகாலத்திலும் அக்காட்சி தொடருகிறது.
போர் நெருக்கடி
கடந்துவிட்டது என்று ஆறுதல் அடைந்திருந்த மக்களை தற்போது பொருளாதார நெருக்கடி சூழ்ந்திருக்கிறது.
நாட்டின்
முன்னாள் அதிபரே தற்போது தனது பாதுகாப்புக்காக நாடுவிட்டு நாடு மாறி ஓடிக்கொண்டிருக்கிறார்.
1980 –
1990 களில் இலங்கையில் தமிழர் நிலை எங்காவது ஓடித்தப்பிவிடவேண்டும் என்றிருந்தது. எனவே தப்பி வந்துவிட்ட என்னிடம் எனது நண்பர்கள் கடிதம் எழுதி ஆலோசனை கேட்பது ஆச்சரியமில்லை.
பணம் பாதாளம்
வரையில் பாயும் என்பார்கள். ஆனால், எழுத்து
உலகெங்கும் சென்றும் பாயும்.
சில மாதங்களில் கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து
சிற்றிதழ்கள், பத்திரிகைகள் வெளிவரத்தொடங்கின. அவற்றை நடத்தியவர்கள் பெரும்பாலும் எனது நண்பர்களாகவே இருந்தனர்.
அவர்கள்
ஒவ்வொருவரும் பல்வேறு திசைக்குச் சென்றிருந்தனர்.
அவர்களுக்கு எழுத்துத் தொழிலைத் தவிர வேறு எதுவும் தெரியாது. தாயகத்தில் அவர்களுக்கு
சோறு போட்ட தொழில். பேனையை மாத்திரம் நம்பி வாழ்ந்தவர்கள்.
கனடாவிலிருந்து
நண்பர்கள் எஸ். திருச்செல்வத்தின் தமிழர் தகவல், நவம் நவரத்தினத்தின் நான்காவது பரிமாணம்,
ஜோர்ஜ் குருஷ்ஷேவின் தாயகம், கனக. அரசரத்தினம்
– டீ. பி. எஸ். ஜெயராஜ் நடத்திய தமிழர் செந்தாமரை, பிரான்ஸிலிருந்து மனோகரனின் ஓசை
மற்றும் அம்மா, எஸ். எஸ். குகநாதனின் பாரிஸ் ஈழநாடு, லண்டனிலிருந்து ஈ.கே. ராஜகோபாலின்
ஈழகேசரி, எஸ்.கே. காசிலிங்கத்தின் தமிழன், ஜெர்மனியிலிருந்து இந்து மகேஷின் பூவரசு, ஆகியனவற்றுடன் டென்மார்க்,
நோர்வேயிலிருந்தும் சிற்றிதழ்கள் வெளிவரத்தொடங்கியிருந்தன.
நண்பர் ஈழநாடு குகநாதன் பாரிஸ் ஈழநாடுவை ஆரம்பித்து பிரதிகளை அனுப்பத் தொடங்கினார்.
அதில் எனது
சிறுகதைகள், கட்டுரைகள், செய்திகள், தொடர்கள் வெளியாகத் தொடங்கின. பாரிஸ் ஈழநாடு வார இதழில்தான் நான் எழுதிய நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொடர் வெளியானது.
இரசிகமணி
கனக செந்திநாதன், கே. டானியல், மு. தளையசிங்கம், என். எஸ். எம். இராமையா, பேராசிரியர்
கைலாசபதி, கே.ஜி. அமரதாச, எச். எம்.பி. மொகிதீன், க. நவசோதி, கவிஞர் ஈழவாணன், நெல்லை
க. பேரன், காவலூர் எஸ். ஜெகநாதன், கலாநிதி வித்தாலி ஃபுர்னீக்கா ஆகியோரைப்பற்றிய நினைவுப்பதிவுகளை
அந்தத் தொடரில் எழுதினேன்.
இந்தத் தொடரைப்படித்து
வந்த பலரிடமிருந்தும் எனக்கு கடிதங்கள் வந்தன. சில வாசகர்களின் கடிதங்களை குகநாதன் பாரிஸ் ஈழநாடுவில் வெளியிட்டார்.
அக்காலப்பகுதியில் பாரிஸில் வாழ்ந்த மூத்த எழுத்தாளர் எஸ்.
அகஸ்தியர் எனக்கு அடிக்கடி கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தார். அவரது பல கடிதங்கள் இன்னமும் எனது வசம் பொக்கிஷமாகவே இருக்கின்றன.
காசிலிங்கம்
நடத்திவந்த தமிழன் பத்திரிகையிலும் எழுதுமாறு அகஸ்தியர் எழுதியிருந்தார். அவரது தூண்டுதலினால்தான்
பாட்டி சொன்ன கதைகள் தொடரை உருவகம் சார்ந்து அதில் எழுதினேன்.
குறிப்பிட்ட
இரண்டு தொடர்களும் நூலுருப்பெற்றபோது, குகநாதனும் காசிலிங்கமும் அவற்றுக்கு அணிந்துரை
வழங்கினர்.
லண்டனிலிருந்து
ஈழகேசரி நடத்திய நண்பர் ஈ. கே. ராஜகோபால், தனது
இதழுக்கும் ஒரு தொடர் எழுதித்தருமாறு கேட்டிருந்தார்..
அக்காலப்பகுதியில்தான்
இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கொழும்பில் மேதினத்தன்று தற்கொலைக்குண்டு தாரியினால் கொல்லப்பட்டிருந்தார்.
அதனையடுத்து பிரேமதாசாவின் கதை என்ற தொடரை சில வாரங்கள் எழுதினேன். அதனையடுத்து மாரீசம் என்ற அரசியல் தொடர்கதையை சில வாரங்கள் எழுதினேன். ஆனால், நிறைவுசெய்யவில்லை.
வீரகேசரியிலும்
மல்லிகையிலும் எனது சிறுகதைகள் வெளிவந்தன.
மெல்பனில்
வெளியான விமல். அரவிந்தனின் மரபு இதழுக்கு இலக்கியவாதிகளும் போதனா ஆசிரியர்களும் என்ற கட்டுரையை எழுதி அனுப்பியிருந்தேன். அது சர்ச்சையை
ஏற்படுத்தும் என அதன் ஆசிரியர் நினைத்தாரோ அல்லது அவருக்கு ஏதும் அழுத்தங்கள் வந்ததோ
தெரியவில்லை. அதனை அவர் முழுமையாக பிரசுரிக்கவில்லை. அதனால், அக்கட்டுரையை கனடாவிலிருந்து வெளியான நான்காவது பரிமாணம்
இதழுக்கு
அனுப்பினேன். அதன் ஆசிரியர் நவம் நவரத்தினம் அதனை வெட்டாமல், குறைக்காமல் முழுமையாகப்
பிரசுரித்தார்.
மெல்பன் மரபு இதழில் வெளியான முழுமையற்ற பாதிக்கட்டுரைக்கு
எதிர்வினைகள் வந்தன. மெல்பனிலிருந்து கலாநிதி காசிநாதன், நவரத்தினம் இளங்கோ, மருத்துவர் சதீஸ் நாகராஜா, மாவை நித்தியானந்தன் ஆகியோர் எழுதியிருந்தனர். நானும் அவற்றுக்கு பதில் எழுதநேர்ந்தது.
நான்காவது
பரிமாணம் வெளிவந்தபோது வடக்கில் விடுதலைப்புலிகளின் செல்வாக்கு உச்சத்திலிருந்தது.
செல்வாக்கு எனச்சொல்வதிலும் பார்க்க அவர்களின் அதிகாரம்தான் அங்கு கொடி கட்டிப்பறந்தது.
மக்கள் உண்பதற்கும்
கொட்டாவி விடுவதற்கும் மாத்திரம்தான் வாயை திறக்கவேண்டியிருந்தது என வேடிக்கையாகச்சொன்ன
காலம் அது.
அப்போது
எனக்கு படிக்கக் கிடைத்த துணுக்கையும் இங்கே சொல்லிவிடுகின்றேன்.
ஒரு முதியவர் பஸ்ஸில் நெரிசல் இருந்தமையால் நின்றுகொண்டே
பயணித்தார். ஒரு இளைஞன் அவரது காலை மிதித்துக்கொண்டு பயணித்தானாம்.
அப்போது
அந்த முதியவருக்கும் அவனுக்கும் இடையில் நடந்த உரையாடல் இது:
“ தம்பி… எங்கே போறீர்..? “
“ உதில பக்கத்திலதான். “
“ தம்பி… நீர் ஏதும் இயக்கத்தில் இருக்கிறீரோ… ?
“ அப்படியும் இல்லை அய்யா..? “
“ உம்மட யாராவது இயக்கத்தில் இருக்கினமோ…? “
“ அப்படி எவரும் இல்லை அய்யா..? ஏன் கேட்கிறீங்கள்..? “
“ அப்ப… எடுடா காலை “
தனது காலை மிதித்துக்கொண்டிருந்த இளைஞனுடன் கூட
எச்சரிக்கையாக இருக்க நேர்ந்திருக்கிறது அந்த முதியவருக்கு.
அத்தகைய
காலப்பகுதியில் நான்காவது பரிமாணம் இதழில்
எனது இலக்கியவாதிகளும் போதனாசிரியர்களும் கட்டுரை வெளிவந்திருந்தது.
செல்வாக்குச்
செலுத்திய விடுதலை இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்
ஒருவர் ( அவர் இலக்கியப்பிரதிகளும் படிப்பவராக இருத்தல்வேண்டும் ) யாழ். பூபாலசிங்கம் புத்தகக்கடையிலிருந்து நான்காவது
பரிமாணம் இதழின் பிரதிகளை பறிமுதல் செய்துகொண்டு போய்விட்டதுடன், அதிலிருந்து முகவரிக்கு
நீண்ட எச்சரிக்கை கடிதமும் எழுதி அனுப்பியிருக்கிறார்.
ஆனால், இதுவரையில்
அதன் ஆசிரியர் எனக்கு அக்கடிதத்தை காண்பிக்கவில்லை.
எழுத்து
எங்கெல்லாம் பாயும் பாருங்கள். நல்லவேளை அக்காலப்பகுதியில் இந்த முகநூல் இல்லை. இருந்திருப்பின்
முகநூல் அலைப்பறையில் என்னை ஊத்திக்கழுவியிருப்பார்கள்.
ஈழகேசரி
இதழில் ஆலயம் என்ற ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். இச்சிறுகதை சுவாரசியமானது.
இதில் மூன்று பாத்திரங்கள்தான். ஈஸ்வரன் சிவபெருமான், அவரது மனைவி உமையாள். நாரதர்.
பூவுலகை சுற்றிப்பார்த்துவிட்டு திரும்பும் நாரதர் தான் கண்ட காட்சிகளை விபரிக்கும்
அங்கதச்சுவையுள்ள கதை.
இதனைப்படித்த
ஒரு பக்திமான் தனது வாசகர் கடிதத்தில் என்னை கண்டித்திருந்தார்.
சிறு புன்னகையுடன்
அதனைக் கடந்தேன்.
வெளிச்சம்,
சிகிச்சை, எதிரொலி, விருந்து, ரோகம், மேதினம், இதுவும் ஒரு காதல் கதை, மலர், கிருமி,
காலமும் கணங்களும், மழை, ஆலயம் முதலான சிறுகதைகள் இடம்பெற்ற வெளிச்சம் தொகுதிப்பற்றி, இத்தொகுப்பினை பதிப்பித்திருந்த
குமரன் பதிப்பகத்தின் அதிபர் மூத்த எழுத்தாளர் செ. கணேசலிங்கன் இவ்வாறு எழுதியிருந்தார்:
“ இத்தொகுதியிலுள்ள 12 கதைகளில் பெரும்பாலானவை அவுஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் இடர்கள்,
மன ஓட்டங்கள், குடும்ப உறவுகளின் சிதைவுகள், ஒட்டியும் ஒட்டாமலும் அங்கு வாழ முயலும்
புதிய கலாசாரப்பாதிப்புகள், முரண்பாடுகளையும் கூறி நிற்கும். பல்லாயிரம் மைல்களுக்குப்பால்
கடல் கடந்து, குடிபெயர்ந்து வாழ்ந்தபோதும் பிறந்து வளர்ந்த மண்ணின் வாழ்வை புலம்பெயர்ந்தவர்களால்
மறந்துவிட முடியவில்லை என்பதையும் இந்நூலின் சிறுகதைகள் நிறுவும். “
அவுஸ்திரேலியாவுக்கு
வந்து 35 வருடங்களாகிவிட்டன. இக்காலப்பகுதியில் இதுவரையில்
ஆறு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகிவிட்டன.
எனது படைப்புகளுக்கு
தொடர்ந்து களம் வழங்கிய புகலிட சிற்றிதழ்களுக்கும்
பத்திரிகைகளுக்கும் என்றும் நன்றியுடையவனாக இருக்கின்றேன்.
( தொடரும் )
No comments:
Post a Comment